வியாழன், 29 ஏப்ரல், 2021

ஒரு தரிசனம்

 ஒரு தரிசனம்

________________________________ருத்ரா



கடவுளே

எனக்கு வார்த்தைகளில் 

சண்டை போட‌

நீயே தகுதியானவன்.

உன்னை நோக்கி வீசும்

எதிர்ச்சொற்கள்

எனக்கு 

மாலையாகி விழுகின்றன.

நடுநிசியில் ஒரு பயத்தின்

வர்ணம் 

என்னைப்பூசிக்கொள்ளும்போது

என் சொற்கள் உனக்கு

ஆனைத்தும்பிக்கை அளவுக்கு

மாலை தொடுத்து 

சூட்டும்போது

நான் உன்னிடம் வேண்டும்

அபயக்குரல்

என்னைக் கேலியின் கிண்டலின்

காக்காய் முள்ளாய் குத்துகிறது.

நாங்கள் உனக்கு

பிரம்ம சூத்திர பாஷ்யம் 

எழுதுவது போல்

அன்றைக்கு ஒரு நாள்

ஒலியற்ற ஒலியில்

இந்த மனிதனை

அவன் அறிவை

அவன் சமூக அக்கறையை

உன் பாணியில்

ஒரு சகஸ்ரநாமம் போல்

தொடுத்துக்கொண்டிருந்தாய்.

அதில் 

ஃபெர்மியானையும் 

போசானையும்

வித்யாசம் இல்லாமல் ஆக்கி

ஒரு சூப்பர் சிம்மெட்ரியை

"அதிர்விழை"எனும் 

நுண் நடுக்கத்தைக்

காட்டிய மனித அறிவின் முன்

வியந்து களித்து

நர்த்தனம் ஆடினாயே.

போதும் போதும்

கோவில்களுக்கு கனத்த பூட்டுகளை

மாட்டுங்கள் என்றும்

விண்ணொலி முரலச்செய்தாயே!

அது

உனக்கே

ஒரு பிரம்மை!

மனிதனுக்கு பிரம்மம்.

பிரம்மத்துக்கு மனிதன்.

மரப்பாச்சிகளின் 

அறிவு விளையாட்டா இது?

கடவுளே

நீயே ஒரு நாத்திகனாய்

நிற்கும் 

அந்த தரிசனம் இருக்கிறதே

அதற்கு

ஈடும் இல்லை

இணையும் இல்லை.

_______________________________________


புதன், 28 ஏப்ரல், 2021

கண்ணாடிக்குப்பி

கண்ணாடிக்குப்பி

________________________________ருத்ரா


மண்டியிட்டு வழிபடுகிறோம்

உன்னை.

ஓ! இறைவா!

எங்கள் மரண ஓலங்களை நிறுத்து.

இனிய இசையில்

எத்தனை பாடல்கள் நாங்கள்

உனக்கு தினம் தினம் 

பாடுகின்றோம்.

அதை விட்டு

இந்த மரண ஓலங்களா

உன் செவிகளில் இன்பம் பாய்ச்சுகிறது?

நாங்கள் உன் குழந்தைகள்.

அந்த ஆகாயத்திலிருந்து தான்

எங்கள் தொட்டில்களை ஆட்டுகிறாய்.

ஆனால்

எதற்கு இந்த 

வெண்டிலேட்டர்களைக்கொண்டு

எங்களை பயமுறுத்துகிறாய்?

பூதங்கள் போல் உடைதரித்து

மருத்துவர்களும் செவிலியர்களும்

எங்கள் உயிர்களை காப்பாற்றியே

தீருவோம் என்ற தீர்மானத்தில்

ஓ!இறைவா

நீயும் உடன் இருக்கிறாய் 

என்று தானே நம்புகிறோம்.

அப்படியிருந்தும்

பிணங்கள் எரியும் சுடுகாடுகளில்

நீ கோல்ஃப் விளையாடிக்காட்டியா

முறுக்கல் காட்டுகிறாய்.

அந்த நுண்ணுயிரிகள்

எவ்வளவு அற்புதமானவை! அழகானவை!

அந்த அறிவியல் நுட்பம் கொண்ட‌

வாயினாலா இந்த மரணங்களை

எங்கள் மீது நீ உமிழ்வது?

நீ எங்களுக்குத் தெரியாமல்

இந்த ரகசியங்களை எங்கள் மீது

சோப்புக்குமிழிகள் போல்

ஊதினாலும்

எங்கள் அறிவின் நுண்ணோக்கில்

உன் திருவிளையாடல்களையும்

தடுப்பூசிகள் ஆக்கி

உன்னோடு விளையாடுகிறோம்.

போட்டி பொறாமைகளுக்கு

அப்பாற்பட்டு விளையாட வேண்டிய நீ

எங்களோடு 

அழுகுணி ஆட்டம் அல்லவா ஆடுகிறாய்.

லட்சக்கணக்கிலா

பிணங்கள் வேண்டும்

உனக்கு நைவேத்தியம் கொடுக்க?

விலங்குகள் 

மனிதர்கள் 

அப்புறம்

கடவுள்கள் என்று

ஒரு ஏணி வைத்திருக்கிறாய்.

நாங்களும் எங்களுடைய‌

"நூலேணி"கொண்டு ஏறி

உன்னை மிஞ்சி விடுவோமோ

என்ற பயமா உனக்கு?

எங்களுக்கு பயமில்லை.

எங்கள் நம்ப்பிக்கையின் சிகரம்

உனக்கு எட்டுமா?

தெரியாது.

உன் சிகரத்தில் 

இப்படி ஒரு கோர தாண்டவம்

நீ ஆடிக்கொண்டிருக்கும்போது

உன் தலையில் ஒரு கண்ணாடிக்குப்பி

வந்து விழுகிறது.

அதனிடம் உன் நெற்றிக்கண்ணை

திறந்து கேட்கிறாய்.

யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?

அது சொல்கிறது.

அய்யனே தெரியவில்லை..

என்னவோ ஒளியாண்டுகள் என்று சொல்கிறார்கள்

அப்புறம் பில்லியன் பில்லியன்...பில்லியன்...

என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவ்வளவு உயரத்திலிருந்து வருகிறேன்.

அது என்ன?

கடவுள் கர்ஜிக்கிறார்.

அறிவு..அறிவியல்...அப்புறம் 

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்..

அப்புறம் லாஜிக்கல் கோடிங்க்..

அப்புறம் இன்னும் என்னவெல்லாமோ

சொல்கிறார்கள்.

என்னை விடவா அது உயரம்..

ஆமாம் அய்யனே

அதை ஐ க்யூ என்கிறார்கள்.

அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஐ க்யூ

பில்லியன் கணக்கில்.

"உன்னை கடவுள் என்று கற்பிக்க"

ஒரு பத்து பன்னிரெண்டு ஐக்யூ

இருந்தாலே போதுமாம்?

நீ அநாவசியமாக‌

"பொம்மை கேம்ஸ்" ஆடுகிறாயாம்!

நீயும் மனிதனின்

அறிவுப்பிழம்பில் பிறந்தவன் 

என்பதால் தான்

இந்த கும்பாபிஷேகமும் கொட்டுமுழக்கும்

உனக்கு தருகிறோம்

என்கிறான் அற்பப்பயல் மனிதன்..

அது இன்னும்

ஐஸ் வைக்க என்னென்னவோ

சொல்லிக்கொண்டே இருந்தது..

"சரி சரி நிறுத்து..

இந்த மனிதக்குஞ்சுகளின்

விளையாட்டுப்பொம்மைகள் தாம் 

நாம்.

போறான்கள் பயல்கள்..விடு.

அந்த குப்பியைத்தா"

அந்த பொன்னார் மேனியன்

புலித்தோலை அரைக்கசைத்திருந்தான்.

மெதுவாக அந்த குப்பியை

புலிதோல் ஆடைக்குள் செருகிக்கொண்டான்.

தடுப்பூசிக்குப்பிகள்

சிரித்துக்கொண்டன 

அது அவனுக்கு

கேட்டிருக்குமா? இல்லையா?

தெரியவில்லை.


____________________________________________









திங்கள், 26 ஏப்ரல், 2021

அந்த தங்கக்குதிரையில்....


தசாவதார காட்சி

நன்றியுடன்

https://www.google.com/search?q=vaigaiyil+alagar...


____________________________

அந்த தங்கக்குதிரையில்
வருபவனா அழகன்?
அவனை மொய்த்த அந்த‌
கோடிக்கால்களின்
மனித பூதங்களே
அழகன் அழகன் பேரழகன்.
மற்றவனே இங்கு கள்ளழகன்.
மக்களில்
அந்த உழைப்பில்
அந்த மகிழ்ச்சியில்
அந்த கண்ணீரில்
அந்த கேள்வியில்
அந்த பாட்டுகளில்
அந்த‌ பசியில்
அந்த‌ உணவில்
அந்த‌ அறிவில்
ஒளிந்து ஒளிந்து
ஆடி அசைந்து
அந்த 
பொய்மெய்க்குதிரையில்
பவனி வருபவனே
கள்ளழகன்.
மக்கள் கடல்
மதுரைக்குள் வரும்
அழகிய திருநாளே
இத்திருநாள்.
"தூணிலும் துரும்பிலும்
இருப்பான்
என்று எத்தனை காலம்
பஜனை செய்தீர்?
நோயிலும் இருப்பான்
நொடியிலும் இருப்பான்.
தங்கக்குதிரையில்
கொரோனாவாக‌
கொள்ளை அழகில்
தரிசனம் தருவான்.
நுண்ணோக்கியில்
காலிங்கன் எனும்
நீண்ட பாம்பாய்
வைரஸ் உருவில்
காட்சி தந்தேன்.
மனிதனின் 
அறிவு நுட்பமே
எங்களுக்கெல்லாம்
வைகுண்டம்.
புரிவாய் இன்று
புதிதாய் இன்று"
வர்ணங்கள் பூசி
மறைக்க முடியா
மகத்தான ஒரு
மக்கள் வெள்ளமே
கண்ணுக்கினிய‌
கருத்தினில் ஒரு
கனவின் 
சூடு ஏற்றி சூடம் ஏற்றும்
அரிய காட்சி இது
அழகுக்காட்சி இது
லட்சக்கணக்காய்
பொற்காலடிகள்
பொருந்திய வைகை
பொழில் தனைச்சூடி
பொலியக்காட்டும்
பொற்கால‌
வரலாறு தன்னை!

இப்படிக்கு
ஒரு மதுரைக்காரன்.

__________________________ருத்ரா




ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ருத்ராவின் கவிதைகள்.

 



ருத்ராவின் கவிதைகள்.





சூரியன் 

உறங்குவதும் 

விழிப்பதும்

பூமியின் விளிம்பு தான்.

இது வரை அந்த 

விளிம்பு கைக்கு மாட்டவே

இல்லை.

நானும்  சுத்தியல் ஆணி சகிதம்

ஒரு காலண்டரை

அந்த விளிம்பில் 

மாட்டிவிட முயலுகிறேன்.

சரி.

இது எத்தனையாவது வருடம்?

யாருத்குத் தெரியும்?


___________________________________


இலையோடு

தண்ணீர்த்துளி

ஒட்டவே இல்லை.


துறவு

______________________ருத்ரா


அந்த பாறாங்கல்லை

தூண்டிலில் மாட்டிக் கடலில் வீசி 

கரையில் காத்திருந்தது அந்த‌

மண்புழு.


நம்பிக்கை

___________________________ருத்ரா



சீனாக்காரன் கூட தருகிறானாம்

நம் "ப்ரணவ மந்திரத்தை"

சிலிண்டரில் அடைத்து.


ஆக்சிஜன்

____________________________ருத்ரா


தங்க நாணயங்கள் கீழே.

இலைகள் இடுக்குகள் வழியே

சூரியன் துப்பியது.


ஒளிக்கசிவு

______________________________ருத்ரா



முங்கிகுளித்ததில்

நுரையீரல் பேசியது

ஆறு


____________________ருத்ரா



மரணஇயல் பாடம்

நுரையீரல் 

பல்கலைக்கழகத்தில்.


கொரோனா


____________________ருத்ரா


விமானங்களே

இனி "அணிலாடு முன்றில்"


கொரோனா


_______________________ருத்ரா


சங்கிலி அவர் கழுத்தில்

அது அவரை இழுத்துச்சென்றது.


"வாக்"

_____________________ருத்ரா


இவர்கள் தேசம் முழுவதும்

பத்து எண்களில்.


கைபேசி

________________________ருத்ரா

சனி, 24 ஏப்ரல், 2021

நிழல்

 தங்கநாணயங்கள் கீழே.

இலைகள் இடுக்குகள் வழியே

சூரியன் துப்பியது.


நிழல்

______________________________ருத்ரா

கனவு

 மூளையின் கச்சா ஃபிலிம்

ஓடுவதற்கு

தூக்கமே திரை.


கனவு

______________________ருத்ரா



அந்நியன்

 சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த‌

கடவுளுக்கு

இந்த உலகமே மிலேச்சமானது.


அந்நியன்

___________________________ருத்ரா