வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அத்திவரதர்



அத்திவரதர்
==============================================ருத்ரா

ஆகா!
மனம் குளிரக்கண்டேன்
அவன் தோற்றம்.
நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.
தொண்ணூறு டிகிரி கிடைக்கோடும்
தொண்ணூறு டிகிரி நெடுங்கோடும்
காட்டிய ஜியாமெட்ரியில்
கை வழியே நெய் வழியும் 
தேனமுதத் தோற்றமாய் கண்டேன்.
ஆழ்வார்கள் எனும்
மனத்தினுள் ஆழ்வார்கள்.
ஆழ்ந்து அகழ்ந்து முத்தெடுத்து
திருவாய் மொழியை கடல் ஆக்கினார்கள்.
அடியேன் வெறும் சிற்றெரும்பு
அத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ?
தோற்றம் என்றாலும் அழகன்.
தோற்றம் இல்லை என்றாலும் அழகன்.
கூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.
தனி முத்திரையோடும்செல்ல வழியில்லை.
கண்டவர்களைக் கண்ட்டேன்.
விண்டவர்களை வியந்தேன்.
அத்திவரதா! ஆட்கொள் அய்யா!
என்று 
ஈனக்குரல் எழுப்பினேன்.
இடியொன்று முழங்கியது.
அத்திவரதன் பேசுகிறேன்.
என் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.
உன் தரிசனத்தில்
என் ஏக்கம் எப்போது தீரும்?
அந்தப்பல்லியும் 
அந்தப் பூச்சியும் 
அந்தப் பூவும் புல்லும்
அந்த நோயும் 
அந்த நோய் தருகின்ற 
நுண்ணுயிரியும்
எல்லாம் ஒன்று தான்.

கோடி மக்களிளின் உயிர்
ஒரே கோட்டில் தான்...
எல்லாம் ஒன்று தான்
என்று சொன்ன மனிதனின்
"சொல்லின்" தரிசனம்
கன பரிமாணமாய்
என் முன் எப்போது வந்து நிற்கும்?
என் ஏக்கம் 
எப்போது தீர்ப்பாய்?
மனிதா! உரை!

===================================================










யார் நீ ? நில் அங்கே !

யார் நீ ? நில்  அங்கே !
=========================================================ருத்ரா

"என்னைப்பற்றி அறிந்து கொண்டாயா?"
கடவுள் கேட்டார்.
"உன்னைப்பற்றி அறியத்தான்
அவர்களிடம் சென்றேன்
நீ எங்கள் குலத்தில் பிறக்கவில்லை.
எங்கள் அருகில் கூட நிற்காதே
என்றார்கள்."
"அப்படியா சொன்னார்கள்?
நான் போகிறேன்"
என்று
கடவுள் அங்கே சென்றார்.
"யார் நீ? நில் அங்கே."
என்கிறார்கள்.
"எங்கே பூணூல்?"
என்று கேட்டார்கள்..
"என்னது எனக்கு பூணூலா?
யாரடா அது என்னையறியாமல்
எனக்கு பூணூல் போட்டது?"
கடவுள் குதி குதியென்று
குதித்தார்.
கோவிலுக்குள் எல்லாம்
போய் பார்த்தார்.
அங்கே எல்லா
கடவுள் சிலைக்கும் பூணூல்!
தொந்திப்பிள்ளையாரிலிருந்து
ஹிரண்யகசிபு குடலை உருவி
மாலையாய் போட்டிருந்த
நரசிம்மருக்கும் கூட
அந்த குடலோடு குடலாய் பூணூல்!
தாம் தூம் என்று குதித்த
கடவுளை
தேசவிரோதி என்று சிறையில் போட்டு
நையப்புடைத்து
வெளியே கொண்டு வந்து போட்டார்கள்
பிணமாக!
கடவுள் தற்கொலை செய்து கொண்டதாய்
"கேஸை " முடித்து விட்டார்கள்.

"மகேஸ்வரா !
என்ன இது பிணமாவா கிடந்தீர்கள்.?
உங்கள் ருத்ர தாண்டவம் எல்லாம்
என்ன ஆயிற்று?"
"தேவி கேட்டாள்.
"எனக்கு நானே கொடுத்துக்கொண்ட
தண்டனை அது."
"உங்களுக்கே தண்டனையா?
ஏன்?"
"நான் முதலில்
என்னைப் படைத்துக்கொண்டேன் .
பிறகு நான்
மனிதனைப்படைத்தேன் "
"அதனால்  என்ன?"
"முதலில் மனிதனைப் படைத்திருந்தால்
இந்த தொல்லையே வந்திருக்காது,
அவன்
கடவுளை படைத்திருக்க மாட்டான்."
அவனோடு நின்று கொள்வான்."

=================================================















புதன், 7 ஆகஸ்ட், 2019

இது கவிதை அல்ல.




இது கவிதை அல்ல.
===============================================ருத்ரா

நீலவானம்
பளிங்கு போன்று
தெள்ளிய மௌனத்தை
மலை முகடுகளில்
பதித்து நிற்கிறது.
பச்சைப்புல் விரிப்பு
அதை தழுவி
நிரவல் செய்கிறது.
ஓ! மனிதா
கோபத்தில் கொப்பளித்து
நிற்கும் நீ
இங்கு வந்தால்
உன் நரம்பு புடைப்புகள்
சமனம் ஆகி விடும்.
சீறும்
அந்த சிவப்பு லாவா
அமைதியின்
பச்சை லாவா ஆகிவிடும்.
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்து
இதை சில வினாடிகள்
உற்று நோக்கி இருக்கிறேன்.
அமெரிக்காவின் கலிஃ போர்னியாவில்
லாஸ் ஏ ஞ்சல்ஸில்
ஓக் பார்க் என்ற நகரத்தின்
பூங்கா இது.

அப்போது
என் உள்ளம் பொங்கி
அருவி ஆனது.
தனிமையின் அந்த பசுமை
எனும் புல்லரிப்பு
சிந்தனை இடுக்குகளில்
"கிம்பர்லிகளாய் "
சுடர்கின்றன .
..

அழகின் துடிப்பு இது.
எழுத்திலும் காகிதத்திலும்
இதை பொட்டலம்
கட்டிவிடமுடியாது.
கவிதை என்று தலைப்பு இட்டால்
அந்த நீலவானமும் பச்சைப்புல்லும்
கோபித்துக்கொள்ளும்.
இப்படி
கொச்சைப்படுத்த
நாங்கள் தான் கிடைத்தோமா? என்று.

===============================================================








செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அவர் நினைவை போற்றுவோமாக‌

அவர் நினைவை போற்றுவோமாக‌
===================================================ருத்ரா


பெருமதிப்பிற்குரிய
சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்
காலமான செய்தி
மிகவும் அதிர்ச்சியை தருகிறது.
உலக நாடுகள் தோறும்
வலம் வரும்போது
நெற்றி நிறைய திலகம் இட்டு
இந்திய நாடு
உலகத்துக்கு ஒரு திலகம் போன்றது
என்ற கருத்தின் உருவகமாய்
கண்ணியம் காத்த தலவர் அவர்.
உலகத்தில் இந்தியர்களுக்கு
ஏதாவது பிரச்னை என்றால்
உடனடியாய் தீர்த்து வைப்பதில்
அவர் காட்டும் வேகமும் அக்க்கறையும்
நம்மால் மறக்க இயலாது.
பெண்ணினத்தின் கண்ணியம் மிக்க‌
அந்த ஆளுமை
மறைந்து போனது
நமக்கு பெரும் இழப்பு.
அவர் நினைவை போற்றுவோமாக!

=============================================






ஒரு வெள்ளை ரோஜா


ஒரு வெள்ளை ரோஜா
======================================================ருத்ரா

காஷ்மீர் என்றால்
நம் கண் முன் வருவது
ரோஜாவும் ஆப்பிளும் தான்.
அரசியல் அமைப்பு சாசனத்தில்
ஒரு நம்பிக்கையும்
மனிதநேயமும்
கொண்டு எழுதப்பட்ட
அந்த ஷரத்துக்களில்
பீரங்கிக்குண்டுகள்
எப்படி கூடு வைத்தன?
சுதந்திரம் பெறத்துடித்த‌
இந்தியக் கைகளின் கூட்டணிக்குள்
ஒரு நச்சுத்தனமான‌
கோடரியை செருகிவைத்த‌
வெள்ளயன் தந்திரம்
காஷ்மீரை செங்காடு ஆக்கிவிட்டது.
நம் நாட்டின் மதங்களுக்குள்
வழிபாடுகளுக்கு
குவிந்த கைகள்
மனித நட்புக்கும்
கைகள் குலுக்கிக்கொண்டுதானே
இருந்தன.
நேற்று வரை
நம் ஜனநாயக கணிப்பொறிக்குள்
முட்டையிட்டவற்றில்
எந்த அசுரக்குஞ்சுகளும்
சிறகடிக்க வில்லையே.
உலகமெலாம் கவ்விக்கொண்டிருக்கும்
தீவிரவாதப்புகை மூட்டம்
இங்கேயுமா
வைரஸ் ஆகவேண்டும்?
அமர்நாத் பனிலிங்கம்
அன்பே சிவம் எனும்
உருவகமாய் உலகத்துக்கு
காட்சி தந்தது.
இதற்குள் வர்ணங்களின் மயக்கம்
எப்படி வந்தது?
ஒரே இந்து மதம் என்று
சொல்லி
அதில் ஆயிரம் சாதிகளை
செருகி
வைத்துக்கொள்ளுவதற்குப்பதில்
ஒரே மனிதம் எனும்
மதம் படைப்போம்.
ஒரு மனிதனுக்கு
ஓராயிரம் இறைவர்களா?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்பது
எம்மதமும் சம்மதம் என்பதன்
முழக்கம் தானே.
முள்ளோடு ஒரு சிவப்பு ரோஜா
நமக்கு இனி வேண்டாம்.
அமைதியின் மகரந்தங்கள் தூவும்
வெள்ளை ரோஜாவே
நம் தோட்டத்தில் பூக்கட்டுமே!

=============================================








வா



வா
========================================ருத்ரா

கண்ணாடிச்சிறகுகள்
கொண்டு
விர்ரென்று காதருகே ஒலித்து
விளையாடும் தட்டாம்பூச்சியின்
த‌ருணங்கள் போல்
செவியோரம் அலைகள்
ஆர்ப்பரிக்க‌
ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்
நடத்துகிறாய்?
கொடி போன்றவளே
கொடியேந்தி போராடும்
உன் கோரிக்கை தான்
என் கோரிக்கையும்.
என்ன செய்வது?
தனிமைக்குள்
தலைகள் நுழைக்கும்
நெருப்புக்கோழியைப்போல‌
இந்த இரைச்சல் காடுகளுக்குள்
ஒரு பதுங்கு குழி கண்டுபிடியேன்.
நம் இதயங்கள் கலக்கும்
ஒலியைத்தவிர‌
வேறு ஒன்றும் கேளாதவாறு
அடைந்து கிடப்போம்..வா.
தனி உலகம் தேடுவோம் வா.

===========================================



திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பெண்ணை மடல் மா


பெண்ணை மடல் மா
==========================================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

=======================================





விளக்க உரை
=========================================


பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!

(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)

=================================ருத்ரா இ.பரமசிவன்
20.03.2016