வெள்ளி, 31 மார்ச், 2023

வெற்றிமாறனின் விடுதலை.

வெற்றிமாறனின் விடுதலை

________________________________________________

சேயோன்.



ஏறக்குறைய ஒன்றரை லட்சம் 

இலங்கைத்தமிழர்கள்

கசாப்பு செய்யப்பட்ட பின்பும்

அதன் குருதிகலந்த கண்ணீரின்

அக்ரிலிக் பெயின்டிங்கில்

கொடி அசைத்துக்கொண்டு

செத்துப்போன நியாயத்துக்கு

எள்ளும் தண்ணீருமாய் வந்து

கொட்டிக்கொடுக்கப்படும்

கரன்சிக்கோட்டை ஒன்றைக்கட்டி

ஆளுகின்ற ஜிகினா ஆவேசங்களையெல்லாம்

பார்த்த பின்

ஏதோ ஒரு நீர்த்துப்போன‌

விடுதலை தாகத்துக்குள்

மீண்டும் ஒரு செயற்கைத்தாகம் ஏற்படுத்த‌

ரத்தமும் நகப்பிடுங்கல்கள்களும்

நிர்வாணப்படுத்தும் வெறித்தனங்களும்

என்னத்தை உயிர்த்துவிட இயலும்?

கம்யூனிசம் பற்றி

சாதாரணமாய் ராமாயண உபன்யாசங்கள்

போல‌

சப்பளக்கட்டைகள் தட்டி

இந்த மரத்துப்போன‌

செவிப்பறைகளை கிழித்துவிட முடியாத போது

இந்த எரிமலை தாகத்தை

ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்து

அப்படியே அப்பிவைத்துக்காட்டுகிறேன்

என்பதில்

ஒரு கனத்த கண்ணீர்த்துளி

கதை சொல்கிறது...அதுவும்

ஒரு அமிலமழைக்கு மேகம் கருவிக்கொண்டு

அகர முதல சொல்லத்துடிக்கிறது

என்பது மிக மிகத்தேவையான ஒன்று.

இதை பாராட்டு என்று கொச்சைப்படுத்துவதில்

எந்த நோக்கமும் நிறைவேறாது.

சூரி வெற்றிமாறன் கௌதம் மேனன் விஜய் சேதுபதி

என்று

ஒரு செம்படை கிழக்குத்திசையில்

ஒருவிடியலின் சிப்பைக்கிழித்துவிட‌

உந்துதல் காட்டுகிறது என்பதே

நாம் கண்ட சிறந்த வரலாற்றுத்திருப்பம்.

பிராணாயாமம் அது இது என்று

மூச்சுக்கலை பற்றி முழக்குவதில் தான்

நாம் மூழ்கியிருக்கிறோம்.

சமுதாயத்தின் 

அந்த மனித மூச்சே தான் மார்க்சிசம்

என்று இந்த படம்

அந்த சோடாபுட்டி அறிவுஜீவிகளுக்குள்

சோடாபாட்டில்கள் உடைத்துக்காட்டுமா?

மனிதனை மனிதன் சுரண்டுகின்றானடா

மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா

மனிதன் மனிதன் விலங்கிலும் கீழாய்

நடத்துகிறானடா

...

சரி அடா புடான்னு எழுதிட்டா போதுமா?

சீற்றம் எங்கே?

சினம் எங்கே?

ஆவேசம் எங்கே?

சிந்தனை உந்தலில் 

சிந்தனை விசையில்

சிந்தனையின் 

கால வெளி சமுதாயச்சுழி ஒன்று

கருந்துளையாய்

புதிய பிரபஞ்சங்களை

உறிஞ்சி உமிழுகிறது.

இதன் வெளிச்சம் 

எல்லா இருட்டு குருட்டு சந்துகளிலும்

கிழித்துக்கொண்டு பாய்கிறது.

அந்த பாய்ச்சல் மாறனே

வெற்றி மாறன்.

இன்னும் இன்னும்

இவன் மனித சிந்தனை

அநீதிகளின்

மடை உடைத்த வெள்ளமாய் 

பாயட்டும்.

மக்கள் விசையே

எல்லா அணுக்களிலும் 

அறியாமையை 

பிளக்கும் விசை.

அறிவுச்செறிவை

சேர்க்கும் விசை.

மனிதச்சுடரேந்தி..

ஓ! மனிதமே !

ஓடி வா! ஓடி வா!


________________________________________________




________________________________________________





புள்ளி



உங்களுக்கு தெரியுமா?

ஆணைப்படைத்த 

ஆணவ இறைவன்

அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே

அதிரடியாய் பதிலடியாய்

பெண்ணே முதலில் வந்து

வாசல் திறந்தாள்.

இவளின் தொப்பூள் கொடியே

இன்னும் 

அறுபடவில்லை

அறுபட‌வில்லை

அந்த இறைவனின் 

தொப்புள் புள்ளியில்.


__________________________________________________

ருத்ரா

புதன், 29 மார்ச், 2023

அகழ்நானூறு 32

 அகழ்நானூறு 32

___________________________________________

சொற்கீரன்.



சிமையக்குரல் கவின் ஊர்பு முடிச்சு

நிமிர்த்தன எதிரிய நிரம்பா நீளிடை

அவள் ஊறுசெய்தனள் கூந்தல் அஞ்சிறை

கொடுந்தண் பண்ணின் ஒலிமென் உருகெழ‌

ஓவு கொண்டனள் அவன் ஆவி கொண்டனள்.

அத்தம் நண்ணி அரும் பொருள் சேர்த்து

அகில் சுமந்து ஆர்த்த செல்வம் மணிநிரை கொளீஇ

ஆறு கொள்ளா ஆறுகள் நீந்துவன் ஆங்கு

சிமயவரம்பினள் சீர்மிகு ஐம்பால் கூந்தல் 

செறீஇய கருவி வானம் கல் பொருது இற‌ங்க‌

கருவிழி கொடிவிடு நீர்வழியாய் அவள் கறங்கு

வழியில் அவனும் இழைந்தான் பகன்றை அன்ன‌

அவள் முன்றில் இவர்தல் ஆற்றான் முறுவல் கண்டே


___________________________________________________________



அகழ்நானூறு 32க்கு பொழிப்புரை

___________________________________________________

சொற்கீரன்


பொருள்தேடி செல்லும் காதலன் காதலியின் நினைவாகவே காடுகளை கடந்து செல்கிறான்.அவள் கூந்தல் அழகு ஒரு மலையுச்சியை அவன் நடக்கும் அந்த நீண்ட வெறும்பாதையில் அவன் எதிரிலேயே அழகு காட்டி 

அவனை வதைக்கிறது.அவள் கூந்தல் இழைகள் அந்த மலைவிளிம்பிலேயே ஊர்ந்து ஊர்ந்து வந்து அவன் வழியோடு வந்து துயர் செய்கிறது.அவள் கூந்தல் திரள்கள் அழகிய வண்டுகளின் சிறகுகுகள் போல் தண்ணிய ஒரு இசையை ஒரு உருவகமாய் ஓவியம் காட்டுகிறது.அதில் அவன் உயிர் அவளுடனேயே பிணைந்து செல்கிறது.அவனும் விடாது காட்டுவழி தொடர்ந்து அந்த காட்டின் எல்லைக்கும் சென்று பொருள் ஈட்டுதலை

விடவில்லை.சந்தனம் மற்றும் விலைஉயர்ந்த மணிகள் எல்லாம் ஈட்டிக்கொண்டு வழி நிறைய அவள் நினைவுகள் வழிய வழிய இன்பப்பயணத்துடன் வழி திரும்புகிறான்.அப்போதும் அவள் அழகிய கூந்தலின் சிகரம் அழகு பொருந்திய உயரத்தில் அவனை அழைக்கின்றது.அவள் கூந்தல் பல வகிடுகளில் பிரிவுற்று அடர்த்தியான மழை சுமக்கும் கருமேகங்களின் வானத்துக்காட்சிகளாய் அவனை கவர்கின்றது.அந்த நீளக்கூந்தல் கொடி பிரிந்து கல் மோதி நீர்வழிபோல் ஒலித்து இறங்குவதோடு அவனும் இழைந்து நெளிகின்றான்.அவள் வீட்டு முற்றத்தில் ஒரு பகன்றைக் கொடியாய்ப்பற்றிப் படர மிகவும் தவித்தவனாய் வருகின்றான்.அவளது அழகிய முறுவல் கண்ட காட்சியே அவனை இவ்வாறு அவளிடம் சேர்க்க விரைகிறது.


எயினந்தை மகனார் இளங்கீரனார் அகநானூற்றுப்பாடல் 399 ல் சிமையம் இமையம் என்ற சொற்களை ஆளும் விதம் வெகு வெகு நுட்பமானது. தமிழ்ச்சொல்லான சிமையம் என்பது மலை உச்சியைக்குறிக்கும்.இதுவே சங்கத்தமிழில் "இமயம்"ஆக  வருகிறது.வடவேங்கடம் என்றால் நாம் பக்தியோடு குறிப்பிடும் வேங்கட மலை தான். ஆனால் பொருள் தான் வேறு.வேய் எனும் மூங்கில் காடுகள் நிறைந்ததைக்குறிக்கும் சொல் அது.மலைச்சிகரத்தின் தூய தமிழ்ச்சொல்லே சிமயம் அல்லது சிமையம் ஆகும்.இதுவே இமயம் அல்லது இமையம் ஆயிற்று.எயினந்தை மகனார் இளங்கீரனார் இந்த சொல்லை வைத்தே அந்த அகநானூற்று பாடலின் அழகு நுட்பத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்.

"வேய் கண் உடைந்த சிமைய" என்னும் வரியில் மூங்கில் கணுக்கள் காய்ந்து முற்றி உடையும் நிலையில் உள்ள வெயிலின் கொடுமையில் அந்த மலை உச்சியை (சிமைய) குறிக்கின்றார் புலவர்.

நம் தமிழ்மொழியின் சிறப்பு "அதன் பெயர் சூட்டலே". இனிய பொங்கல் உண்டோம் என்கிறோம். பொங்கல் என்பது பொருளைக்குறிக்கவில்லை. பொருள் சமைக்கபட்டு அதாவது பொங்கும் அல்லது கொதிநிலை எனும் வினையைக்குகுறிக்கும்.எனவே "பொங்கல்"என்பது வினையாகு பெயர்.வினைப்பெயரே பொருளுக்கு ஆகிவருவதே தமிழின் சிறப்பு.இதன் அடிப்படையில் "மலை"யை நாம் ஏன் மலை என்கிறோம்.னம் எதிரே உயரமாய் தோன்றுவது நம்மை "மலைக்க "வைக்கிறது.எனவே மலை கூட வினையாகுபெயர் தான்.மலைத்தல் உணர்ச்சி இங்கு புலப்படுவது போல் மிக மிக உயரமான உச்சி நிலை (சிகரம்)யைக்கண்டு இமை கொட்டாது கண்டு வியக்கிறோம்.இதன் அடிப்படையில் வழங்கும் சொற்களேசிமையம் இமையம் என்பது.


அந்த தமிழ்ச்சுடரின் அழகினை அகழ்ந்து நான் எழுதியதே இந்த அகழ்நானூறு 32.


_____________________________________________________________________________







___________________________________________________________________________________




ஞாயிறு, 26 மார்ச், 2023

திருமணவாழ்த்து மடல்

திருமணவாழ்த்து மடல்

_________________________________________________


மணமகன்

செல்வன் ஆ அரவிந்த் சீனிவாஸ்

மணமகள்

செல்வி எம் பெரியநாயகி எனும் மீனா.

திருமண நாள்

27.03.2023

மதுரை

M S MAHAL

Paravai.

_____________________________________________________________________


இல்லறச்சோலை புகுந்திடும் 

அன்பு உள்ளங்களே.

அஞ்சற்க!அஞ்சற்க! 

அஞ்சறைப்பெட்டி உங்களிடம் உண்டு.

இன்பப்பெட்டகமும் அதுவே தான்

அறிவீர்!

இதயம் என்னும் உங்கள் பாஸ்வர்ட் 

திறக்கும் வாசல் எல்லாம் 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெள்ளமே.

இது உங்கள் உங்கள் உங்களுக்கான 

இனிய தருணங்களின்

 புத்தகத்திருவிழா.

எழுதுங்கள் படியுங்கள் எல்லாம்

 உங்கள் எழுத்துக்களே.

இனி உங்கள் இலக்கணமும் அதுதான்.

இலக்கியமும் அது தான்.

இல்லற வரிகளின் அன்பும் அழகும் 

அறிவின் கோடும் புள்ளியும் சேர்ந்து

மனம் மகிழ்ந்த மருதானை ஓவியம்

மங்கா ஒளியில் மங்கலம் நிறைக்கும்.

வீடுகள் வெறும் கூடுகள் அல்ல.

நினைத்தால் அங்கு சிறகுகள்

 முளைக்கும்.

வானமும் உயர்ந்து நோக்கிட வெட்கும்

பேரும் புகழும் செல்வமும் நிறைந்திட‌

மக்கட் பேறு எனும் மாணிக்கமும் சுடர‌

நீங்கள் நீடூழி நீடுழி வாழ்ந்திடவே என‌

வாழ்த்திடுகின்றோம்.

வாழ்த்திடுகின்றோம்.

 

_________________________________________


அன்புடன் வாழ்த்தும்


இ.பரமசிவன் & ப.கஸ்தூரி

குடும்பத்தினர்.

ப்ளாட். 628

10 வது தெரு

கற்பகநகர்

மதுரை 625007

________________________________________












தேன்பிரளயம்

 

https://www.youtube.com/watch?v=mBX775qJZZ0

"அன்பே என் ஆரமுதே..."

சீர்காழி கோவிந்தராஜன்‍...ஜிக்கி.




இது பாட்டா?

இந்த தேன்பிரளயம் என்னை

எத்தனையோ தடவை 

புரட்டி புரட்டி போட்டு விட்டது.

திருப்பி திருப்பி எத்தனை தடவை

கேட்டிருப்பேன்

என்று துல்லியக்கணக்கெல்லாம் 

போட்டுக்கொண்டிருக்க முடியாது.

அந்த நேரத்தில்

அந்த மெட்டின் இனிமை துள்ளும் அரும்புமுனை

சடக்கென்று மொத்த பிரபஞ்சத்தையும்

என் மீது கவிழ்த்து 

திக்குமுக்காட வைத்து விடுமே.

சுவரில் வட்டவட்டமாய் தயிர்க்காரி 

பொட்டுவைப்பாளே 

அவளிடம் தான் எத்தனை தடவை என்று

கேட்க வேண்டும்.

அவள் சொன்னாள்.

அய்யா நீங்களே வந்து பாருங்கள்.

அந்த புள்ளிகள் தெரியவில்லை.

எங்கும் எறும்புகள் எறும்புகள் எறும்புகள்!

இன்னும் இன்னும் 

அங்கு ஜிக்கியும் சீர்காழி கோவிந்தராஜனும்

புதிருக்குள் வராமலேயெ புதிராய் இருக்கும்

அந்த இனிப்பின் உயிர்ப்பு ஒலியை

பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

_________________________________________________

சேயோன்



தேன்பிரளயம்


"அன்பே என் ஆரமுதே..."
சீர்காழி கோவிந்தராஜன்‍...ஜிக்கி.

இது பாட்டா? இந்த தேன்பிரளயம் என்னை எத்தனையோ தடவை புரட்டி புரட்டி போட்டு விட்டது. திருப்பி திருப்பி எத்தனை தடவை கேட்டிருப்பேன் என்று துல்லியக்கணக்கெல்லாம் போட்டுக்கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில் அந்த மெட்டின் இனிமை துள்ளும் அரும்புமுனை சடக்கென்று மொத்த பிரபஞ்சத்தையும் என் மீது கவிழ்த்து திக்குமுக்காட வைத்து விடுமே. சுவரில் வட்டவட்டமாய் தயிர்க்காரி பொட்டுவைப்பாளே அவளிடம் தான் எத்தனை தடவை என்று கேட்க வேண்டும். அவள் சொன்னாள். அய்யா நீங்களே வந்து பாருங்கள். அந்த புள்ளிகள் தெரியவில்லை. எங்கும் எறும்புகள் எறும்புகள் எறும்புகள்! இன்னும் இன்னும் அங்கு ஜிக்கியும் சீர்காழி கோவிந்தராஜனும் புதிருக்குள் வராமலேயெ புதிராய் இருக்கும் அந்த இனிப்பின் உயிர்ப்பு ஒலியை பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.
_________________________________________________ சேயோன்

நெஞ்சுபொறுக்குதில்லையே ...

(38) Parasakthi Nenjuporukkuthilliaiye Song - YouTube 


இசை அமைப்பாளர் திரு.சுதர்ஸன்

____________________________________________________


அந்த இசைமாமேதையின் பாட்டு

இன்று

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம்

ஜனநாயகம் என்ற மூச்சு

எங்கே பட்டுப்போய் விடுமோ?

என்ற கவலையின் ஊசிமுனையால்

துளைக்கப்படுவதை

துல்லியமாக காட்டுகிறது.

வாழ்க அந்த இசைச்செம்மல்.

_______________________________________________

சேயோன்.