சனி, 19 பிப்ரவரி, 2022

துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.

 துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.

_________________________________________

ருத்ரா



தனிமையில் தூக்கம் வராமல் 


புரண்டு கிடந்த அந்த நீண்ட நெடிய‌


பாழ்வெளி இரவுகளில்


குமிழிகள் பூக்கின்றன.


சொப்பனங்களைக்கொண்டு


சோறு சமைக்கும் விளையாட்டுகளில்


இந்த நாட்டின் பள்ளத்தாக்குகளில் எல்லாம்


படு குழிகளுக்குள் அடியில்


சித்தாந்தங்கள் சிலந்திக்கூடுகள்


கட்டுகின்றன.


தேடுவதற்கு என்ன இருக்கிறது


அறிவின் வெளிச்சம் தவிர!


பிரம்மத்தை தேடுங்கள் என்று


கூச்சல்கள் கேட்கின்றன்.


அது என்ன‌


இருட்டா? வெளிச்சமா?


இருட்டைக்கொண்டு இன்னொரு இருட்டைத்தேடும்


பாஷ்யங்களையும் பிரமாணங்களையும்


பந்தல் போட்டுவைத்துக்கொண்டு


பந்தி வைத்துக்கொண்டிருக்கிறோம்.


மனித உயிரின் வெளிச்சமும்


அதன் அறிவுத்திரட்சியும்


நமக்கு சுடரேந்திகளாக இருக்கும் போது


நமக்கு நாமே கோடரிகள் தூக்கும்


வர்ணப்பேய் பிசாசுகளை


தீயிட்டுக்கொளுத்துவோம்.


சட்டென்று கண்விழித்து சிலிர்த்துக்கொண்டேன்.


விழிப்பு நிலை விளிம்பு கட்டி


துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.


இது ஒரு வரலாற்றுக்கடலின் கொதிநிலை!


_____________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக