புதன், 8 மார்ச், 2023

நனவை தின்ற கனவு.

 

நனவை தின்ற கனவு.

_____________________________________________

ருத்ரா




வாழ்வது போல்

அல்லது

வாழ்ந்தது போல்

ஒன்றை வாழ்ந்து விட்டோம்.

மீதி?

முழுவதுமே மீதி.

தொடங்கவே இல்லை.

மூளைச்செதில்களில் மட்டும்

காலப்பரிமாணத்தின்

வேகம் கூட்டி...

வேகம் என்றால்

சாதாரண வேகம் இல்லை

சூப்பர் லுமினஸ்...

ஒளியை விட கோடி மடங்கு கூட‌

இருக்கலாம்.

இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய‌

இன்னொரு அடுக்கில்

நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய்.

இன்னும் சில பத்து ஆண்டுகளில்

புதிதாக பிரபஞ்சப்பூக்களை

உன் கோட் பித்தான் துளைகளில் கூட‌

பதியம் போட்டுக்கொள்வாய்.

உளுத்துப்போன புராணங்களில்

வெர்ச்சுவல் காஸ்மாலஜி மாடல்கள்

குமிழி இட்டுக்கொண்டே இருக்கலாம்.

மனிதம் மீறிய‌

பில்லியன் பில்லியன் சிந்தனை சிப்பங்களும்

அறிவியல் மூளை மடிப்புகளும்

உன் எண்ண அசைவுகளிலேயே

இயக்கம் பெறுவதாக இருக்கலாம்..

என்ன இது?

சூரியனின் ஒரு பகுதி பிய்ந்து

விட்டதாமே.

ஜேம்ஸ்வெப் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

உன் சன்னல்களில் அது

நுழைகி....றது...

சைஃபை மூவியால் இந்த‌

ஹேலுசினேஷன்...

அவன் ரத்தவெள்ளத்தில்.

டாக்டர் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.

செரெபெரல் ஹேமரேஜ்.


________________________________________________________


செவ்வாய், 7 மார்ச், 2023

உலக மகளிர் தினம்



உலக மகளிர் தினம்

-----------------------------------------------------------------------------




பெண்ணே!

உலக மகளிர் தினம் என்று

மலர்க்கிரீடம் சூட்டினோம்.

அந்த மலர்கள் சிரித்தன‌

அவள் வண்ணச்சீறடிகளே

உலகின் புகழ்பெற்ற பூங்காங்கள்.

அவள் காலடிகளையா தலையில் சூடுவது?

அதில் ரோஜா எனும் 

ஒரு மலர் முள்ளை வைத்து

குத்திக்காட்டியது.

போதும்.

கவிதைகள் எனும் உங்கள் 

கள்ளின் குடங்களைக்கொட்டி கவிழ்த்தது?

இந்த சமுதாயம் சமூக அநீதிகளால்

புண்பட்டுக் கிடப்பது 

அறிவீர்களா?

புண்படுத்தியவர்களே

இப்படி 

புளகாங்கிதம் கொண்டு

அம்மன் அபிஷேகங்கள் நடத்தியது போதும்.

வளையல்கள் ஒலிப்பதற்கு மட்டும் அல்ல‌

இந்தக்கைகள்.

அறிவு ஆள்வதும் 

அகிலம் ஆள்வதும்

மகளிர் வழி பரிணாமங்களே

அறத்தொடு அரசியல் மலர்த்தும்!

வெல்லும் வெல்லும்.

பெண்ணே வாழ்க!

பெண்மையே வெல்க!

__________________________________________‍

ருத்ரா

பனி பெய்த நீரில்




டெல்லி தெருக்கள் 

----------------------------------------------


விளக்குக் கம்பங்கள் ஒளியில்

பல் தேய்த்து வாய் கொப்புளிக்கின்றன‌

பனி பெய்த நீரில்.

_______________________________________

ருத்ரா

திங்கள், 6 மார்ச், 2023

அகழ் நானூறு 26

 அகழ் நானூறு 26

---------------------------------------------------------

சொற்கீரன்.



குணகடல் முகந்த கொள்ளை வானம்  

கமஞ்சூல் குடித்த எழுகடல் வெள்ளம் 

கயிற்றின் இறங்கி அடர்மழை என்ன 

கல்லும் மண்ணும் வேழ மண்டை 

முதிர் மன்றும் அறைந்து ஆற்றிய 

வழிப்படூஉம் சினையுறு அருங்கேழ் 

அம்மர நிரையும் சிதர் பட இறங்கும்.

பானாள் கங்குல் குறி எதிர்ந்து வரூஉம் 

நின் பணைத்தோள் மல்லன் மின் பரி 

ஆங்கு காலம் தாழ்த்து உரறு அதிர் குரல் 

இடித்தன்ன விரையும் விரையும் என்னே.

நின்  எயிற்று இணர் இன்பூச் சொரியும் 

நகை தோய இருட்சுரம் மீள்வன்.

பெருமலை மீமிசை முற்றின முடிச்சின் 

முகிழ் முக வெள்நள் திங்கள் முகைய 

நின் வாள் இலங்கு அருவி இன்பிழி இழியல் 

போதும் அஃதே செம்பொருள் கொள்வன்  என 

கோடாமை கோடமை கொடுங்கை பற்றி 

மீள் தரும் காலென நின் எதிர்ப்படும் மன்னே.


-----------------------------------------------------------------------------------------




அயோத்தி

 


அயோத்தி

_______________________________________

ருத்ரா




மனிதம் இல்லாத மதம்.

மதம் இல்லாத மனிதம்.

இந்த இருதுருவங்களுக்கு

இடையே

குழந்தையும் தெய்வமும் 

சின்ன செப்பு விளையாட்டு 

விளையாடிக்கொண்டிருக்கிறது.

பெயரில் என்ன இருக்கிறது.

அப்துல் மாலிக் என்பதில்

இந்தியாவின் இதய நரம்புகள்

ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு குழந்தையாக‌

பின்னிக்கொண்டு

அன்பின் பிரளயத்தை பதியமிடுகிறது.

குழந்தையின் பசியை ஒரு தாய்

வெறும் நசுங்கிய தட்டும் 

சில சோற்றுத்திரள்களுமாகவா

பார்க்கிறாள்?

அந்தக்குழந்தையும் அந்த‌

கவளத்தை 

ஒரு காமிராகோணம் கொண்டா

பதித்தீயின் சுவாலையை

லேசர் படுத்தி சீன் காட்டுகிறது?

இல்லை.இல்லை.

உணர்வுகள் உரிக்கும் உள்ளத்தின்

உள் பூஞ்சையான மெல்லிய நுங்கின்

கண் கசிந்த நீராய் வழிவதை

காட்டுகிறது.

வால்மீகியோ? துளசிதாஸரோ?

நிச்சயம் அந்த அயோத்தியை

ஒரு புல்டோசர் பட்டினமாகவா

வர்ணித்திருப்பார்?

மக்களை வருடும் அன்பின் பீலிகள் தானே

அயொத்தியின் நகரமெங்கும்

தூவிக்கிடப்பதாக 

ஓலைச்சுவடிகளில் அந்த‌

ஒலிச்சுவடுகளை பதித்திருப்பார்.

இருப்பினும் கடப்பாரைகளின்

தூசிப்படலம்

தமக்குள் பேசிக்கொன்டன.

வேடர்கள் வில் அம்பு தூக்கவில்லை.

சொல்லம்பு கொண்டு 

நம் மன சாட்சிகளை துளைத்திருக்கிறார்கள்.

இந்த அரசியல் வேடர்கள் ஏன்

கசாப்புக்கடைகளுக்கு 

பளிங்குத்தூன்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்?

அயோத்தி படம் 

இப்படி எதுவுமே நம் மனதைத்தைக்கும்

துரும்புகளை வீசவே இல்லை.

இருப்பினும் படம் முழுவதுமே

ஒரு "பீஷ்மர் அம்புப்படுக்கை"தான்.

குத்திகுத்தி இரத்தவிளாறுகளில்

கங்கையும் சில்லறை சில்லறையாய்

அழுது தீர்க்கிறாள்.

அந்த இஸ்லாமியப்பாத்திரம் முழுதும்

மனித அன்பியலின் 

இந்து மகா சமுத்திரம்

வழிய வழிய அலை விரிக்கிறது.

இயக்குநர் மந்திரமூர்த்தி

இந்திய மண்ணின் துடிப்புகளுக்கு

ஒரு துல்லியமான "ஸ்டெதெஸ்கோப்பை"

கையில் வைத்திருக்கிறார்.

அதன் பெயர் அயோத்தி.


_________________________________________________________



"பெரியாறு"

 

"பெரியாறு"

---------------------------------------------------------------------------


கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஈசல் குவியல்களின் 

வெளிச்சம் எங்கே இருக்கிறது?

சாங்கிய தத்துவம் சொன்னது

வரிசையின் 

ஆற்றுப்படை ஒழுகுகிறது என்று.

நியாய வைசேடிகம் கூட‌

ஒரு இயக்கத்தின் 

காரண காரியத்தை முடிச்சு போட்டது.

பூர்வமீமாசமும் உத்தர மீமாம்சமும் 

வாழ்க்கையின் அடி ஆழத்துக்குப்போய் 

ஏதோ உயர்ந்த "மாம்சத்தை"

காட்டுவதாய் பாவ்லா காட்டிவிட்டு 

பக்திக்கும் யாகத்துக்கும் 

சுலோகங்களை குவித்து விட்டு 

உட்கார்ந்து கொண்டு விட்டன.

இந்துத்தத்துவம்

மாயை எனும் மாஞ்சா தடவிய 

பட்டத்தை தான் 

பறக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

இன்னும் அந்த 

ஸ்க்ரோடிங்கர் பூனையைத்தான்

பிரம்மம் என்று பூச்சாண்டி காட்டுகிறது.

கேட்டால்

அவர்களின் அறிவு ஜீவிகள்

குவாண்டத்தையும் 

காவி பூசி சூலம் ஏந்த தயார் தான்.

அதே கோணத்தில்

பிரம்மத்தில் ஈ வே ரா தெரிய வேண்டுமே.

ஏன் தெரியவில்லை?

அவர் காட்டிய பிம்பமோ 

பிரம்மன் ரத்த சதையில் 

சமுதாயச் சம நீதி தொலைந்து போன 

படலம் தான்.

சாதி எனும் பீதிகளை ஏன்

மஞ்சள் குங்குமம் பூசி

மல்லாந்து கிடக்கிறீர்கள் என்று தானே 

பகுத்தறிவுக்  கதிர் வீசுகிறார்.

அப்போது அந்த நூல்வேலிக்காரர்கள்

அநாச்சாரம் என்று

சாதீய அக்கிரமமே பிரம்மம் 

என்று மந்திரம் ஓதுகின்றார்களே .

அந்த‌

சஹனாவவது சஹனோபுனஸ்து

சுகினோ பவந்து

எல்லாம் 

ஆத்மீகத்தையே

கசாப்பு செய்ய கிளம்பி விடுகின்றன.

ஆனால்

அறியாமையின் பிழம்புக்குள்

மூழ்கி முத்து எனும் 

அறிவு எடுப்பதே 

வெளிச்சத்தின் வேலை

என்கிறது நாத்திகம்.

இருட்டுப்புராணங்களில்

தடவி தடவி

எத்தனை நூற்றாண்டுகளைத்தான்

மூளியாக உருட்டித்தள்ளுவது?

மனித அன்பும் மலர்ச்சியும்

சம மனப்பான்மையில் 

கல்பொருது இரங்கும்

பஃறுளியாறாக அந்த 

"பெரியாறு"

முழங்கிப்பெருகுவது

இன்னுமா கேட்கவில்லை

நண்பர்களே?


_____________________________________________________________________

வியாழன், 2 மார்ச், 2023

அச்சமில்லை அச்சமில்லை

 


இன்று ஒருநாள்
சூரியன்
ஸிப்பை இழுத்து திறந்து விட்டது.
ஈ என்று
ஒரே இளிப்பு.
சுவர்க்கோழி கூட நட்பு தேடி
கிரிச் கிரிச் என்று
நச்சரிக்க ஆரம்பித்து விட்டது.
இரவு பகல் வேறுபாடு
அதற்குத் தேவையில்லை.
இங்கு
எதுவும்
எதற்காகவும்
தனித்துக்கிடப்பதில்லை.
எருக்கஞ்செடி கூட‌
காற்று அசைவில்
பக்கத்துச்செடியுடன்
தொட்டுப்பார்த்துக்கொள்கிறது.
மனிதர்களே! மனிதர்களே!
முகங்களில் சிரிப்பின்
பூங்காக்களை
பதியம் போட்டுக்கொண்டிருங்கள்.
இலைகளின் இடைவெளிகளில் எல்லாம்
நேற்று பின்னிய
மௌனப்பேச்சுகளை
இன்று தொடருங்கள்.
மறைத்து வைத்திருக்கும்
வில் அம்புகளையெல்லாம்
முறித்துப்போடுங்கள்.
கடவுள்கள் கையில்
அந்த அசிங்கங்களை ஏந்திக்கொண்டு
நாறிக்கொண்டிருக்கட்டும்.
அவற்றின் கைக்கூலிகள்
அவற்றிற்கு மஞ்சள் குங்குமம்
வைத்துக்கொண்டிருக்கட்டும்.
மனிதர்களே!மனிதர்களே!
அந்த மஞ்சக்குருவிகள் இரைச்சல்களை
மொழி பெயர்த்துக்கேளுங்கள்.
அதில் தான்
உங்கள் இருப்பியல் எனும்
எக்சிஸ்டென்ஷியலிசம்
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்த சிதைகளின் புகை மூட்டங்கள்
சில்லரை சில்லரையாய்
நாட்களை
பண்டமாற்றம் செய்துகொண்டிருக்கட்டும்.
யாருக்கும் இங்கு
கவலை இல்லை.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே!

_________________________________________________________‍
ருத்ரா
குறைவாகக் காட்டு
2 பார்வையாளர்கள்