சனி, 11 ஜனவரி, 2020

ரஜினியின் தர்பார்


ரஜினியின் தர்பார்
=========================================================ருத்ரா

இந்த சமுதயம்
கல்லீரலை இழந்த போது
இதன் இதயம்
நாளங்கள் அறுந்து தொங்கும்போது
இதன் உயிரான‌
தமிழ் மொழி
ஆதிக்கச் சாக்கடையில்
விழுந்து கிடக்கும் போது
சாதி மத வல்லூறுகள்
இதன் கண்களை கொத்திப்
பிடுங்கும்போது
ஏ சுரணையற்ற
இளைய சமுதாயமே
தர்பார் போன்ற‌
கொள்ளிக்கட்டைகளைக் கொண்டு
உன் முதுகு சொறிந்து
கொண்டிருக்கிறாயே!
நிழலின் இருட்டு வார்ப்பில்
செய்த‌
காக்கிச்சட்டையையும்
துப்பாக்கியையும் கொண்டு
அநீதியைப்பொசுக்குவதாக
வலம் வரும் உன்
சூப்பர்ஸ்டார்
இங்கே அசலான பிர்ச்னைகள்
உன் மீது தீயை பற்ற வைக்கும்போது
அவர் மேஜிக் சிகரெட்டுகளை
அலேக்காக போட்டு
உதட்டில் கவ்விக்கொள்வதைக்கண்டு
புல்லரித்துப்போகிறவன் அல்லவா நீ!
பார்.
எரியும் பிரச்னைகளில்
சாம்பல் ஆகி கொண்டிருக்கிறாய்.
ஏதோ கணினியின்
மாயாபஜாரில்
சொக்கட்டான் ஆடி
இந்த ஜனநாயகத்தை மந்திரக்கோல்
ஆக்கியதாய் பூரித்து
பேயாட்சி செய்யும்
இந்த கொடுங்கோன்மை கண்டு
உன் விறைத்த காக்கிச்சட்டைக்காரனின்
எந்த குண்டும் சீறி எழவில்லையே!
கல்லாப்பெட்டியில்
சில்லறை குலுங்கவா
அந்த வெறிச்சிரிப்பும்
பல் நற நறப்பும்
விழி பிதுக்கலும்
மற்றும்
"கிழி சும்மா கிழி"
எனும் கம்பியூட்டர் இசை இரைச்சலும்?
அவர் சுட்டால் ஆயிரம் குண்டு மழை!
அவர் மீதோ
ஒரு கீறல் இல்லை.
ஆகா! இவர் போதுமே.
இவரை வைத்து இங்கே உள்ள‌
ஆயிரம் அநீதிகளையும்
சுட்டுப்பொசுக்கி விடலாமே.
அருமைத்தமிழனே!
உன் எண்ணங்களை
வெறும் கந்தலாக்கி விடாதே.
கிழிந்து தொங்கும்
உன் மக்களாட்சியை
கவனிக்க மறந்து
அந்த பொம்மலாட்டங்களில்
கரைந்து போகாதே.
தமிழனே!
பொங்குமாங் கடல் நீ.
இந்த "போங்காட்டமா"
உன்னை
இந்த "போகியின் பொங்கல் விழாவில்"
குப்பை எரிக்கப்போகிறது?
போதும்.
இப்போதாவது
விழித்தெழு.
இந்த சாதி மதப்பேய்களுக்கு
வேப்பிலை அடிக்க‌
அறிவு கொளுத்திய‌
உன் சிந்தனைச்சுடரை
தூக்கிப்பிடி.
ரஜனிகளே நோய்!
ரஜினிகள் மருத்து அல்ல.

==============================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக