ஞாயிறு, 9 ஜூன், 2019

சிந்துபூந்துறை

சிந்துபூந்துறை
=======================================ருத்ரா

நைல் நதியாம்
தேம்ஸ் நதியாம்
கங்கை யமுனைகளாம்.
யாருக்கு வேண்டும் அவை?
திருநெல்வேலியின்
தாமிரபரணி
தன் பளிங்குக்காகிதத்தில்
மெல்லிய கிசு கிசுக்களை
கவிதையாக்கி எழுதித்தருவாளே!
அதில் உலக இலக்கியம்
கூழாங்கற்களாய்
உருண்டு உருண்டு வரும்.
புதுமைப்பித்தன்
தன் மந்திரப்பேனாவை
அதற்குள் தான்
ஒளித்து வைத்திருந்தானா?
கரையோரத்து
பனங்குட்டிகளையே
தன் "விசிறிகளாக்கி"க்
கொண்டவன் அவன்.
அந்த "கயிற்றரவும்"
மற்றும்
"கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்"
சிந்துபூந்துறையின்
ஆற்றங்கரையில்
நெய்யப்பட்ட‌
சமுதாயத்தின் ஆற்றுப்படைகள்
அல்லவா!
சென்னை திருவல்லிக்கேணி வரை
அந்த ஆற்று அலைகளின்
திவலைகள் தெறிப்பதுண்டு.
மேரீனா அலைகளும்
சிந்துபூந்துறையில் வந்து
சிலிர்த்துக்கொள்வது உண்டு.
வறுமை
என்ன அவ்வளவு பயங்கரமா?
ஆம்.
நாம் என்றால்
கிழிந்த பாயின் கந்தலாய் அல்லவா
கிடப்போம்.
அவன் அதன் ஆழத்தில்
முக்குளித்து
இலக்கிய முத்துக்களை
அள்ளிக்கொண்டிருப்பான்.
"சுண்டெலியும் மனிதர்களும்"
என்ற உலகப்புகழ் பெற்ற‌
நாவலைத்தந்த‌
ஸ்டீன்பெக்கின்
எழுத்தின் மணம்
மனிதனை சவமாக்கி விடுகிற‌
வறுமையையே
அடித்து சவட்டி விட்டது.
அப்படி
புதுமைப்பித்தனின்
எழுத்துக்கள்
சமுதாய கோரைப்பற்களின்
இடையிலும் புகுந்து கொண்டு
மயிலாப்பூர் சாக்கடையின்
கொசுக்களை விரட்டி அடித்தது.
அவன் எழுத்துக்களுக்கு
ரீங்காரத்தை சுருதி சேர்க்க‌
அந்த கொசுக்கள் எனும்
"சிறகு முளைத்த" குண்டூசிகள் தான்
உலாக்கள் வரும்.
கலைவாணியின்
நவரத்ன வீணையா வந்து
"ஆனந்த பைரவியை" பாடும்.
தமிழ்ச்சிறுகதைகளில்
அவன் சொற்றுளிகளின்
சிற்றுளிகளில்
எங்கிருந்தோ ஒரு விடியல் சிற்பம்
"சில்ஹௌட்" எனும் கீற்று வெளிச்சத்தை
கசிய விட்டுக்கொண்டே இருக்கும்.
சிந்துபூந்துறை
தண்ணீர் அல்ல.
ஆறு அல்ல.
உயிர்ப்போடு ஓடுகின்ற‌
அவன் எழுத்துக்களின்
இன்றைய மியூசியம் அது.

===================================================================


 

சட்டம் ஒரு இருட்டறை

சட்டம் ஒரு இருட்டறை
===========================================ருத்ரா

படம் அருமை.
வசனம் பிரமாதம்.
நடிப்பு?
எரிமலைகளே
எழுந்து வந்து விட்டன
நடிப்பதற்கு.
உணர்ச்சிக்குழம்பில்
சொற்கள் வார்க்கப்பட்டன.
திரைக்கதை
டெல்லிக்குள் எல்லாம்
நுழைந்தது.
அநீதியை எதிர்த்து
நீதிக்கு
நரம்புகள் புடைத்தன.
நீதியின் தராசுகள்
சிவ சக்தி நடனம் ஆடின.
சட்டப்புத்தகங்களின்
அத்தனை புத்தகங்களும்
ஆழிப்பேரலைகளாய்
தலை விரித்து ஆடின.
நம் தலை எழுத்துக்கள் எல்லாம்
மீண்டும் புதிதாய்
எழுதப்படப் போகின்றனவோ?

அதெல்லாம் சரி!
இது என்ன?
ஏதோ பட்டன் என்று
இந்த கணிப்பொறியில்
விரல் இடறிற்று.
விளக்குகள் மட்டும் அணைந்தன‌
படத்தையும் காணோம்
வசனத்தையும் காணோம்.
தராசு தட்டுகள் எங்கோ
சிதறிக்கிடந்தன.

===========================================================


நீ எங்கள் இதயம்.


நீ எங்கள் இதயம்.
==============================================ருத்ரா

பாராளுமன்றமே !
நீ எங்கள் இதயம்
நாங்கள் அறிவோம் .
நீ அறிந்துள்ளாயா?
உணர்ந்துள்ளாயா?
உனக்குள்
உறைந்து கிடக்கும்
அந்த எதிரொலிகள்
இந்தியாவின்
இதயத்துடிப்புகளாமே!
எங்களுக்கு எத்தனை மொழிகள்!
அத்தனையிலும்
நீ உயிர்த்து நிற்கிறாய்.
ஆங்கிலேயன்
தனக்கு வேண்டுமென்று
நம்மையெல்லாம்
ஒரு கயிற்றில் கட்டவேண்டும் என்று
அந்த ஆங்கிலத்தையும்
நமக்கு
ஓதிவிட்டுப்போனான்.
அவன் ஓதிய மொழியில் தான்
புரிந்து கொண்டோம்
இவர்கள்
ஓதிய வேதங்களில்
சாதி மட்டுமே
மானுடத்தை
தீண்டாமை சாட்டையால்
தோலுரிய ரத்தம் வடிய
அடித்து தீர்த்துக்கட்ட பார்த்தது என்று.
அரசியல் சட்டம் அமைத்து
அரண் செய்த போதும்
அந்தக்காகிதங்களை  எல்லாம்
கரையான்கள் தின்றுவிடுமோ
என்ற அச்சம் மட்டுமே
இன்னும் இந்த
மசோதா மண்டபங்களில்
நிழல் காட்டுகிறது.
இந்தி ஒரு இனிய மொழி.
ஆழமான உருதுக்கவிதைகளின்
விதைகள் இதில்
நந்தவனமாய் அடர்ந்து இருக்கிறது.
மொழிப்பற்றாளர்கள் கூட
காமம் செப்பாது
களிக்கும் மொழி தான் இது.
ஆனால் இதன் பின்னே
ஆதிக்கம் எனும் கொல் இருட்டு
எங்கள் உயிரான தமிழை
அவித்து தின்ன முனையும்
அநீதி ஒன்று
நச்சு முள்ளாய் நெருடிக் கொண்டிருக்கிறது.
நம்மை ஆட்சி செய்யத்தானே
ஆங்கிலம் கொண்டு வந்தான்.
அதையே வைத்து
நம்மை நாமே ஆண்டு கொண்டு
ஒற்றுமை எனும்
நம்பிக்கைக்கயிறு
நமக்குள்ளே கட்டிக்கொண்டால் என்ன?
முரண்டு பிடிக்கும்
மூடக்கருத்துகள் நீக்கி
உலக மானிடத்தின் சாளரம் திறந்து
கணியன் பூங்குன்றனின்
உலகம் உய்விக்கும் அந்த
உயிர்ப்பாடலை ஒலிக்க விடலாம்
வாருங்கள்.
"யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.."
இவ்வரிகளின்
எல்லா மொழி பெயர்ப்புகளிலும்
எனக்கு கேட்பது
தமிழின் இனிமை இனிமை
இனிமை மட்டுமே.

===================================================









சனி, 8 ஜூன், 2019

காதலை எப்படிச் சொல்வது?

காதலை எப்படிச் சொல்வது?
========================================ருத்ரா

காதலை எப்படி சொல்வது?
வார்த்தைகளை தோண்டி தோண்டி
எழுதலாம் என்று உட்கார்ந்தான்.
காகிதப்பரப்பு முழுவதும் மயான அமைதி.
அதன் மேல் பேனா.
அதன் மேல் ஒரு ஈ.
அது கூட கோளக்கண்ணாடி முட்டை போல் தெரிந்த‌
தன் கண்ணின் வலை மிடைந்த பிம்பத்தை
பிசைந்து பிசைந்து உருட்டியது.
முன்கால் நுண்கம்பிச்சுருளை
மீட்டி மீட்டி
ஏதோ வாசித்தது..
இவனுக்கு கேட்டது...
"கொல வெரியிலிருந்து..டங்கா மாரி" வரைக்கும்..
ஆகா.. அவனுக்கு பொறி தட்டியது.
பிச்சு பிச்சு வார்த்தைகளை
எறியணும்.
கடிச்சு கடிச்சுத் துப்பணும்.
மீன் எலும்பு கணக்கா வரி வரியா
அதுல நெழல் விழணும்.
லவ்வு அதுல கவ்வு செய்யணும்..
அம்ப்டித்தேன்..
அப்றம் ரவிக்கை கொக்கி கணக்கா
கப்புன்னு புடிச்சுக்கும்..
அவன் எளுத ஆரம்பிச்சான்.

"டகல் பேட்டா பால் பேட்டா.
ஒம் மூக்கு மேல நா போட்ட‌
சுவாச காத்து பட்டா
அது ஜென்மத்துக்கும் "பட்டா"

ஊய்..
அவன் காதலி விரல்களை
வாய்க்குள் அமுக்கிக்கொண்டு
அடிச்சா பாரு விஸிலு...

லேசர்க கலரு கலரா பிழிஞ்சுதுக
கிடாரும் ட்ரம்மும் ஒலிப்பூக்களை
பிச்சு பிச்சு கோத்துதுக..

ஐ லவ் யூயூயூ...
லவ் லெட்டர் "ச்ஜ்ஜெஸ்டிவ் க்ராபிக்ஸில்"..
நரம்பு நரம்பா கரப்பாம்பூச்சி மீச ஆட்டி ஆட்டி
..ஸூம் இன்..ஸூம் அவுட்.
ஆடியன்ஸ் சுநாமியில் தீக்கொளுந்தா மழ பெஞ்சு..
எல்லாமே கரஞ்சு போச்சு.
கனவுப்பீய்ச்சல்..கனவுப்பீய்ச்சல்
ஆகாசமே கந்தல் தான்...

மறுநாள் சூரியனைக்காணவில்லை.
மரம் தோறும் செடி தோறும்
தொங்கினான் வெட்டிப்போட்ட வேதாளமாய்.

மீண்டும் தொடங்கிவிட்டார்கள்
பேப்பரும் பேனாவுமாய்..
இந்த காதல் விக்கிரமாதித்தர்கள்..

==============================================
21.02.2015

வெள்ளி, 7 ஜூன், 2019

உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?

உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?
=========================================================ருத்ரா

உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா?
என்று தோளைத் தட்டி
கையை குலுக்கி
முகங்களில் ஒரு எரிமலையைத்தேக்கி
பல மேனரிஸங்களில்
நடித்துக்காட்டியிருப்பாரே ரஜனி
தளபதி என்கிற "படத்தில்"!

அந்த ரஜனி
உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?
என்று நம் அரசியலுக்கு
பஞ்ச் டைலாக் விட்டுக்கொண்டே இருக்கிறார்.
ஏன் இந்த டேக் ஓகே ஆகவில்லை?

அவருக்கு
"இமேஜ்" மட்டுமே போதும்.
எல்லோரையும் பாராட்டும் அவர் குணமே
அவர் சிகரம்.
சினிமா வெற்றிகளின் சிகரங்கள்
எல்லாம்
செட்டிங்க் அட்டை சிகரங்கள் தான்.
அவர் உலகம் முழுதும்
சிரிக்கிறார்.
சுடர்கிறார்.
அரிதாரங்களையும்
அவதாரங்களையும்
அவர் பொருட்படுத்துவதில்லை.
யாரோ எவரோ
என்று ஒரு இமயமலை பாபாவை
எப்போதும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும்
ஒரு இமயமலை இவர்.
"இது எப்டி இருக்கு"
என்று
இவரையே ஒரு இமய மலைக்குகை
தியான பாபா
திகைக்க வைத்திருக்கிறார்.
படங்கள் வேறு
ஓட்டுக்கள் வேறு
என்று இவர் கலங்கத்தேவையில்லை.
எந்திரனாக நடித்தவரும்
எந்திரத்துக்குள் எந்திரமாக‌
இருந்து வியூகங்கள் காட்டி
வித்தை காட்டியவரும்
இப்போது ஒரே நேர்கோட்டில் தான்
இருக்கிறார்கள்.

ஆனால் ரஜனி அவர்களே !
உங்கள் திசை வேறு!
உங்கள் வழி வேறு!
ஓட்டுமழை பெய்த வானம்
எப்படி
கர்னாடகா உள்ளாட்சிகளில்
திடீரென்று ஒரு "சஹாராவாய்"
மாறியது?
கம்பியூட்டர்களின் நாடித்துடிப்புகளுக்குள்
எல்லாம் புகுந்து நடித்து
திரும்பி வந்தவர் நீங்கள்!
மனிதன் நினைத்தால்
அந்த இறைவனைக்கூட
"ஹேக்கர்" ஆக்கி  விடுவானோ?
தேர்தல் கூட சினிமா தான்!
அன்புக்குரிய எங்கள் ரஜனி அவர்களே!
உங்கள் "பஞ்ச்" டைலாக்குகளை
நீரூற்றி நந்தவனம் ஆக்கி வைத்திருங்கள்.
இந்த‌
ஜனநாயகத்தை கண்டு மிரண்டு நிற்கும்
நீங்கள் தான்
இந்த ஜனநாயக்காவலராய்
சீற்றத்துடன் ஒரு புதிய பாகுபலியாய்
ஆம்
நீங்கள் கூறிய அந்த ஒற்றைச் சிங்கமாய்
சிலிர்த்தெழ வேண்டும்.
ரஜனி என்றால்
எங்கள் நம்பிக்கை
என்னும் இந்த வரியில்
ஒரு விடியல் உண்டு
என்பதும் எங்கள் நம்பிக்கை.
கூழைக்கும்பிடுகளின் கூஜா அல்ல நீங்கள்!
கூர் வாள் நீங்கள்.
சர்வாதிகாரம் எந்த வேடம் புனைந்து
வந்தாலும்
தந்திரங்களையெல்லாம்
தவிடு பொடியாக்கும்
தலைவர் நீங்கள்.
"அந்த ஆண்டவன் சொல்றான்
இந்த அருணாலம் கேட்கிறான்"
இந்த கணினிப்பொறிகளில்
ஒலிக்கும்
மக்கள் எனும் அருணாசலம்
வெறும் சாமி அல்ல‌
இந்த சூடம் சாம்பிராணிகளுக்குள்
சுருண்டு மயங்கிக்கிடக்க.
அந்த "எஜமானன்" அழைக்கிறான்.
உங்கள் கன்னம் புடைக்க நரம்பு துடிக்க‌
சீற்றத்துடன் புறப்படுங்கள்.
எங்கள் கனவு உங்கள் கையில்.
வாழ்க ரஜனி!
வெல்க ரஜனி!

=========================================================







பொறி




பொறி 
================================================ருத்ரா 



புதல் மறைத்து வேட்டுவன் 
புள் சிமிழ்த்தற்று..

எத்தனை குரல்கள்?
எத்தனை பாட்டுகள்?
எத்தனை வேடங்கள்?

நம் 
மாட்டுவண்டிப்பொருளாதாரத்திலும் 
உங்களைபிடிக்க 
அதி நவீன கணிப்பொறி.
வளர்ந்த நாடுகள் கூட 
இன்னும் 
சீட்டுக்குலுக்கிக்கொண்டிருக்கும்போது 
உங்களுக்கு 
தட்டுவதற்கு வித விதமாய் 
பட்டன்கள்.
நம் கண்ணாடி பிம்பம் தானே 
என்று 
நம் முகத்தைப்பார்த்தபோது 
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
நம் கண்களைக்  காணோம்.
நம் செவிகளைக்காணோம்.
வாயில் 
"ஓட்டுப்"பிளாஸ்திரி.
வயிற்றில் 
வர்ண வர்ணமாய் 
சோற்றுப்பிண்டங்கள்.
நாலு வேதமும் நாலு வர்ணமும் 
சேர்ந்து 
கொத்துக்கறி போட்ட 
மசாலா பிரியாணிகள்.
நீலத்திமிங்கில விளையாட்டுகளில் 
முதிர்ச்சியடையாத 
ஜனநாயக சிறுவர்கள் 
நிகழ்த்திய பேரழிவின் 
வழித்தடங்களா இவை?
ஹேக்கர்கள் 
சமைத்த கானல்நீர் கிராஃபிக்ஸ்கள்  போல்  
நம் 
இந்திய தேசம் 
இப்படியா  லாரி ஆக்சிடெண்டில் 
தலை நசுங்கிப்போன 
சித்திரங்களைக்  காட்டுவது?
அதில் நசுங்கிக்கிடப்பது 
உங்கள் 
கடவுள் எனும் கரப்பான் பூச்சியும் தான்.
நம்மைக் 
கடவுள் காப்ப்பாற்றுவாராக 
என்று 
இனி எந்த கடவுளிடம் போய் 
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாடுவது?

===============================================









தேடு


தேடு
=================================================ருத்ரா

"நாட்களை எண்ணுவதன் அடையாளமே
ஜபமணிகளை உருட்டுவது!
இன்பமும் துன்பமும் மாறி மாறி
வருவதை விரல் தொட்டுப்பார்.
கவலைகளை
லாப நட்டக்கணக்காக்கி
அமைதி கொள்.
கண்ணீர்த்துளிகளையும்
பங்கு மூலதனமாக்கி
பகடை விளையாடு.
சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும்
உன் கையில் விழும் மலர்களாக‌
நீ கருதுவாயானால்
இந்த வானமே அடுத்த விநாடி
உனக்கு பொன்னாடை போர்த்தும்.
நம்பிக்கை..
நம் பூமி உருண்டையின்
கற்பனையான‌
அச்சுக்கோடு ஆகும்.
நீ நிலையாக நிற்கிறாய்.
ஆனாலும் சுழன்று கொண்டிருக்கிறாய்.
அதுவே நம்பிக்கை.
ஆயிரம் கோடிக்குப்பிறகு
ஆயிரத்தொன்றாவது கோடி வரவில்லையே
என்று
உனக்கு நெற்றிச்சுருக்கங்கள் எத்தனை பார்?
மத்தியானம்
கோவிலின் உருண்டை சாதம் கிடைத்தது.
இரவுக்கு
வயிற்றுப்பசியால்
வயிற்றில் சுருக்கம் விழுவதைப்பற்றி
அந்த பிச்சைக்காரனுக்கு கவலை.
நெஞ்சுக்கூடு துருத்த‌
பார வண்டி இழுப்பவனின்
வியர்வையால்
அந்த தெரு முழுவதற்கும்
கும்பாபிஷேகம் தான்.
ஆனால் அவனுக்கு
கூலியோடு
இந்த உலகின் துருவமுனை
முடிந்து நிற்கிறது...
நாம் எதற்கு பிறந்தோம்.
ஏன் சாகிறோம்.
இதயமும் மூளையும் கல்லீரலும்
நுரையீரலும்
நமக்கு "பாஷ்யம்" எழுதுகின்றன.
நமக்கு "புரிவதற்காக"
அவை எழுதப்படவில்லை.
இன்னும்
எழுத்து தொடர்கிறது.
அதன் "தலை எழுத்தை தேடி"
அந்த எழுத்தும் தொடர்கிறதோ..."

போதுமடா சாமி..
யாரோ எவனோ டைரியில்
கிறுக்கியதையா
இத்தனை நேரம் படித்தேன்.
அந்த பொட்டலக்காகிதத்தைப் போட்டு விட்டு
என் தேங்கா..மாங்கா பட்டாணி
சுண்டலைத் தேடினேன்.
மெரீனா மணலில்
அது சிதறிக்கிடந்தது.

==============================================
14.06.2015