திங்கள், 28 பிப்ரவரி, 2022

புத்தகக்கண்காட்சிகள்

 புத்தகக்கண்காட்சிகள்

________________________________________ருத்ரா


சிந்தனை விரும்பிகளே!

உங்களுக்கு மூச்சு முட்டும்போதெல்லாம்

இந்த சன்னல்களை

திறந்து வைக்கிறார்கள்.

இது எவ்வளவு சிறப்பான பணி!

மனிதன் தன் மூளைச்செதில்களுக்குள்

கணிப்பொறி கூடு கட்டி

அடைபட்டுக் கிடக்கும்போதும்

கைபேசிகளின் பிருந்தாவன‌ங்களுக்குள்

கற்பனைத் தீ முண்டெரிய‌

சமுதாய பிரக்ஞை கொஞ்சமாய் 

தோலுரிந்து உள்ளே

பச்சை எலும்புகள் இளிக்க ஆரம்பித்த‌

ஒரு எதிர்பரிணாமத்திலும்

புத்தகங்கள் எனும் அருமருந்து

என்பது

காலத்தின் கட்டாயம்.

ஒரு வகையில் இது

நம் விண்வெளியுகத்திற்குப் பொருந்தாத‌

பழங்காலத்துக்கு செல்வது போல்

தோன்றினாலும்

எழுத்தும் பேச்சும் கொண்டு

மிடைந்த நம் இன் தமிழ்

ஒரு அதிரடி மூச்சுத்திணறல்களிலிருந்து

விடுபட வேண்டியிருக்கிறது.

ஆன் லைன் எனும் அந்த 

"குகை"களுக்குள் 

மனிதன் மறுபடியும்

காணாமல் போய்விடுவானோ

என்ற அச்சம் போக்கும்

அரிய வழி இது தானே.

ஆம்.

குகையின் "அந்தப்பக்க" வெளிச்சம்

நமக்கு

ஒரு கீற்று வழி காட்டுவதற்கு

நம் நாகரிகரோஜாவின்

மின்னல் புன்னகையே

நம் மனித நம்பிக்கையின் ஊற்று ஆகும்.

இந்த 

பஞ்சாங்கக்கூட்டங்கள்

அச்சு கோர்த்துக்கொண்டு

நம்மிடையே இன்னும் வந்து

மூடநம்பிக்கைகளின் 

ஆடு புலி ஆட்டங்கள் ஆடலாம்.

பத்தகங்கள் 

பணங்காய்ச்சி மரக்காடுகள் இல்லை தான்.

இருப்பினும் அவை நம்

"மனம் காய்ச்சி" மரங்கள்.

நம் சிந்தனைகளின் பசுமை தாகம்

அங்கே

காகிதங்களும் எழுத்துக்களுமாய்

தவம் செய்து கொண்டிருக்கின்றன.

வாருங்கள் 

வணிக விளம்பரங்களின்

மற்றும் 

தாது புஷ்டி லேகிய ஜோஸ்ய இரைச்சல்கள்

நம்மை இன்னும் வெறும் 

ஈசல்களாக குவியவிடாமல்

இங்கே சென்று

நம் இருப்பை பதிவு செய்துகொண்டே 

ஆக வேண்டும்.

மனித இனமும் 

ஒரு மறைந்தொழியும் உயிரினமாய்

காணாமல் போகும் முன்

ஓ!நண்பர்களே!

நம் முகங்களும் அகங்களும்

இங்கே பளிச்சிடட்டும்.

அவை வெறும் காகிதக்கட்டுகள் அல்ல.

நாளைய யுகங்களின் 

தெளிவான பளிங்குக்கூடங்கள்.

வாழ்க!வளர்க!

புத்தக கண்காட்சிகள்.


____________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக