திங்கள், 6 செப்டம்பர், 2021

வியப்பு அடங்கவில்லை

 வியப்பு அடங்கவில்லை

__________________________________ருத்ரா


உன்னைப் பார்த்த‌

மின்னல் கணங்களை

என் தூரிகையில் கருவாக்கி

கோட்டோவியம் ஒன்று

வரைந்தேன்.

அழகு தான்.

அருமை தான்.

மீண்டும்

அதைப்பார்க்கும் போது

நான் திடுக்கிட்டேன்.

என் தொப்பூள் கொடியில்

நான் கொடி சுற்றிக் கிடந்தது

போல் அல்லவா

இருந்தது அது?

நீ தாயா?

அல்லது

ஒரு பெண்ணா?

முட்டாள்.

அன்பு எனும் பெருங்கடல்

தாய் எனும் 

அன்பின் 

முதல் உயிர் எழுத்தை தான் 

காட்டுகிறது.

உன் காதல் கோடு

அதிலிருந்து தானே

பெயர்த்து வரையப்பட்டிருக்கிறது.

உன் வண்ணங்களை வேண்டுமானால் 

இனி நீ தீட்டிக்கொள்.

சற்று நேரத்தில்

அங்கே வந்த அம்மா

அந்த ஓவியத்தை

உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்.


"ஏண்டா?

அழகாய்த்தான் இருக்கிறாள்.

எங்கேயடா இவளைச்சந்தித்தாய்?

அப்பாவைக்கூப்பிட்டுக்கொண்டு

இவள் வீட்டுக்கு

சென்று விட வேண்டியது தான்."

எனக்கு வியப்பு அடங்கவே இல்லை.

இப்போது

அவள் அந்த தொப்பூள் கொடியாய்...

என் முகத்தருகே

ஒரு பூங்கொடியாய்....

காற்றில் அசைகின்றாள்.


__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக