சனி, 19 ஜூன், 2021

முட்களின் தவம்

 

                                                                       

முட்களின் தவம் 

--------------------------------------------ருத்ரா 



முப்பத்தாறு வருடங்களுக்கு முன் 

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் 

ஒரு மேடை போட்டு 

இந்த முள்ளு முனிவனை 

உட்கார வைத்தேன்.

அதன் பின் என்ன ஏது என்று 

எதுவும் கேட்கவில்லை.

ஒரு சொட்டு தண்ணீர் கூட 

நான் ஊற்ற வில்லை.

அந்த முனிவனின் 

ஒவ்வொரு தாடி மயிரும் 

நீல வானத்தை நோக்கியே 

விறைத்து நிற்கின்றது.

"விசும்பின் துளி "வீழ்ந்த போது 

மட்டுமே 

அவனுக்குள் ஒரு வசந்தம் 

ஊற்றெடுத்திருக்கலாம்.

இத்தனை வருடங்களாக 

அவன் 

உதிரவில்லை...காயவில்லை.

ஒவ்வொரு முகமாக 

இங்கொன்றும் அங்கொன்றும் 

காட்டிக்கொண்டே இருக்கிறான் 

பசுமையாக!

அத்தனையும் 

முட்கள் முட்கள் முட்கள் தான்.

ரோஜாவை முட்களோடு தானே 

பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அவன் 

கனவு அல்லது தவம் 

அவனுக்கு ஒரு 

சுகமான "இன்ஃ பினிட்டி"

அந்த மெல்லிய முட்களே 

அவனுக்கு  நுண்ணிய 

சிலிர்ப்பாகும் 

பளிங்கு ரோஜாக்கள்.

சில பனித்துளிகளுடன் 

அவன் முணுமுணுப்புகள் 

எனக்கு கேட்டிருக்கின்றன.

"செடிகளே! பூக்களே !

மனிதனுக்கு நீங்கள் 

அழகு காட்டி 

அலங்காரம்

 செய்ததெல்லாம் போதும்.

பயம் காட்டுங்கள் .

அச்சமூ ட்டுங்கள்..

இயற்கையின் அடி இதயத்தை 

எட்டிப்பார்க்காமலேயே 

எத்தனை ஆட்டம் போடுகிறான்?

"உள்ளங்கை செல்பேசி "களுக்குள் கூட 

எத்தனை வக்கிரங்கள்?

எத்தனை உக்கிரங்கள்?...."

இன்னும் 

அந்த முள் முனிவன் 

முகம் சிவந்து 

கத்திக்கொண்டே இருந்தான்.

இப்போது 

அந்த முள்ளுக்கொத்துகள் 

அரக்கன்களாய் ஆகின!...

................

........................

டிவியில் அந்த 

கொரோனா குவித்த பிணங்களின் 

புள்ளிவிவரங்கள் 

ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன

 .

---------------------------------------------------------------------------










செவ்வாய், 15 ஜூன், 2021

ஒரு கை குறைகிறது

 ஒரு கை குறைகிறது

_______________________________ருத்ரா



அவர் 

சிந்தனையில் 

வெறுமை தோன்றும் போது எல்லாம்

அதை அடைத்துவிட‌

கடவுளைக்கூப்பிடுவார்

"ரம்மியில் ஒரு கை குறைகிறது 

என்று."

அவனும் வருவான்."

"துருப்புச்சீட்டே இல்லாமல்

ஆடும் ஆட்டம் தானே

என்னிடம் இருக்கிறது.

என்னைக்கூப்பிடுகிறாயே.....

ஆமாம்

கடவுளாவது வெங்காயமாவது

என்ற துணிச்சலான 

விளையாட்டைத் தானே நானும்

ஆடிக்கொண்டிருக்கிறேன்."

கடவுள் சிரித்தார்.

ஒரு கை குறைகிறதே 

வருகிறாயா என்று கூப்பிட்ட‌

பெரியாரும் சிரித்தார்.

___________________________________ருத்ரா

சனி, 12 ஜூன், 2021

ஒரு ஃபோட்டோ நெகடிவ்

 ஒரு ஃபோட்டோ நெகடிவ்

===============================ருத்ரா இ பரமசிவன்


உன் வாழ்க்கையின்

ஒரு ஃபோட்டோ நெகடிவ்

உன் மன ஆழத்தில்.


அதை நீ எல்லோருக்கும்

ப்ரின்ட் போட்டு காட்டமுடியாது.

உன் முகம் ரோஜாதான்

உன் வானம் பளிங்கு நீலம் தான்

ஆனாலும் உன்

சட்டைகளையெல்லாம்

உரித்துப்போட்டு 

காட்சி கொடுக்க முடியாது.


சித்தர்கள் சமணத்துறவிகள்

அழகாய் 

நம் மீது பின்னல் வேலை போடும்

அந்த ஐம்பொறிகளைக்கூட‌

களைந்து வீசி விட்டவர்கள்.

அவர்கள் எதையோ தேடுகிறார்கள்!

அதற்காக‌

அம்மண சாமியார்களாய்

அலைந்து திரிந்து

கல்லடி பட்டார்கள்.

நாம் நாகரிகத்தின்

நுனிக்கொம்பர் ஏறியபின்  கண்டோம்

நம் அசிங்கமான நிர்வாணத்தை.

ஆணும் ஆணும் அல்லது

பெண்ணும் பெண்ணும்

சேர்ந்தால்  என்ன என்று?

நம் புராணங்களின் 

இடுக்கு சந்துகளில்

இது இருந்தாலும்

இது மீண்டும் நம்மை மரமேறிகளாக

மனிதனை மனிதன் பச்சையாக

பிய்த்துத் தின்றுவிடும் 

நிகழ்வுகளை

அரங்கேற்றிவிடுமோ 

என்ற அச்சமே

நம்மைத்தடுக்கும் சுவர் ஆக இருக்கிறது.

பொருள்களின் அதிகப்படியான இன்பம்

அலுப்பு தட்டி விடுகிறது.

"லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிடி" என்று

ஆல்ஃப்ரட் மார்ஷல் கூறுகிறார்.

இதை உள்ளுணர்ந்து பொருளாதார முதலாளிகள்

விளம்பரத்தின் மூலம்

அதே பொருளை பல்வேறு முகமூடிகளில்

நுழைத்து

நுகர்வோர்களுக்குள் ஒரு

"ஆர்டிஃபிசியல் இமேஜினரி 

செண்டிமென்டல் அட்டாச்மெண்டை"

அதாவது 

"கற்பனையான செயற்கை ஈர்ப்பின் ஒட்டுதலை"

தங்கள் பொருள்கள் மீது பாய்ச்சுகிறார்கள்.

டிவிகளில்

இதற்குத்தான் அந்த "வண்ண ஒளி"க்கசாப்புகள்

எனும் "லேசர்"வருடல்களை  

விளம்பரச்சித்திரங்களில் 

ஸ்பரிசம் காட்டுகிறார்கள்.

ஆனால் இரண்டு (ஆண் பெண்)

மனங்கள் இடையே

அத்தகைய செயற்கை பூச்சுகள் இயலாது.

அதற்காக 

பாரம்பரியம் அது இது என்ற‌

போலி பாவ்லாக்களை

மிக மிக உச்சிக்குப்போன 

நாகரிகம் ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் தான் 

ஆண் ஆண் அல்லது பெண் பெண்

சேர்ந்து கொண்டு வாழும் 

ஒரு படிமத்துள் படிந்து கொள்ள நினைக்கிறார்கள்.

ஈர்ப்பு எனும் பெருவிசைக்கு எதிராய்

அதே "அலுப்பு" என்னும் விலக்கு விசையின்

ஒரு பூகம்பம் வரும் வரைக்கும்

அதுவே "அல்ட்ரா" நினைப்புகள் ஆகும்.

புணர்வுகளில்

முதலில் நிகழ்வது

மனங்களின் புணர்வுகள்.

அது இருவர் இடைப்பட்டது மட்டும் அன்று.

உலக மனிதங்களின்

எல்லா இதயங்களும்

ஒரே தகட்டில் லேமினேட் செய்யப்படுவது.

தியரி ஆஃப் எவெரித்திங்

அல்லது

சூப்பர் சூப்பர் சிம்மெட்ரி என்று

இந்த ஃபிசிக்ஸ் ஒரு

க்ராண்ட் யுனிஃபிகேஷனின் "பேரோவியத்தை"

தீட்ட முனைகிறது.

அந்த சாந்தி முகூர்த்தை தேடித்தான்

இந்த அம்மண சாமியார்களும் ஓடுகிறார்கள்.

தங்கள் ஆழ்நிலை சிந்தனையின் அடுக்குகளை

பாடல்களின்

மேளங்கள் தட்டிக்கொண்டு

நாயனங்கள் இசைத்துக்கொண்டு

செல்கிறார்கள்.

அந்த திசைகள் கழன்ற வெளியில்

அதற்கு அடையாளமாய்

ஏதோ ஒன்றை

"நட்ட கல்லாக்கி நாலு புஷ்பம் சாத்தி

சுற்றி வந்து மொணத்து மொணத்து"

மந்திரங்கள்

தந்திரங்கள்

எந்திரங்கள்

என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

பரிணாம விசை ஒன்று தான்

பஞ்ச பூதங்களையெல்லாம்

பூச்சாண்டி  காட்டி

மிரட்டிக்கொண்டிருப்பது.

மனித வளர்ச்சி

அறிவுகளின் "புணர்வுகளில்"மட்டுமே

நிலைத்து நிற்பது.

உணர்ச்சித்தீக்களின் புணர்வுகளில்

மிஞ்சும் சாம்பல்களிலிருந்து

ஃபீனிக்ஸ்களும் சிறகு முளைத்து

வெளி வரத்தான் செய்யும்.

உலக மானிடம்

எனும் மௌன உந்து விசையே

பரிணாமத்தின் மைல் கற்களை நட்டு

முன் முன் செல்கிறது.


"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்."


======================================================

21.02.2017

ஏக்கம்.

 ஏக்கம்.

.__________________________ருத்ரா



என் மேசையடி என் உலகம்.

அந்தக்காலத்து உருண்டைப்பேனாவும்

கத்தை கத்தையாய் 

காகிதமும் என் உடமைகள்.

என் உள்ளம் 

என் சிந்தனை

என் கற்பனை

என் அறிவுப்படிமங்கள்

எல்லாம்

உருண்டு திரண்டு

உடல் போல மொத்தையாய்

உருக்கொள்ளுமானால்

அதையும் என்னுடன்

ஆலிங்கனம் செய்து கொள்ளுவதாய்

உருவகித்துக்கோள்ளுவேன்.

அப்புறம்

அந்த மாயப்புணர்ச்சியை

எழுத்து எழுத்தாக‌

இலக்கண இலக்கியச் சிதிலங்களோடு

செதில் செதிலாய் செதுக்குவேன்.

ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்களையும்

தின்று தீர்த்துவிடும் அந்தப்பேனா.

சீற்றம் சினம் பாய்ச்சல்

எல்லாம் அக்கினியின் காட்டாறுகளாய்

என் அடி மூலையின் 

ஃப்ராய்டிசப்பிறாண்டல்களிலிருந்து

வெளிக்கிளம்பும்.

சமுதாயம் என்று சொல்லப்படுகின்ற‌

அந்த கலைடோஸ்கோப்பு

சித்திரங்களின்

நிகழ்வுகளில்

எல்லாம் அந்த உடைந்த‌

வண்ண வண்ண வளையல்களின்

பரல்களாய்

உருண்டு உருண்டு

என்னை வெறியேற்ற‌

எதை எதையோ எழுதி எழுதிக்

குவிக்கச்செய்யும்.

காகிதங்கள் கட்டு கட்டாய் 

உண்டு முடிக்கப்பட்டு

சொல்லாக்கங்களும்

வரி வரியாய் அவற்றின் மீது

பற்பசைக்குப்பியிலிருந்து

பிதுக்கப்படுவது போல்

பிழிய பிழிய வெளித்தள்ளப்படும்.

ஊழியின் உன்மத்த நெருப்பின் பிழம்பு

அங்கு

அழகிய அழகிய மயிற்பீலிகளாய்

அந்த காகிதங்கள் எல்லாம் 

செருகி வைக்கப்படும்.

அசிங்கங்களும்

அவலங்களும்

புனிதங்களும்

வக்கிரங்களும் 

உக்கிரங்களும்

ஆபாசங்களும்

இன்னும்..என்ன என்ன என்று

தேடித்துருவி

சமுதாய அல்லது தனிமனித‌

கோண முடுக்குகள் எல்லாம்

அலங்கார ஜிகினாக்களின்

தோரணங்களுடன்

அல்லது உணர்ச்சித்தீயின்

லாவா வடிதல்களுடன்

எழுதப்படும்.

மூவாயிரம் நாலாயிரம் பக்கங்கள்

அங்கு

காகிதக்கூழ் ஆற்றில் 

மூழ்கிக்கிடக்கும்.

நாடு நகரங்கள் 

அதன் மக்கள் எனும் 

புழுக்கூட்டு மண்டலங்கள் 

அப்புறம் உள்ளே

புடைத்துக்கிடக்கும்

வர்ண வர்ண பிரளய‌ங்களின்

இறக்கைகளின் கூடுகள்

சம்பவ அடைசல்களின்

புற்றிசல்கள் எல்லாம்

அங்கே மொய்த்துக்கிடக்கும்.

...........

.................

ஒரு நாள் 

நான் அந்த நாற்காலியில்

சரிந்து கிடந்தேன்.

தலை

தொங்கிகிடந்தது.

நான் அங்கே இருந்து

அள்ளியெறியப்பட்டேன்.

ஈக்கள் மொய்த்துக்கிடந்த‌

அந்த காகிதங்களையெல்லாம்

சுருட்டிக்கொண்டு போனார்கள்

யாரோ அச்சகத்துக்காரர்கள்.

அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

இந்த வருட விருதுக்கு

இது வந்து விடும்.

அந்தச்சொற்கள்

அந்த அறையின் காரை பெயர்ந்த‌

சுவர்க்கீறல்களில் கூட 

எதிரொலித்தது.

இன்னும் ஈக்கள் அந்த‌

மேசையை 

மொய்த்துக்கொண்டு தான் இருந்தன.


__________________________________________

 









வியாழன், 10 ஜூன், 2021

ஓர்மைகள் அற்று...

 ஓர்மைகள் அற்று...


_________________________________________ருத்ரா






நான் தினமும் உன்னை வணங்குகிறேன்.


உன்னைக்கேட்டேனா? என்கிறாய்.


உனக்கு உண்வாய் நைவேதியம் படைக்கிறேனே


கல் வயிற்றுக்கு ஏது பசி என்கிறாய்.


உன் புகழைப்போற்றித்தானே ஆயிரம் நாமம் சொல்லுகிறேன்.


ஆயிரம் விதமாய் உன் நாக்கு சுழல்வதில் என்ன பயன்?


அப்படியென்றால் போ! எனக்கு கடவுள் வேண்டாம்.


அப்படிச்சொல்லியே 


இந்தக் கல்லை நீ பிடித்துக்கொண்டு தானே நிற்கிறாய்.


எதுவுமே இல்லாததை யாருமாகவும் இல்லாததை


நீ ஏன் பிடித்துக்கொண்டு இருக்கிறாய் ?


அப்படியென்றால்


என்னை ஆட்கொள்ளுவது நீ இல்லையா?


ஹா..ஹா..ஹ்ஹா


ஓ! அந்த ஒன்றியம் பற்றி சொல்கிறாயா?


கடவுள் கூட அப்படிச்சிரிப்பாரா என்ன?


மனிதன் கடவுள் ஆவது.


கடவுள் மனிதன் ஆவது.


இதைச்சொல்கிறாயா?


வேடம் போடாதே மனிதா?


அந்த பிணம் எரிக்கிறவனாக அல்லது


அந்த மலக்குவியல் அள்ளுகின்றவனாக‌


எத்தனை தடவைகள் உன் முன் வந்திருக்கிறேன்.


கடவுள் மனிதன் ஆவது தானே அது.


அப்போது என்னை உயிரோடு எரித்து விடுகிறாய்.


"மங்கள்யான்" என்று


நுட்பமான ஏவுகணை எந்திரங்கள் எல்லாம் கண்டுபிடித்து


தேடிப்பிடித்து சமஸ்கிருதத்தில்


பெயர் சூட்டி 


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கிறாயே


மலம் அள்ள பிணம் எரிக்க‌


ஏன் இன்னும் நீ எந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை?


மானுடத்தை புழுவினும் கீழாக வைத்து


நசுக்கி நசுக்கி இன்பம் காணுவதில் தான்


உங்கள் நாபிக்கமலத்துப் பிரமமன்


உட்கார்ந்திருக்கிறாரா?


சாதி அடுக்குகளை வரட்டி போல்


அடுக்கி வைத்துக்கொண்டு


என்னை அந்த சிதையில் 


வைப்பதற்குth  தானே துடிக்கிறாய்.


மணிஅடித்து மந்திரக்கூச்சல் கிளப்புவதால்


நீ தான் "கடவுள் புத்திரன்"என்று


என்னிடமே தினமும் கதை அளக்கிறாயே!


இது என்ன சூழ்ச்சி?


பிரம்மாண்டமான நெருப்பாகிய என்னை


பூசனை செய்ய‌


என்னிடமிருந்தே என்னைக்கொஞ்சம் கிள்ளி எனக்கு


கொடுப்பதாய்


ஸ்லோகம் எல்லாம் சொல்கிறாயே..


ஆனால் அந்த தீபாராதனைக்குள்


என்னைப்பொசுக்கிய சாம்பல் தானே இருக்கிறது?


எத்தனை குடிசைகளில்


எத்தனை தாழ்ந்த சாதிகளில்


நான் கிடந்திருப்பேன்.


அந்த என்னை உயிரோடு கொளுத்திவிட்டு


இந்த சம்போ மகாதேவா கூச்சல் எல்லாம் என்ன?


அய்யோ!


கடவுளே...


இப்போது தான் என் உடம்பெல்லாம்


பற்றி எரிகிறதைப்போலவே இருக்கிறது.


போதும்.


இந்த "பொ(ய்)ம்மை விளையாட்டு..


எனக்கு கடவுளும் வேண்டாம்.ஒண்ணும் வேண்டாம்.


மனிதன் மனிதனாக வாழவேண்டும்...


கடவுளின் மரணத்தை


கொண்டாடுவதா கடவுள் பக்தி?


பக்தன் பூமியில் விழுகின்றான் 


ஓர்மைகள் அற்று.


________________________________________

செவ்வாய், 8 ஜூன், 2021

என் குரல் அல்ல..

 என் குரல் அல்ல..

____________________________

அன்பர்களே

அனைவரும் கேளுங்கள்.

என் குரல் அல்ல இது.

ஆகாய வானொலியில்

ஆண்டவன் பேசுவது:....

என்னை இன்னும் 

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைகளில்

ஏன் அவநம்பிக்கைகளிலும் கூட‌

உங்கள் நலப்பாடுகளில்

ஏன் இந்த கொள்ளை நோய்களிலும் கூட‌

உங்கள் கோவில்களில்

ஏன் இந்த நடைபாதை சாக்கடையோரங்களிலும் கூட‌

உங்கள் பனைமர உயரத்து சிலைகளின் பாலாபிஷேகங்களில்

ஏன் ஒரு பிடி சோறும் இன்றி வற்றிப்போன அந்த எலும்புக்கூட்டு உருவங்களிலும் கூட‌

தேடிக்கொண்டே இருக்கிறீர்கள்

ஆம்.

தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.

அந்தப் புள்ளிக்கு வரும் வரை

அந்த முனையில் நீங்கள் பின்னால் திரும்பிவர இயலாத‌

அந்த நுனிக்கொம்பு வரை...

கடவுளைத் தேட 

அவசியம் இல்லாத அல்லது

தேட இயலாத‌

அந்தப்புள்ளி...

இன்னும் ஒரு

இறுதிப்புள்ளி அல்ல.

அவர் உங்களில் ஒரு பிம்பம் போல‌

உங்களுக்குள் ஊடுருவும் போது

உங்களுக்குள்

ஒரு உறுத்தல் அல்லது பயம் அல்லது அருவறுப்பு

அல்லது ஒரு பெருங்களிப்பின்

குமிழிகளை வெளியிடும்

அந்தப் புள்ளிவரை

நீங்கள் தேடிக்கொண்டே இருக்கலாம்.

அந்த பிம்பமா நான்?

நான் தான் அந்த பிம்பமா?

ஒரு கணம் 

என் மீதே நீங்கள் முகம் சுழிக்கலாம்.

என் மீதே நீங்கள் வெறுப்பு காட்டலாம்.

ஏன்

காறியும் உமிழலாம்.

ஐயய்யோ என் முகத்தின் மீதா இது வரை

உமிழ்ந்து கொண்டிருந்தேன் என்று

நீங்கள் அலறி அலறி புலம்பிக்கொண்டிருக்கலாம்.

அழுது கரையலாம்.

உருகலாம் 

உன்மத்தம் பிடித்துக்கிடக்கலாம்.

நீங்கள் எது செய்தாலும் அது சரியே!

அப்போது

என் மக்களே நீங்கள் அந்த‌

மோட்ச ராஜ்யத்தை அடைந்து விட்டீர்கள்.

உங்களுக்கு

மைல் கற்களும் தேவையில்லை.

பயணமும் தேவையில்லை.

உங்களை அறியாமல் ஒரு அறிவு

உங்களை இயக்குகிறது.

எதையோ ஒரு உட்கிடக்கையை

உங்களுக்கிடையே இன்ப ஆறு போல‌

ஊற்றெடுக்கும்

உங்களுக்குள் ஒருவருக்கொருவர்

பாய்ச்சிக்கொள்ளும்

அன்பின் மின்காந்த ஆறு

பெருகி ஓடுவதை உணர்கிறீர்கள்.

உலகம் உங்கள்

விரல்களில் சுற்றும் அதிசயம் கண்டு

கொண்டாடுகிறீர்கள்.

கொண்டாடுங்கள்.

அன்பு தொடரட்டும்.

மகிழ்ச்சிப்பிழம்பில் திளையுங்கள்.

இப்போதும் நீங்கள் தேடுங்கள்.

ஆம்!

பிம்பங்களை அல்ல.

உங்கள் உண்மை இருப்புகளை

தேடிக்கொண்டே இருங்கள்!

_______________________________________ருத்ரா

அந்த தீயை




கோடிக்கணக்கான ஆண்டாய்

சிக்கி முக்கிக்கல்லில் 

தெறித்த நாள் முதல்

இன்று வரை 

அந்த தீயை

அவன் 

புரிந்து கொள்ளவே இல்லை.


காதல்

________________________ருத்ரா