ஞாயிறு, 19 நவம்பர், 2017

வி.சாந்தாராம்

வி. சாந்தாராம்
V. Shantaram (1901-1990).jpg


(நன்றி ..தமிழ் விக்கிபீடியா )

வி.சாந்தாராம்
=========================================ருத்ரா

ஜனக் ஜனக் பாயல் பாஜே
நவரங்க்
தோ ஆங்கே(ன்) பாரா ஹாத்
கீத் காயா பத்தரோன் நே
ஸ்த்ரீ

இவையெல்லாம்
அற்புதமான "செல்லுலோஸ்"
கல்வெட்டுகள்.
இந்திய திரைப்படங்கள்
இலக்கியவடிவங்கள் பெற‌
காரணமாயிருந்த‌
காமிராச்சிற்பி
சாந்தாராம்அவர்களின்
படைப்புகள்.

எத்தனை எத்தனை படங்கள்!
இன்று
இந்தி ஏன்  இப்படி
பல்லைத்துருத்திக்கொண்டு
அரசியல் நாகரிகம் இழந்து
நம்மீது திணிக்க வருகிறது
என்ற நம் கேள்விகளையெல்லாம்
தாண்டியவராய்
சாந்தாராம் எனும் இயக்குநர்  மேதை
நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார்.
அத்துணை கலை உணர்வு சுரக்கும்
அரங்க அமைப்புகள்
அந்த "ஐம்பது அறுபது "களில்
அரிய கலைப்பெட்டகத்தின்
கால சாட்சிகள்!

சமுதாயத்தின் உள்வலியையும்
வண்ணக்குழம்பில் தோய்த்து
அதில் அடியில் எரியும்
நெருப்பின் வண்ணத்தை
நெகிழ்ச்சியாக்கி காட்டிடுவார்.

இவரது கருப்புவெள்ளைப்படங்கள் கூட‌
சீறும் சிந்தனை முத்திரைகள் தான்.
இவர் படங்களில்
காட்சியில் எங்கோ ஒரு ஓரத்தில்
கிடக்கும்
ஓட்டை உடைசல் பாத்திரங்கள் கூட‌
நடிக்கும்.
தோ ஆங்கே பாரா ஹாத்தில்
ஒரு காட்சி.
ஜெயிலராக நடிக்கும் சாந்தாரம்
கொடிய கொலைகாரர்களைக் கூட‌
மனிதாபிமானம் மிக்க கண்ணோட்டத்தோடு
திருத்த முயல்வார்.
அவர் ஒரு மேஜையில் உட்கார்ந்து
வேலையில் ஆழ்ந்திருப்பார்.
அந்த மேஜையில் ஒரு கத்தி இருக்கும்.
ஒரு கொலைக்குற்ற கைதி
அந்த அறையை துடைத்து சுத்தம்
செய்து கொண்டிருப்பான்.
ஜெயிலர் அவன் மீதுள்ள நம்பிக்கையில்
அந்த கத்தி அங்கு இருப்பதாகவே
பொருட்படுத்திக்கொள்ள மாட்டார்.
அவன் இவரை குத்திக்கொல்ல‌
தருணம் பார்த்து துடைப்பது போல்
அந்தக் கத்தியைப்பார்த்துக்கொண்டிருப்பான்.
அவனது மனத்தளும்பல்களை
படம் பிடிப்பது போல்
அந்த கத்தி ஆடி ஆடி அசைந்து நிற்கும்.
அந்த பளிச் பளிச் ஒளிநிழல்களை
மிக மிக மெல்லியதாக
காட்டியிருப்பார்
சாந்தாராம் அந்த படத்தில்.
ஒரு முத்திரை பதித்த டைரக் ஷன்  அது.

இது போன்று
இருட்டையும் வெளிச்சத்தையும்
கலந்து தருவதில் கூட‌
ஏழு வர்ணங்களும் உள்ளே
மறைந்து நடிக்கும்.
"ஜனக் ஜனக் பாயல் பாஜே "யில்
கோபிகிருஷ்ணாவின்
அந்த கால் சலங்கை சிலிர்ப்புகளில்
எத்தனை சுநாமிகள் உதிர்ந்து கிடந்தன!
நடிப்பின் வர்ணப்பிரளயம்
ஒலித்த காட்சிகள் அவை.

"ஸ்த்ரீ"யில்
அந்த பிஞ்சுக்குழந்தைக்கு
வர்ண வர்ணமாய்
தோகைவிரித்துக்கொண்டு
மயில்
திராட்சைக்கனியை
ஊட்டியதில்
காளிதாசனின் "சாகுந்தலம்"
வெகு நுட்பமாய் அரங்கேறியது!
காமிராவை
எப்படி அவர் தூரிகையாக்கினார்?
அதில் பிக்காஸோவும் ரவிவர்மாவும்
தங்கள் தூரிகை மயிர்த்துடிப்புகளை
நடிப்புகள் ஆக்கினர் !
அந்த திரையுலக மேதைக்கு
நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக