ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

வேலன்டைன் 2

அழல் நெய் கலிங்கம்.
=============================================

குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்
வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்
கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு
நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்
குறி இடம் விரைய மெல் இறை நெகிழ
அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌
கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்
ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை
அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌
நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.
"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான் 
ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.

========================================ருத்ரா 


அன்பு நண்பர்களே


சங்க நடைத் தமிழில் "வேலண்டைன்" விழா
கொண்டாடும் தலைவியும் தலைவனும்
இதோ இங்கே உலா வருகின்றனர்.
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
சொல்லாத காதல் நுண்சொற்களா ?
காதலில் தான் தோற்பது என்பது வெல்வதும்  ஆகும்.
வெல்வது என்பது தோற்பதுவும் ஆகும்.

--------------------------------------------------------------------ருத்ரா










வியாழன், 13 பிப்ரவரி, 2020

வேலன்டைன்

வேலன்டைன்
===================================ருத்ரா

பொன் வண்ண
அட்டையில் தான்
நம் இருதயத்தை
செதுக்கினேன்.
ஆனாலும்
ரத்தம் ரத்தம் ரத்தம்.
இந்த‌
பூமி முழுவதும் !

=============================================

புதன், 12 பிப்ரவரி, 2020

"டெல்லி"

"டெல்லி"
____________________________________________ருத்ரா

டெல்லி நகர்
முகமூடிகளால்
மூடப்பட்டுள்ளுது.
அத்தனை தூசி மயம்.
அந்த படலத்துக்குள்
அரவிந்த் கெஜர்வால்
அரசியலும்
ஒரு ஆரண்யகாண்டம் தான்.
ஆனாலும்
மத வன்மைத்தை எதிர்த்த‌
ஒரு ஊமை மூட்டமும்
அங்கே அந்த வெற்றியைக்
கொடுத்து இருக்கிறது.
இருப்பினும்
பி ஜே பி காரர்கள்
அங்கே
"ஒரு அலிபி"யை நிறுவியிருக்கிறார்களோ
என்ற ஐயம் இருக்கிறது.
இவிஎம் மோசடி
பேசப்பட்டு வரும் இந்த வேளையில்
பார்த்தீர்களா
எங்கள் நேர்மையை
என்று காட்டிக்கொள்ளுகிறார்களோ
என்றும் சிந்திக்க வைக்கிறது.
அவர்களுக்கு வேண்டியது
பாராளுமன்ற மிருகபலம்.
இந்த சுண்டைக்காய் பிரதேசங்களுக்குத்தான்
கவர்னர்கள் கொடுக்கும்
குடைச்சலே போதுமே.
இவர்கள் ராமாயணத்தில் நடக்கும்
"மாயமான் வேட்டையோ" இது?
என்ற நெருடல்களும் இருக்கின்றன.
இருப்பினும்
கொண்டாடப்படவேண்டிய
நம்பிக்கைகளின் வெற்றி தான் இது.
____________________________‍‍‍‍‍‍___________





"பெரியாரிசம்"

"பெரியாரிசம்"
====================================================ருத்ரா
(குறும்பாக்கள்)



கடவுளை மற...
=========================

பெரியார் மொழியில்
இரு வரியில் கடவுள்
மனிதனுக்கு பாடிய ஒரு
விஷ்ணு சஹஸ்ர நாமம்.


தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை
=====================================

மீண்டும் மொழி பெயருங்கள்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே"
முன் தோன்றியது தமிழ்
என்கிறார் பெரியார்.

பெண்ணியம்
=======================================

மானுட நேசம் எனும்
நட்பு தான்
பெண்ணிடம் முதலில் பூக்கும் பூ
என்று கண்டார் பெரியார்.

கோபம்
==================================

கண்மண் தெரியாமல்
கோபம் வந்த போதும்
இவர் திட்டும் கெட்ட வார்த்தை
இது தான்.
"வெங்காயம்"

திராவிடம்
=======================================

நோய் உற்ற தமிழர்களுக்கு
இவர் கண்டு பிடித்த‌
நோய் எதிர்ப்பு எனும்
(இம்யூனிடி)
மருந்தே இது.

ராமாயணம்
===========================================

தேசிய இனத்தை
அரக்கர்களாக்கி
அடிமையாக்க வந்த‌
வெறும் அம்புலிமாமாக்கதை
என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்
பெரியார்.

கடவுளை நம்புபவன்...
======================================

அறியாமைச்சிதை அடுக்கி
தன்னையே கொளுத்திக்கொள்ளும்
ஒரு மன முறிவின்
வெளிப்பாடே இது.

சாதியும் மதமும்
========================================

இந்த சதுப்புநிலக்காட்டில்
மானுடம்
புதைந்து போவது கண்டு
பொங்கி எழும் அறச்சீற்றமே
பெரியாரிசம்.

=========================================






செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்

ரஜனிக்கு இரட்டைத்தலைச் சின்னம்
=========================================ருத்ரா

ரஜினி
வீட்டின் கேட்டைத்திறந்து வந்து
அறிக்கை கொடுத்துவிட்டார்
நாட்டின் ஜனநாயகக்கேட்டை
அறைந்து சாத்தி விட்டு.
சி ஏ ஏக்கு ஆதரவாய் 
குரல் கொடுத்தார்.
முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை
என்றார்.
அப்படி யாராவது ஒரு முஸ்லீம்
பாதிக்கப்பட்டால்
அவர்க்கு துணைநின்று
குரல் கொடுக்கும்
முதலாமவன் நான் தான் என்றார்
நாளைய முதல்வன் என்ற தொனியில்.
நிருபர் உடனே கேட்டார்.
அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில்
நம் பெருமைக்குரிய முன்னாள் ஜனாதிபதி
ஃபக்ருத்தின் அலி அகமதுவின் 
குடும்பத்தார்கள் தானே..
இதற்கு உங்கள்...
நிருபர் முடிக்கும் முன்
அவர் கேட்டைச்சாத்திவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தார்.
மக்களிடம் காட்ட அவர்
இரு தலைகள் வைத்திருக்கிறார்.
முதலில் சொல்லியதை
மறுக்க அல்லது  மழுங்கடிக்கவே
இந்த இன்னொரு தலை.
வரும் தேர்தலுக்கு 
தேர்தல் ஆணயம் அவருக்கு
இந்த சின்னத்தை தாராளமாய் வழங்கலாம்.
அது இரட்டை இலைக்குப்பதில்
இரட்டைத்தலை ஆகும்.

===============================================

பெரியார்.

பெரியார்.
==================================ருத்ரா

பெரியார் 
ஒரு தீப்பெட்டி.
அறிவின்மை எனும் 
இருட்டைக் கொளுத்த வந்த‌
வெளிச்சம்.
கடவுள் இருக்கிறார் என்பதில்
அந்த "கிறார்"லிருந்தே
இலக்கணப்பிழை தொடங்குகிறது.
மனிதன் 
தன்னை இன்னொன்றில் 
அப்பிக்கொள்வதில்
அந்த இருக்கிறார் 
எனும் கற்பிதத்தின் தப்பிதம்
துல்லியமாக தெரிவிக்கிறது
கடவுள் என்ற கற்பனையை.
மனிதன் மனிதனைத்தாண்டி
யோசிக்க முடியாது என்பது தான்
கடவுளுக்கு மனிதவேடம் போடவைக்கிறது.
வேடம் போட்டாவது
மனிதன் மனிதனை சுரண்ட‌
தந்திரம் செய்வதே
மதம் ஆகும்.
கடவுளை மற என்றால்
அந்த மூடப் போர்வையை 
உதறு என்று பொருள்.
மனிதனை நினை என்றால்
மனிதனுக்கு மனிதன் 
இடையே பாயும் அந்த‌
மானுட மின்சாரத்தை
கண்டு கொள் என்று  பொருள்.
இந்த மெய்யறிவை
கோடரி கொண்டு பிளப்பதே
வர்ணாசிரமம்.
அந்த கொலைவெறி எனும்
கோடரியை ஏந்திக்கொண்டிருப்பவர்கள்
எல்லாம் 
சிறியாரிலும் சிறியார்.
அந்தக்கொடரியையே
தன் அறிவால் பிளப்பவர்கள்
பெரியாரிலும் பெரியார்.
ஆம்
பெரியார் பார்வையில்
சாதி மத இமயங்கள் எல்லாமே
வெறும் கூழாங்கற்கள் தான்.

"மானுடம் வென்றதம்மா"
பெரியார் எனும் 
"ஆயுத" எழுத்துக்களால்.

========================================
Click here to Reply

சனி, 1 பிப்ரவரி, 2020

கூச்சல்



கூச்சல்
================================================
ருத்ரா



ஆடு மேய்க்கும் அப்பன்.
வயலில் களை பறிக்கப்போகும்
அம்மை.
வயிற்றுப்பாட்டுக்கே
மாடு போல் 
நுரை தள்ளி 
பாரம் இழுக்கும் தகப்பன்.
எச்சில் பாத்திரம் கழுவி 
அதில் மிஞ்சிய எச்சிலையும்
வீட்டுக்கு கொண்டுவந்து
பிள்ளைகளுக்கு
உணவு ஊட்டும் தாய்.
இது நம் பெரும்பான்மைச் சித்திரம்.
உழைக்காமலேயே 
உண்டு
ஏப்பம் விட்டு
அந்தக்குரலையே 
வேதம் என்று சொல்லி
மக்களுக்கு "கடவுள்"புரோக்கர்களாக‌
ஏமாற்றும் சிறுபான்மைச்சித்திரமாக‌
இருப்பவர்கள்
அறிவு வெளிச்சம் 
எனும் 
மொத்த சொத்தை 
சுரண்டுவது தானே
புதிய கல்விக்கொள்கை.
மூன்றாவது வகுப்பிலும் 
ஐந்தாவது வகுப்பிலும் 
இந்த ஏழை எளிய வர்க்கத்தை
பொதுத்தேர்வு மூலம்
வடிகட்டி எறிந்து விட்டு
இந்தியாவையே ஒரு
இருட்டுக்குள் தள்ளி விடுவது தானே
இந்த புதிய கல்விக்கொள்கை.
முகமூடி போட்டுக்கொண்டு வரும்
இந்த "குலக்கல்வித்திட்டத்தின்"
சூழ்ச்சியை 
அழித்தொழிப்பதே
தற்போதைய நம் ஜனநாயகப்போரின் 
முழக்கம்.
ஏ! ஊடகங்களே! ஏடுகளே!
நாடே தீப்பற்றி எரிகையில்
இந்த சுரண்டல் கூட்டங்களுக்கு
கற்பூரம் காட்டிக்கொண்டிருக்கவா
வெறும் 
கூச்சல் கிளப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

================================================================