வியாழன், 7 ஜனவரி, 2016

ஓடியே போய்விட்டார்.




ஓடியே போய்விட்டார்.
================================================ருத்ரா.இ .பரமசிவன்.

கடவுளே
உன் முகச்சித்திரம் வேண்டுமே
எனக் கேட்டேன்.
அந்த கிருஷ்ணன் காட்டியிருப்பானே
விஸ்வரூபம்
என்றார்.
சமஸ்கிருதம் புரியவில்லை
என்றேன்.
"கோளில் பொறியில் குணமிலவே ....."
புரிகிறது...புரிகிறது.
இன் தமிழ் புரிகிறது...
"எண்குணத்தான்.." தான் புரியவில்லை.
சரி போகட்டும் .
அந்த தேவகுமாரன்
மலைச்சொற்பொழிவில்
விளக்கியிருப்பானே
என்றார்.
அவர் பிய்த்துக்கொடுத்த ஜீவ அப்பம்
இந்த கடைக்கோ டியில் உள்ள
எத்தியோப்பிய எலும்புக்குழந்தைக்கு
ஊட்டுவதற்குள்
எந்திரத்துப்பாக்கிகள் வந்து
இந்த உயிர்கள் எனும்
கார்ட்டுன் சித்திரங்களைக்கூட
கூழாக்கிப் போயினவே.
உன்னிடம் விளக்கம் கேட்பதற்குள்
நீ
நெஞ்சில் ஆணி அறையப்பட்டு
தலையில் முட்கிரீடம் நசுக்க
முடிந்து போய்
மீண்டும் முளைத்து
முளைத்த சுவடு தெரியாமால்
போதுமடா சாமி என்று
ஓடி விட்டாயே.
அதோ
அந்த  தீர்த்தங்கரிடம் போய்க் கேள்.
அதற்கு அவர்
"இந்த உடம்பு உயிர் என்ற ஆடைகளே தான் சுமை.
நிர்வாணம் கொள்" என்றார்.
அந்த மூளி நீலவானத்தை
கண் மூடி வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
"புத்தனைப்போய் பா ர்த்தாயா?"
இலங்கையின் அரசமர நிழலில்
அவன் கண்ணெதிரேயே
லட்சம் தமிழ்ப்பிணங்களை தின்னும்
வெறியைபார்த்த பின்
அவரே அமரர் ஆனார்.
அந்த அரசமரம் இப்போது
வெறும் துப்பாக்கிகளின் எலும்புக்கூடு.
மானிட அன்பின் அந்த
நெடிய வானத்தின்
முகடுகளிலிருந்து
ஒலிகளாகவும் எதிரொலிகளாகவும்
தூவப்படும் அந்த
இறைநேசத்தை
புரிந்து கொள்ளேன்.
அதற்கு மண்டியிட்டு நிமிர்வதற்குள்
இந்த தோட்டாக்கள் தின்றது போக
எத்தனை பேர் மிஞ்சுவோம்
என்று தெரியவில்லையே?
நான்
என்ன செய்ய
அந்த "பிக்காசோ"வைக்கேள்
ஏதாவது கிறுக்கித்தருவார்.
நிறுத்துங்கள்.
நீங்கள் செய்ததைத்தானே
அவரும் செய்கிறார்.
நாங்களாகவே குழம்பிக்கொண்டு
நாங்களாகவே தான்
புரிந்து கொள்ள வேண்டுமாமே !
ரகசியத்தைக்கண்டு பிடித்து விட்டாயல்லவா
ஆளை விடு.
கடவுள்
ஓடியே போய்விட்டார்.
இந்த வர்ணங்களையும் தூரிகையையும்
வீசி எறிந்து விட்டு.







புதன், 6 ஜனவரி, 2016

விடிந்து விட்டது




விடிந்து விட்டது
============================================ருத்ரா இ.பரமசிவன்

விடிந்து விட்டது
அது என்ன
அறுபத்தியொன்பது நாழிகை
ஆனபின்னும்
அதே இடத்தில் நாம் ?
மூவர்ண ரோஜாவை
காட்டினார்கள் சூரியன் என்று.
நான்கு வர்ண முட்காடுகள் மட்டும்
மண்டிப்போனது.
நம் தேசப்படத்தின்
அந்த அழகிய முக்கோணத்திரு உருவம்
ஒரு பெரிய்ய்ய்ய்ய திருவோடு போல் ஆனதே
பிச்சை போடுபவர்கள்
வாரியிறைக்கும் புகழ்மொழிகள்
நம் நாட்டின்
ஆன்மாவின் இதயத்தையும்
குதறித்தின்பது
நமக்கு ஏன் இன்னும் தெரியவில்லை.
கணிசமாக வளர்ந்து விட்டோம் என்று
கணினிகளின் பாறாங்கல்லைக்  கொண்டு அல்லவா
நம்மை நசுக்குகிறார்கள்.
வயிற்றில் ஈரத்துணியோடும்
இடையில் கோவணதோடும்
வல்லரசுக் கனவுத் தூண்டில்
தூண்டிகொண்டே இருப்பதில்
"மங்களயான் " பறக்க விடுகிறோம்.
அதில் உள்ள "செவ்வாய்த்  தோஷத்திற்கு"
பரிகாரம் தேடி
கங்கைகளை "கும்பமேளாக்களால்"
சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
ஆம்
நெஞ்சு கொதிக்கத்தான் செய்கிறது.

==============================================







வெள்ளமோ வெள்ளம் ( 7)





அந்த நாலெழுத்து முதல்வர்
==============================================ருத்ரா இ.பரமசிவன்.

நொப்பும் நுரையுமாய் எங்கும் வெள்ளம்
நசுங்கிய கார் டப்பாக்கள் ஒரு புறம்.
சோஃ பா மெத்தைகள் குடல் பிதுங்கி
மிதந்து வர ..
அப்போது தான் சூடாய்
மாமியா மருமகள் உரையாடிய
உரைகள் உறைந்து போய்
தண்ணீருக்குள் குமிழியிட்டு வரும்
அகலத்திரை டிவி ஆடி அசைந்து வர..
கேஸ் சிலிண்டர்கள் மூச்சுகள்
அடக்கிய சிவப்பு பிணமாய் மிதக்க ..
மூசு மூசு என்று மூக்கு மயிர்கள் துடிக்க
எருமைகள் தத்தளித்து வர..
பரந்தாமா!
உன் பாற்கடலையும் பாம்புப்படுக்கையையும்
சுருட்டி வைத்து வைத்துவிட்டு
இங்கே வா...என்று  கூப்பிடும்
பாம்பு வகையறாக்கள் நீரில் நெளியலிட
..........................................
..................................................
மக்கள் தங்கள் முதுகெலும்பு சுருட்டிய
கேள்வி சிதிலங்களை
உருட்டித்திரட்டி முன் வந்தனர்.
அவர்கள் முழக்கங்களில்
தண்ணீருக்குள் கூட தீப்பிடிக்கும்
சொற்கள் அலை யடித்தன.
நிவாரணங்களாய்  குவிந்த
சாம்பார் சாதபொட்டலங்களில் கூட
ஒரு எரிமலை முட்டையை  நுழைத்த
பசியின் பிரியாணியாக்கி
உண்டு கொண்டிருந்த போதே
உருவம் கொண்டது அந்த
கேள்விகளின் சொக்கப்பனை!
அவர்களிடையே
புதிதாய்
அவர்கள் விரும்பி வரவேற்கும்
அந்த
"நாலெழுத்து முதல்வர்"
புதுச்சுடராய் எழுந்து நின்றார்.
"இனி நாமே "
"இனி நாமே"
"இனி நாமே "
ஓங்கி வளர்ந்த குரல்
ஓங்கி விண்ணடர்ந்தது !

===============================================











கிரீடங்கள் நமக்குத்தான்.


கிரீடங்கள் நமக்குத்தான்.
===============================================ருத்ரா இ.பரமசிவன்

அறுபத்தொன்பது ஆண்டுகளாய்
அடைகாத்த முட்டை.
இடியாப்பச்சிக்கல்களே
இழை யாடி
மூவர்ணக்கரு தாங்கி
மூச்சு திணறிக்கொண்டிருக்கிற
இந்த மூச்சுக்கு
எப்போது சுதந்திரம்?

மேல் நாட்டினர்
மூக்கில் விரல் வைத்தார்களே
அந்த அரிய சிற்பங்கள்  தந்தவர்களா
இப்போது
அரை வயிற்றையாவது
இந்தக் கல்லை  ஜல்லிகளாக உடைத்து
நிரப்ப முடியுமா
என்று விரல் நைந்து கொண்டிருக்கிறார்கள்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அறிவின்
மூளைச்சிலந்திகளாக
வலை பின்னி
எங்கே இந்தியா எங்கே இந்தியா
என்று தேடியவர்கள் கையில்
இந்த பட்டினிப்புழுக்களா கிடைத்தன?
வெறுமையின் பாதாளங்களில்
இந்த சுவடிகளும்
கல்வெட்டுகளும்
ஒளி அவிந்து கிடக்கும்
காரணங்கள் பற்றி சிந்தனைப்பொறிகள்
சிதறிடாமல்
பசி தீர்க்கும் அரிசிப்பொரிகள்
சுற்றியே
கோடி கோடி எறும்புகள்.
அதற்கும் கூட நாம்
மின்னணுப்பொறிகள்
கண்டு பிடித்ததில்
கிரீடங்கள் நமக்குத்தான்.
ஆம்
அந்த முட்கிரீடங்கள்
நமக்கே நமக்கு த்தான்!

===================================================





திங்கள், 4 ஜனவரி, 2016

வெள்ளமோ வெள்ளமோ (6)



வெள்ளமோ வெள்ளமோ  (6)


ஜனநாயகம் வாழ்க!
===================================================ருத்ரா

வெள்ளம் வடிந்தது.
இவர்கள்
கள்ளம் தெரிந்தது.
இவர்கள் உள்ளமும் புரிந்தது.
தண்ணீர்ப்பூதம் விழுங்கிய பிறகு
சிமிண்டுக் கட்டுமான‌
எலும்பு மிச்சங்கள்.
நசுங்கிய‌
இரு சக்கர வாகன‌ங்களும்
நான்கு சக்கர வாகனங்களும்
மெக்கானிக் மருத்துவர்களுக்கு
காத்திருக்கும் பட்டியலில்
முடங்கி யுள்ளன.
மின் பதன சாதனங்களுக்கும்
தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கும்
ஏன் என் செல்லங்கள்
தன் உயிரையே வைத்திருக்கும்
அந்த டெட்டி பேர் புசு புசுக்குட்டிகள்
உட்பட‌
எல்லாவற்றிற்கும்
கருமாதி கூட முடிந்து விட்டது.
இதற்கு இழப்பீடாம்..
அதற்கு மதிப்பீடாம்...
இன்னும் காப்பீடாம்...
மீண்டும் வெள்ளம் கோடி கோடிகளில்.
வெள்ளத்தால் சிதலமானவர்கள் மீது
தேர்தல் சித்திரம்.
உரியவர்களின் இழப்பும் தவிப்பும்
நேர் செய்யப்பட வேண்டும்.
இலவசங்களின்
கனமழை மற்றும் வெகு கனமழை
என்று
இவர்களின்
தேர்தல் வானிலை அறிவிப்புகள்
கொடூரமாய் ரெக்கை விரிக்கிறது.
வெள்ளம் என்ற கொடூரம்
வாக்குப்பெட்டியை
நிரப்பிக்கொள்ளும்
தீனி ஆனது.
ஜனநாயக சிந்தனையோ
பட்டினியில்
ஒவ்வொரு தடவையும்
உயிரை விட்டது.
எல்லாம் கொண்ட்டாட்டம் ஆனது.
வாக்காளர் பட்டியல் பைபிள்களோ
இவர்களது
பழைய புதிய ஏற்பாடுகளில்
அல்லோகலப்படும்.
எதிர்க்கட்சி நிழல் காட்டும்
பெயர்கள் எல்லாம்
மரண பட்டியலில்.
ஆளுங்கட்சி நிறம் காட்டுபவர்கள்
இறந்து போயிருந்தாலும்
உயிர்த்தெழுவார்கள்.
தெருவெங்கும் தோ"ரணங்கள்" தான்.
வெள்ளத்தின் ரணங்கள் கூட‌
ஜிகினா பேப்பரில் எழுத்துக்களோடு
படபடக்கும்.
அந்த மக்களின் வாழ்வில்
வெள்ளம் சூன்யமாக்கியதை
இவர்கள் தங்கள் வெற்றிக்கு
மான்யமாக்கி மத்தாப்பு கொளுத்துவார்கள் !
கோடி கோடியாய் நிவாரணங்கள் கணக்கில்
குவியப்போகும் கரன்ஸிகளில் தலை
குனியப்போவது யார்?
அந்த "மகேசன்" தான்.
அந்த மக்கள் தான்.
யார் குனிந்தால் என்ன?
மக்கள் குரல் மகேசன் குரல்!

"செம்"பண"ப்பாக்கம் ஏரி
தளும்புகிறது.
"காந்தி புன்னகை" கட்டு கட்டாய்
கரையை உடைக்க காத்திருக்கிறது.
ஆணையம்
தேர்தல் தேதி மதகுகள் திறந்தால் போதும்.
வெள்ளம் வெள்ளம் வெள்ளம் தான்!
இலவச மதம் பிடித்து
"பிளிறும்"ஒலிகளில் கேட்கும் நம்
தேசிய கீதம்.
கிரேக்கத்து
ஜனநாயக சித்தாந்தம் தந்தவன்
"ஹெம்லாக்" கோப்பை ஏந்தி
மூச்சுகள் உதிர்ப்பான்.
இதையா நாம் கண்டுபிடித்தோம் என்று.
இருப்பினும்
நமது கடமை அது!
ஜனநாயகத்தை பிணமாய்
மடியில் கிடத்தியபோதும்
கழுத்து நரம்பு புடைக்க‌
முழக்கமிடுவோம்.
ஜனநாயகம் வாழ்க! ஜனநாயகம் வெல்க!

========================================================







ஞாயிறு, 3 ஜனவரி, 2016

இருட்டின் நிறங்கள்



இருட்டின் நிறங்கள்
===================================================ருத்ரா

படுக்கையில்  புர ண்டு  புரண்டு  படுத்தேன்
இந்த இருட்டின் நிறம் என்ன?
கறுப்புக்குள்
இத்தனை நிறங்களா ?
கறுப்பு தான்
இந்த பட்டாம்பூச்சிகளின் கருப்பையா?
அந்த அடர்ந்த இலைக்கொத்துகளிடையே
புழுக்கூடுகள்  ஆடுகின்றன.
மின்னலைக்கொண்டு நெய்த
சிறகுகள்
புடைக்கின்றன.
விடை க்கின்றன.
நான் தூக்கத்தின் பாதாளத்துள் வீழ்கின்றேன்.
மெல்லிய நூலாம்படைகள்
என்னைச் சுருட்டிக்கொள்கின்றன.
யார்..எது
என்னை உறிஞ்சுவது?
நான் தப்பித்து விடுகிறேன்.
எல்லாவற்றிலுமிருந்து
வழுக்கிக்கொண்டு.....
எல்லாவற்றையும்
துளைத்துக்கொண்டு.....
என்னவாவது பெயர் சூட்டிக்கொள்ளுங்கள்.
ஹிக்ஸ் போஸான் ?
நியூட்ரினோ?
நோபல் பரிசுகளின் கர்ப்பத்திலிருந்து
நான் பிய்த்துக்கொண்டு வருவேன்.
சவ்வுப்படல பிரபஞ்சம் எனும்
"ப்ரேன்  காஸ்மாலஜி"யின்
கணித சூத்திரங்களில்
படுத்துக்கொண்டிருந்த போதும்
புதிய பிரபஞ்ச வெளிச்சமாய்
நான் வருவேன்.
அதோ சங்கு ஒலித்து விட்டது.
கூடு பிய்த்துக் கொண்டது.
வர்ணப்பிரளயம்
ஒரு பூதாகரமான தூரிகையால்
மலையிடையே சிறகு விரித்தது.
நான் யார்?
இருட்டின் கருப்பா?
இருட்டின் நிறங்களா ?

=========================================================









வியாழன், 31 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளமோ (5)





வெள்ளமோ வெள்ளமோ  (5)



ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
=============================================ருத்ரா இ.பரமசிவன்



வெள்ளத்தனைய  பண‌ நீட்டம் தேர்தலில் நம்
உள்ளத் தனையதே ஜனநாயகம்.


வெள்ளத்தையே மூழ்கடிக்கும்
இலவச வெள்ளம்
வரப்போகுது! வரப்போகுது ! கவனம் !
வெள்ளத்தின் கண்ணீர் வடியட்டும்.
உள்ளங்கள் தெளியட்டும்.
புத்தாண்டு  இரண்டாயிரத்தின் பதினாறு ல்
நம் மடமைகள் மீது
"கல் பொருது இறங்கும்"
சிந்தனையின்
ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
புதிய யுகம் மலரட்டும்.

===========================================================



அன்புடன்
ருத்ரா