மின்னுகின்றன.
__________________________________ருத்ரா
என் இரவை நான்
நார் உரித்து அதிலிருந்து
கனவு இழைகளை
நெசவு செய்த என்
நெய்தல் பாட்டுகளில்
கண்ணுக்கு எட்டா கடலிலிருந்து
அலைகள் பிளிறும்.
ஓங்காரம் கேட்கும்.
அடி ஆழத்தின் வக்கிரங்கள்
வண்ண வண்ண பவளத்திட்டுகளாய்
என் காகிதங்களில்
கரு தரிக்கும்.
ஒற்றை ஆள் ஒரு சமுதாயமா?
கால்களின் விரலிடுக்கின் பரல்களில்
ஒரு கூழாங்கல்லைக்கேட்டேன்.
கரை மணல் சர சர வென்று
பின்னணி இசை அமைத்தது.
விளங்காத கேள்வி அது?
என் கண்ணீரின் ஒற்றைச்சொட்டில்
உங்கள் அவலங்களும் சீற்றங்களும்
பிம்பம் காட்டும் வாய்ப்பு உண்டா?
புரியாததை வைத்து புரிந்து கொள்.
இல்லாததை இருப்பதாகக்கொள்.
கட கடவென்று சிரித்துவிட்டு
ஒரு ஒலி மறைந்து தேய்ந்து விட்டது.
அது என்ன கட்டளை?
யாருக்குத் தெரியும்?
என் தோளில் கட்டளைப்பலகையை
சுமந்து கொண்டு
மிக மிக உயரமான சிகரங்களிலிருந்து
வேக வேகமாய் இறங்குகின்றேன்.
பலப்பல நூற்றாண்டுகளின்
துருவேறிய படிமங்கங்கள்
பொடிபோடியாய் உதிர்ந்து விட்டன.
அந்த வெறிக்குரல்களுடன்
கழுத்துகளை சீவித்தள்ளும்
வாள் முனைகள் மட்டும்
அந்த சூரிய வெளிச்சத்தில்
தக தக வென்று மின்னுகின்றன...
ஆனால்
இப்போது துப்பாக்கிக்குண்டுகளாய்.
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக