திங்கள், 27 நவம்பர், 2017

ஆர்.கே நகர் (2)

ஆர்.கே நகர் (2)
======================================ருத்ரா

"எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே.."
என்று "மலைக்கள்ளன்" எம்.ஜி.ஆர்
தன் குதிரையுடன்
இங்கு பவனி வந்து கொண்டிருக்கிறார்.
ஆளாளுக்கு
அடித்துத்துவைத்து
உரிமை கொண்டாடி
கந்தலாய் கசங்கிப்போன‌
அந்த இரட்டை இலை
காற்றில் அசைந்து கொண்டிருப்பதைக்
கண்டு அதிர்கிறார்.
அடையாளம் தான் கட்சியா?
அதற்குள் துடிக்கும்
ஜனநாயகத்தின் இதய நரம்புகள்
ஏன் இப்படி அறுந்து தொங்குகிறது
என கலங்கித்தவிக்கிறார்.
சின்னம் போதும்
என்று பட்டாசுகள் படபடத்து வெடிக்கின்றன.
லட்டுகள்
வாய்களுக்குள் திணிக்கப்படுகின்றன.
அவையெல்லாம்
அவருக்கு கசக்கின்ற இனிப்புகள்!

.............
"என் நூற்றாண்டுக்கு
இத்தனை தாரை தப்பட்டையா?
ரோடுகள் மறிக்கப்பட்டு
இத்தனை தட்டிகளா?
விபத்துகள் ஏற்பட்டு
அந்த மனிதப்பூச்சியின்
ரத்தச்சகதியால்
அங்கே ரங்கோலி போட்டா
கொண்டாட்டம்?

ஒருவருக்கு கல்வெட்டு.
இன்னொருவருக்கு கல்பூட்டு.
கோட்டை தூசி படிந்து கிடந்தாலும்
கோட்டைக்குள் குத்துவெட்டு
வெளியே தான்.
ஜனநாயகத்தை
மக்களின் கண்ணாடியில்
பிம்பம் ஆக்க வந்தவர்கள்
தங்களைத்தாங்களே
அழகு பார்த்துக்கொண்டார்கள்.
ஹிட்லரிஸம்  எனும்
சரித்திரத்தின் அவலமான‌
அந்த "நறுக்கு மீசையும்"
கொடுஞ்சிறைகளும் அல்லவா
பயம் காட்டுகின்றன.
நான் வாரிசு என்று
வைத்துவிட்டுப்போனவருக்கும்
"நான் ஆணையிட்டால் "
என்று சவுக்கடிகள் சொடுக்கியதன்
லட்சியக்குறிப்புகள்
மறந்தா போனது?
எப்போதும் வால் பிடிப்பார்
என்றேனே
இப்போதும் எங்கோ யாருக்கோ
வால் பிடிக்கிறார்கள் போலும்."
.....................
அவர் கனவெல்லாம்
அங்கே பரப்பன அக்கிரஹாரத்தில்
சுக்குநூறாய் நொறுங்கிக்கிடப்பதைக்
கண்டு நொந்து
மெரீனாவுக்குள்
மீண்டும்
உறங்கப்போய்விடுகிறார்.

========================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக