திங்கள், 7 ஜூன், 2021

கடல் கோள்

 


கடல் கோள்

_________________________________ருத்ரா


இதோ இன்னும்

சிறிது நேரத்தில் அவன்

இங்கு வந்து விடுவான்.

அது வரை

இந்த இனிய இரவில்

மொட்டை மாடியில்

கூடை நாற்காலியில்

உட்கார்ந்து

அந்த விண்மீன்களை

எண்ணிக்கொண்டிருக்கலாம்

என்று

எண்ணிக்கொண்டிருந்தேன்.

கழுத்து வலிக்க வலிக்க‌

எண்ணிக்கொண்டிருந்தேன்.

விண்மீன்கள் ஒன்றையும் காணோம்.

கிழக்கில் சூரியன் சிரித்தான்.

என்னை முட்டாளாக்கி விட்டான்.

சினம் பொங்க‌

சூரியனைச் சபித்தேன்.

போதும் போதும்

நீ

இவர்களுக்கு வெளிச்சம் காட்டியது.

இந்த இருட்டுப்பிண்டங்கள்

இப்படியே இருக்கட்டும்.

தெரிய வில்லை.

எத்தனை யுகங்கள் கடந்தன என்று.

எல்லாமே கருப்பு.

வர்ணங்கள் எல்லாம் இறந்து போயின.

சூன்யமே

நீர்ப்பிழம்பாய்

சுழல்களாய் வந்தது.

அப்போதும்

அவனைத் தொட்டுவிட‌

என் மீது அவனும்

அவன் மீது நானும்

வீசிய புன்முறுவல்கள்

மில்லியன் ஒளியாண்டுகள் நீளத்துக்கு

"ஹிக்ஸ் போசானின்" ஃபீல்டாய் 

என் கைகளை நீட்டினேன்.

இளங்கோ அடிகள் ஓலையில்

கீறித்தள்ளினார்..

பன்மலை அடுக்கங்களையெல்லாம்

மக்களையெல்லாம்

அந்த மாட மாளிகைகளையெல்லாம்

விழுங்கித்தீர்த்தன‌

இந்த கடல் கோள் என்று.

அப்போதும்

விழுங்கமுடியாததாய்

அவனும் நானும்....


______________________________________

பஃறுளி ஆறாய்.....

 பஃறுளி ஆறாய்.....

====================================ருத்ரா 

அன்பே 

என்று அழைத்து 

உனக்கு 

கடிதம் ஒன்று போட‌ 

என் பேனா நாவுக்கு 

எச்சில் ஊறியது. 

நீ யாரோ? 

நான் யாரோ? 

பார்த்த கண்களுக்கு 

முகம் மட்டுமே அகம். 

மற்ற 

முகவரி பற்றி கவலையில்லை 

சாதியும் மதமும் சிந்திக்கவில்லை. 

காகிதம் முன்னே 

காதலுக்கு கடிதமாய் 

சிவப்புக்கம்பளம் விரித்தது. 

எழுத்துக்கள் 

உயிர்த்துப்பூத்து பூமரங்கள் ஆயின. 

ஆயினும் 

அடி நீரோட்டத்தில் 

சாதித் தீயின்

"கௌரவம்" காக்க‌ 

அரிவாள்கள் முட்காடு ஆனதில் 

நம் அகநானூறும் கலித்தொகையும் 

படுகொலையாகி 

பச்சை ரத்தத்தின் ஆறு 

பஃறுளி ஆறாய் 

பாய்ந்து பெருகுகின்றதே!

"யாவரும் கேளிர்"

என்ற 

உலக மானிடச்சொல்லாக்கம்

நம் உள்ளூர் வெறியில்

உருக்குலைந்து போகுவதோ?


===========================================

07.06.2016

ஞாயிறு, 6 ஜூன், 2021

"தெய்வமாய்..."

 "தெய்வமாய்..."

______________________________

ருத்ரா




குணமடைந்து என் அப்பா

வீடு திரும்பினார்.

அவர் அறைக்குள் 

முடங்கிக்கொண்டார்.

என்ன பேசுவது?

எதை பேசுவது?

ரெம்டெசிவருக்கு

கியூவில் நின்று

நைந்து போனதையா?

கவசத்துள் கிடக்கும்

அவரோடு

பேசமுடியாமல் 

கண்ணீர் பெருக்கியதையா?

மின் மயானங்கள் 

உடலைப்பெற்று

சற்று நேரத்திலேயே

சாம்பலாக 

பண்டமாற்றம் செய்து 

கொடுத்துக்

கொண்டிருக்கிறார்களே

அதைப்பேசுவதா?

ஊரடங்கு என்று சொல்லி 

ரோடுகள் எல்லாம் வெறிச்சென்று ஆகி

அந்த ஆவிகள் விளையாடும்

ஒலிம்பிக் மைதானங்களாகி

விட்டனவே!

அதைச்சொல்வதா? 

அம்பாள் சமேதரராய்

கோடியில் இருக்கும் கோவிலில்

அந்த மருந்தீஸ்வரர்

கனத்த பூட்டு சங்கிலிக்குள்

கிடப்பதைச்சொல்வதா?

அப்போதும்

புரியாமல் கடவுளைக் குழப்பும்

அந்த மந்திரங்களைச்

சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

அதைச்சொல்வதா?

வாயோடு வாய் வார்த்தை கூட‌

பேச முடியாமல்

ஏதோ கூண்டோடு கைலாசம் போவது 

போல‌

போய்விடுகிறார்களே..

அதைப்பற்றியெல்லாமா

இவரிடம் புலம்ப முடியும்?

என்ன பேசுவது?

என்ன பேசுவது?

........................

.......................

ஒன்றும் பேசவேண்டாம் 

பேசியதெல்லாம் போதும்.

ஒரே புகை மூட்டம்.


டிவிகளில்

ப்ரேக்கிங் நியூஸ்னு போட்டுவிட்டு

கொடேங்க் மொடேங்க் என்று

பின்னணி இசை கொடுப்பார்களே

அந்த பாணியில்

ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு

அந்த முள்ளு மகுடசாமி

அதான்..அந்த கொரோனா முனி

மறைந்து போனது.

அறை முழுதும்

இன்னும் விபூதி அல்லது சாம்பல்

புகை மூட்டம் தான்.

......

அண்ணே..எழுந்திருண்ணே.

அப்பா தெய்வமாய் போய்ச்சேர்ந்திட்டார்.

நீ ஏன் எதேதோ

கனவுல பும்பிட்டிருக்கே.


தம்பி எழுப்பினான்.

நான் எழுந்து

மலங்க மலங்க விழித்தேன்.

அப்போ அவர் குணமடைந்து

வீட்டுக்கு வந்தது?

நான் இன்னும்

மலங்க மலங்க தான் 

விழித்துக்கொண்டிருந்தேன்.

__________________________________________


சனி, 5 ஜூன், 2021

புதிய ராமானுஜன்கள்

 புதிய ராமானுஜன்கள் 

__________________________________ருத்ரா



அறிவியலின் 

ஒரு முட்டுச்சந்துக்கு

வந்து விட்டோமோ?

கணினியில்

புதிய புதிய உயரங்கள்

கண்டு கொண்டிருக்கிறோம்.

குவாண்டம் கணினியில்

கணிதத்தின் நுட்பத்தை

வைத்து

பல் அடுக்கு ரோஜாபூவைபோல்

ஒரு பிரபஞ்சமே 

நாம் உருவாக்கி விடலாம்.

நாம் தீபாவளிக்கு 

வெடிக்கும் ஒரு

லெட்சுமி வெடி போல்

அந்த பிக் பேஞ்க் எனும்

பெருவெடிப்பை 

கற்பனை செய்யுங்கள்.

காலமும் வெளியும் வெறும்

சூன்யமாகும் ஒற்றைப்புள்ளியை

கணித வல்லுனர்கள்

சிங்குலேரிடி என்கிறார்கள்.

நம் பிரபஞ்சத்தின்

முன் வாசலும் 

புழக்கடையும்

இந்த ஒற்றைப்புள்ளி தான்,

நம் செல்களில்

இந்த வைரஸ்கள்

என்ன பாடு படுத்துகின்றன?

இப்படியே 

மனிதனையும் 

நேனோக்களில்

(ஒரு புள்ளியை பல கோடி மடங்கு

சிறிதாக்கிய வடிவம்)

உலவ விட முடியுமா?

என்று

செயற்கை அறிவு விஞ்ஞானிகள்

எனும் அந்த‌

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்காரர்கள்

மூளையை கசக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்புறம் என்ன?

பிறப்பும் இறப்பும் 

நம் கணித சூத்திரம் தான்.

பல கோடி மைல்கள் இருக்கும்

ஒளிமண்டலத்துக்கு கூட‌

ஒரு வாக் போய் விட்டு வந்து விடலாம்.

அதெல்லாம் சரி தான்

நண்பர் என் காதில் கிசு கிசுக்கிறார்.

சரி 

செய்துவிட்டால் போயிற்று.

என்ன? என்ன? என்ன?

என்கிறீர்களா?

அங்கே ப்ரதோஷத்துக்குப் போக‌

ஒரு கோயில் இருக்கவேண்டும்

என்கிறார்.

உங்களுக்குத்தெரியுமா?

நம் கணித மேதை ராமானுஜம்

கிட்டத்தட்ட‌

ஒரு நானூறு ஐநூறு

மிக மிக நுட்பம் வாய்ந்த‌

கணிதத் தேற்றங்களை

நோட்டுப்புத்தகங்களில்

நிரூபணங்களே இல்லாமல்

எழுதி வைத்து இருக்கிறார்.

அவை இன்றளவும்

மிக மிகப்புதிதான 

தேற்றங்களாகத்தான்

இருக்கின்றன.

நிரூபணங்கள் இன்னும் 

அறியப்பட வில்லை.

இவ்வளவும் 

நாமக்கல் கோயில் தெய்வம்

அவர் கனவில் வந்து

சொல்லியதாகத்தான்

குறிப்பிட்டிருக்கிறார்.

பாருங்கள் 

மனிதனின் செயற்கை அறிவு

அந்த மூளை மடிப்புகளில்

கனவுகளுக்கு காரணமான

நியூரான்களில் 

பல்கலைக்கழகம் கட்டி வைத்துக்கொண்டு

காத்திருக்கிறது.

புதிய ராமானுஜன்கள்

ஏதாவது

வைரஸ் ம்யூட்டேஷன்களில் 

அவதரிக்க வாய்ப்புண்டோ?

ராமானுஜம் சமன்பாடுகளின்

கருவறைக்குள்

"மாடுலர் ஃபன்க்ஷன்ஸ்"எனும்

அதி நுண் கணிதம் ஒன்று உண்டு.

அதுவே

நம் அதி நவீன "அதிர்விழைய"கோட்பாட்டின்

அதாவது "ஸ்ட்ரிங் தியரி"யின்

கரு மூலம் என்கிறார்கள்.

மனிதன் உண்டாக்குவது

மனிதனையா?

கடவுளையா?

பொறுத்திருப்போம்

புதிய ராமானுஜன்கள் 

வந்து விடட்டும்!


____________________________________________

வியாழன், 3 ஜூன், 2021

கீறல்

 

கீறல்

________________________________ருத்ரா இ பரமசிவன்


சின்ன சின்னை 

தருணங்களையும் கூட‌

ஓட்டை போட்டு

உன்னைத் துருவி துருவி 

தேடிக்கொண்டிருக்கிறேன்.

அணிலாடு முன்றில் என்று

அன்றைக்கு ஒரு ஓலையில்

எழுத்தாணி கொண்டு கீறினானே

ஒரு கவிஞன்

அவனுக்குள் ஏற்பட்ட 

அந்தக் கீறல் தான்

இன்னும் இன்னும் இங்கே

என்னைத்

"துணி துவைத்துக்கொண்டிருக்கிறது."

எப்போது தான் வந்து தொலைப்பாய்?

இப்படி

நான் பல்லைக்கடித்து பல்லைக்கடித்து

சன்னல் கம்பிகளைக்கூட‌

தின்ன ஆரம்பித்து விட்டேன்.

உன்னைப்பார்க்க வேண்டும் என்ற‌

அடங்காத வெறி!

ஆனால் உன்னைக்காணும்

அந்த துளிப்பார்வையிலும் கூட‌

உன் பார்வையில் 

நான் விழுந்து விடக்கூடாதே

என்ற 

வெட்கமும் பயமும் ஆனந்தமும்

கள்ள மகிழ்ச்சியின் கள் போதையும்

இன்னும்

என்னவெல்லாமோ கலந்து

என்னை 

அதோ

வானில் தூசாய் பறக்கிறதே

அந்த அனிச்சத்துரும்பை விடவும்

இலேசாய் மிதக்க வைக்கிறது.

ஆனால் அதையும் மீறி கனமாய்

ஒரு இன்பம் அடி ஆழத்துக்குள்

இழுக்கிறது.

சன்னல் கம்பிகள் 

ஒரு மௌனத்தை முலாம்பூசிக்கொண்டே

இந்த நீண்ட காலத்து 

துண்டு துணுக்குகளை

துருப்பிடிக்க 

வைத்துக்கொண்டே இருக்கிறது.

போதும்.

இந்த கம்பிகளில் எல்லாம்

தனிமையின் பனிகொடுமை

அண்டார்டிக்காவாய் உறையச்செய்து

என்னைப்புதைக்கின்றது.

விரைவில் உன் முகம் காட்டு.


______________________________________



செவ்வாய், 1 ஜூன், 2021

கங்காருகளும் குட்டிகளும்


கங்காருகளும் குட்டிகளும்

___________________________________________


கொரோனா பற்றி

எல்லோருக்கும் தெரியும்.

கொரோனா

மரணங்களைக் குவித்ததும்

நடு நடுங்க‌

எல்லோருக்கும் தெரியும்.

மரணம் என்றால் 

அடுத்த உலகம் தான்.

போய் வாருங்கள்.

உங்களுக்கு

இந்த காக்காய்கள் மூலம்

பிண்டம் வைத்து அனுப்புகிறோம்

என்று மந்திரங்கள் மூலம்

இந்த மரணத்தை 

பூசை செய்பவர்கள் உண்டு.

அந்த பூசை இத்யாதி இத்யாதி கூட‌

கொரோனா முன்

கதவைப் பூட்டிக்கொள்கிறது.

கொரோனா

ஒரு மரணத்தின் அடையாளம் அல்ல.

அதன் கனம் சிலுவையின் கனம் தான்.

அதில் 

நசுங்கிக்கொண்டவர்களும்

நசுங்கி மீண்டவர்களும்

நம்மீது ஒரு கூர்மையான‌

நம்பிக்கையை ஆணி அடிக்கிறார்கள்.

ஏசுநாதரும் ஒரு ஜூடாவை

மடியில் கட்டிக்கொண்டே தான்

சொற்பொழிவுகள் ஆற்றினார்.

ஆத்திகமும் நாத்திகமும்

ஒன்றை ஒன்று

கங்காருக்கள் போல‌

குட்டிகளை சுமந்துதான் 

ஓடுகின்றது.

நமது ஞானமற்ற ஞானப்பயிற்சிகள்

எல்லாம்

இதன் மூலமே நடக்கிறது.

இந்த மரணங்கள் நம்மை

அமிழ்த்திவிடும் ஆழங்கள் அல்ல.

இதிலிலிருந்து

கோடி கோடி ஜன்மங்கள்

முளைக்கப்போகின்றன.

மனிதனின் அறிவு நுட்பமும்

அவனது

முனை முறியாத முனைப்பும்

நம்பிக்கையுமே

அவ்னது கர்த்தர்களாக‌

அவனுக்குள் 

கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கவிதை என்பது

இன்னொரு கவிதையால் தான்

வெளிச்சம் ஏற்றப்பட வேண்டியிருக்கிறது.

அதனால் தான்

இந்த கவிதைகளும் பேனாக்களும்

ஓய்ந்து போய் உட்காருவதே இல்லை.

இதன் மூச்சான எழுத்துகளுக்கு

எந்த ஆக்சிஜன் சிலிண்டரும்

வரம்பு கட்ட முன் வருவதில்லை.


____________________________________ருத்ரா


இனிய நண்பனே!

 இனிய நண்பனே!

______________________________


உனக்கு 

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உலகத்தின் எந்த புள்ளியிலும்

கர்ப்பம் திறக்காத‌

தருணங்களே இல்லை.

அந்த ஒரு பொன்னான தருணத்தில்

உதித்தவனே!

நீ வாழ்க! நீடூழி வாழ்க!

வாழ்க்கை எனும் ஒரு 

மயிற்பீலி உனக்கு கிடைத்திருக்கும்.

அதை விரலில்

சுழட்டி சுழட்டிப்பார்.

அதன் வண்ணங்கள் உன்னைக்

கிறங்கடிக்கலாம்.

அந்த மயில் வேட்டையாடப்பட்டதா?

அந்த மயிலே உனக்கு

இறகு உதிர்த்துக்கொடுத்ததா?

வாழ்க்கையின் காரணங்களை

நீ

தேடிக்கொண்டிருக்கும்போது

அது உன்னை விட்டு விட்டு

பல காத தூரம் அல்லவா

சென்றிருக்கும்.

சரி!

பின்னோக்கியே செல்லலாம்

என்று 

நீ திரும்புவாயானால்

நீ வந்ததே தவறு.

பிறவி தான் 

பாவத்திலும் பெரிய பாவம்

என்கின்றவர்கள்

உன்னை அந்த குகையில் மூடி

அஞ்ஞானப்பெரும்பாறை கொண்டல்லவா

அடைத்து விடப்பார்க்கிறார்கள்.

பிரம்மத்தை பார்க்கவேண்டும் என்று

சொல்பவர்கள்

இப்படி 

நுனிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு

அதன் அடிக்கிளையையா

வெட்டுவார்கள்.

அரிது அரிது 

மானிடராய் பிறத்தல் அரிது

என்ற ஞானமே

எல்லா பிரம்மஞானங்களையும்

பின்னுக்குத் தள்ளியது.

மனிதா!

முதலில் வாழ்க்கை உன்னை

தள்ளிக்கொண்டு போகும்

அந்த நடுக்கடல் வரை.

அப்புறம் அந்தப் படகின்

துடுப்புகளும் நீயே!

துடிப்புகளும் நீயே!

மண்டபங்களில் உபன்யாசங்கள் 

கேட்டுவிட்டு

உன் "கொள்ளிச்சட்டிக்குள்"

போய் விழுந்து கொள்ளாதே.

பிரம்மம் என்பது

உயிர் ஆற்றலின் நீண்ட சங்கிலி.

அதற்கு கோடரி தூக்கும்

வேதாந்தங்களை குப்பையில் போடு.

பிணங்களாய் நீ குவிந்த போதும்

இந்த வைரஸ்கள் சொல்லும் பாடத்தை

படித்துப்பார்.

ஆம்!

மனிதா!

நீ பெருகு!பல்கிப்பெருகு!

உன் வெள்ளமே பேரறிவு.

உன் பெருக்கமே பேரொளி!

ஆற்றலாய் பெருகு!

இந்த பிரபஞ்சங்களே நீ தான்.

நீ வற்றாத ஊற்று.

சுரந்து கொண்டே இரு.

பிறந்து கொண்டே இரு.

இறப்பு 

ஒரு நிறுத்தற்புள்ளி

முற்றுப்புள்ளி அல்ல.

நீ

பிறந்து கொண்டே இரு.

உனக்கு 

நிரந்தரமாய்

உன் பிறந்த தின வாழ்த்துக்கள்

இந்த 

சூரிய ஒளிப்பிழம்பில்

அச்சிட்டு அச்சிட்டு 

வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

என் இனிய நண்பனே!

இந்த பிறந்த தின வாழ்த்துக்களே

இன்னும் இன்னும் 

கோடிக்கணக்கான மைல்களுக்கு

உன்னை இட்டுச்செல்லும்.


_________________________________ருத்ரா