வெள்ளி, 30 ஜூன், 2017

நள்ளிரவு சிந்தனை

நள்ளிரவு சிந்தனை
================================================ருத்ரா

நள்ளிரவு.
கடிகாரத்தில் இரண்டு முள்ளும்
ஒன்று சேர்ந்து
குத்தப்போகிறது.
ரத்தமில்லாத கொலை.
கத்தியில்லாமல் காயம்.
பொருளாதாரத்தில்
ஆல்ஃப்ரெட் மார்ஷல்
ஒரு கோட்பாடு சொன்னார்.
உன் கற்பனை விலை
அல்லது
நீ கொடுக்கநினைக்கும் விலை
அதற்கு எதிராய் சந்தையின் விலை
இரண்டுக்கு இடையே ஒரு
வேறுபாடு விழும்
அதை நுகர்வோரின் மிகுதிப்பாடு
(கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்)
ஆக எடுத்துக்கொண்டு
சந்தோஷம் கொள் என்றார்.
(டிஃப்ரன்ஸ் பிட்வீன் பொடென்ஷியல் ப்ரைஸ்
அன்ட் ஆக்சுவல் ப்ரைஸ் இஸ் கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்)
நுகர்வோர்களே
நீங்கள் எப்போதாவது அந்த
"மிகுதிப்பாட்டை" சட்டைப்பைக்குள்
போட்டிருக்கிறீர்களா?
இல்லை!
அப்படி உங்கள் "உளவியலுக்குள்"
விளம்பரங்கள் மூலம் கிளர்ச்சி செய்து
பெரு வணிகர்கள் ஒரு தட்டுப்பாட்டை
உருவாக்கி அல்லது பதுக்கி
அந்த "நுகர்வோர் மிகுதிப்பாடு"
எனும் "மாயமானை" உங்களுக்கு
காட்டுவார்கள்.
இந்த பொருளாதாரம் போதிப்பதெல்லம்
ஒன்றே ஒன்று தான்.
சுரண்டல் சுரண்டல் சுரண்டல் மட்டுமே!
அந்த விலைவாசி வேட்டையில்
உங்களுக்கு நுரை தள்ளும்.
அப்போது அந்த கானல் நீர் நிழலில்
தெரியும்
பொருளாதார மானின்
அழகிய புள்ளிகளே
இந்த "ஜி.எஸ்.டி" ரங்கோலிகள்.
நுகர்வோர்களே
உங்களுக்கு வேண்டுவது
பொருள்கள் அல்ல.
உங்களுக்கு உடனடியாக வேண்டுவது
"விழிப்புணர்ச்சியே"
ஒரே நாடு ஒரே வரி
என்ற குரலில் எதிரொலிப்பது
ஒரே நாடு ஒரே மொழி
ஒரே மதம் ஒரே கடவுள்
ஒரே ராமர் ஒரே கோவில்
........
மற்றதெல்லாம்
கடலில் தூக்கி எறியப்படவேண்டியவை.

====================================================


வியாழன், 29 ஜூன், 2017

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."


"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
======================================================ருத்ரா


அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி யென்ன
வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்
இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.


 வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
=======================================================ருத்ரா


பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=================================================================
(பொழிப்புரை தொடரும்)

அரசியல் ஜோக்ஸ் (1)

அரசியல் ஜோக்ஸ் (1)
================================================ருத்ரா

பிரதமர் அவர்கள் விமானத்தில் திரும்பிக்கொண்டிருக்கிறார்.
கீழே அழகிய குட்டித்தீவு போல் காட்சியளிக்கும் பகுதியைச்சுட்டிக்காட்டி விமானியிடம்

"அங்கே கீழே இறக்குங்கள்.அந்த நாட்டுக்கும் விஜயம் செய்து விட்டு
திரும்பலாம்" என்கிறார்.

அதற்கு விமானி "மேன்மை தங்கிய பிரதமர் அவர்களே! அது நம் நாட்டைச் சேர்ந்த "கொள்ளிடம்" பகுதி.தமிழ் நாட்டைச்சேர்ந்தது."
என்கிறார்.

பிரதமர் பதறி "வேண்டாம்! வேண்டாம்! நேராய் சென்று விடுங்கள்"
என்கிறார்.

=================================================================
(நகைச்சுவைக்காக எழுதியது)

புதன், 28 ஜூன், 2017

காதல் ஜோக்ஸ் (1)

காதல் ஜோக்ஸ் (1)
===============================================ருத்ரா


காதலன் (காதலியின் அப்பாவிடம்)

அங்கிள்! நான் வரதட்சிணை வாங்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்.

காதலியின் அப்பா

அது மரியாதை இல்லையே.நான் கண்டிப்பாக வரதட்சிணை கொடுப்பதாக அல்லவா உள்ளேன்.

காதலன்

அதெல்லாம் வேண்டாம்.உங்கள் மகளை நான் திருமணம் செய்து
கொள்ள விரும்புகிறேன்.

காதலியின் அப்பா

அப்படியானால் ஒன்று செய்ய செய்யலாம்.எனது இளைய மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கவிரும்புகிறேன்.அதற்கு வரதட்சிணையாக நீங்கள் காதலிக்கும் என் மூத்த மகளையும்
உங்களுக்கு மணம் முடித்து வைக்கிறேன்.

காதலன் காதலியிடம்

என்ன? உன் அப்பா இப்படியெல்லாம் பேசுகிறார்.

காதலி

அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்.அவர் டிவி சீரியல்களுக்கு (சின்னத்திரை) கதை எழுதிக்கொடுப்பவர். எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.உங்களுக்கு எப்படி?

(காதலன் மயக்கம் போட்டு விழுகிறான்)

===============================================================



திங்கள், 26 ஜூன், 2017

நகைச்சுவை (31)

நகைச்சுவை (31)
=================================================ருத்ரா

செந்தில்

அண்ணே..குதிரை பேரம் குதிரை பேரம்னு சொல்லிட்டிருக்காங்களே
அது என்னண்ணே!

கவுண்டமணி

அட...ஆமாண்டா..அது என்னண்ணே புரியலையேடா!

செந்தில்

அட! இது கூட தெரியலியாண்ணே..அதான்..நம்ம மெரீனா பீச்சுலே
"ஒரு பெரிய குதுரையை" நட்டு வச்சிருக்காங்களே...ரெட்ட எலயோட..அதாண்ணே..

கவுண்டமணி

அது ரெட்ட எல இல்லையாம்டா..

செந்தில்

அட போங்கண்ணே உங்களுக்கு யோசிக்கிற அறிவே கெடயாது!

கவுண்டமணி

அடேங்கொப்பா!  நீ தாண்டா நம்ம எரும நாயக்கம்பாளையம் மேதை "பெர்னார்ட் ஷா"...

செந்தில்

என்ன சொன்னீங்க! என்ன சொன்னீங்க! ஏதோ "ஷா"ன்னு
சொன்னீங்களே!அப்படியெல்லாம் கூப்புடாதீங்கண்ணே! அப்புறம்
"அமீத் ஷா" கோவிச்சுக்குவாரு...

கவுண்டமணி

டேய்..டேய்..குதிர மூஞ்சித்தலையா..எங்கண்ணு முன்னாலே நிக்காதே...ஓடிப்போய்டு...

(செந்தில் நைஸாக நழுவுகிறார்)

==============================================================
(நகைச்சுவைக்காக எழுதியது)

முகம்

முகம்
============================================ருத்ரா

நான் உன் முகத்துக்காக‌
ஏங்குகிறேன்.
அன்று முகம் காட்டினாய்
அனால்
உன் முறுவல் மட்டுமே
மின்னல் இழையில் நெய்த‌
திரையாகி என்னை மறைத்தது.
மீண்டும்
அன்று உன் முகம் பார்த்தேன்.
என் பார்வை உன் முகத்தில்
படருமுன்னேயே
உன் கண்விழிகள் எனும்
கருந்துளை (ப்ளாக் ஹோல்)
விழுங்கிய
பிரபஞ்சம் ஆனேன்.
இன்று தான் உன் முகம் பார்த்தேன்.
என் அன்பின் ஆழங்காணா
ஒரு ஆழம் கண்டேன்.
ஆயிரம் கவிதைகள்
ஒன்று திரண்டு
அமெரிக்காவின் ஒக்லஹாமாவில்
ஏற்படும்
"சுழல் புயல்" (டோர்னடோ) போல்
உன்னை
என்னை
இந்த சூழலின்
பின்னணியில் உள்ள‌
அந்த ராட்சசவீடு
மரங்களின் காடு
எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டுவிட்டது.
நானும் தான் பிய்ந்து கிடக்கிறேன்.
நீ எங்கோ தொலைதூரத்திலிருந்து
ஓடிவருகிறாய்.
அப்படி யென்றால்
இப்படி பிய்ந்து கிடப்பது
நம் உள்ளங்களா?
அதோ தூரத்தில்
கரும்புள்ளியாய் ஓடி  வருகிறாய்.
வேண்டாம் ....போதும்.
உன் முகத்தை பார்க்க
எப்படி ஆயத்தப்படுத்திக்கொள்வது?
சரி!
முகத்தை முழுதும் பார்க்க வேண்டாம்.
அந்த அழகிய நெற்றியில்
புரளும்  உன் கூந்தல் கீற்றுகளை
பார்த்துவிட்டு
கண்களை மூடிக்கொள்கிறேன்.
அருகில் வந்து விட்டாய்.
நான் இமைகளின் இடுக்கில்
அந்த கூந்தல் கற்றையை
உற்று நோக்குகிறேன் ...
ஐயோ ..ஐயோ
அத்தனையும் கொடிய நாகங்கள் ..
கூரிய  வளைந்த பற்களோடு..
பிளந்த நாக்குகளோடு ....
அந்த கிரேக்க அழகிய ராட்சசி
மெடுஸாவா நீ!!..
மயங்கி விறைத்தேன் !
....................................
..................................

"டேய்..அப்படி என்னடா பாட்டு கேட்டு
இப்படி அசந்து துவங்கிக்கிடக்கிறாய்..
எழுந்திரு..
கல்லூரிக்கு  நேரமாச்சு!"

அம்மா எழுப்பினாள் ..
ஆமாம் அது என்ன பாட்டு...
பட்டன் தட்டினேன்
"அழகான ராட்ஸசியே ..."

==================================================








ஞாயிறு, 25 ஜூன், 2017

அம்மாவும் அம்மாவும்

அம்மாவும் அம்மாவும்
====================================ருத்ரா


விலையில்லா
ஆடு தந்தாய்.
விலையில்லா
மிக்ஸி தந்தாய்.
விலையில்லா
ஒரு அம்மாவை
உன்னால் தரமுடியுமா
அம்மா?
நீ ஹெலிகாப்டரில் சென்றால்
உனக்கும் மேலே
இருக்கும் அந்த சந்திரன் கூட‌
பூமியில் கீழே விழுந்து
உன் நிழல்மீது
நெடுஞ்சாண் கிடையாய்
சாய்ந்தால் தான்
சீட்டு தருவாய்.
சர்வாதிகாரம் என்ற அம்மா
ஜனநாயகம் என்ற அம்மாவை
முள்முடி சூட்டி
சிலுவையில் தான்
அறைந்து பார்த்தாள்.
தட்டில் நீ
இட்டிலி எறியலாம்.
அவை மக்கள் இதயங்கள்.
அவர்கள் இதயங்களை
அவர்களுக்கே தின்னக்கொடுக்கும்
உன் சாணக்கியம் கூட‌
மன்னிக்கப்படுகிறது
இந்த ஜனநாயக அம்மாவால்.
அம்மா என்று
மாயமாய் ஒரு
கோரைப்பல் காட்டும்
கோலங்கள் எல்லாம்
நிறுத்தப்பட்டால்
காயம் பட்டு
ரத்தம் வடியும்
இந்த அம்மா கூட‌
அந்த அம்மாவுக்கு
கருணை காட்டலாம்.

உச்சநீதி மன்றத்தின்
சிறைக்கம்பிகளைத் தொடுவதை விட‌
அந்த மரண தேவனின்
மாயச்சிறைக்கம்பிகளை
"ஸ்பரிசிப்பதே" மேல் என்று
அமரத்துவம்
அடைந்து விட்டாய் அம்மா!
அந்த மெரீனா காற்றும்
உன்னைக் கழுவித் துடைத்து விட்டது.
இவர்களோ
கை நிறைய ரோஜா இதழ்களைக்கொண்டு
உன்னை மூடி வைத்துவிட்டு
ஜனநாயகச் சுவடே இல்லாத‌
ஒரு கூவாத்தூர் நிழலில்
கும்மி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மா அம்மா அம்மா என்று
உன்னைச்சொல்லித்தான்
ஒரு நிழல்கூத்து
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டுவங்கிகளுக்குள்
டிராக்குலாக்கள் பயமுறுத்தும்
அந்த தேர்தல் விளையாட்டையே
இவர்களும் விளையாடுகிறார்கள்.
புனிதமாகி விட்ட அம்மாவே
புழுதி பறக்கும் லஞ்சம் தோய்ந்த‌
அந்த பாதையை
சிதைத்து அழிக்கும் ஒரு
புதிய அம்மாவாய்
புறப்பட்டு வா அம்மா!
"அம்மனோ சாமியோ"..என்று
ஒருபடத்தில்
தலைவிரி கோலமாய் வந்து
பம்பை அடித்தாயே
அதே போல்
ஆவியாகவாவது
வா அம்மா வா!

=================================================