வியாழன், 10 அக்டோபர், 2019

சவ்வூடு பரவல்.

 
                                                                                                                                                       ஓவியம்: ருத்ரா 


சவ்வூடு பரவல்.

=====================================ருத்ரா இ பரமசிவன்



உன் இதயம் இங்கே

வந்து விட்டது.

உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌

உருவிக் கோர்த்து

கழுத்தில் மாட்டியிருக்கிறேன்.

சுண்டியிழுக்கும்

உன் கண் தூண்டில்கள் கூட‌

என் உள்ளங்கைக்கடலில்

என் கண்ணாடி மீன்களைத்தான்

சுழற்றிக்கொண்டிருக்கின்றன.

உன் இனிய சொற்கூட்டம் எல்லாம்

என்னை மொய்த்த‌

தேன்சிட்டுகளின்

ஒலிப்புகளாய் என்

கண் மூக்கு காது வாய் தொண்டை

என்று

இன்பக் க‌மறல்களில்

என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது.

எந்தக் கணவாய் வழியாய்

இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்?

தெரியவில்லை.

அங்கே இருந்து இங்கே

ஊடுருவி வர‌

என்ன "சவ்வூடு பரவல் முறையை"

தேர்ந்தெடுத்தாய்?

ஆம்

இப்போது புரிகிறது

ஒரு கள்ளப்பார்வை ஒன்று

அனிச்சமலர்கள் கொண்டு

பின்னி வைத்திருப்பாயே!

அந்த அமுதச்சல்லடை வழியே

என் உயிர் அங்கு உன்னிடம்

நிரவி விட்டதே!

மீண்டும் அந்த சல்லடைப்பார்வையை

வீசி விடு!

நம் இரு உயிர்களும்

குழைந்து ஒன்றாய்

கசியட்டும் நம் உள்ளத்தில்!


=====================================================================
மீள்பதிவு.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

அமைதி காக்கும் ரஜனி.

அமைதி காக்கும் ரஜனி.
=========================================ருத்ரா


https://tamil.oneindia.com/videos/rajinikanth-keeps-mum-on-the-case-against-maniratnam-and-48-others-697504.html?desktop_home_slot_2

கபாலியில் வெகுண்டெழுந்தீர்கள்.
காலாவில் புயல் ஆனீர்கள்.
பேட்ட யில் புரட்சி செய்தீர்கள்.
அது ஒன்றும்
ஸ்டெர்லைட் ஆலை போரட்டம் அல்ல.
ஆனாலும்
கோடம்பாக்கத்து
பொம்மைத் துப்பாக்கியை வைத்துகொண்டு
தூள் கிளப்பினீர்களே.
உங்கள் கோடம்பாக்கத்து
சக கலைஞர்கள்
ஒரு தர்மத்தை நிலைநாட்ட‌
கடிதம் தானே எழுதினார்கள்.
இந்த ஜனநாயக செயலுக்கு
சிறைக்கம்பிகளா?
இதே கோடம்பாக்கத்திலிருந்து
ஒரு "தளபதி"யாக‌
உங்களை உருவாக்கியவருக்கும்
கை விலங்குகள் நீட்டுகிறார்களே!
"நட்புன்னா உனக்கு
என்னன்னு தெரியுமா"
என்று உங்களை ஒரு
நெருப்பில் உயிர்ப்பித்து
அந்த பஞ்ச் டைலாக்கில்
உங்களை ஒரு சிகரத்துக்கு
வார்த்தெடுத்தாரே!
எல்லாம் வெறும் கால்ஷீட் தானா?
வெறும் பாக்ஸ் ஆபீஸ் மத்தாப்புகள் தானா?
சூப்பர்ஸ்டார் அவர்களே
சினிமா பார்க்கிற தமிழின்
இந்த மண்புழுக்கள் எல்லாம்
உங்கள் எதிரே
நெளிந்துகொண்டிருப்பதால் தான்
இந்த
தமிழும் தமிழ்நாடும்
நசுக்கப்பட்டால் கூட‌
உங்கள் ஆத்மீக அரசியல் எனும்
ஸ்ட்ரா போட்டு
ரத்தம் உறிஞ்சும் விளையாட்டை
நடத்தப்பார்க்கிறீர்கள்.
உங்களை எப்போதும்
நாங்கள் பார்ப்பது
சூப்பர் ஸ்டாராகத் தான்.
சூப்பர் வைரஸ்ஸாக அல்ல!
அந்த காமிரா சிற்பி
"ஸ்டார்ட் ஆக்சன்"என்று
சொன்னால் தான்
உங்கள் நரம்புகள் புடைக்குமா?
சிந்தனை செய்யுங்கள்
ரஜனி அவர்களே!

===========================================================


இடநிலைஇயல் அளபெடை (டோபாலாஜிக்கல் குவாண்டம்)

Figure
Figure Figure Figure
  • Figure Figure





















இடநிலைஇயல் அளபெடை (டோபாலாஜிக்கல் குவாண்டம்)

===================================================ருத்ரா இ பரமசிவன்

அளபடை (குவாண்டம்) இயற்பியல் அணுக்கருவின் உட்துகள்களிலிருந்து விண்வெளியியலின் முதல் பெருவெடிப்பையும் (பிக்பேங்க்) தாண்டி காலவெளி (ஸ்பேஸ் டைம்) அற்ற ஒரு புலத்துள்ளும் நுழைகிறது.இந்த அளப்படைக்கு காலூன்ற கால்கள் ஏதேனும் உண்டா? அதாவது அதற்கு  நின்று நிலைத்து இயங்கும் ஒரு இடத்தன்மையின் மெய்த்தன்மை (லோக்கல் ரியாலிட்டி) உண்டா? என்ற வினாக்கள் இன்னும் விடையின்றி தொங்கலில் தான் உள்ளன.அப்படியானால் இதை நாம் சாதாரண "வடிவ கணித தளத்தில்" (ஆர்டினரி ஜியாமெட்ரிக் பிளாங்க்) நிறுத்திவைத்து ஆய்வு செய்ய முடியுமா? ஹெய்சன்பர்க் என்ற விஞ்ஞானி இயலாது என்று கைவிரித்துவிட்டார்.அளபடை என்பது "கழுவின தண்ணீரிலும் ஒரு நழுவின மீனாகத்தான்" இருக்கும் என்கிறார்.துகள் நகர்ச்சி எனும் இயக்கவியல் (டைனமிக்ஸ்)

அளபெடை இயக்கவியல் மூலம் அளக்கப்பட முடியாது என்பதே அந்த அளபெடை இயக்கவியலின் அடிப்படை.



மனிதனின் மூளை விரிவு என்பது இந்த பிரபஞ்சத்தின் நன்கொடை ஆகும். கடவுளியலை கண்டதும் அது மூளையே. அது இருப்பதை கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதும் அதுவே.விடை வரும் வரை அதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதும் அதுவே.



மனிதன் கண்டுபிடித்த ஒரு ஒப்பற்ற வடிவியல் கணிதம் டோப்பாலஜி எனும் "இடநிலைக்கணிதம்" ஆகும்.கண்கள் காண்பதை கைகள் வரைந்து சூத்திரப்படுத்திக்

கொள்வதே இது காறும் நாம் அறிந்த ஜியாமெட்ரி எனும் வடிவகணிதம். ஆனால் நம் மனதுள் அறியும் (இன்ட்யூஷன்) வடிவங்களை ஒரு இடத்தன்மைக்குள் (டோபாலாஜி) கொண்டு வருவதே இந்த புதிய வடிவகணிதம் ஆகும். இது அடிப்படையாய் சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு அதன் மீது வடிவகணிதத்தை அமைக்கிறது.

அதனால் இது ஆக்சியோமெட்ரிக் ஜியாமெட்ரி (axiometric geometry) எனவும் அழைக்கப்படலாம்.



மேலே பார்த்த எந்த பிடிக்கும் அடங்காத அந்த முரட்டுக்குதிரையான அளபெடை அளவீட்டை (குவாண்டம் மெஷர் ) இந்த டோப்பாலஜியின் இடைநிலைக்குழைவு வெளியில் (டோபாலாஜிக்கல் ஸ்பேஸ்) வைத்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று இயற்பியல் கணிதமேதைகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் நுண்கணிதம் "டோபாலஜிக்கல் என்ட்ரோபி" (இடைநிலை இயலின்

தாறுமாறு அமைப்பு அளவியல்) ஆகும்.



இது என்ன? என்ன? என்னை?

ஆம் கேள்விகள் எனும் "வேல் முனைகள்" தீட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்த மின் மடலில் பார்க்கலாம்.



==================================================================

கீழ்க்கண்ட இணைய தளத்துக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி:



Detecting Topological Order in a Ground State Wave Function
Michael Levin and Xiao-Gang Wen
Phys. Rev. Lett. 96, 110405 – Published 24 March 2006
==========================================================================



திங்கள், 7 அக்டோபர், 2019

கீழடி 4

கீழடி 4
============================================ருத்ரா

"அது தமிழ் நாகரிகம் இல்லை.
பாரத நாகரிகம்...."

இப்படி அப்படி என்று
நீங்கள் எப்படி
புரட்டி போட்டாலும்
அது
நெய்தல் தமிழர்களின்
பரதவ நாகரிகமே
பாரத நாகரிகம் ஆயிருக்கலாம்.
ராமனின் கதையை எழுதுவதற்கு முன்
அந்த வேடன்
மரவ மரம் எனும் மராமரங்களிடையே தான்
எழுதத் தொடங்கினான்.
சங்கத்தமிழின் ஓலைச்சுவடிகளே
மரவ மற்றும் குரவ மரங்களை
குறிப்பிடுகின்றன.
யாழ் எனும் இசைக்கருவியிலிருந்து
பண் ஒலிப்பவர்கள்
யாழர்கள் அல்லது பாணர்கள்.
அதில் ஒரு யாழன் "வியாழன்" ஆனான்.
ழகரம் நாவில் வழுக்கியதால்
வியாசன் ஆனான்.
சொற்களில் ஆழ்ந்து அகழ்வாராய்ச்சி
செய்தாலே...
கல் வெட்டுகள் தேவையில்லை
இந்த சொல்வெட்டுகளே போதும்.
இந்த செம்படவச்சியின் மகனின்
தீட்டு பட்டது தானே
வேதங்களும் மகாபாரதமும்.
தமிழ்ப்பரதவர்களே
பாரத நாகரிகத்திற்கு
விதையூன்றிவர்கள்.
தோண்டத்தோண்ட‌
தமிழ் மண்ணின்
விதைகள்
கதைகள் பல சொல்லும்!

================================================================

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கீழடி 3

கீழடி 3
===============================================ருத்ரா.

தந்தத்தில்
தாயம் உருட்டும் காய்கள்.
தங்கத்தில் அழகிய‌
காதணிகள்.
பானை ஒடுகளில்
தமிழ் தொல்லெழுத்துக்கள்.
இவ்வளவும்
கி.மு 600 ஆண்டுகளின்
காலத்திற்குட்பட்டவை.
இன்னும் சுமார்
மூன்று அடிகள் தோண்டினால் என்ன?
என்னவா?
தமிழின் முதல் சூரியன்
அங்கு கண்விழிக்குமே!
போதும்!போதும்! மூடுங்கள்.
தமிழர்களே
மையம் இந்தியில்
அரசாணை பிறப்பித்து விடலாம்.
தமிழ் என்பது
உன் மொழி மட்டும் அல்ல.
உன் உயரம்.
உன் ஆழம்.
உன் அகலம்.
தமிழா!
ஏன் உன் சிந்தனை மட்டும்
சரஸ்வதி பூசையின்
சுண்டல்களை கொறிப்பதில்
மட்டும்
மண்டிக்கிடக்கிறது?

======================================================



வெள்ளி, 4 அக்டோபர், 2019

க‌ல்

க‌ல்
========================================ருத்ரா

வேகமாக நடைப்பயிற்சியில்
நடந்து வந்து கொண்டிருந்தேன்.
நடைபதையே
பச்சை ரத்னக்கம்பளம்
விரித்தாற்போல்
புல் படுக்கை அணிவகுக்க‌
மிகவும் அழகாய் இருந்தது.
அழகில் மூழ்கி
கவனம் பிசகினேன்.
கால் இடுக்கில்
ஒரு கல் இடற
தடுக்கி விழுந்தேன்.
விழுந்த இடம்
ஒரு பிள்ளையார் சிலை.
சிறிதாக புல் மண்டிப்போய்
இருந்தது.
இருந்தாலும்
பூசையின் விபூதி குங்குமம்
அதை அடையாளம் காட்டியது.
உடனே
பிள்ளையாரப்பா!
மண்டையில் அடிபடாமல்
காப்பாற்றினாய்.
தலையை குட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டேன்.
அடி பட்டிருந்தால்..
என்ற "ப்ராபபளிட்டி"தான்
அங்கே கடவுள்.
அடி படாது
என்ற ப்ராபபளிட்டி
அங்கே கடவுள் இல்லை.
நமக்கேன் வம்பு?
கடவுள்
என்பதும்
கடவுள் இல்லை
என்பதுமாய்
பின்னிப்பிணைந்த‌
ப்ராபபளிட்டியைப்பற்றி
நாம் எதற்கு
ஈக்குவேஷன் எழுத வேண்டும்?
கபாலத்தில் அடி என்பது
கபால மோட்சம் எனும்
மரணத்தின் முற்றுப்புள்ளியாகி விட்டால்?...
பிள்ளையாரப்பா..காப்பாற்று..
என்று
மீண்டும்
விழுந்து கும்பிட்டுவிட்டு
கிளம்பினேன்.
சின்னக்கல் இடறிவிட்டது.
பெரிய கல் கும்பிடவைத்தது.
இயற்கையின் கல்லுக்கும் தெரியும்
எப்படி
அரசியல் பேச வேண்டும் என்று!

====================================================


செவ்வாய், 1 அக்டோபர், 2019

எல்லாம் இங்கு தமிழ்


எல்லாம் இங்கு தமிழ்
============================================ருத்ரா

வெண்ணெய் திரளும்போது
தாழி உடையும் கதையாய்
தமிழ் ஒற்றுமை
ஓங்கும் போது
திராவிடம் ஏதோ
அயல் சொல் என்று
புரளி கிளப்பும்
சூழ்ச்சியின் ஒரு சூறாவளி
கருமையம் கொள்ளுமாறு
சில அரசியல் பேச்சுகள்
உலா வருவது
தமிழனின் புறநானூற்று வாளை
தமிழனின் தலையிலேயே
கூர் தீட்டிப்பார்க்கும்
செயல் அன்றி வேறல்ல.
நீர் என்று பொருள்படும்
திரவம் என்ற சமக்கிருதப்பெயர்
திரை எனும் பொருள் தரும்
தூய தமிழ்ச்சொல் தான்.
திரைவியத்தமிழன் திரைகடல் ஓடி
திரைவியம் கொண்டு வந்தான்.
அவனே "திரைவிடன்"எனும்
திராவிடன் ஆனான்.

உலகம் எல்லாம் சென்று
தமிழின் புகழ் வளர்த்தான்.
"தரவத் பாணி" என்று ஒரு சொற்றொடர்
ரிக் வேதத்தில் வருகிறது.
"த்ரவத் பாணி" அதாவது
கடல் அலைகளைப் போல‌
விரைவாக பாய்ந்தோடுபவன்.
அவர்களை எப்படியாவது
அழித்துவிடு இந்திரா
என்று ரிக் வேதம் ஒப்பாரி
இடுகிறது அதன் பாடல்களில்.
அந்த திரைவிடன் தான்
சிந்துவெளித்தமிழனாய்
உண்மையிலேயே
தமிழன் உலகின் எல்லா ஒலிப்புகளையும்
உருட்டி திரட்டி
ஒரு மொழிவடிவம் தந்து
வரி வடிவம் தந்தான்.
அதுவே "சமக்கிருதம்"
தமிழுக்கு ஒத்து (சமம்) செய்யப்பட்டு
சமைக்கப்பட்டது.
கரம் எனும் சொல் கூட தமிழ் தான்.
கரத்தால் எழுத்தாணி கொண்டு
ஓலையில் எழுதப்படுவது காரிகை எனப்படும்
நாம் காரியம் என்று சொல்லுவதும்
கரத்திலிருந்து வந்தது தான்.
கரம் கிருதமாய் இங்கு மாறி
சமக்கிருதம் ஆனது.
சம +கிருதம் என்பதில்
இடைச்சொல் (சந்தி) அங்கு
"ஸ்"ஆகும்.
சரி.அந்தக்கதைகள் இருக்கட்டும்.
உலக ஒலிப்புகளை திரட்டி
மொழியாக்கிய‌
தமிழனின் அந்த சமக்கிருக்கிருதமும்
அவன் பங்காளி மொழிதான்.
இந்தியாவின் எல்லாமொழிகளும்
தமிழனின் பங்காளி மொழிகள் தான்.
உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது தான்
திராவிட மொழிகளான‌
தெலுங்கு கன்னடம் மலையாளம்
மற்றும் அதனோடு சேர்ந்த மொழிகளிடம்
பகைமை கொள்வது.
அந்த மொழிகளில் சமக்கிருதம்
மிக மிக அதிகமாக இருப்பதால் தான்
அவை தமிழை வெறுக்கின்றன.
தமிழன் மீது
எப்போதும் அவன்
"வளர்த்த கடாக்கள் தான்"
மார்பில் பாய்கின்றன.
இந்த வரலாற்றுக்காயங்களையும்
விழுப்புண்களாக ஏந்தி
வலம் வருபவனே தமிழன்.
எப்படி தன் காயங்களை
தானே நக்கிக்கொண்டு
சிங்கம் சிலிர்த்துக்கொண்டு எழுகிறதோ
அப்படியே
தமிழ்ச்சிங்கங்கள்
திராவிட உறுமலுடன்
வீறிட்டு எழவேண்டும்.
சூழ்ச்சி வலைகள் யாவும்
அழித்தொழிக்கப்பட்டு
நம் வரலாற்றுச்சிறப்பும் தொன்மையும்
ஓங்கி உலகளந்து
சுடர்ந்து ஒளி வீசவேண்டும்.

================================================================