ஒரு கவிஞன்
==========================="மாளவிகாக்னி மித்ரன்"
காகிதமும் பேனாவும் கொண்டு
சில தமிழ் மற்றும் பல சமஸ்கிருத சொல் கடைந்து
மனப்புழுக்கத்துக்கு வர்ணம் தீட்டி
மன உள் வெளிக்குள் பூதம் காட்டி
எழுதித்தீர்த்தேன்.
பிடித்தவர்கள் படித்தார்கள்.
படித்ததை பகிர்ந்தார்கள்.
அச்சு மையிலும் அது
ஆயிரம் ஆயிரம் பிரதிகளாய்
கருப்பு ரத்தத்தில் கன்னிக்குடம் உடைத்து
பிரசவமாகி பரவசம் ஆனது.
என்ன சொன்னேன் ?
எதற்கு சொன்னேன் ?
சொற்களின் வைக்கல் படப்பில்
அவர்களே
ஒரு ஊசியை போட்டுவிட்டு
அவர்களே தேடிக்கொள்ளட்டும்.
விசைப்பலகையில் எண்டர் தட்டுவதை
இவர்களின் யாப்பருங்கலக்காரிகை
ஒரு "நொண்டி சிந்து" என்று
நொட்டைச்சொல் சொல்லிக்கொள்ளட்டும்.
ஒரு "சுப்புடுத்தன" தண்டி அலங்காரத்தில்
தடைசெய்து தண்டித்துக்கொள்ளட்டும்.
புனைபெயரில் ஒரு பெண் இருந்தால்
கூட்டமாய் கும்மியடித்து
பின்னூட்டங்களில் மொய்த்து மகிழட்டும்.
புதுக்கவிதை என்றாலே
குவார்டர் கட்டிங்க் சீயர் அப்புக்கு
மசாலா தொட்டுக்கொள்வது போல்
ஆகிவிட்டதோர் யுகம் இது.
இதில் காதலை கலக்கி
நொதிக்கச்செய்து நுரை தள்ளும்
கலாச்சாரம் இது.
விக்கிரமாதித்தனின் கவிதையை
பெயரின்றி போட்டால்
குப்பைத்தொட்டிக்குள் வீசி
குதூகலிக்கும் காலம் இது.
லா.ச.ரா வைப்போல்
எழுத்தின் ஆழத்துள்
மூச்சடக்கி மூழ்க முடியாதவர்கள்
கரையோரத்துக் கிளிஞ்சல்களை
கை நிறைய அள்ளிக் களிப்பர்களின்
இலக்கிய யுகம் இது.
"எழிற்கீரன்"
இந்த அருமையான
தமிழ்ப்பெயரில்
கவிதைகள் படைக்க எண்ணினேன்.
என்ன?
தமிழ்ப்பெயரா?
தமிழ் நாட்டில் தமிழ் ஒலிப்பு என்பதே
தீட்டு ஆகிவிட்டதே!
தேவ பாடையில்
"மாளவிகாக்னி மித்ரன்"
என்ற பெயரில்
கவிதை அனுப்புகின்றேன்.
பார்க்கலாம்.
____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக