வியாழன், 27 ஜூலை, 2023

ஜீன் மெஷின் - வெங்கி ராமகிருஷ்ணன் நூல் - உரையாடல் l

 GENE MACHINE ll ஜீன் மெஷின் - வெங்கி ராமகிருஷ்ணன் நூல் - உரையாடல் l பேரா.எஸ்.கிருஷ்ணசாமி & இரா.முரளி - YouTube



உயிருக்குள்ளே ஒரு நுண்வெளியின் முறுக்கு சங்கிலியில் "சைக்கிள் ஓட்டுவதே" இந்த பிரபஞ்சத்தின் சாரம் என்பதே ஜீன்ஸ் மெஷின்.இதைப் பற்றிய ஒரு அருமையான ஆழமான உரையாடல்.பாராட்டுகள்

....கவிஞர் ருத்ரா


செவ்வாய், 25 ஜூலை, 2023

தூக்கம்

 


தூக்கம்

___________________________________



விஞ்ஞானம் 

இந்த அண்டம் ஒளிந்து

விளையாடிக்கொள்ள‌

ஒரு இடம்

அல்ல அல்ல‌

ஒரு புள்ளி போட்டுகொடுத்திருக்கிறது

அதுவே

"சிங்குலாரிடி" எனும்

ஒருமையம்.

இங்கே மனிதர்களுக்கு

சிங்குலாரிடி

"தூக்கம்."

மனிதன் மனிதனிடமிருந்து

கழன்று கொள்ளுகிற இடம்.

நிற்க‌ இடமிருந்தால் 

போதும் என்று நினைப்பவன்

அப்புறம் "ஆறடி"நிலத்துக்கு

தத்துவமாய் பட்டா நீட்டுவான்.

ஆனால்

அவனது தூக்கத்தின் சிங்குலாரிடி

அவன் மூளையின் எந்த‌

நியூரானுடன் முடிச்சு போட்டுக்க்கொள்ளுகிறது?

அந்த துளித்திண்ணையில்

எப்படி இந்த அண்டத்தையே

பாற்கடலாய் விரித்து 

"அனந்த சயனம்" செய்ய முடிகிறது?

அப்புறம் எப்படி

சன்னல் வழியாய் அந்த சூரியன் வந்து

காதுக்குள் கிசுகிசுத்து

எழுப்பி விடுகிறது?

அவன் தூக்கத்து சினிமாத்திரைக்கு

யார் டைரக்டர்?

காமிரா எது?

கதை பாட்டு

மற்றும் ரத்தக்களரிகளாய்

அந்த சண்டையும் சடலங்களும்

ஜனனங்களும் மரணங்களும்

என்ன இது?

தூக்கம் எனும் பெருங்கடலின் திவலைகளில்

அவன் தினமும்

கடலை கொறிக்கிறான்.

மனிதன் யார்?

அவன் ஒரு ஓட்டை உடைசல் பாத்திரம் தான்.

தினம் தினம்

இப்படி ட்ங்கரிங்க்

செய்யப்படுகிறான்

ஓசையின்றி ஆர்ப்பாட்டம் இன்றி

ஆனால்

மௌனமழை பெய்து

எல்லா எக்காளங்களின்

பேரிரைச்சல்களுடன்.


___________________________________________________

ருத்ரா

அகழ்நானூறு 52"

 


அகழ்நானூறு 52

_________________________________________

சொற்கீரன்


நள்ளென் வான் பொதி 

முளி இருள் பொத்தி

கிழக்கின் ஒளி சூல் கிழிபடுபு 

புள்ளினம் சிறைமழை

பெயல் காட்டி திசை தொறும் 

வெண்கலி ஆர்க்கும்.

கூர் அலகு நாரை கயல்கொளீஇ

இருங்கழி அடைகரை 

ஞாழல் அஞ்சினை வாங்கு

ஒள்ளிணர் அவிழ்நறுந்தாது

வளிபடு ஆங்கு வழிபடுத்தும்மே.

பீலிவளையும் இறையின் வீழ

பசலை நோன்ற செவ்வரியாடும்

அவள் அம்பின் கூர்விழி 

அவன் ஆறு தடம் சாய்க்கும்.

பொரிஅரை ஓமை வல்சுரத்து

நிரம்பா நீளிடை அண்ணிய நத்தம்

கவலைய ஆற்றின் கவலை மாற்றி 

அவள் கண்ணின் மைவிழி  ஊர்ந்து 

கரை சேர் கலமென களி நகை புரிவான்.


-----------------------------------------------------------------------------



தோற்றுவிட்டார்.

 தோற்றுவிட்டார்.

_________________________________________

ருத்ரா


 

படைத்துப்பார்த்து

படைத்துப்பார்த்து

பிரம்மன்

தோற்றுவிட்டார்.

அப்புறம் தூங்கிபோனார்.

விழித்துப்பார்த்த போது

அது

அவர் மூக்கின் மீது 

உட்கார்ந்து கொண்டு 

படபடத்தது.

எப்படி நீ வந்தாய்

பிரம்மன் கேட்டார்.

"நீங்கள் தூங்கிபோன இடைவெளியில்

அங்கே ஒரு அழகிய குழந்தை 

"கண் சிமிட்டியது"

அதுவே நான்!

சொன்னது "பட்டாம்பூச்சி".


__________________________________________


ஞாயிறு, 23 ஜூலை, 2023

இன்று ஒரு கனவு

 இன்று ஒரு கனவு

_____________________________________

ருத்ரா




இன்று

எனக்கு தூக்கம் வருமா?

மாத்திரைகளை பல்லாங்குழி 

ஆடிக்கொண்டிருக்கிறோம்

தினமும்.

சிந்தனைகள் அடித்து அடித்து

துவைத்து

டிங்கரிங் செய்யப்பட்ட பின்

தலையணையோரங்களில்

நங்கூரம் பாய்ச்சுகிறோம்.

தூங்கினால் தான் 

கற்பனைப்பிழியல்களின்

பஞ்சு வனங்களாய்

நுரை விரிப்புகளாய்

கனவுகள் குமிழியிடும்.

அப்படி என்ன குமிழி வேண்டும்

உனக்கு?

நாளை என்ற சொல் 

நிகழவே நிகழாது என்று

தெரிந்தே

இந்த சொல்லில் தான்

தினமும் பயணம்.

காலத்தை முன்னும் பின்னுமாய்

மேலும் கீழுமாய்

நம் கைக்குள் இடியாப்பச்சிக்கல்களை

அளைந்து கொண்டு

விளையாட 

ஒரு குமிழியின் குட்டி உலகம் 

வேண்டும்.

எதுவும் நடக்கலாம்.

ஸ்பேஸ் டைம்  வார்ப் என்று 

விஞ்ஞானிகள் அதோ

விண்வெளியையே 

சுருட்டி மடக்க கணித சமன்பாடுகளை

முடைந்து கொண்டிருக்கிறார்கள்.

கனவுக்குள் நனவும் 

நனவே கனவாகவும்

ஹோமரின் ஓடிசியையும்

நம்மூர் விக்கிரமாதித்தன் வேதாளத்தின்

கதையையும்

பதியம் செய்து பதிவிட்டு

படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம் மனத்தையும் அறிவையும் 

கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு

ஒரு வெர்ச்சுவல் போன்சாய் மரத்தை

நம் மடியில்

வைத்துக்கொண்டு

வெயிலுக்கேற்ற நிழலுண்டு

என்று இனிய கவிதை

பாடலாம் வாருங்கள்.


__________________________________________________


சனி, 22 ஜூலை, 2023

புதிய மகிழ்ச்சி..

 

புதிய மகிழ்ச்சி..

____________________________________

ருத்ரா



என்ன தான் நடக்கிறது?

யாருக்கு என்ன கவலை?

மனக்கவலை மாற்றல் அரிது

அதனால்

மனங்களையெல்லாம்

நிரப்பி வையுங்கள்

வெறும் மண்ணால்

புழுதிக்குப்பைகளால்

மனத்துள் மூளையிருக்கிறதா?

மூளைக்குள் மனம் இருக்கிறதா?

கல்லுக்குள் கடவுளா?

கடவுளுக்குள் கல்லா?

வேதாந்த சித்தாந்தங்கள்

தினம் தினம் சோறாய் ஆக்கி

தின்னப்படுகிறது.

ஒன்றுமே இல்லாத மாயை

என்று

திரையாட்டமும் நடக்கிறது.

எதற்கு இந்த‌

பிறப்பும் இறப்பும்?

சுடுகாட்டுச்சாம்பல் துகள்கள்

உடுக்கை அடிக்கிறது.

தலைவிரி கோலமாய்

அச்ச நிழல் காட்டி

ஆவேசம் கொள்கிறது.

அறிவின் அணுக்கதிர்கள்

அண்டத்தையே 

அங்குலம் அங்குலமாய்

சுரங்கம் வெட்டுகிறது.

கீழ் நோக்கியா?

மேல் நோக்கியா?

கற்பனையின் கூர்நகங்கள்

அழகாய் வண்ணப்பூச்சு

செய்து கொள்கின்றன.

ஆனால்

நகங்களில் எல்லாம் 

குடலும் ரத்தமும் தான்.

மனிதனைத்தின்னும் வெறி

மனிதனின் தோள்மீதே 

உட்கார்ந்து கொண்டு

தோரணங்கள் கட்டுகிறது.

அடுக்கு அடுக்காய் 

மனித சவங்களின் குவியல்.

சாதிகள் எனும் பேய்வெறி

எல்லாவற்றையும் தின்னுகிறது.

"பிணம் தின்னும் சாத்திரங்களில்"

என்ன உயிர் இருக்கும்?

என்ன ஒளி இருக்கும்?

ஆம்.

எதுவும் இல்லை.

இருட்டு இருட்டு இருட்டு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்

நசுங்கிக்கூழாகிப்போய் விட்டன.

அதோ ஒரு புல்லின் கீற்று.

சிவப்புப்புல்.

மலை முகட்டில்

கடல் பரப்பில்

மண் துளியில்..

அறிவுக்குள் ஒரு

அறிவு

ரத்தம் பாய்ச்சுகிறது.

சத்தம் கேட்கிறது.

முரசுகளை அதிரவிடுங்கள்.

முடங்கிக்கிடக்கவா

இத்தனை இத்தனை கோடிகள்?

செவிப்பறைகள் கிழிந்தன.

நத்தைகள் ஊர்ந்து கொண்டிருக்கிறன.

காலம் இறந்ததென்று

காலமே ஒப்பாரிகள் வைத்துக்கொள்ளட்டும்.

புதிய நேனோ செகண்டுகளில்

பனித்துளிகள் 

கருவுயித்துக்கொள்ளட்டும்.

அந்த புதிய முகத்தின் புன்முறுவல்..

எல்லாவற்றையும் 

புரிய வைக்கிறது.

மகிழ்ச்சி..எங்கும் மகிழ்ச்சி..

மகிழ்ச்சியைத்தவிர‌

வேறு எதுவும் இல்லை.


____________________________________________________ 


வெள்ளி, 21 ஜூலை, 2023

கந்தல் சொற்கள்.

 கந்தல் சொற்கள்

________________________________________

சொற்கீரன்.



விண்வெளி முழுதும் இனி

குப்பைத்தொட்டிகள்.

கைபேசிக்கனவுச் சிதிலங்களும்

செயற்கை மூளையில்

கடவுளோடு நடத்திய 

பேரங்களும் 

படுக்கை அறை சினிமாக்களின்

ஓட்டிடீ

மிச்ச எலும்புத்துண்டுகளும் 

மாமிசங்களும்

விண்ணில் எறியப்படும்.

மானிடநேயம் கழன்று விட்ட‌

உலக நடப்புகளின்

ஓட்டை உடைசல்களும்

பிணங்களைத் தழுவி

பேரின்பம் காணுதல் போல்

மதங்களின் முறுக்கேற்றிய‌

உணர்ச்சிகளின் உன்மத்த வெறிகளும்

இனி

விண்வெளித்திடலில்

ஆன் லைன் அலைகளாய்

குவிக்கப்படும்.

ஒரு பச்சைப்புல் கீற்றில்

சூரியன் எழுதிய கவிதையாய்

பனித்துளிக்குள் 

கருவுயிர்த்த ஒரு

குறுந்தொகை வரி 

வானவில் காட்டியது.

கல்பொரு சிறுநுரை போல‌

கனல் பொறி காட்டும்

காதல் கடலின் ஏக்கம்

பெரிது பெரிது அம்மம்ம!பெரிது!

கணினிகள் கிழித்த கந்தல் சொற்கள்

வானம் முட்டி

இங்கு இருட்டியது.


________________________________________________