வியாழன், 19 செப்டம்பர், 2024

சின்னச்சின்ன பனித்துளிகளே.





சின்னச்சின்ன பனித்துளிகளே

மேலிருந்து நீங்கள்

வீசி வீசி எறிகின்ற இவை

முற்றுப்புள்ளிகளா?

நிறுத்தற்குறிகளா?

முக்கால் புள்ளிகளா?

எங்கள் வாழ்க்கையின் 

உடல் உறுப்புகளே இவை.

உள்ளே வெப்பமாய் தகிக்கும்

உயிரின் இழைதலில்

நீக்களும் எங்களுக்கு

குழைக்கின்ற வெண்கவரிகள்

வீசத்தான் போகிறீர்கள்.

கேள்விக்குறிகளும்

விடை தெரியும் போது

வரும் வியப்புக்குறிகளும்

மனிதனிடமிருந்தே

தெறித்த பின் தான்

கடவுள் தன்னையே

முதலில் படைத்துக்கொள்கிறான்.

மண்ணின் மலர்ப்புகளும்

காய்ப்புகளும் கனிப்புகளும்

உங்களுக்கு எத்தனை எத்தனை

சுவாரஸ்யமான நாவல்கள் 

எழுதப்போகின்றன.

உங்கள் கடவுள்களிடம் 

நீங்கள் உருகிக்கரைவதற்கு முன்

இந்த நிகழ்வுகளை ஒப்பியுங்கள்.

தேவ வசனங்கள் இனிமேல் தான்

அதிலிருந்து எழுதப்படும்.

இப்போது அந்த மணியொலிகள்

கடவுளின் மூளித்தனத்து

செவிமடல்களின் சவ்வுகளை

உரிக்கட்டும்.

மனிதன் மனம் பாயுமிடம் எங்கோ

அங்கு தான்

பரமண்டலத்துக்கு

விதைகள் தூவப்படுகின்றன.

வெற்று மலட்டுச்சுவடிகள்

பிரமன்களை இன்னும்

மலட்டுப்பிம்பங்களாய் தான்

கிறுக்கி வைத்திருக்கின்றன.


_________________________________________________

சொற்கீரன்.





செவ்வாய், 17 செப்டம்பர், 2024

மடல்

 மடல்

________________________________

சொற்கீரன்.



என்னை உனக்கு அறிமுகப்படுத்த..

கூச்சமின்றி

நான் அருவியாக உன்  உச்சி மீதிலிருந்து

பளிங்கு விழுதுகளாக விழுந்து கொள்ள...

என் கனவு எனும் சல்லாத்துணியால்

உன் முகத்திரையாய் காற்றில்

அசைந்தாட...

உன் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும்

என் இதயத்துடிப்பில்

பல்லாங்குழிகளாகி அதில்

என்னை நான் நிரப்பிக்கொள்ள...

என் படபடக்கும் மின்னட்டாம்பூச்சிகளை

உன் மனச்சிமிழில் விட்டுப்பார்த்து

அதை ரசித்துக்கொண்டே இருக்க...

உன் இமை அதிர்வுகளில்

அந்த சந்திர சூரியர்கள் பொடி பொடியாகி

உதிர்ந்து விழும்போது

அவற்றைக்கையில் ஏந்தி

அந்த ஒளித்தடாகத்தில் 

உன் பிம்பம் பார்க்க..

வேண்டும் என்று தான் இக்கடிதம்.

இப்படிக்கு

பதில் மடல் பெறக்

காத்திருக்கும்...


ஆகா..அருமை.

என்று ஸ்டாம்பை நாக்கில் தொட்டு

கடிதம் போட்டுவிட்டேன்.

மறுநாளே மடல் வந்தது.

"எந்த மொழியில் எழுதியிருக்கிறீர்கள்.

தமிழில் மொழி பெயர்த்து

மறுபடியும் அனுப்புங்கள்.."

இப்படிக்கு

உங்கள் என்று இன்னும்

எழுதத்தயங்கும்...

ஒரு இவள்.


____________________________________________





எண்ணி எண்ணி....

 

எண்ணி எண்ணி ஓய்ந்துவிட்டேன்

என்று தான்

இந்த பூலியன் பொம்ரேனியன்

கண்டுபிடித்தேன்.

இப்போதும் 

எண்ணி எண்ணி மாளவில்லை.

செல்ல நாய்க்குட்டி என்று 

பார்த்தால்

அது சங்கிலியோடு

எங்கேயோ இழுத்துக்கொண்டு

ஓடுகிறது.

அட..இரு..

இப்போது நானே அந்த மணலில்

கூட்டல் எழுதிக்கொள்கிறேன்

விடு என்னை.

நாலும் மூணும் ஏழு..

ஆகா என்ன சுகம்.

அந்த திண்ணைப்பள்ளிக்கூட‌

வாசனையில்

கழிந்த யுகங்கள்

சுருண்டு படுத்துக்கொண்டிருக்கிறது.

நானும் தான்.


_____________________

எப்சி.

பெரியாரியம் வெல்க!

 


பெரியாரியம் வெல்க!

_______________________________________



பெரியார் வரலாறு என்று

தனியாய் இங்கு

எழுத்துக்கள் கொண்டு 

காகிதங்கள்

மேய்ந்ததில்லை.

மனித நீதியின் 

தீக்கொழுந்துகள்

சுடும் ம்னச்சன்றுகளே

பெரியார் ஏறிய மாணிக்கப்படிகள்.

மதம் 

ஒரு மனிதனை காலில் போட்டு

மிதிக்க இன்னொரு மனிதனுக்கு

அவன் பிறப்பின் வழியாய்

ஒரு மகுடத்தைச்சூட்டுமானால்

அந்த மகுடமும் கடவுள் 

அவனுக்கு மட்டுமே தந்தது என்று

ஸ்லோகங்கள் சொல்லுமானால்

மனிதனுக்கு 

இந்த மதம் தேவையில்லை.

இந்த கடவுள் தேவையில்லை

இந்த ஸ்லோகங்களும் தேவையில்லை.

இது தேவை 

என்று சொல்பவனே

அயோக்கியன்

காட்டுமிராண்டி

மனிதனாக‌

பார்க்கப்படத்தகுதியற்றவன்.

அதை 

வர்ணங்களாய்

சாதிகள் ஆயிரமாய்

சாத்திரம் செய்பவர்கள்

மனித 

வரலாற்றுப்பக்கங்களிலிருந்து

கிழித்தெறியப்பட வேண்டியவர்கள்.

பெரியார் என்றால் என்ன?

இது தாண்டா பெரியார்!

மானுட அநீதி கண்டு

சீற்றம் கொள்ளும்

எரிமலைக்கு பன்னீர் தெளிக்கும்

மடமைகளை 

தகர்ப்பவனே தமிழன்.

பெரியார் எனும் இந்த பெரியாறு

அரசியல் தந்திரம் கொண்டு

கட்டப்படும் எல்லா அணைகளையும்

உடைத்துக்கொண்டு

பொங்கிப்பெருகும்.

தமிழும் பெரியாரும்

ஒரே நெருப்பின் எண்ணக்கீற்றுகளடா!

புரிந்து கொள்ளடா தமிழா!

தெலுங்கோ கன்னடமோ

தமிழ் கொளுத்திய 

ஊழித்தீயடா பெரியார்.

சமுதாய அநீதிகளை அழிக்கும்

பெரியாரியமே

பொன் சுடர் தெறிக்கும்

தமிழியம்!

தமிழியம் வழியே 

பெரியாரியம் வெல்லும்.

பெரியாரிய ஒளியில்

தமிழியம் சுடரும்!


__________________________________________‍

சொற்கீரன்.





தமிழ் ஆற்றுத்தொகை (2)

 

தமிழ் ஆற்றுத்தொகை  (2)

________________________________________

இடைக்காடன் (இ பரமசிவன்)



களவுப்புளி அட்டு குய்புகை கமழ              25


அவனொடு உண்டலே அருநிறை  செல்வம் 


என்றிவள் இல்தோய் நிலவில் முன்றில் 


வண்ணச்சீறடி அளபடை எடுக்கும் அவன்


வருகையின் நெடுந்தொகைக்கு அணித்தொடை


யாத்த சொல்லொடு ஓர்க்கும் மன்னே.           30


போழ்தூண்டு ஊசியின் கைவினை விரைநர்         


விரல் ஊடு இழையும் நெய்வின் நேர்த்தியில்


கட்டில் நிணக்கும் கவின் ஏர் நிகழ்வு போன்ம்


காலம் பிசைந்துறும் ஊழியின் ஊர்பு


சுரன் உழன்று கோட்டின் நத்தம் நீட்டி            35


முள்மரம் வாங்கு வன்சினை தாழ‌


வழி நிழல் நச்சி பொருள் வேட்டுநன்


போஒய் நோன்று பொளிபடு பெருங்கல்


அறை தொறும் அறை தொறும்


அலை பாய்ந்தனனே அவிர் பரல் ஆற்றில்.       40


வாள் ஊர்தரும் ஞாயிற்றன்ன‌


நிழல் சுமக்கும் நாள் வீழ் ஞாலம்


மண்ணொடு நைந்து நெஞ்சம் சிதைபு


பொருள்வயின் போகிய கலித்து முகத்து


ஆர்த்தெழுந்தேகிய ஒளிமுகடு ஏந்தலின்             45


ஓங்கல் கானம் கழைநெகிழ் ஊசல்


காலொடு மின்னின் தெரியல் புனையும்


வெற்பன் நகைதூஉய் அவிழ்செறி


ஆரிடை காட்டும் முறுவல் அவள்பட்டாங்கு


ஊழி உதிர்க்கும் உதிர் ஊழி சிதார் இறைக்கும்       50


(தொடரும்)


___________________________________________________






திங்கள், 16 செப்டம்பர், 2024

நாம் வேறு ஏலியன்கள் வேறு அல்ல.

 


நாம் வேறு ஏலியன்கள் வேறு அல்ல.

__________________________________________________



எல்லா அண்டங்களும் ஒரே அண்டம் 

இதுவே எல்லா உயிர்களின் மூலம்.

பான்ஸ்பேர்மியா என்பதே

அந்த பிக் பேங்கின்

உயிர்த்திரி.

பற்ற வைக்கப்பட்ட 

உயிர் வெடிப்புகளே

இங்கும் எங்கும் இன்னும்

அங்கிங்கெனாத படி ...எல்லாம்.

எனவே

ஏலியன் என்று ஏதும் இல்லை.

பூமி கூட ஏலியன்களின் கூடு தான்.

மனிதன் மட்டுமே

மதிப்பு மிக்க விலை உயர்ந்த ஏலியன்.

மற்ற ஏலியன்களுக்கு

கடவுள்கள் தேவைப்படலாம்.

ஆனால் மனிதர்கள் தேவைப்படுகிற‌

கடவுள்களின் விண்கோளே 

பூமியெனும் மனிதக்கோள்.

நாலு கை 

மூணு முகம் இல்லாவிட்டால்

பத்து முகம் 

பத்து கை பத்து கால்

ஆறு முகம்

பன்னிரெண்டு கை

அய்யோ அப்பா!

இப்படியெல்லாமா

இந்த ஏலியன்கள்

என்று

அந்த ஏலியன்கள் மிரண்டே

ஓடிக்கொண்டிருக்கின்றன.

அறிவு வெளிச்சம் இயற்கையின் தினவு.

இந்த அரிப்பு கூட‌

இல்லாத அஞ்ஞான மூளிகளா

இங்கும் சில ஏலியன்கள்?

ஏலியன்கள் 

பூமிப்பந்தின் சில்லறை ஓட்டைகள் கண்டு

அவற்றில் முடங்கிப்போன‌

சிந்திக்கும் ஊனங்கள் கண்டு

அஞ்சியே ஓடுகின்றன ஏலியன்கள்.

மூளை இருக்கவேண்டிய 

இடத்தில் எல்லாம்

பாவமூட்டைகளும் 

கர்மாக்களும் ஜன்மாக்களுமாய்

கருங்கல் ஜல்லிக்குவியல்களே

மனிதர்கள்.

இவற்றுள் இருக்கும்

சிலிகான் வளங்கள் மட்டுமே

நமக்கு வேண்டும்.

ஏலியன்கள் இதற்காகவே 

இத்தனை கண்ணாமூச்சிகளை

அரங்கேற்றுகின்றன.

நம்மிடம் இருக்கும் 

அறியாமையின் வைரஸ் 

தொற்றிக்கொண்டு விடுமோ

என்று இவை அஞ்சி நடுங்குகின்றன.

பாவம்

அவற்றை மேலும் மேலும் விரட்டாதீர்கள்

ஓ மனிதர்களே!


__________________________________________

சொற்கீரன்


We Are the Aliens | Life's Interstellar Journey to Earth: Panspermia | Watch (msn.com)

உருவெளி மயக்கம்

 

உருவெளி மயக்கம்

________________________________________



மிளகாய்வத்தல் பூச்சி என்பார்கள்

கரப்பான் பூச்சியை.

பரிணாமக்கோட்பாட்டுக்கு

பில்லியன் ஆண்டு நட்பு உடையது.

அது

விறு விறு என்று

சுவரின் மேல் ஏறியது.

நேரே சிவன் படம்.

தன் அன்டெனா மீசையை

சிவனின் கழுத்துப்பாம்போடு 

பொருத்திக்கொண்டு

தேய் தேய் என்று தேய்த்தது.

அது சிவனோடு கிசு கிசுத்துக்கொள்கிறது

என்று எடுத்துக்கொள்ளலாம்.

எனன உரையாடல்?

மனிதன் இப்போதானே தோன்றினான்.

அப்புறம் அவனுக்கு

கதை விடத் தெரிந்ததற்கு 

அப்புறம் தானே

இந்த புராணமும் பாட்டும்

சப்பளாக்கட்டைகளும்.

அப்படியென்றால்

உனக்கு முந்தி தானே நான்.

என்ன நான் சொல்கிறது புரிகிறதா?

பூச்சியா அப்படி அதட்டுவது?

உன் தர்க்க சாஸ்திரப்படியே

எனக்கு அப்புறம் வந்த நீ

எப்படி என்னைப்படைத்திருப்பாய்?

அப்ப‌

நான் தான் உன் கடவுள்..

சரி தானே!

சரி தான்.

சிவன் புன்முறுவல் பூத்துவிட்டார்.

வழக்கம் போல்

அந்த வீட்டுக்காரர் 

சந்தியா வந்தனம் பண்ணிவிட்டு

பூஜை செய்து

தீபம் காட்ட‌

சிவனின் படத்தின் முன் வந்து 

நின்றார்

திடுக்கிட்டார்

எதேதோ அலறிய வண்ணம்

படுக்கையில் தொப்பென்று விழுந்தார்.

அது எப்படி

சிவன் படத்தில்

ஏதோ ஒரு ராட்சசன் 

மீசையை பயங்கரமாய்

அசைத்துக்கொண்டு...

அந்தப்படம்..அந்தப்படம்

என்று அவர்

கை நீட்டிக் காட்டிகொண்டே

இருந்தார்.

முகம் வெளிறி 

விழிகள் துருத்திக்கொண்டு..

அதிலிருந்து ஒரு

கரப்பான் பூச்சி சிறகு பரப்பி

முட்கால்களை உரசிக்கொண்டு

பறந்து ஓடியது.

வீட்டில் உள்ளவர்கள்

ஃபோன் செய்ய ஓடினார்கள்.

மருத்துவருக்கா?

மந்திர வாதிக்கா?


__________________________________________________

சொற்கீரன்.