கைத்தடி மூக்குக்கண்ணாடிக் கார்ட்டூன்
__________________________________________
இந்தக் "கருத்துப்படம்"
ரத்த வரலாறுகளுக்கு எதிராய்
அணை கட்டிய அன்பின் படம் தான்.
ஆனாலும்
வெறித்தீயின் யாகங்களுக்கு
பக்தியாய் பலியாகு
என்று "பொசுங்கிப்போவதில்"
எந்த கடவுளின் முகத்தை
காட்டியிருக்கிறீர்கள்?
உங்கள் மார்ப்பை குண்டு துளைத்ததிலும்
அந்த தந்திர மராமரங்களே
அரங்கேறுவதற்கு வந்தன.
ஓ போலி ராமா!
இன்னொரு மதத்தானின்
பெயரைப்பச்சை குத்திக்கொண்டா
வில் அம்பு தூக்கினாய்?
வன்முறைக்குப்பதில் நன்முறையை
நடவு செய்ய வந்தவனின்
மார்புச்சதையை ருசி பார்க்கவா
"சுகினோ பவந்து.."என்று
சுலோகம் துவக்கினாய்.
பிரம்மத்தைத்தேடிப் புறப்பட்ட
பிரம்ம புத்திரர்களே
உங்களால் சல்லடையாகப்பட்ட
இந்த பிரம்மத்தின் சவத்தை
வைத்துக்கொண்டா ஒரு
ஒரு நூற்றாண்டு முழுவதும்
சவ ஊர்வலம் போவீர்கள்?
இதோ அந்த வெறியின் சொட்டுகள்
உங்கள் பொம்மலாட்டங்களில்
கையை காலை ஆட்டி ஆட்டி
அபிநயம் செய்யும்
பொம்மையாய்
ஆல வட்டம் போடுகின்றது.
நடிப்பதும் பொம்மை.
நரம்புத்துடிப்புகளும் பொம்மை.
ஒரு ஜனநாயகத்தைச் சிதைக்க
ஜனநாயகத்திலேயே மழு ஆயுதம் செய்து
மக்களையே "அசுர வதம்" செய்யும்
இது மட்டும்
பொம்மைக்கொலு அல்ல.
இந்த பொம்மை
குழந்தைகளை பலி கேட்கிறது.
தாய்களை பலி கேட்கிறது.
சமுதாய நாற்றுகளின்
இளங்குருத்துகளை பலி கேட்கிறது.
இது
விபூதியா? குங்குமமா? அரிதாரமா?
அதர்ம மனுதர்ம சாணக்கியம்
இந்த மண்ணில் ரத்த மழையை
மட்டுமே
தாகவெறி கொண்டு கேட்கிறது.
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக