டு லெட்
====================================ருத்ரா
புதிய இயக்குனர் செழியன்
புலிப்பாய்ச்சல் பாய்ந்து
கொல்கட்டா சர்வதேச திரைப்பட விருது
"தங்கப்புலியை" பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமிதம் இது.
கதை
குடித்தனத்துக்கு
வீடு தேடும் வேட்டையும்
அந்த வீட்டின்
குறுக்கு நெடுக்கு அநாடமியைப்பற்றியதும் தான்
என்று புரிகிறது.
யதார்த்தம்
எனும் வடசொல்
உள்ளது உள்ளபடி எனும்
நம் உணர்ச்சிப்பிழியலின்
உள்ளத்தை உரித்துக்காட்டுவது தான்.
ஆனால்
நடிகர்களுக்குப்பதில்
அந்த ஓட்டை உடைசல் வீடுகளின்
காரை பெயர்ந்த அல்லது
செங்கல் எலும்பு தெரிந்த
சுவர்களோ
அல்லது உடைந்த ஜன்னல்களோ தான்
பாத்திரங்களாகி
நடித்திருக்கின்றன.
அந்த குறுக்குவெட்டு சித்திரத்தில்
நடிகர்களின் நடிப்பின்
வியர்வை வாசனையும்
விரவியிருக்க வேண்டும்.
சந்தோஷ் ஸ்ரீ ராம்
ஷீலா
குட்டிப்பையன் தருண்
ஆகிய புதுமுகங்கள்
இந்தப்படத்தின் உயிர்நரம்புகள்.
கணினிப்புயலும்
அந்தப் புயல் சார்ந்த தொழிலும்
மனிதனின் பொருளாதாரத்தை
வேறு ஒரு பரிமாணத்துள்
கொண்டுபோய் வைத்து விட்டது.
அதனால்
மண்ணும்
மண்வாசனையுள்ள மனிதர்களும்
எங்கோ
பரணில் தூக்கிஎறியப்பட்டு விட்டார்கள்.
கட்டு கட்டான கரன்சியைத் தான்
வீடு தீனி கேட்கிறது.
"வாடகைக்கு விடப்படும்"
என்று அட்டை மாட்டுவதை விட
டு லெட் என்று
ஆங்கிலத்தில் அறிவித்தால் தான்
வீடுகளின்கதவுகள்
ஒரு மோகத்தில் அதன் ரத்த சதையில்
"கிறீச்சு"கள் இல்லாமல்
திறந்து காட்டுகின்றன.
வீடே
நம் பழைய கலாச்சாரங்கள் வற்றிப்பொன
எலும்புக்கூடு
என்று ஆகிவிட்டபோது
வேறு "பேய்வீட்டு"த்திகில்கள் தேவையில்லை.
இசை இரைச்சல்கள்
குத்தாட்ட கும்பமேளாக்கள் எல்லாம்
இல்லாமல் ஒரு படமா?
இந்த வியப்புக்கே
விருது கொடுத்துதான் ஆகவேண்டும்.
வீட்டுச்சுவர்க்கோழிகளின்
அந்த மெல்லிய மௌனக்கீறல்கள்
போதுமே.
ஆனந்தவிகடனில்
இது ஒரு கொரில்லா முயற்சி
என்று செழியன் கூறியிருக்கிறார்.
சிந்தனைப்பொறி
சினிமாக்கதையிலும்
கொரில்லாத்தனங்கள் செய்யும்போது தான்
திரை இலக்கியம் நசுங்கிப்போகமால்
அதன் "லாவா"கொப்பளிப்புகளுடன்
பாதுகாக்கப்பட முடியும்.
சமுதாய வலிகளும் வலிப்புகளும்
பற்றிய படம்
கமர்சியல் ரசம் பூசப்பட இயலாது தான்.
மக்களின் வாழ்க்கை நிர்வாணமாய்
உரித்தகோழியாய்
தொங்கவிடப்படுவது
இந்த "டூ லெட்டில்" நன்றாய்
தொங்குகிறது.
சினிமாவில் ஒரு ஞானபீட குறுநாவலை
காமிரா கொண்டு எழுதிக்காட்டிய
செழியன் டீமுக்கு
இது நிச்சயம் ஒரு இமய சாதனை.
===========================================================