வியாழன், 16 நவம்பர், 2017

"அறம் " நயன் தாரா

"அறம் "  நயன் தாரா.
=======================================ருத்ரா

இந்த‌
"அறம்" வளர்த்த நாயகிக்கு
நூற்றுக்கு அறுபது
போட்டுவிட்டது ஆனந்தவிகடன்.
என்றாலும்
உள்ளே
நூற்றுக்கு நூறு என்றே
அர்த்தப்படுத்தி காட்டியிருக்கிறது.
சினிமாத்திரையில்
புஷ்டி காட்டுவது ஆண்கதாநாயகர்களே
என்ற
கல்லாப்பெட்டி இலக்கணத்துக்கும்
கல்லறை கட்ட வந்திருக்கிறது
இந்தப்படம்.
நயன் தாரா அவர்களின்
நடிப்பில்
துடிக்கும் ஒரு விடியல் இருக்கிறது.
முகமா? கண்களா?
ஒரு நெருப்பு லாவாவின்
ரோஜாப்பூக்களை
அவர் தோட்டமாக்கியிருக்கிறார்.
ரொம்ப காலமாகவே
ஊர்வசி விருதுகள் துருப்பிடித்து தானே
கிடக்கின்றன.
அந்த "ஊர்வசிகளின்"
ஒளி ஊர்வலம் நயன் தாரா!
ஆட்சி எந்திரத்தின்
ஆணிகளும் அமைப்புகளும்
மனிதத்தை  கூழாக்கி
தன் கடகடத்த
அசிங்கமான சத்தங்களுக்கு
"கிரீஸ்" போட்டுக்கொள்கிற‌
அவலங்களை தோலுரித்த‌
கோபி நயினார் அவர்களின்
இயக்கத்தில் சமுதாய இதயத்தின்
இயக்கம் இருக்கிறது.
அது உண்மையில் ஆழ் துளை கிணறு அல்ல.
அந்த இரண்டரை மணிநேர
பிரசவ வலிக்குள் இருந்தது
இன்னும் கர்ப்பமே ஆகாத
நம் மக்கள் ஜனநாயகத்தின்
பிஞ்சுத்துடிப்புகள் தான்.
அந்த தருணங்களை
ஒரு ஊசிமுனையாக்கி
நம் குற்றங்களுக்கு
நம்மையே அதில் கழுவேற்றி
நம்மை ஒரு வலிக்கடலில் தள்ளி
பாடம் சொன்ன
அந்த காமிராவும் காட்சி அமைப்பும்
ஒரு படைப்பின் சிகரத்தை
எட்டி விட்டது.
இதன் பிரம்மாக்கள் ஆன
ஓம்பிரகாஷும்  பீட்டர் ஹெய்னும்
நம் மனமார்ந்த போற்றுதலுக்கு உரியவர்கள்.
ஜிப்ரானின் மென்மை இசைக்குள்ளும்
புயலின் சிறகுகள் ஒரு புளகாங்கிதத்தை
பதிவு செய்கின்றன.

அந்த ஆழ்துளையில்
துளைத்தெடுக்கும் கேள்விகள்
நம் அரசியலின்
பரிணாமத்தைப் பற்றியது தான்.
இந்த ஓட்டுப்பெட்டிக்குள்
விழுந்து கிடக்கிற
நம் ஜனநாயகக்குழந்தையை
மீட்க நம் கைகளின்
"அறம் சீறும் "
நரம்புகள் தான்
இனி முறுக்கேற்றிக்கொள்ள  வேண்டும்.

=====================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக