திங்கள், 5 ஆகஸ்ட், 2019

வழிபாடுகள்

வழிபாடுகள்
====================================================ருத்ரா

ஆமென்
என்று சொல்லிவிட்டு
எல்லோரும் போய்விட்டார்கள்.
வெறிச்சோடியது.
சுரூபங்கள்
சத்தமிடாமல் மனிதனின்
ரத்த சரித்திரங்களை
மௌனித்து சொற்பொழிவு ஆற்றியது.
மரப்பெஞ்சுகள் நீள நீளமாய்
கால் நீட்டிப் படுத்துக்கிடந்தன.
மனிதர்களின் நிழல்கள் அங்கே
தங்கியிருந்தன.
சோற்றுக்கவலைகளும்
பணத்தின் வேட்டைகளும்
அவர்களை வெளியே
மேய விட்டிருக்கின்றன.
அந்த பெரிய மணியின் ஓசை
அலையின்
ராட்சச நாக்குகளாய்
புல் மேய்ந்து கொண்டிருந்த
ஆட்டுக்குட்டிகளை
நக்கிக்கொடுத்தது.
கசாப்பு கத்திகளின் முனைகளில்
அடுத்த வழிபாடு
ஆரம்பிக்கும் வரை.

==============================================================

சவ்வுப்படலம்

சவ்வுப்படலம்
========================================ருத்ரா


இரண்டு முற்றுப்புள்ளிகளுக்கு இடையில்
ஒரு வாக்கியப்பிரதேசம்.
கருத்து பிரசவிக்கவே இல்லை.
குவா குவா சத்தங்கள் மட்டும்
அமர்க்களம்.
நான் சொல்லவருவது என்னவென்றால்
என்று
கீரியும் பாம்பும் விளையாட்டு காட்டும்
பாய்ச்சல்களே அதிகம்.
தெளிவான சிந்தனை என்பது
கானல் நீரில் படகுவிட
ஒரு வழியாய்
இந்த முற்றுப்புள்ளியில்
கரையேறியது அந்த முற்றுப்புள்ளி.
புரியாதவர்கள் கொட்டாவி விட்டார்கள்.
புரிந்தவர்கள்
எப்போதோ தூங்கிவிட்டார்கள்.
கனவில் போய்
சொற்பொழிவுக்கு அர்த்தம் பிழிந்து கொள்ளலாம்
என்று.
பாஷ்யம் முடிந்து வீட்டது.
இத்துடன் பிரம்மம் பற்றிய
சவ்வுப்படலம் முற்றிவிட்டது.

===============================================

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

கவிதைகளும் காதலித்தன

கவிதைகளும் காதலித்தன
==========================================ருத்ரா



காளிதாசன் என்ற நினைப்பில்

மேகத்துக்குப்பதில்

அவள் நெஞ்சத்தையே அவளுக்கு

தூது அனுப்பினேன்.

அந்தக் கவிதை அழகில்

சொக்கிப்போய்

என்னை மறந்தே போய்விட்டாள்.

காலங்கள் ஓடின.

தூது அனுப்பினேனே

உன் பதில் கிடைக்கவில்லையே

என்று

செல்லில் "மெஸ்ஸேஜி"னேன்.

அவள் கடுந்தமிழில்

குறுஞ்செய்தியிட்டாள்.



"என் நெஞ்சை ஏற்கனவே

உனக்கு அனுப்பியிருந்தேன்.

அதை அழகிய கவிதையாக்கி

எனக்கே திருப்பி அனுப்பி விட்டாயே!

என் நெஞ்சையும் அக்கவிதையையும்

பிரிக்க முடியவில்லை.

போதும் உன் காதல்.

உன்னைவிட உன் கவிதையையே

காதலிக்கிறேன்."



கவுத்து  விட்டாயே!

காளிதாசா!


=====================================================

சனி, 3 ஆகஸ்ட், 2019

ஒருவன் தானே நானும்.



ஒருவன் தானே நானும்.
======================================================================
ருத்ரா இ பரமசிவன்.



வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் கூடவா 
இந்த பச்சை மரகத நிழல்கள்?
என்னத்தை சாதித்துவிட்டோம் என்ற 
ஏக்கத்தின் கூரிய முட்கள் 
ஒரு அம்புப்படுக்கையாய் முன்னின்று 
ரத்தம் கசிய வைக்கிறது.
இந்த வெய்யிலின் பளபளப்பு 
பச்சைப்புல் விரிப்பிற்கு அக்ரிலிக்  வண்ணம் பூசுகிறது.
இந்த பச்சையெல்லாம் 
அன்று அவள் கல கலவென்று சிரித்தாளே 
பச்சைக் கண்ணாடி வளையல்களுடன் 
அதற்கு ஒரு சமன்பாடு எழுதிவிட முடியுமா?
நினைவின் ஒளியாண்டுகளுக்கு 
எத்தனை மில்லியன்கள் எழுதினாலும் 
அது கண்முன்னே  தான் 
"கழச்சி " ஆடுகின்றன.
எது எப்படியிருந்தாலும் 
காகிதத்தின் பின்னும் எழுத்துக்களின் பின்னும் 
ஒளிந்து கொள்ளும் கோழைகளில் 
ஒருவன் தானே நானும்.


=======================================================================



.

  





வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நாகேஷ்

நாகேஷ்

==========================================ருத்ரா இ பரமசிவன்



( நமக்கு எப்போதெல்லாம் சிரிக்கவேண்டும்

என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம்

நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களை

மனப்படத்தில் மீள்பதிவு செய்துகொண்டு

சிரித்துக்கொண்டே இருக்கலாம். என் கவிதை

சிரித்துக்கொண்டே நினைவு கூர்வதற்காக  இங்கு

பதிவிடப்படுகிறது)








நாகேஷ் 




"நீங்களும் ஒரு கோடி வெல்லலாம்"

என்ற நிகழ்ச்சிக்கு

மடி நிறைய ஒரு கோடியை

கனமான கனவாக்கி

சுமந்து சென்று அதில்

ஒரு ரூபாய் கூட வெல்லாத‌

"தருமி"யின் புலம்பல்

எப்படியிருக்கும்?

இன்றும் தமிழ் நாட்டு தியேட்டர்களில்

எல்லாம் எதிரொலிக்கிறது.

சிம்ம கர்ஜனையின் எதிரே

இந்த நகைச்சுவைப் பூனையின்

கணீர் கணீர் களில்

மியாவ் களை கேட்கவில்லை.

ஒரு டைகர் நாகேஷ்

அந்த மண்டபத்துத் தூண்கள்

கிடுகிடுக்க நம்மை சிரிக்கவைத்தார்.

"கேள்வியை நீ கேட்கக்கூடாது

நான் தான் கேட்பேன்"

என்ற வசனத்தில்

அந்த வெல வெலப்பு.

ஒரு பொய் மிடுக்கு

சிவ பெருமானையே

கடுப்பேற்றிப் பார்க்கும்

ஒரு துறு துறுப்பு...

இந்த நடிப்பெல்லாம்

சொல்லிக்கொடுக்க‌

கேம்பிரிட்ஜ் ஆக்ஸ்ஃபோர்டு

பல்கலைக்கழகங்கள் எல்லாம் பற்றாது.

இவரை

அமெரிக்க ஜெர்ரி லூயிஸ்ன் நிழல்

என்பார்கள்.

ஆனால் "சர்வர் சுந்தரம்" எனும்

படத்தில் நாம் கண்டது

நகைச்சுவை....

அடக்கிச் சிரித்து அழுகை....

காதலைக்காட்டும் அற்புத நளினம்...

இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்

ஒரு டைரக்டரிடமே தண்ணி காட்டி

நடிப்பு என்று அவர் தெரிந்து கொள்ள முடியாத‌

இயல்பைக்காட்டி அவரை தவிக்க வைத்தது...

இதெல்லாம்

கோடம்பாக்கத்துக்காரர்கள்

இவரிடம் தோண்டி எடுத்த கிம்பர்லி.

இப்படி

எத்தனை படங்கள்.

எத்தனை பாத்திரங்கள்.

கே எஸ் கோபாலகிருஷ்ணன்

எஸ் வி ரங்கராவ்

நாகேஷ்

...இந்த அபூர்வ‌

பெர்முடா முக்கோணம்

திரைக்கடலில்

எத்தனை சூறாவளிகளை

கிளப்பியிருக்கிறது?

ஒரு "நீர்க்குமிழியில்"

நடிப்பின் ஏழுகடல்களையும்

தளும்பச்செய்தவர்.

இவரை மறக்க முடியாது.

இவர்

ஹிட்லருக்கு முன் நேருக்கு நேர்

நிற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால்

ஹிரோஷிமா நாகசாகிகள்

சின்னாபின்னம் ஆகியிருக்காது.

நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ்

என்று நாம் சொன்னால்

அங்கிருந்தே கத்துவார்

ஐ ஆம் செலபா யூ கோ அஹெட்ரா

......

காதலிக்க நேரமில்லையில்

பாலையாவுக்கு கதை சொல்லும்

பாணியில்

அராபிய "ஆயிரத்தொரு இரவுகளுக்கு"

அது நீண்டு கொண்டே

விலாப்புடைக்க

சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.

சொல்லிக்கொண்டே போகலாம்..

எமனின் எருமையைக்கூட இந்நேரம்

அங்கே சிரிக்க வைத்துக்கொன்டிருப்பார்.

அந்த எமன் எப்படியோ

ஆனால் இவர்

சிரிக்கவைப்பதில் எமன்.

அவர் சாகடித்தது

நம் கவலைகளைத்தானே.





=============================================



சொர்க்கம் பக்கத்தில்...

சொர்க்கம் பக்கத்தில்...
=====================================ருத்ரா

கடவுள் தாவி தாவி
ம‌ரக்கிளைக்கு வந்தார் குரங்காக.
இங்கிருந்து
தரைக்கு தாவினார்
மனிதனாக.
மனிதனாய் வானத்தின்
உச்சிக்கே தாவி
கடவுள் ஆகி  விட்டால்
அதுவே
முழுப்பரிமாணம்.
ஆனால் குரங்கின் மனிதங்களும்
மனிதனின் குரங்கு மிச்சங்களும்
பட்டி மன்றம் தொடங்கியிருக்கின்றன.
கடவுள்
குரங்கா? மனிதனா?
அதற்கு முன் இதற்கு
நடுவராக யாரை உட்காரவைப்பது?
கடவுளா?
குரங்கா?
மனிதனா?
இரண்டல்ல ஒன்று
என்று சொன்னால் அது
அத்வைதம்.
மூன்றல்ல ஒன்று
என்று சொன்னால் அது
முத்வைதம்.
இது குறும்புக்காக சொன்னது.
சுத்தமாக சொன்னால்
இது "அத்ரையம்".
சங்கரரைக்கேட்டால்
"கோவிந்தனைப்பாடு
கோவிந்தனைப்பாடு
ஓ முட்டாளே"
என்று தான் துவங்குவார்.
சரி.
நமக்கேன் வம்பு.
நாமும் அந்த‌
முட்டாள்களின் சொர்க்கத்தில்
போய் உட்கார்ந்துகொண்டு
கோவிந்தனைப் பாடுவோம்.

====================================================




வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எங்கே சென்றாய் நீ?

எங்கே சென்றாய் நீ?
==========================================ருத்ரா

குற்றால அருவியில்
குளிக்கையிலே தேடினேன்.
அப்புறமும்
மரக்கிளைகளில் தாவும்
குரங்குகள் போல்
மனத்தை ஊஞ்சல் ஆடவிட்டேன்.
அப்புறமும்
பாபநாசத்து படிக்கட்டுகளில்
கால்கள் அளைய விட்டேன்.
அப்பப்ப!
அந்த பருமீன்கள் ஒவ்வொன்றும்
உன் கூரிய ஆனால் இனிய‌
பார்வைகளால்
என்னை வெல வெலக்க‌
செய்து விட்டனவே.
உன் கண்விழி நெளியலில்
மின்னல் போல்
சில கணங்களை குருடாக்கிய‌
அதே பார்வைகளின்
இடைவெளியில்
எங்கோ தப்பித்து
மறைந்து கொண்டாய்.
எங்கே சென்றாய் நீ?

====================================