வியாழன், 30 செப்டம்பர், 2021

.ஃப்ரான்சிஸ் கிருபா 

______________________________ருத்ரா


சொல்லுக்குள்

ஒளிந்திருந்து

சொல்லோடு

அம்பு  

விட்டுக்கொண்டிருந்தாயே!

அது எந்த அர்த்தத்தைத் தேடி 

வாழ்க்கையா ? மரணமா?

அந்த மரணத்தையா உன்

முகநுாலாக்கி ஒளிந்து

கொண்டாய்?

உன் சொற்பசியெடுத்த 

மான்களாய்

அம்பு தைத்து நாங்களும் இங்கு 

வீழ்ந்துகிடக் கின்றோம்.

------------------------------------------------------










வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஐங்குறும்பாக்கள்

 ஐங்குறும்பாக்கள்

_________________________ருத்ரா



தினம் தினம் 

வண்ணங்களை உலர்த்தி எடுத்தது

மொட்டை மாடி கொடிக்கம்பியில்.


பட்டாம்பூச்சி

____________________________ 1



பச்சைப்புல் பனித்துளியில்

ஒரு தற்கொலை.

ஏழு வர்ண இரத்தம்.


காலைச் சூரியன்

_____________________________ 2



கவலைகளை களைந்து விட்டு

என் வீட்டுக்குள்

வாருங்கள்.


நத்தைக்கூடு

______________________________3





திராவிடமா? தமிழா?

ஆரியம் ஒளிந்து கொள்ள‌ 

வந்த கேள்வி இது.


தமிழ் அற்ற தேசியம்.

____________________________5

வியாழன், 16 செப்டம்பர், 2021

கறங்கு வெள்ளருவி .....

 


கறங்கு வெள்ளருவி

__________________________________கல்லிடைக்கீரன்.



கறங்கு வெள்ளருவி கடிமிசை ஆங்கு

களிமென் குரல் படர் தூஉய் தரும்

முரல் மன்றின் பால் திறந்தன்ன‌

கழங்கு ஆடு ஆயம் விளி கிளர் ஓசை

இணர் அவிழ் வீக்களின் இமிழ்தரூஉம்

சிறைமணம் உகந்து அவள் சில்பூ நகையில்

சிறைப்படூஉம் இன்பில் என்பும் கிளத்த

புல்லெனும் சொல்லில் அன்பே என்னும்

அதிர் ஒலி யாழ ஆழி வீழ்ந்தனன்.

எவன் கொல் ஈனும் இக்கதிர் பரி மண்டிலம்.

மண்டை சிதறிய வெண்சோற்றுப் பரலென‌

மண்டிய வான்பூ இனநிரை கொளீஇ

சொல்லின் கீரன் கீறிய சொல் தொறும்

மணிநிறம் அவிழ்க்கும் அணிதிறம் விரிக்கும்.

முருகின் சுள்ளிய வெறியாட்டு அயரும்

நெஞ்சில் வேர்த்து நெருநல் ஊழ்த்து

அவளின் அவிர்சொல் ஓங்கல் தெறித்தன்ன‌

படுகதிர் இரட்டும் ஒலிபு ஊண் ஊட்டும்.

அன்பின் உருகெழு ஓண்கூர் தீட்டி

ஒற்றித்தருகென மைவிழி காட்டும்

யானும் ஒற்றுவன் நயவர நோக்கி.

வெள்ளாறு நீண்டு பொரி படர ஏகும்

நிரம்பா நீளிடை நிழல் சூன்று உண்ணும்

இனிய பாழில் ஊர்ந்தனம் மன்னே.


____________________________________________


தலைவியின் காதல் நிறைந்த சொல்லும்

அன்பு கூர்ந்த விழியும் தலைவனை

காதலின் அடி ஆழத்து ஒரு ஆழிக்குள்

வீழ்த்துகிறது.பாலையின் வெறுமைத்தீயும்

அவனுள் ஒரு தண்ணிய நிழலே ஆகும்.

இக்கருத்தில் நான் எழுதிய சங்கநடைச்

செய்யுள் கவிதை இது

_____________________கல்லிடைக்கீரன்

புதன், 15 செப்டம்பர், 2021

ஓலைத்துடிப்புகள் 110

 பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 110)



காழ்த்த நெடுங்கால் தண்பறைக் குருகின்

களிதுள் கயல்ஆரும் நளிகடல் சேர்ப்ப!

எக்கர் ஞாழல பாசிலை அடைகரை

வதிநிழல் ஓமை பொருந்தாக் காணிய‌

நெய்தலங் கானல் கண்டிசின் பெரும.

மாழை வரிவிழி நுதல் அளை நோக்கில்

ஆகம் அணியிழை சேக்கும் காதலின்

கறை உழற்றன்ன கொடு எழில் பூப்ப‌

புன்கு அவிழ் பொரிப்பூ படர்ந்த நகையில்

அவள் ஆங்கு சுழித்த நாணில் வீழ்தரு நின்

நாணில் நீர்மை கண்டுநனி நெடுவான்

வெட்கும் ஒட்கும் எல் களைந்து எல்லின்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.


_________________________________________

காதல் செழித்த தலைவியையும் மறந்து

பரத்தமையின் பால் காமுறும் தலைவனுக்கு

தோழி அறிவுறுத்தியதே இப்பாடல்.புன்கை மரம்

பூத்துச்சொரிந்தது "பொரி" படர்ந்தாற்போல்

இருக்கும் அந்த பரத்தையின் நாணமற்ற‌

சிரிப்பில் தலைவன் விழ்ந்தது அதை விட ஒரு

நாணமற்ற செயல் என தோழி இடித்துக்காட்டுகிறாள்.

அதையே இங்கு என் சங்கநடைச்செய்யுள் கவிதையாக்கி

இங்கு எழுதியிருக்கிறேன்.

______________________________கல்லிடைக்கீரன்


செவ்வாய், 14 செப்டம்பர், 2021

"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 109)


ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு

உறையும் உழுவை துஞ்சுதல் அறியா

அடர் சுரம் நுழைஇ ஆறுபடுகடாம்

அஞ்சுதல் அறியா நீளிலை எஃகமொடு

நீள வைகும் கணைக்கால் கழல‌

இலஞ்சி பழனச் செந்நிலக் குன்றன்

அடுபரல் முரலும் கொடு இடைக் கழிய‌

துடியென இசையும் நெஞ்சொடுக் கிளந்து

கல்லென ஒலிக்கும் கொல்வனத்து ஆரிடை

பயிற்றும் சொல்லே அவள் பேர் சாற்றும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி உய்க்கும் பல்பாற்பட்ட‌

கான்பேராறு கவி இருள் புகுந்துழி

சுரும்பின் நுண்சிறை அதிர வாங்கு

வான்பூச் சினை இடற நோக்கும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி எறியும் மைவிழி தேடி

கலிக்கும் ஒலிமென் கூந்தல் அடர்த்த‌

ஊழி நீள்க்கும் கானாறு தேய்க்கும்

கழி நெடில் அத்தம் இனிதுடன் நந்தும்.


_____________________________________________

அகம் 52..நொச்சி நியமங்கிழார் பாட்டின் 5 ஆம்  வரியை

முதல் வரி ஆக்கி நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது

_____________________________________கல்லிடைக்கீரன்

திங்கள், 13 செப்டம்பர், 2021

"மாளவிகாக்னி மித்ரன்"

 ஒரு கவிஞன்

==========================="மாளவிகாக்னி மித்ரன்"


காகிதமும் பேனாவும் கொண்டு

சில தமிழ் மற்றும் பல சமஸ்கிருத சொல் கடைந்து

மனப்புழுக்கத்துக்கு வர்ணம் தீட்டி

மன உள் வெளிக்குள் பூதம் காட்டி

எழுதித்தீர்த்தேன்.

பிடித்தவர்கள் படித்தார்கள்.

படித்ததை பகிர்ந்தார்கள்.

அச்சு மையிலும் அது

ஆயிரம் ஆயிரம் பிரதிகளாய்

கருப்பு ரத்தத்தில் கன்னிக்குடம் உடைத்து

பிரசவமாகி பரவசம் ஆனது.

என்ன சொன்னேன் ?

எதற்கு சொன்னேன் ?

சொற்களின் வைக்கல் படப்பில்

அவர்களே 

ஒரு ஊசியை போட்டுவிட்டு

அவர்களே தேடிக்கொள்ளட்டும்.

விசைப்பலகையில் எண்டர் தட்டுவதை

இவர்களின் யாப்பருங்கலக்காரிகை

ஒரு "நொண்டி சிந்து" என்று

நொட்டைச்சொல் சொல்லிக்கொள்ளட்டும்.

ஒரு "சுப்புடுத்தன" தண்டி அலங்காரத்தில்

தடைசெய்து தண்டித்துக்கொள்ளட்டும்.

புனைபெயரில் ஒரு பெண் இருந்தால்

கூட்டமாய் கும்மியடித்து

பின்னூட்டங்களில் மொய்த்து மகிழட்டும்.

புதுக்கவிதை என்றாலே

குவார்டர் கட்டிங்க் சீயர் அப்புக்கு

மசாலா தொட்டுக்கொள்வது போல்

ஆகிவிட்டதோர் யுகம் இது.

இதில் காதலை கலக்கி

நொதிக்கச்செய்து நுரை தள்ளும்

கலாச்சாரம் இது.

விக்கிரமாதித்தனின் கவிதையை

பெயரின்றி போட்டால்

குப்பைத்தொட்டிக்குள் வீசி

குதூகலிக்கும் காலம் இது.

லா.ச.ரா வைப்போல்

எழுத்தின் ஆழத்துள்

மூச்சடக்கி மூழ்க முடியாதவர்கள்

கரையோரத்துக் கிளிஞ்சல்களை

கை நிறைய அள்ளிக் களிப்பர்களின்

இலக்கிய யுகம் இது.

"எழிற்கீரன்"

இந்த அருமையான 

தமிழ்ப்பெயரில் 

கவிதைகள் படைக்க எண்ணினேன்.

என்ன?

தமிழ்ப்பெயரா?

தமிழ் நாட்டில் தமிழ் ஒலிப்பு என்பதே

தீட்டு ஆகிவிட்டதே!

தேவ பாடையில்

"மாளவிகாக்னி மித்ரன்"

என்ற பெயரில்

கவிதை அனுப்புகின்றேன்.

பார்க்கலாம்.

____________________________________

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வ.உ.சி

 வ.உ.சி

___________________


புயல் ஒன்று

நம் அருகே 

கடந்து போயிருக்கிறது

மூச்சுக்காற்று கூட‌

நமக்கு வேண்டும் என்று

நாம் அறியாமல் 

கிடந்த போது

________________________ருத்ரா


துடைத்துகொள்ளுங்கள்


மிக மிக உயரமாக 

சிலை செய்து கொண்டு

அவரை தரிசனம் செய்ய

ஊர்வலம் சென்றார்கள்.

காக்கா ஒன்று உயரமாய்

பறந்த போது 

அவர்கள் மீது 

எச்சம் இட்டுச்சென்றது.

பிரசாதம் அருளுங்கள்

என்றார்கள்.

அப்போதே போட்டு விட்டேனே

துடைத்துகொள்ளுங்கள் 

என்றார்

கடவுள் சிரித்துக்கொண்டே.

____________________________

ருத்ரா






திங்கள், 6 செப்டம்பர், 2021

an anachronistic bluff



 "hey!

an anachronistic bluff

get off these pages.

you just are

nostalgic with

old aged and grey haired dreams!

your rosy days are

worth nothing but

brimming with our

trashes.........."

it's just not bothered!

simply make this piece of

writing

dated at a sufficiently later date

when all the digital heaps and piles

of tons and tons of

graphical fallacies and fantasies

or 

at that second impact of a

"BIGGER BIG BANG"

with a bigger question of a

queer "Higgs Boson"

that will be in such a mystery

of each photon a bigger universe

losing all the topologies of

man and his dreams!

and

or at your own Quantum Computing

that throws the dice of probabilty

of your extinction or distinction.


__________ruthraa e paramasivan

வியப்பு அடங்கவில்லை

 வியப்பு அடங்கவில்லை

__________________________________ருத்ரா


உன்னைப் பார்த்த‌

மின்னல் கணங்களை

என் தூரிகையில் கருவாக்கி

கோட்டோவியம் ஒன்று

வரைந்தேன்.

அழகு தான்.

அருமை தான்.

