மாடல்ல மற்றையவை
_________________________________ருத்ரா
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றையவை."
மாடு தான் எல்லாம்.
மாடு செல்வம்.
மாடு செழிப்பு.
மாடு உணவு.
மாட்டைச்சுற்றியே தான்
அறிவும்.
மாடு மருத்துவ மனை.
மாடு தான் நாடு.
போர் மூள்வதும் முடிவதும்
மாடுகள் வைத்தே தான்.
மாட்டின் அதிபதி
அதாவது பசு பதி தான்
மன்னர்க்கெல்லாம் மன்னன்.
மாடு
பசு
மாட்டை வைத்திருப்பவன்.
பதி.
அவன் கையில் உள்ள கயிறு
பாசம்.
பசு பதி பாசம்
மூன்றெழுத்து மந்திரமே
தத்துவத்தையெல்லாம் பிழிந்து தரும்
ஜிகர் தண்டா என்றார்கள்.
ஆனால் இப்போது
மானிட நேயத்தையே
பிழிந்து குடிக்கக் கிளம்பிவிட்டார்களே!
அது பசுவா? எருமையா?
அதை வைத்து
இவர்கள்
அரக்கர் வதம் பற்றிய
புராணங்கள் குவித்திருக்கிறார்கள்.
பசு என்றால் ஜீவாத்மா
பதி என்றால் பரமாத்மா
பாசம் என்றால் இரண்டின் பிணைப்பு.
அத்வைதம் கயிற்றை துண்டித்து
இரண்டு அல்ல ஒன்றே என்றது.
பசு என்றால் பசு மட்டும் அல்ல.
உயிர் தாங்கி இருக்கும் எதுவும் பசு தான்.
பன்றியும் பசு தான்.
கோழியும் மீனும் ஆடும் கூட
பசு தான்.
ஆனால் இவர்களுக்கு
பால் தரும்
தயிர் தரும்
வெண்ணெய் தரும்
பசு மட்டுமே
லட்சுமி ஆனது.
காமதேனு ஆனது.
இன்னும் பாஷ்யங்கள் ஆனது.
வரலாற்றுப்பக்கங்கள்
தலைகீழாய்
புரட்டப்பட்டுக்கொண்டிருப்பது
அறியாத
அப்பாவி மக்களிடமும்
பாமர மக்களிடமும்
இந்து தத்துவா
அரசியல் கத்தியை சாணை பிடிக்கும்
தந்திரத் தத்துவா ஆகிப்போனது.
அதனால்
மாட்டு வங்கியே இவர்கள்
ஓட்டு வங்கி.
அதன் இறைச்சியில் தான்
இருக்கிறது
இவர்கள் இறையாண்மை.
மாடு கத்தி இறைச்சி
இவை எல்லாவற்றிலுமே
இவர்களின் தாராளமய பொருளாதாரம்
"அத்வைதம்" பேசுகிற போது
நந்தி தேவரை விலக்கிவைத்து விட்டு
கோமாதாவை மட்டும்
இவர்கள்
அரசியல் சட்ட ஷரத்துக்குள்
அலச நினைப்பது
என்ன அரசியல்?
மன்னர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டு
பிற மதங்களோடு
ஒரு முரட்டு வாதம் செய்து
வென்று விட்டதாய்
மாற்று மதத்தவரை
கழுவில் ஏற்றிய வரலாறு
நாம் அறிவோம்.
ஜனநாயகமும்
அப்படியொரு சர்வாதிகாரத்தின்
மடியில் போய் உட்கார்ந்து கொள்ளும்
விபத்துகளும் ஆபத்துகளும்
கொண்டது தான்
இந்த வாக்குப்பெட்டிகளா?
சோம்னாம்புலிஸம் எனும்
தூங்கிக்கொண்டே நடக்கும் வியாதி
இருந்தால் பரவாயில்லை.
தூங்கிக்கொண்டே போய்
அந்த மின்னணுப்பொறியைப் போய்
அமுக்கும் வியாதிக்கு
என்ன மருந்து?
நாம் இன்னும் "நாலு கால்" மனிதர்களாக
இல்லாமல்....
இவர்கள் காட்டும்
வைக்கோல் கட்டுகளுக்கும்
புண்ணாக்குகளுக்கும்
நாவுகள் நீட்டாமல்....
ஒரு எழுச்சிக்கு குரல் கொடுக்கும்
"நாவுக்கரசர்களாய்"
ஜனநாயகம் காப்போம்!
சமநாயகம் கேட்போம்!
_____________________________________
26.10.2015 ல் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக