ஞாயிறு, 11 ஜூன், 2017

"அண்டப்பேரொளி "


"அண்டப்பேரொளி "
=====================================================ருத்ரா

இந்திய துணைக்கண்டத்தை
உப்புக்கண்டம்
போடத்துவங்கிவிட்டார்கள்
மதவெறியர்கள்.
நூற்றுக்கும் மேலான அடிகள்
உயரம் கொண்ட‌
சிவன் சிலைக்கு முன்
கண்மூடித்தனமாக‌
ஒரு மொட்டைத்தியானம் நடத்திய‌
பிரதமர் அவர்களே!
அந்த சிவன் தன் அடியாரிடமே
பிள்ளைக்கறி கேட்டு
சிவபக்தியை சோதனை செய்தானாமே!
அது போல்
இந்தியக்குடிமக்களின்
ஜனநாயகம் எனும்
இறைச்சியை உண்ண‌
மாட்டு இறைச்சியை
தூண்டில் வைத்து
கொடுங்கொன்மை செய்வது தான்
காவிகளின் ஆட்சி முறையா?
பாராளுமன்ற நடைமுறைகள் இருக்க‌
வெளியே துண்டு விரித்து 
"அரசு அறிவிக்கைகளை"
ஒவ்வொன்றாய் பரப்பி வைத்து
நாட்டுக்குள்
மோடிவித்தை காட்டுவது தான்
உங்கள் பாணியா?
கருப்புப்பணம் ஒழிப்பதாய்
ரிசர்வ் பாங்கு மூலம்
பாவ்லா காட்டியதன் பின்னணி என்ன?
அதை காவிப்பணம் ஆக்கி
வளர்ச்சி எனும்
உங்களுக்கே உரித்தான
கொழுப்பு சக்தி ஆக்கிக்கொள்ளவா?
உங்கள்
பகடைக்காய் உருட்டலின்
மிரட்டல் ஆட்சியை
மக்கள் புரிந்துகொண்டார்கள்.
உங்கள்
"மத நாயகம்"
ஒருபோதும் வெல்லாது!
மக்களின்
"மன நாயகமான"
ஜனநாயகமே
இருட்டைக்கிழிக்கும்
"சூப்பர்நோவா" எனும்
அண்டப்பேரொளி!...இதை
அண்டாது உங்கள்
மதவெறி மத்தாப்புகள் !

========================================================




ஊசி மழை


ஊசி மழை
==============================================ருத்ரா

கழியும் நாட்களை
கூட்டுகின்றேன்
மீண்டும் என் மன ஸ்லேட்டில்.
கரைந்துகொண்டே வரும்
கனவுகளால் தான் கணக்கு போடுகிறேன்.
துன்பங்களால்
வகுத்த பின் கிடை க்கும்
ஈவுகளும் மிச்சங்களும்
என் வாழ்க்கையின் காலடிச்சுவடுகளில்
எழுதப்படுகின்றன.
நடக்கும் கால்களின் அடியில்
சருகுகளாய் சர சரப்பது
ஆள் அரவமற்ற அடர் வனத்தை
என் தோள்களில் ஏற்றுவது
நன்றாகவே தெரிகிறது.

என் உள்ளத்தின் சல்லாத்துணியை
இந்த மௌனம்
குத்தி குத்தி
என் மீது
ஒரு ஊசிமழையை
பெய்துக்கொண்டிருக்கிறது.

என்னைச்சுற்றிய சூழல் மீது
எப்போதும் காறி உமிழத்தோன்றுகிறது.
மனிதம் எனும் பொருண்மை
ஊழல் எனும் தின் பண்டங்களால்
வெறும் பொரிவிளங்காயாக ஆகி விட்டது.
சாதியும் மதமும்
ஏற்றிய விஷ ஊசிகளில்
மானிடத்துள் இயல்பாய் சுரக்கும்
அன்பு முறிந்து போனது.
ஒரு ஏழை விவசாயி கூட
நெஞ்சு எலும்பு துருத்த துருத்த
மண்ணை நெல்லாக்கி சோறாக்கி
வளர்த்த தன் பெண் பிள்ளை
காதலில் விழுந்து
தன்னை விட தாழ்ந்த சாதியின்
இளைஞனை வரித்து விட்டாள்
என்பதற்காக
தன் பெண்ணையே
கண்ட துண்ட மாக
வெட்டிபோடும்
வெட்டரிவாள் "சனாதனமாக"
அல்லவா
நஞ்சு பாய்ச்சி  வைத்திருக்கிறது.
இந்த சாதியும் மதமும்.

அந்த "நஞ்சுண்ட" சிவனுக்கு
வந்த நஞ்சு கூட
பாற்கடல் கடைந்து வந்ததல்ல !
சாதி மத கசமாலங்களே
நஞ்சாய் திரண்டு
அவன் தொண்டையில் சிக்கி
அவனை நீலகண்டன் ஆக்கியது.
இன்னும் இவர்கள்
செய்யும் கௌரவக்கொலைகள் எல்லாம்
அந்த சிவபெருமான்களைத்தான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம பாகம் அளித்த
அந்த சிவனைச்சும்மா விடுவதா?

கடவுளாயிருந்தாலும்
அவன் திராவிடனாயிருந்தால்
வரலாற்றுச்ச்சேற்றுக்குள்
புதைத்து
வெற்று இரைச்சல் வேதங்களால்
மூடிவிடுவதே
இவர்கள் சாஸ்திரங்களின்
குப்பைகளைக்கொண்டு தான்.

நந்தனாய் சிவன் அவதாரம் எடுத்தாலும்
அவனையும் நசுக்கி கூழாக்கி
அழிக்கமுனைந்தவர்கள் தானே
இந்த வேதக் கூப்பாட்டுக்கும்பல்கள்.
ஆம்!
தமிழர்களே!
கோவில்கள் கூட
நம் வரலாற்றுக்கண்ணாடிகள் தான்.
அவற்றில் சாதி மத பூச்சாண்டிகள் காட்டும்
இந்த அற்பர்களை
அப்புறப்படுத்துவதே
நம் தமிழ்ப்பணி.
புறப்படுங்கள்! புறப்படுங்கள்!
அர்ச்சனை டிக்கட்டுகள் வாங்க அல்ல!
கோவில்களின்
இருட்டு மூலைகளுக்குள்
அறிவுக்கதிர் வீச்சுகளை  அலை விரிக்க!

====================================================








சனி, 10 ஜூன், 2017

நகைச்சுவை (28)


நகைச்சுவை (28)
=====================================================ருத்ரா

(கவுண்டமணி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறார்.செந்தில் அவரிடம் ஏதோ ஆவலாய் தெரிந்துகொள்ள வருகிறார்.)

செந்தில்

அண்ணே! பினாமி பினாமி ஆட்சிண்றாங்களே..அப்படின்னா  என்னண்ணே!

கவுண்டமணி

அடே..ய்! எங்கோ எகிப்து எதியோப்யாண்ணு தேசம் இருக்கு.அங்கே தான் "பினாமி"ங்க்றவரு நம்ம ஜனநாயகத்தைக் கண்டு பிடிச்சாராம்.

செந்தில்

பினாமின்னா ஏதோ பொம்பளப்பேரு மாதிரில்லாண்ணே இருக்கு. பெங்களூருலேருந்து தான் அது இங்க வருதுன்னு பேசிக்கிறாங்கண்ணே!

கவுண்டமணி

(கோபத்துடன் கண்கள் சிவக்க)அடே கொப்பரத்தலையா?  இதாண்டா நாலெழுத்து படிக்கணும்கிறது.

(செய்தித்தாளை பந்து போல் சுருட்டி செந்தில் மீது வீசுகிறார்)

================================================================
(நகைச்சுவைக்காக)

வெள்ளி, 9 ஜூன், 2017

என்ன கூச்சல் இங்கே?


என்ன கூச்சல் இங்கே?
=============================================ருத்ரா


கடவுள் கடவுள் என்று
இன்னும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூப்பிடுவதால்
அவர் "கூப்பிடு தூரத்தில்" எல்லாம் இல்லை.
இவர்கள் ஒலிகளே தான்
அவர்களுக்கு மீண்டும் கேட்கிறது.
கண்ணாடியில் இட வலமாக
குழம்பித்ததோன்றுவது போல்
இந்த ஒலிகளும்
தலை கீழாக வாந்தியெடுக்கின்றன!
வேதங்கள் என்கிறார்கள்
பாஷ்யங்கள் என்கிறார்கள்.
மனித சுவடுகள் அச்சடிக்கப்படுவது தான்
சமுதாயத்தின்
இந்த ஒலி ஒளி விளையாட்டுகள்.
சகமனிதனை சாக்கடைப்புழுக்களாய்
ஆக்கும் வர்ண ஸ்லோகங்கள்
நம் நாட்டை சாதிகளின் சகதிக்காடு ஆக்கி விட்டது.
தாமஸோ மாம் ஜோதிர் கமய
என்று
சில அக்கிரஹாரமே
அகில பிரபஞ்சம் என்று மந்திரம் சொல்வதில்
போலித்தனமும் ஏமாற்று வித்தையும் தவிர
வேறு என்ன இருக்கிறது?
ஒரு மனிதன் சக மனிதனை
சாகடிக்க வெறிகொள்வது என்?
மனத்துள் சாக்கடை தேங்க வைத்துக்கொண்டே
"கங்கா ஜல் "என்று
அதை பரப்ப முயலுவதேன் ?
வானம் ஒலித்தால் அது வேதம்.
மனிதன் அதை மீண்டும் ஒலித்தால்
அது வெறும் இறைச்சி
என்று சொல்லும் பிரம்ம சூத்திரம்
மாட்டு இறைச்சிக்குள்
என்ன தேடுகிறது.?
மாடும் அதை வெட்டும் அரிவாளும் கூட
பிரம்ம சமன்பாட்டில்
அபேத வாதமாய் காணாமல் போகும் என்று
அவர்கள் வார்த்தைக்கூளங்கள்
இரைச்சல்கள் இடுவது தாங்க முடியவில்லை.
அஜாதம் அவர்ணம் அமதம் அவ்யக்தம்
என்றெல்லாம் அது
ஒரு மூளி இருட்டு என
ஓய்ந்து போன "அறிவு" இறந்த
இந்த பிணங்கள்
என்னத்தைக் கூப்பாடு போடுகின்றன?
வெங்காயத்தோல்கள் போல
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
கழன்ற பின்னும்
நம் வெறுமை வெட்டவெளிச்சத்தில்
அவமானப்பட்டு நிற்கிறது.
சாதி மதங்களின் ரத்தம் சொட்டும்
சத்தங்கள் இல்லாத தேசமாக
நம் இந்திய தேசம்
எப்போது தோலுரித்துக்கொள்ளப்போகிறது ?





தாழ்வாரம்

தாழ்வாரம்
=================================================ருத்ரா

எந்த அலைகளின் ஆரவாரமும் இல்லாத‌
கடலோரம் போல்
பேய்களின் மூச்சுகள் மட்டுமே
திமு திமு என்று ஓடும் ஓசைகளோடு
நீளக் கிடந்த தாழ்வாரம் அது!

வெண்காக்கைகள் அலகு பிளந்து
மீன்கள் விழுங்கும் தருணங்கள் இங்கு இல்லை.
சிப்பிக்கூடுகள் கிளிஞ்சல்கள்
தன் கர்ப்பத்தை திறந்து காட்டும் காட்சிகள் இல்லை.
நுரை ஜரிகையிட்டு
நெஞ்சு எலும்பு துருத்தி
நெய்யும் நெசவாள அலைகளின்
தறி முழக்கங்கள் மவுனத்தின்
குறுக்கு நெடுக்கு "ஓடை"களில்
கரைந்து கரைந்து மங்கல் சித்திரங்களை
கந்தல் திட்டுகளாய் வலித்தீவுகளாய்
வார்த்துக்காட்டுகின்றன.

பகலின் மேய்ச்சல் முடிந்து
இரவு அங்கு முளையடிக்கப்பட்டு விட்டது.
சிமிட்டும் தூரத்து நட்சத்திரங்களுக்கும்
இங்கு தான் நங்கூரமா?

புழுக்கத்துக்கு அஞ்சி தூக்கம் தேடி
இங்கே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கும்
அப்பாவை தேடுகிறேன்.
நடுஇரவிலும்
வெற்றிலைச்செல்லத்தில்
விரல் நுழைத்து
வெற்றிலையும் புகையிலைவிழுதுகளும் சேர்த்து
வாய்க்குள் திணித்து
ஏதோ ஒரு வசந்த நெளியலுக்கு
துருப்பு தேடும் அவரது
அந்த வேட்டையைக்கண்டு
விதிர் விதிர்த்து நோக்குகிறேன்.
வாய் கொப்புளித்து விட்டு
மீண்டும் படுத்துக்கொள்கிறார் அவர்.


விடியலைத்தேடி கனவு பிசையும் கண் மூட்டங்கள்.
எத்தனையாவது விடியல்?
ப்ரைம் நம்பர்களின் ஃபெர்மேட் தியரம் போல்
எல்லைகள் இன்றி
எல்லைகள் உடைந்து
விளிம்புகள் சிதறி
கரைகள் கரைந்து காணாமல் போன‌
கடல் அது.
வேதாளம் போல் அகன்று
குச்சிகளில் கிளைகளில்
துளித்துளி ஊசி இலைகளிலும்
கண்கள் கூசி விழியைச்சுருக்கும்
அந்த ராட்சச புளியமரத்தின் பேய்ப்புளிப்பு..
அந்த தாழ்வாரத்தின்
நள்ளிரவிலும் வந்து நக்கிக்கொடுக்கும்..
அப்பா அசைந்து கொடுக்கிறார்.
சட்டென்று மார்பில் அடித்த கையில்
ஒலுங்கு எனும் பெருங்கொசு
நசுங்கி விட்டதை அவர் அறியவில்லை.
தூக்கம்
அவர் ஆன்மாவை இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது.
...........
காலை வெயில்
தாழ்வாரத்தை கழுவி விட்டுக்கொண்டிருக்கிறது.
அப்பா எங்கே?
சூரியச்சிவப்பு
புளிச்சென்று துப்புகிறது.
வெற்றிலை குதப்பும்
அது வெளிச்சமா? நிழலா?
தாழ்வாரம் காலியாக கிடக்கிறது.

=======================================================
15 பெப்ரவரி  2015ல் எழுதியது.




அண்ணே! அண்ணே! (1)

அண்ணே! அண்ணே! (1)
====================================ருத்ரா

அண்ணே..இனி மேற்குவங்காளம் மாதிரி இங்கேயும் அதிமுக "திஅதிமுக" ஆகிடுமோ?

என்னடா சொல்றே?

அதாங்க திரிணாமூல் அதிமுக அதாவது மூணு இலை அதிமுகன்னு ஆகிடும் போல இருக்கே.

ஆமாண்டா! ஏற்கனவே அதிமுக (பு.த)னாலும் அதிமுக (அம்மா)னாலும்
அது பாஜ திமுகன்னுதான் கேக்குது.

என்னத்தெ இவங்கல்லாம் ஓட்டுபோட்டு....

ஏண்டா திடீர்ன்னு "என்னத்தெ கன்னையா"மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட...

ஏன்னா தமிழ்நாட்டுல "தேர்தல் வரும் ஆனா வரா.....து"ன்றாங்களே..

======================================================================
(நகைச்சுவைக்காக....)

புதன், 7 ஜூன், 2017

கலைஞருக்கு வைரவிழா


கலைஞருக்கு வைரவிழா
==============================================ருத்ரா

கலைஞருக்கு
அவர்கள் நடத்தியது
வைர விழா.
மற்றவர்களும்
அவருக்கு நடத்தினார்கள்
"வைய்யிர" விழா.
வைய வைய வைரக்கல் தான் அவர்!
திராவிடம் என்ற சொல்லே
திராவகம் ஆனது தமிழ் எதிர்ப்பாளருக்கு!
அதில் பொசுங்கிய பண்பின் நாற்றம்
இன்னும் தெரிகிறது.
மதம் என்றால்
யானைக்கு ஒழுகும் வெறி நீர்.
அதுவே மனிதனுக்குச் சுரந்தால்
மனிதனையே தின்றுவிடும் மதம் அது!
வலுத்தவன் எளியவனை
தூக்கிப்போட்டு மிதிக்கும்
"சனாதனமே " தான் அந்த மதம்.
அதைக்காப்பதற்கே தான்
காவிக்கொடி!
கற்கோவில்களில் இருக்கும்
கடவுள் அடையாளங்களால்
உள்கசியும் ஞானவிளக்கை அவிப்பதே
காவி மதம்.
நியாய வைசேசிகம்
கீற்று கீற்றுகளாய்  பிளந்து அலசுகிறது.
ஒன்றுமே இல்லாதவன் தான் இறைவன் என்று .
அடையாளங்கள் ஏதும்
காட்டப்பட இயலாதவன் தான் இறைவன் என்று.
அப்படி இருக்கும் போது
உங்கள் பிள்ளையார் சுழியே
ஏன் ஒரு நாத்திகமாய் இருக்கக்கூடாது?
ஆம்
அறிவு துளிர்க்க
கடவுள் எனும் அறியாமையின் தொடக்கம்
ஒரு தடைக்கல்!
காரணம் இல்லாததற்கு
படைப்பின் காரியம் இல்லை என்று
சொல்பவன் மட்டும் அல்ல நாத்திகன்.
சுழியம் எனும் ஸீரோ
எல்லையின்மை எனும் இன்ஃபினிட்டி
இரண்டையும் கணிதம் ஆக்கி
அறிவுப்பிழம்பை கூறு போடுபவனும்
நாத்திகன் எனும் விஞ்ஞானியே !
படைப்புக்கு
காரணம் இல்லை என்றால்
அதற்கும் முன்னே... அதற்கும் முன்னே...
என்று சிந்திப்பவன்
மனிதன் மட்டுமே.
இப்படி சிந்திக்கவைப்பது  கடவுள்
என்று நம்மை மழுங்கடித்துக்கொள்வதை விட‌
இப்படி சிந்திக்க  வைப்பதும்
நாத்திகத்திற்கு சுரங்கம் தோண்டுவதும்
அறிவு என்பதே தமிழனின் தாகம்.
கலைஞர் அதற்கு ஒரு ராஜ பாட்டை
அமைத்துக்கொடுத்தற்கு தான்
இந்த வைரவிழா.
திராவிடம் நாத்திகம் இல்லை.
ஆனால் திராவிடம்
ஆதிக்கத்தை தகர்க்க வந்த‌
வரலாற்றுச்சிற்றுளி.
அது பிளந்ததில்
மனிதன் மனிதனை விலங்குபூட்டும்
அமைப்பு பொடிப்பொடியானது.
அதனால் தான் அவர்களுக்கு
நாத்திகம் அரிப்பு எடுக்கும் உணர்ச்சி  ஆயிற்று.
ஒன்றுமில்லை என்று சும்மாயிருங்கள்
என்று தியானத்துக்குள்
அமுக்குவது ஆழமான
உளவியல் பாடமாக இருக்கலாம்.
அதற்காக மனிதன் வெறும் கல்லுளி மங்கன்
ஆக வேண்டியதில்லை.
கல் எனும் கல்லுதல் அவனுள் பொறி கிளர்ந்தது.
கல்லில் தீக்கடைந்தான்.
தீயின் உள்  புகுந்து ஆற்றல் கண்டான்.
அதனால் தீவன் ஆகினான்.
இவனே தேவன் ஆகினான்.
ஆகவே மனிதனே  தேவன் !

நாம் சுதந்திரம் கேட்டபோது
எல்லாக்கதவுகளின் பூட்டையும்
உடைக்கச்சொன்னோம்.
பிரம்ம ரகசியம் உடைக்கப் படக் கூடாது
என்றார்கள் காவிக்காரர்கள்.
அது என்ன பிரம்ம ரகசியம்.?
மீண்டும் அதே அதே!
வர்ண  வியாக்கியானங்கள்
புருஷ சூக்தங்கள் பாஷ்யங்கள் எல்லாம்
அந்த பிரம்மரகசியத்தை
பொட்டலம் கட்டி
இந்துத்வா என்று வியாபாரம் செய்கிறது.
வலுத்தவன் எளியவனை வாகனமாக்கிக்கொள்வதே
அவர்களின் சாணக்கிய நீதி.
அதனால் தான்
சாதி மத வெறியாட்டங்களை
சமாதியாக்க வந்த
இந்த சமநீதி
அவர்களுக்கு
இன்னும் பீதி பீதி பீதி!
வாக்கு வங்கிக்குள்ளும்
இங்கு தந்திரங்களின் ஆட்சி தான்.

கலைஞர்
சமுதாய மலர்ச்சிகளைகளைக்கொண்டு
நம் தமிழ் மொழியின்
வரலாற்றுப்பயணத்துக்கு
மைல் கற்களை நட்டு வைத்தார்.
இன்று அவரே ஒரு "வைர "மைல் கல்லாய்
நின்று
பல திருப்புமுனைகளுக்கு
வழி காட்டி நிற்கிறார்.
திராவிடம் இன்னும் நம்
வற்றாத உணர்சசிகளின் ஆறு தான்.
நம் தமிழ் எழுத்துக்களே
நம் எழுச்சிகள்.
கலைஞர் "புன்னகை"
புன்னகை மட்டும் அல்ல.
சாதி சமய பிளவு வாதங்களை
சாய்க்க வந்த புயல்.
தமிழே
கை  முளைத்து கால் முளைத்து
புது யுகம் தழைக்கும்
மூச்சுகளின் நாற்றுகள் கொண்டு
வீச வந்த புயல்
நம் கலைஞர் !
தொடரவேண்டும் அவர் தொண்டு !
வாழ்க !வாழ்க! கலைஞர்!
அவர்..
நீடூழி நீடூழி வாழ்க !

=========================================================