மீண்டும்

அதைப்பார்க்கும் போது

நான் திடுக்கிட்டேன்.

என் தொப்பூள் கொடியில்

நான் கொடி சுற்றிக் கிடந்தது

போல் அல்லவா

இருந்தது அது?

நீ தாயா?

அல்லது

ஒரு பெண்ணா?

முட்டாள்.

அன்பு எனும் பெருங்கடல்

தாய் எனும் 

அன்பின் 

முதல் உயிர் எழுத்தை தான் 

காட்டுகிறது.

உன் காதல் கோடு

அதிலிருந்து தானே

பெயர்த்து வரையப்பட்டிருக்கிறது.

உன் வண்ணங்களை வேண்டுமானால் 

இனி நீ தீட்டிக்கொள்.

சற்று நேரத்தில்

அங்கே வந்த அம்மா

அந்த ஓவியத்தை

உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்.


"ஏண்டா?

அழகாய்த்தான் இருக்கிறாள்.

எங்கேயடா இவளைச்சந்தித்தாய்?

அப்பாவைக்கூப்பிட்டுக்கொண்டு

இவள் வீட்டுக்கு

சென்று விட வேண்டியது தான்."

எனக்கு வியப்பு அடங்கவே இல்லை.

இப்போது

அவள் அந்த தொப்பூள் கொடியாய்...

என் முகத்தருகே

ஒரு பூங்கொடியாய்....

காற்றில் அசைகின்றாள்.


__________________________________________


சனி, 4 செப்டம்பர், 2021

என் சிலேட்டுப் பலகை

 என் சிலேட்டுப் பலகை

_______________________________ருத்ரா.




பெண்களுக்கு குப்பையே 

பிடிக்காது.

ஆனால் இங்கே

ஆண்களே தான் குப்பை!


ஒரு வீடு

_________________________1


வானம் பாடிகளுக்கு

தமிழ்ச்சொற்களில்

வானம் காட்டியவர்


மு.மேத்தா

________________________2


 


ஆண்டு தோறும் 

ஆசிரியர் தினம்.

இன்று தான்

ஆசிரியரின் மடியில்

இன்னொரு ஆசிரியர்.


"மடிப்பொறியில் கல்வி"

_________________________3



கை வலிக்கிறது.

கொஞ்சம் நேரத்துக்கு

இந்த வீணையை யாராவது

வாங்கிக்கொள்ளுங்களேன்.



ரவிவர்மாவின் சரஸ்வதி ஓவியம்.

________________________________

மீட்சி

 மீட்சி

___________________________ருத்ரா



கண்ணாடியில் அழகு பார்க்கையில் 

அந்த பிம்பத்திற்கும் பின்னே

அசிங்கங்கள் தான் நிழல்களாக‌

தெரிகின்றன என்று

நெற்றி சுருக்கிக்கொள்கிறீர்கள்.

நெற்றிக்கண் திறந்து 

நெருப்பு வீசுகிறீர்கள்!

கண்ணாடி அசிங்கமாக காட்டவில்லை.

அசிங்கத்தை காட்டுவது நாமே!

சாதாரணக்கண்ணாடியில் 

பிரதிபலிக்காமல் வழுக்கிக்கொண்டு ஓடி

வெளியே காட்டுவதை 

மறைத்து சப்கான்ஷியஸ் எனும் 

ரசம் பூசியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

அப்போது

நம் அடிமனத்து முரண்களே 

அப்பட்டமான அழகிய‌

காட்சிகளாய் எதிரில் தோன்றுகின்றன.

இது தனிமனித முரண்கள் என்றால்

மொத்த சமுதாய முரண்களுக்கும்

காரணம் 

மக்களின் அடி மனதுகளின் முரண்கள்

என்கிறார்

ஃபெடினன்ட் ஸ்வீக்.

அது "சோசியல் ஃப்ராய்டிஸம்"

என்கிறார் அவர்.

இந்த அழுக்குகள் தான்

சாதி மத இன நிற சுரண்டல் வெறிகள்.

இந்தக்கண்ணாடியின் 

அழுக்கைத்துடைத்துவிட்டால் போதும்

என்கின்றவர்களே

ஆகாயத்தை நோக்கி

கூக்குரல் போடுகிறார்கள்.

பறவைகளின் கூச்சல்களை விடவா

அவை

இனிய சங்கீதம்?

கண்ணாடி சுக்கல் சுக்கலாக‌

நொறுங்கும்

புரட்சிகள்

வரலாறுகளை நகர்த்தியிருந்த 

போதிலும்

நம் நியூரோன்களும் ஹார்மோன்களும்

இன்னும்

ஸினாப்டிக் ஜங்கஷன்களும்

நரம்புகளின் யாழ்களில்

மானிடத்தின்

இனிய பண்களை

மீட்டும் வரை நமக்கு

மீட்சியில்லை


______________________________ருத்ரா



 

எங்கு போனார்?

 எங்கு போனார்?

____________________________ருத்ரா


என்னை

லட்சம் ஸ்லோகங்களால்

குளிப்பாட்டுகிறாய்.

இன்னும் 

கும்பாபிஷேகம் என்று

என் மூக்குக்கும் முகத்துக்கும்

இன்னும் 

கோபுர பொம்மைகளுக்கும்

புதிதாய் வர்ணம் பூசுகிறாய்.

நீ கேட்கிறாய்.

நான் கொடுக்கிறேனா

என்று 

எனக்கே தெரியாது.

ஏதோ சந்து பொந்துகளுக்குள்

எல்லாம் புகுந்து

கரன்சிகளை அள்ளிக்கொள்கிறாய்.

உன் நாட்டில்

கோடி மக்கள்

எலும்புக்கூடுகளாய்

இற்றுக்கிடக்கும்போது

உனக்கு மட்டும்

இந்த கொழுப்பு மண்டலம்

எப்படி கிடைத்தது?

நான் கொடுத்தேனா?

எனக்குத்தெரியாது.

நான் தான் கொடுத்தேன்

என்று

உன் கொழுப்பு மலையைக் கிள்ளி

எனக்கு

நைவேத்யம் வைக்கிறாய்.

இது என்ன?

எனக்கு எதுவும் புரியவில்லை.

போதும்

உன் பாஷ்யங்களும்

பிரம்ம சூத்திரங்களும்.

ஒன்று செய்.

உன் வீட்டுப்பையன் படிக்கும்

எட்டாம் வகுப்பு 

விஞ்ஞானப் புத்தகம் 

ஒன்றை எனக்கு கொடு.

அறிவு வேட்கை கொழுந்து விட்டு

எரிய வேண்டிய நேரத்தில்

வெறும் 

நெய்யும் சுள்ளிகளும் குவித்து

தீயை எரித்து

நீ குளிர் காய்ந்தது போதும்.

அறிவைக் கொண்டு வா.

அழிவை அல்ல.

கடவுள் கதவைச்சாத்தி விட்டு

போயே போய் விட்டார்.

எங்கு போனார்?

கடவுளே! தெரிய வில்லையே!


____________________________________

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அம்பத்து மூணாவது திருமண நாள்.



இன்று எங்கள்

அம்பத்து மூணாவது திருமண நாள்.

ஒரு அவனுக்கு அவளும்

ஒரு அவளுக்கு அவனும்

கிடைத்த 

பொன் வசந்தம்

இன்றும் மகரந்தங்களை

பொழியும் நாள்!

அப்போ சொன்ன 

"மாங்கல்யம் தந்து நாநே"யில்

ஒன்றும் புரியவில்லை.

இப்போதும் அந்த 

மந்திரம் மாங்காய்ச்செடியை

தந்து விட்டதா

என்று கேட்கிறீர்களா?

மாங்காய்ப்பாலுண்டு

மலைமேல் இருப்போர்க்கு என்று

சித்தர்களின் தமிழ் நுட்பம்

அந்த குண்டலினியைத்தான்

நமக்கு குளிப்பாட்ட‌

அருவியை கொட்டுகிறது.

என்ன கேட்டீர்கள்?

மாங்காய்செடியா?

சமஸ்கிருதம் 

தமிழ்மீது விளையாடும்

பச்சைக்குதிரை விளையாட்டின்

அரசியல்

அந்த திருமணவேள்வியில்

துல்லியமாய்த்தெரிந்தும்

அதைத் துடைத்தெறியும் வீரம்

எப்போது நமக்குள்

புறநானூறு பாடப்போகிறதோ

என்ற கேள்வி தான்

என் அகநானூற்றுக்குள்ளும்

முட்கூடு கட்டியிருந்தது.

அதனுள்ளும் பூத்த‌

என் ரோஜாக்களின் நந்தவனம்

பசிபிக் பெருங்கடலையும் தாண்டி

அலைத்திவலைகளை

அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் பெற்ற செல்வங்களும்

அவர்கள் பெற்ற செல்வங்களும்

எங்களின் தனித்த தேசமாய்

எங்களுக்காக அந்த அருமை செறிந்த‌

அன்பு எனும்

தேசியக்கொடியை ஏற்றிக்

களிக்கிறார்கள்!

களிப்பூட்டுகிறார்கள்.

வர்ணங்கள் அற்ற

அன்பின் அந்த தூய வானத்தை

எங்களுக்கு

பொன்னாடை போர்த்துகிறார்கள்.

அன்பின் ஊற்றான நண்பர் குழாமும்

தங்கள் வாழ்த்துக்களை

எங்கள் மீது தூவுவதால்

இப்போது எங்களுக்குத்

தெரிவது

புதிய வானம்! 

புதிய பூமி!

புதிய சூரியன்!

________________________________

அன்புடன்

ப கஸ்தூரி‍ _இ பரமசிவன்.

04.09.2021

நிலா நிலா ஓடிவா

 நிலா நிலா ஓடிவா

___________________________ருத்ரா



நிலா நிலா ஓடிவா!

நில்லாமல் ஓடிவா!

மலை மேலே ஏறி வா!

மல்லிகைப்பூ கொண்டு வா!

நிலா சொன்னது

இதுக்கு மேலே என்னால்

வரமுடியாது.

"வாராயோ வெண்ணிலாவா

கேளாயோ எங்கள் கதையை"ன்னு

யாரோ ரெண்டு பேர் கூப்டுராங்க.

போய் பாத்துட்டு வாரேன்.

அந்த பௌர்ணமியும் 

திடீர்னு அமாவாசை ஆனது.


_____________________________

வியாழன், 2 செப்டம்பர், 2021

ஒரு ஈரமணல் லாரி

 ஒரு ஈரமணல் லாரி

____________________________ருத்ரா


அந்த ரோட்டின் தடம்

எழுதிய நீண்ட ஈரத்தின் கோடு

விரிந்த கூந்தலின் ஓலத்தோடு

அழும் ஒரு அன்னையின் 

இதயம் அல்லவா!

அந்த ஈரமணல் லாரி 

விட்ட கண்ணீர்

எத்தனை எத்தனை

ஆற்றுக்கன்னிகளை

வன்முறையாய்

கன்னிக்குடம் 

உடைக்க வைத்தது

என்ற‌

சமுதாயச்சாக்கடையில்

என்ன சரித்திரத்தை

நாம்

எழுதிக்கிழிக்கப்போகிறோம்?

பறவைகளின் வீடுகளுக்கு

வறண்ட குச்சிகளும் முட்களும்

போதும்.

நமக்குத்தான்

இந்த ஜீவநதிகளின் குடல் கிழித்து

கூடுகள் கட்டும் 

"வியாபாரம்" வேண்டியிருக்கிறது.

அத்தனை அளவுக்கு

ரத்தம் சொட்ட சொட்ட‌

வைக்கிறது

நம் "இயற்கை நேயத்தின்"

அசிங்கமான பக்கங்கள்.


_____________________________________________



சொற்கூட்டங்கள்

 https://www.facebook.com/photo/?fbid=610082656823645&set=gm.1452816865101741


with thanks for the LINK





நட்சத்திரப்பாடகன் 

அவர்களே!

பாராட்டுகள்.

கவிதை மிக அருமை.

புகைப்படமோ

அருமை அருமை 

அத்தனை அருமை!

அந்த புகைப்படம்  போதுமே

மற்ற நம்

சொற்கள் சொற்கள் சொற்கள்

அத்தனையும் குப்பைக்கூடைக்கே!

அந்த படம் காட்டும் 

உணர்ச்சிக்காட்டில்

நம் காவியங்கள் எல்லாம்

வெறுமே

பூச்சி காட்டுகின்றன.

அந்த சொற்கூட்டங்கள் எல்லாம்

ஈசல்கள் 

உதிர்த்த ரெக்கைகள் தான்.

_________________________கவிஞர் ருத்ரா


மாடல்ல மற்றையவை

 மாடல்ல மற்றையவை

_________________________________ருத்ரா



"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றையவை."


மாடு தான் எல்லாம்.

மாடு செல்வம்.

மாடு செழிப்பு.

மாடு உணவு.

மாட்டைச்சுற்றியே தான்

அறிவும்.

மாடு மருத்துவ மனை.

மாடு தான் நாடு.

போர் மூள்வதும் முடிவதும்

மாடுகள் வைத்தே தான்.

மாட்டின் அதிபதி

அதாவது பசு பதி தான்

மன்னர்க்கெல்லாம் மன்னன்.

மாடு 

பசு

மாட்டை வைத்திருப்பவன்.

பதி.

அவன் கையில் உள்ள கயிறு 

பாசம்.

பசு பதி பாசம்

மூன்றெழுத்து மந்திரமே

தத்துவத்தையெல்லாம் பிழிந்து தரும்

ஜிகர் தண்டா என்றார்கள்.

ஆனால் இப்போது 

மானிட நேயத்தையே

பிழிந்து குடிக்கக் கிளம்பிவிட்டார்களே!

அது பசுவா? எருமையா?

அதை வைத்து

இவர்கள்

அரக்கர் வதம் பற்றிய‌

புராணங்கள் குவித்திருக்கிறார்கள்.

பசு என்றால் ஜீவாத்மா

பதி என்றால் பரமாத்மா

பாசம் என்றால் இரண்டின் பிணைப்பு.

அத்வைதம் கயிற்றை துண்டித்து

இரண்டு அல்ல ஒன்றே என்றது.

பசு என்றால் பசு மட்டும் அல்ல.

உயிர் தாங்கி இருக்கும் எதுவும் பசு தான்.

பன்றியும் பசு தான்.

கோழியும் மீனும் ஆடும் கூட 

பசு தான்.

ஆனால் இவர்களுக்கு

பால் தரும் 

தயிர் தரும் 

வெண்ணெய் தரும்

பசு மட்டுமே 

லட்சுமி ஆனது.

காமதேனு ஆனது.

இன்னும் பாஷ்யங்கள் ஆனது.

வரலாற்றுப்பக்கங்கள்

தலைகீழாய்

புரட்டப்பட்டுக்கொண்டிருப்பது

அறியாத‌

அப்பாவி மக்களிடமும்

பாமர மக்களிடமும்

இந்து தத்துவா

அரசியல் கத்தியை சாணை பிடிக்கும்

தந்திரத் தத்துவா ஆகிப்போனது.

அதனால்

மாட்டு வங்கியே இவர்கள்

ஓட்டு வங்கி.

அதன் இறைச்சியில் தான்

இருக்கிறது

இவர்கள் இறையாண்மை.

மாடு கத்தி இறைச்சி

இவை எல்லாவற்றிலுமே

இவர்களின் தாராளமய பொருளாதாரம்

"அத்வைதம்" பேசுகிற போது

நந்தி தேவரை விலக்கிவைத்து விட்டு

கோமாதாவை மட்டும்

இவர்கள்

அரசியல் சட்ட ஷரத்துக்குள்

அலச நினைப்பது

என்ன அரசியல்?

மன்னர்களின் மடியில் உட்கார்ந்து கொண்டு

பிற மதங்களோடு

ஒரு முரட்டு வாதம் செய்து

வென்று விட்டதாய்

மாற்று மதத்தவரை

கழுவில் ஏற்றிய வரலாறு

நாம் அறிவோம்.

ஜனநாயகமும்

அப்படியொரு சர்வாதிகாரத்தின்

மடியில் போய் உட்கார்ந்து கொள்ளும்

விபத்துகளும் ஆபத்துகளும்

கொண்டது தான்

இந்த வாக்குப்பெட்டிகளா?

சோம்னாம்புலிஸம் எனும்

தூங்கிக்கொண்டே நடக்கும் வியாதி

இருந்தால் பரவாயில்லை.

தூங்கிக்கொண்டே போய்

அந்த மின்னணுப்பொறியைப் போய்

அமுக்கும் வியாதிக்கு

என்ன மருந்து?

நாம் இன்னும் "நாலு கால்" மனிதர்களாக‌

இல்லாமல்....

இவர்கள் காட்டும் 

வைக்கோல் கட்டுகளுக்கும்

புண்ணாக்குகளுக்கும்

நாவுகள் நீட்டாமல்....

ஒரு எழுச்சிக்கு குரல் கொடுக்கும்

"நாவுக்கரசர்களாய்"

ஜனநாயகம் காப்போம்!

சமநாயகம் கேட்போம்!


_____________________________________

26.10.2015 ல் எழுதியது.

அந்த முகம்

 https://www.facebook.com/photo/?fbid=1166259810563823&set=gm.1452004735182954

THANKS FOR THIS LINK



1 நபர் மற்றும் தாடி இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


அந்த முகம் நம் மீது

குண்டுகளை உமிழ்கிறது.

நாசமாய்ப் போங்கள் சவங்களே என்று!

உயிர்த்த இந்த கண்களில்

இன்னுமா அந்த வரிகள்

புலப்படவில்லை?

"தனியொருவனுக்கு 

உணவில்லை யெனில்..."

______________________கவிஞர் ருத்ரா



ரோஜாத்தீ


இளமைத்தீயின் 

பெருங்காட்டிடையே

ஒரு ரோஜாவைக் 

கையில் ஏந்தி

அதை சருகு ஆக்கிவிடாமல்

தன்னைக் கருக விட்டுக்கொண்டு 

கற்பனையில் ஒரு

"க்ராஃபிக்ஸ் கேம்ஸ்"

விளையாடுவதே "காதல்".

_____________________ருத்ரா




புதன், 1 செப்டம்பர், 2021

உறக்கம் கலையட்டும்

 


உறக்கம் கலையட்டும்

______________________________

ருத்ரா


மூவர்ணம் தோன்றிய வானத்தில்

விடியல் தோன்ற விடாத‌

சதுப்பு நிலக்காடுகளே இந்த‌

சதுர் வர்ணப் புதைகுழிகள்.

பாரத புத்திரர்களே

ஒவ்வொரு தடவையும் 

தேர்தல் என்ற சகுனி விளையாட்டில்

நீங்கள் உருட்டுகிற பகடைக்காய்கள்

எல்லாம்

உங்களை நசுக்கும்

ரோடு ரோலர்கள் ஆன‌

கொடுமையை எப்போது

தவிடு பொடியாக்கப்போகிறீர்கள்.

மதம் என்ற அபினியில்

தோய்த்தெடுத்த‌

கடவுள்கள் எனும்

கோரப்பற்கள் பிளந்த‌

மிருகங்கள் உங்களை

இரையாக்கித் தின்று கொண்டிருக்கும்

பொய்மை நிழற்காடுகளை

என்றைக்கு அழிக்கப்போகிறீர்கள்?

இவை 

உங்களை மேலே சுடரும் வானத்தை பார்த்து

தெளிய விடாமல் மறைக்கும்

தந்திரங்களை 

எப்போது முறியடிக்கப்போகிறீர்கள்?

அறிவு பேரறிவு பகுத்தறிவு

எனும் புத்தொளியின்

கதிர்வீச்சு ஒன்றே

இந்த சமுதாயத்தின் 

புற்றுநோய்க்கட்டிகளை

அழித்தொழிக்கும்.

மானிட மலர்ச்சிக்கும்

மானிடத்தின் சமநீதிக்கும்

இந்த சமுதாய எழுச்சி எனும்

மருத்துவமே

நமக்கு இப்போது தேவை.

சிந்தியுங்கள்?

ஊடகக்கூக்குரல்களையும்

கண்கூச வைக்கும் வெளிச்சங்களையும்

ஊடுருவி நின்று

ஒரு நியாய ஆவேசம் கொள்ளுங்கள்.

நீங்கள் துரும்புகள் அல்ல.

இந்த விளம்பர ஓசைப் புயல்களில்

காணாமல் போய்விட!

சிந்தியுங்கள்.

அதுவே உங்கள் கண்களில்

அழல் வளர்க்கும்

ஆழித்தீ! ஊழித்தீ!

உறக்கம் கலையட்டும் புது

உலகம் பிறக்கட்டும்.

_______________________________