சனி, 13 ஜூலை, 2019

காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்

காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
_______________________________________________ருத்ரா


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"

பொருள்
==========================================

தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.
=================================================
sanganadaikkavithai composed by RUTHRAA E PARAMASIVAN
26.05.2017

வெள்ளி, 12 ஜூலை, 2019

ராட்சசி ஜோதிகா


ராட்சசி ஜோதிகா
================================================ருத்ரா

சிஸ்டம் சரியில்லை
என்று அரசியலில்
"பஞ்ச் டயலாக்" ஆகிப்போனதை
நிகழ்வுகளாக
ஒரு பள்ளிக்கூடத்தில்
வரலாறு ஆக்கியிருக்கிறார்
ஒரு சூப்பர் ஸ்டாரினி "ஜோதிகா"
ஜோதிகாவின் நடிப்பு
"குஷி"யிலிருந்து நாம் அறிந்ததே.
நடிகையர் திலகம் என்ற பட்டங்கள்
எல்லாம் எங்கே போச்சு?
அந்த வெறுமையை எப்போதோ
ஜோதிகா நிரப்பி விட்டார்.
விருது வழங்குபவர்கள் தான்
அதை விருதாவாய்
எங்கேயோ தொங்கவிட்டிருக்கின்றனர்.
நாடும் சரி
வீடும் சரி
பள்ளிக்கூடமும் சரி .
ஒரு இடி அமீன் தேவை தான்.
ஆனாலும் இவர்
சிர்திருத்தம் என்பதை மட்டும் தான்
கையில் எடுத்திருக்கிறார்.
மொத்த இடி அமீனையும்
ஜனநாயக ஜிகர் தண்டாவாய்
கலக்கி  அடித்து
மக்களின் அடிவயிற்றைக்கலங்கசெய்யும்
மொட்டை சர்வாதிகாரம் எல்லாம் இங்கு இல்லை.
பள்ளிக்கூடம் என்றால்
"பெயில் போடும்"
ஒரு முண்டைக்கண் முனிய சாமி கோயில் இல்லை
என்ற
பயத்தின் புகைமூட்டத்தை
அதிரடியாய் நீக்குகிறார்
இந்த ராட்சசி.
"அழகான ராட்சசி "தான்.
இவர் மின்னல் போல் சிணுக்கம் காட்டி
புயல் வருவது போல் விழிகள் உருட்டி
உணர்சசிக்கொந்தளிப்பை
முகம் பூராவும் தேக்கி
நடிப்பை கொப்பளிப்பதையும்
பூப்போல் காட்டுவார்.
இந்தப்படத்தில்
சிஸ்டம் சரியில்லை என்பதில்
உள்ள ருத்ர தாண்டவத்தை
காட் சிகளின் கனமான திருப்பங்களில்
இழைந்து சீற்றம் காட்டுகிறார்.
இயக்குனரும் வசனகர்த்தாவும்
இந்த சித்திர சிற்பத்தை
அருமையாக செதுக்கியிருக்கிறார்கள்.
ராட்சசி என்றால்
உங்களுக்கு அவ்வளவு அருவருப்பான என்ன?
கம்பராமாயணத்தில்
ராட்சசி குலத்து "மண்டோதரியை"
கம்பன் சொல் தூரிகையில்
ஓவியம் தீட்டியிருக்கிறார்
தேவ பிராட்டியார்களுக்கு இணையாக.
கல்வி தேவதை ஒரு "வில்லி"யாக உருமாறுவதை
தடுத்த நிறுத்தவே
ஜோதிகா இங்கே
ஒரு நளின ராட்சசியாய் நர்த்தனமாடுகிறார் .

=========================================================












மலை ஏறு .

மலை ஏறு .
=============================================ருத்ரா

மலை ஏறு !
பள்ளத்தாக்குகளில்
புழுக்கள் போல்
நெளிந்தது போதும்.
அந்த வானம்
எனும் டர்க்கி டவல் கொண்டு
வியர்வை துளிர்த்த
உன் முகம் துடைத்துக்கொள்.
பழம் நூற்றாண்டுகளில்
நீ தொலைத்த பாதையில்
உன்னை ரணப்படுத்திய
அந்த முள்ளின் நாட்களைக்கொண்டு
உன்னை நீயே
வேகப்படுத்திக்கொள்.
வண்டி இழுக்கும் மாடுகளைக்
குத்தி குத்தி ரோஷம் கொள்ள வைக்கும்
தார்க்குச்சியைப்போல
அந்த முட்களில் நீ ரத்தம் சிந்தினாலும்
அவை உனக்கு நாளை முகம் காட்டும்
ரோஜா அல்லவா?
இன்று
நீ விஞ்ஞான பூர்வமாய்
ஏமாற்றப்படலாம்.
நீ கும்பிடும் கடவுளின் கைகளைக்கொண்டே
நீ நெறிக்கப்படலாம்.
இவர்கள் சர்வாதிகாரம்
துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் இல்லை.
அந்த உளுத்துப்போன சம்பிரதாயங்களை
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
வர்ணம் தீட்டி திணிப்பார்கள்.
சாதி மத கொட்டாங்கச்சிகளிலேயே
நீச்சல் அடிக்க வைப்பார்கள்.
கிருஷ்ணனும் கோபிகைகளும்
அடிக்காத லுட்டிகளா?
அவையெல்லாம் புனிதமாகி விடும்.
காதலர் தினம் என்று
இங்கு இளம் மொட்டுக்கள் கொஞ்சம்
இதழ் திறந்து இதயம் திறந்தால்
குரூரமாக அவை கூழாக்கப்படும்.
அதிலும்
பெரிய சாதியும் சின்ன சாதியும்
காதலை பரிமாறிக்கொண்டால் போச்சு.
அவர்கள் கசாப்பு தான்.
இன்னும் எத்தனை சுதந்திர போராட்டங்களுக்கு
கொடி உயர்த்த வேண்டுமோ?
மலை ஏறு !
சறுக்கலுக்கு இடம் தராதே.
தொலைக்காட்சிகளில் கூட
சனாதனத்தின் பிடிவாதங்கள் தான்
லேசர் ஜோடனைக்குள்
பொதிந்து தரப்படுகின்றன.
அந்த உச்சி வானத்தை பிடித்து விடு.
அப்போது தான்
அச்சமில்லை அச்சமில்லை என்று
நீ பாட முடியும்.
நம் விடியலின் தொப்பூள் கொடியே
நம் தேசக்கொடியை நம்பிக்கையோடு
ஏற்றி வைக்கும்.
"ஜெய்ஹிந்த்".
ஆம் ..இது "ஜெய்ஹிந்த்" மட்டுமே.
வர்ணாசிரம
மற்றும் வேதாந்த விசாரங்களின்
தீட்டுப்பட
ஒரு போதும் வழி ஏற்படுத்தி விடாதே.
ஜனநாயகத்தின் மிருக பலம்
முஷ்டியை எவ்வளவு முறுக்கி
உயர்த்தியபோதும்
நம் ஜனநாயகத்து ஆளுமையின்
ஊழிப்பேரலைகள் உறுமுவது
கேட்கின்றதா?
எச்சரிக்கையோடு முன்னேறு..
மலை ஏறு! மலை ஏறு !

--------------------------------------------------------




வியாழன், 11 ஜூலை, 2019

யார் இவள்?


யார் இவள்?
=============================================ருத்ரா
நான்
எழுதுவதன் சொல்லுக்குள்
எழுதுமுன்னேயே
நுழைந்து விடுகிறாள்.
நான் துடிக்கும் இதயத்துள்
என் வால்வுகள் திறக்குமுன்னே
அங்கு போய் துடித்து துடித்து
வதம் செய்கிறாள்.
நான் செல்ஃபோன் தொட்ட போதே
ஹாய்..என்னடா மேட்டர்.சொல்லுடா லூசு
என்கிறாள்.
என்னோடு அவள்.அவளோடு நான்.
உன் முகம் காட்டு என்றேன்.
வானத்தைப்பார் என்கிறாள்.
ஒன்றும் புரியவில்லையா?
கட கடவென சிரிக்கிறாள்.
என்னை நினைத்துக்கொண்டே
அந்த மேகத்தைப்பார் என்றாள்.
அப்படியே பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்?
அந்த குறிப்பிட்ட மேகம்
அச்சு அவளே தான்..
அதை அந்த மேகம் கலையும் முன்னே
அவளைக் "கைப்பிடித்தாக வெண்டும்"
முட்டி மோதிக்கொண்டு ஓடுகிறேன்.
...............
அந்த தினச்செய்தியில்
செய்தி இப்படித்தான் வந்தது.
ஒரு இளைஞன் விபத்தில்
ரத்த வெள்ளமாய்க் கிடந்தான்.
அந்த ரத்தச்சேறு கூட ஒரு பெண்ணின்
"சைடு போஸ் சிரிப்பு போல‌
உதடுகள் காட்டி
"ஏதோ சிரித்துச்சொன்னது"
=================================================
=========================================================

செவ்வாய், 9 ஜூலை, 2019

அளபடை இயக்கவியல்




அளபடை இயக்கவியல்

ருத்ரா



குவாண்டம் மெக்கானிக்ஸ் எனும் அளபடை இயக்கவியல் இந்த 21  ஆம்
நூற்றாண்டுக்குள் கூட அடை படாது. இதன் நுட்பமும் ஆராய்ச்சித் தினவும்
அறிவியலாளர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். விண்வெளி இயலில் இது புதிய கோட்பாடுகளை திறந்து வைத்திருக்கிறது.மேலே கண்ட இந்த நூல்  ஜான் எல் போவெல் ,பெர்னாட் க்ராஸ்மான் ஆகிய இருவரால் ஆக்கப்பட்டிருக்கிறது. 1988ல் முதல் பதிப்பாக இது வெளிவந்துள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான படைப்பு இது. அறிவியல் ஆர்வம் மிக்க கணித புத்தகப் புழுக்களுக்கு கூட இதில் தீனி நிறையவே இருக்கிறது. அருமையான நூல்
என விஞ்ஞான மேதைகளால் புகழப்பட்டிருக்கிறது இந்த நூல்.

அலை இயங்கியத்தின் அடிப்படையிலிருந்து இது துவங்குகிறது.(பக்கம் 35)
ஒளி மின்னியல் விளைவுகளின் பரிசோதனை ஒரு முககிய திருப்பத்தை நமக்குத் தந்திருக்கிறது.ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தந்த கோட்பாட்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.உலகமே அவரது "சார்புக்கோபாடுகளை கொண்டாடிய போதும் இதற்கே நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருப்பது அவரது அறிவு நுட்பம்  பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. சிதறல் அடையும் மின்காந்த அலையின் ஆற்றல் உட்கொள்ளப்படுவது வெளியே கதிராக பாய்ச்சப்படுவதும்
"துண்டு பட்ட  அளவு பாடு அல்லது அளபடைகளிலேயே"தான் (டிஸ்கிரீட் குவாண்டா) உள்ளன என்பது தான் இந்த "அளவுபடை  இயக்கவியலின்" இதயம் போன்ற
முக்கியப்பகுதி ஆகும். இதன் உள்ளே இன்னும் நுழைந்தால் வியப்பும் அந்த  நுட்பம் தரும் ஒரு அறிவு நெகிழ்ச் சியும் நம்மை சிலிர்க்க வைக்கும்

(தொடரும்)




அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.
==================================================ருத்ரா

தாத்தா அடைந்து கிடந்த
அந்த அறையில்
காலம் நீண்டு நெளிந்து
சினைப்பிடித்து
சட்டையுரித்த நாற்றம்.
காலத்தின் குஞ்சுகள்
கடிகாரத்தின் "டிக் டிக் டிக்"குகளில்
அங்கே சிதறிக்கிடந்தன.
தாத்தா
அந்த வைக்கல் சுருட்டிய
கடைசித் தலையணையில்
கிடத்தி வைக்கப்பட்டபோது
அவர் கனவுகளின்
புகைச்சுருள்
கொள்ளிச்சட்டியில்
மிச்சமாய் சுருண்டு சுருண்டு வந்தது.
அப்படி என்ன தான்
அவர் அறையில்
அவரை இத்தனை வருடம்
கவ்விப்பிடித்திருக்க கூடும்?
அந்த பழைய ட்ரங்குப்பெட்டியை
குடைந்தேன்.
வர்ணம் உதிர்ந்து
அங்கங்கே நசுங்கி இருந்தது.
அந்த பழம்பொருட்களை கவிழ்த்தேன்.
உருண்டையாய் சிறிதாய்
இரண்டு காசிச்செம்புகள்.
இதனை எப்படி மறந்தனர்?
உள்ளே காசித் தீர்த்தம் குலுங்குவது
கேட்டது.
அழுகிறதோ ?
அப்புறம் பொடிப்பொடியாய்
உதிரும் பழுப்பேறிய காதிதங்களில்
தேவாரம் திருவாசகம் புத்தகங்கள்.
திருமந்திரத்தில் ஏதோ பக்கத்தை மடித்து
அடையாளம் வைத்திருந்தார்.
"மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தில் மறைந்தது மாமத யானை.
...........................................................
................................................................."
சிவபூசையில்
தீட்சை எல்லாம் வாங்கி விட்டாராம்!
சாமி என்னடா சாமி என்னடா சாமி?
அது ஓஞ்சா அது ஒம்மேல படுத்துக்கிடும்!
நீ ஓஞ்சா அது மேலே நீ படுத்துக்கோ!
ஒண்ணுக்கு இருக்கிற நாய்க்கு
செக்கும் சிவலிங்கமும் ஒண்ணு தாண்டா.
சொல்லிவிட்டு
அட்டகாசமாய் சிரிப்பார்.
இன்னும் குடைந்தேன்.
சில அபூர்வ சிலைகள்.
அனைத்தும் நிர்வாண சிலைகள்..
சில வேளைகளில்
அந்த  சிலைகளைப் பார்த்து
உரத்து முழங்குவார்..
புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லிக்கொண்டே போய்
"சமணமும் சரணம் கச்சாமி"
என்று முடிப்பார்.
இன்னும் தோண்டித்  துருவிப்  பார்த்தேன்.
என்ன!
அவை "போர்னோ புத்தங்களா?"
அதிர்ச்சியில் உறைந்தேன்.
இதில் உறைவதற்கு என்ன இருக்கிறது?
எல்லாவற்றையும்
எல்லாவற்றிலும்
கண்டவர் விண்டதில்லை.
விண்டவர் கண்டதில்லை.

அவர் கருத்தில்
நிர்வாணமே பிரம்மாண்ட தெய்வம்.
உயிர்ப்பிழம்பின்
சொக்கப்பனையில்
ஆண் என்ன? பெண் என்ன?

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்
அவர் சாம்பலை கரைத்துவிட்டு.

==================================================





பட்ஜெட்



பட்ஜெட்
=======================================ருத்ரா


பொருளாதார வல்லுநர்களுக்கு
போதையேற்றும்
சில புள்ளிவிவரங்களின்
காக்டெயில் பார்ட்டி தான் இது.
ஏழைகளின் சொர்க்கம் இதோ
என்பார்
ஒரு அரைக்கால் சதவீத வளர்ச்சி காட்டி.
பணக்காரர்களுக்கு
சரியான சவுக்கடிகள் என்பார்.
அந்த சவுக்குள் எல்லாம் சும்மா
கிச்சு கிச்சு மூட்டும்
மயிற்பீலிகளின் சாமரம் தான்.
இரும்பு மனிதருக்கு
மூவாயிரம் கோடியில்
ஒரு சிலை..இதோ
பாருங்கள் என்கிறார்.
ஒரு மழையில்  எல்லாம் புரிந்தது.
சிலை
அவருக்கல்ல.
மழையின் ஆகாய கங்கை
அவர் தலை வழியே ஒழுகித் தீர்த்தபோது தான்
அது ஒரு "பகீர"தன் தவத்துக்கு என்று
புரிந்து போனது!
இவர்கள் ஒளித்து வைத்த ஊழல் எல்லாம்
கொட்டிக்கவிழ்த்து  காட்டியது.
இவர்கள் தவம் எல்லாம்
அந்த பங்குமார்க்கெட் பகாசுரர்களுக்குத் தான்
என்று புரிந்தது.
இன்னொரு உச்சம் தொடவேண்டுமென்றால்
ஒரு ஈ காக்கை இல்லாத
இமயமலையின் உச்சியிலே
கோடி கோடி காக்கை குருவிகளை
சுட்டு வீழ்த்தினோம் என்பார்கள்.
பங்கு வியாபாரமும் கொடிகட்டி பறந்து விடும்.
வருமானத்திலிருந்து விலக்கியே
வைக்கப்பட்டவர்களின்
பெரும்பான்மை ஜனநாயகத்தின் தேசம் இது.
ஆனாலும்
அந்த சிறுபான்மையின் "குச்சி மிட்டாய்"
வரிச்சலுகை எனும்
வருமான வரி விலைக்குகளை
வானளாவ புகழ்ந்து நிற்பார்.
சில கூழாங்கற்கள் சந்தோஷப்படலாம்.
ஆயிரம் இமயங்களை திரட்டி வைத்திருக்கும்
அந்த பெரும்பணக்காரர்களின்
கருப்புக்கோட்டைக்குள்
இவர்களின்
மூவர்ணக்கொடி முனைமுறிந்து அல்லவா
கிடக்கிறது.
அதுவும் அந்த
நான்கு வர்ண ஐந்து வர்ண
சாதி மத மத்தாப்புக்காடுகளில்
மாய்மாலங்கள் கொழுந்து விட்டு எரிய
நம் வரலாற்றுபக்கங்கள் எல்லாம்
கருகிக்கிடக்கின்றன.
ஆனாலும் அதோ
மேசைகள் தட்டுகிறார்கள்
காதுகள் பிளக்க.

==========================================================