சனி, 18 மே, 2019

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல்
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================

தரிசனம்



தரிசனம் 
====================================================================
ருத்ரா இ பரமசிவன்.



கடவுளுக்கு 
கார்ட்டூன் வரைய 
மனிதன் 
சளைத்ததே இல்லை.
வெள்ளை இதழ்கள் இங்கே குவிந்து கொண்டு 
மௌனத்தை ஒலியெழுப்புகின்றன.
கும்பிடும் கைகளின் ரேகைகள் எல்லாம் 
ரத்தத்தைக்கொண்டு 
இந்த பூமியில் 
ரங்கோலிகள் வரைகின்றன.
எந்தக்கடவுள் 
யாருக்கு சொந்தம் என்று 
துப்பாக்கிகளை உமிழவைத்து 
எச்சில் வடிக்கின்றன.
இவர்களின் புனிதம் 
மரண ஓலங்களால் தான் 
தினம் தினம் 
தீர்மானிக்கப்படுகின்றன.
அமைதி எனும்  ஆழ்கடலில் நங்கூரம் பாய்ச்சுவதாய் 
இறைக்கூச்சல்கள்
தூண்டில் இரைகளாய் விழுகின்றன.
ஒரு தடவையேனும் 
இறையின் வாய் 
அந்த இரையைக்ககவ்வியதே இல்லை.
பள பளப்பான 
நம் பணங்களைக்கொண்டு
உயரமான நாவுகள் எனும் கட்டிடங்களைகட்டி 
நக்கித்தான் பார்க்கிறோம்.
வெறிமிக்க 
நம் பேராசைகள் அந்த ஓசோன் படலத்தை 
கந்தலாக்கியத்தில் 
நம் மகா மரணம் எனும் மகா நிர்வாணமே 
தரிசனம் 
தந்து கொண்டிருக்கிறது.



==========================================================




வெள்ளி, 17 மே, 2019

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ்
தோலின் முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
.
______________________________________________________________


விளக்க உரை.
==============================================ருத்ரா இ.பரமசிவன்

தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
கொடுவரி முதலை குடை தண் துறைய‌
குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

தன் குட்டிகளையே தின்னும்முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா?எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
வேங்கை வரித்த திண்கால் ஓமை
அசைவுறு காலை முரண்தர முரலும்
அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)



எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம்  வந்து என்னைத் தழுவிக்கொள்வாயாக. அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.

==============================================ருத்ரா இ.பரமசிவன்


நரைவனம்.

நரைவனம்.
===================================================ருத்ரா



அந்த ஜன்னல் வழியே

கண்களை துருவவிட்டேன்.

அந்த இரும்புக்கம்பிகள்

கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌

வயது பதினாறில்.

இன்றும்

அப்படித்தான்

பார்வைகளின் நாக்குகள்

கம்பிகளை வளைத்து

நக்கிக்கொண்டிருந்தன.

அன்று அந்த விநாடிப்பிஞ்சில்

கண்ணின் பார்வையில்

அவள்

ஒரு அரை சதவீதத்தைக்கூட‌

என் மீது வீசவில்லையே.

அந்த மின்னல் கயிறு அன்றோடு

அறுந்தே போனது.

அப்புறம் நான்

சமஸ்கிருதத்தில்

மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி

ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில்

நசுங்கிய கரப்பான் பூச்சியாய்

அச்சிடப்பட்டு விட்டேன்.

ஆம்.அது என் திருமணம்.

இந்த கேடு கெட்ட அந்துப்பூச்சிக்கும்

அழகாய் அமைந்தாள் ஒருத்தி

ஒரு குடும்ப விளக்காய்.

என் குடும்பம் ..என் மக்கள் என்று

என் தேசம் விரிவடைந்தது.

அந்த அன்புப் பிரவாகத்தில்

திணறிபோய் விட்டேன்.



அந்த சன்னல் பக்கம்

என்னவோ

ஒரு இரும்புத்திரை

விழுந்து விட்டது.



நரைவனம் புகுந்தும்

சன்னல் கம்பிகளில்

அந்த நிழற்சுவடுகள்

ஊமைத்தனமாய் "ஷாக்"அடித்தன.

என்றோ ஒரு நாள்

அந்த மூளிமேகங்களிடையே

மூண்டு எரிந்த

இனிப்புச்சுவாலை

இன்னும் மூட்டிக்கொண்டிருக்கிறது

சிதைத்தீயை.

காதலுக்கு இறப்பு நேர்ந்ததும்

அதற்கும் வாழ்க்கை கொண்டு

வரட்டிகள் அடுக்கத்தானே வேண்டும்.

இருப்பினும்

வாழ்க்கைக்கு வசந்தம் காட்டும்

தூங்குமூஞ்சி மரங்களின்

அந்த பஞ்சுமிட்டாய்ப்பூக்களின்

மென் சாமரங்களைக்கொண்டு

நான் காற்று வாங்கிக்கொள்ளப் 

பழகிக்கொண்டேன்.

பூ புல்  புள் வானம் என்று

வெறுமையின் கரைசலில்

காணாமல் போய்விட்டேன்.



வயதுகள்

என் இடுப்பில் முட்சங்கிலி கட்டி

இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

எங்கோ ஒரு கணத்தில்

விழுந்துவிட்ட அந்த நினைவு வாசத்தின்

முற்றுப்புள்ளியை

மைல்கணக்கில் நீட்டி

பொற்சங்கிலியாய் தட்டி தட்டி

தடம் பதித்து

ஓடிக்கொண்டிருக்கிறேன்.



==============================================================

கமல் தொட்ட சரித்திரப்பாடம்.

கமல் தொட்ட சரித்திரப்பாடம்.
==============================================ருத்ரா

காந்திஜிக்கு
நான் கொள்ளுப்பேரன் மாதிரி தான்
என்று
"மய்யம்" துவக்கிய நாளிலிருந்து
கமல் எல்லாக்கோணங்களையும்
தொட்டு
அப்புறம் விட்டு
அப்புறம் தொட்டும் விட்டும்
உலா வந்து கொண்டிருக்கிறார்.
அன்று
மதவெறியின் சூது கவ்விய‌
தர்மம் குண்டு துளைத்து
வீழ்ந்ததை பற்றி
அரவக்குறிச்சியில்
நினைவு படுத்தியிருக்கிறார்.
அந்த தேசிய தாத்தாவின்
ஒரு கொள்ளுப்பேரனாய்
கொந்தளித்து விட்டார்.
நம் இந்திய சரித்திரம்
சுதந்திரக்கொடி ஏற்றி
பட்டொளி வீசும்போதே
மத நல்லிணக்கத்தால்
உலகிலேயே மானுட அன்பின்
மிக அகன்ற ஒரு மனிதமார்பு
ஒரு குறுகிய மனத்து இந்துவால்
வெறியுடன் சுடப்பட்டதே
என்று வேதனையுடன்  பேசியிருக்கிறார்.

கடந்த எழுபது ஆண்டுகளாக‌
நம் "தியாகிகள் தினம்"இப்படித்தானே
அந்த தேசத்தந்தைக்கு
உருக உருக மெழுகுவர்த்திகள்
ஏற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால்
இப்போது
எப்படி
அந்த வெறி
ஆங்கிலப்படத்து டிராகுலா போல்
உயிர்த்தெழுந்து
இந்தியாவெங்கும்
ரத்தம் கசியும் கோரைப்பற்களைக்கொண்டு
கொக்கரிக்கத்துவங்கியது ?

இங்கு மக்கள் எல்லாம்
பக்தியின் ஈசல் கூட்டம் தானே.
அதில் ஊதுபத்தி செருகிவைப்பது போல்
மதவெறியைச்செருகி
மத்தாப்பு காட்டி
ஓட்டுகளின் வேட்டைக்காட்டில்
இந்தியாவின் பன்முகத்தன்மையை
பாழடிக்கும் ஒரு கூட்டத்தின்
சூழ்ச்சி அரசியலே இது.

காந்திஜியின்
இந்த கொள்ளுப்பேரன்களை
அராஜகத்தின் சில "லொள்ளுப்பேரன்கள்"
சூழ்ந்து கொண்டு தாக்கும்படி
ஜனநாயக அபிமன்யுவின் வியூகம்
எப்படி உடைந்து போனது?

வாக்குகளை அளியுங்கள் என்று
பணிய வேண்டியவர்கள்
நாக்குகளை அறுப்போம்
என்றல்லவா
தேசிய கீதம் பாடுகிறார்கள்.

மின்னணு வாக்குப்பெட்டிக்குள்
நடக்கின்ற‌
இந்த குருட்சேத்திரப்போரில்
மீண்டும்
"அஸ்வத்தாமா இறந்து விட்டான்"
என்ற பொய்ச்செய்தியை
வானொலிபோல்
பரவச்செய்து கொண்டிருக்கிறார்களோ?

பொறுத்திருப்போம்.
வானம் கிழியும்.
விடியலில் தெளியும்!

======================================================

வியாழன், 16 மே, 2019

"வளைநரல் பௌவம் உடுக்கையாக.."

"வளைநரல் பௌவம் உடுக்கையாக.."
=====================================================
ருத்ரா இ பரமசிவன்


வளைநரல் பௌவம் உடுக்கையாக‌
வானம் முட்டி நிற்பவன் இறைவன்.
உடுக்கை குலுங்க உயிர்கள் அவிழும்
உலகம் எங்கும் அம்மணம் தான்.
சங்கு சக்கரம் பாம்பில் படுக்கை
கார்ட்டூன் சித்திரம் உட்பொருள் விளங்க
காயும் மனத்துள் திரைப்படம் ஓட்டி
காலம் எல்லாம் கைபிசைந்து நின்றோம்.
இன்னமும் புரியலை என் செய்வோம்?
மீன்கள் வந்து வேதங்கள் காத்தன‌.
பன்றியே வந்து பல்லை ஏந்தி
ஊழிப்பேரலை உண்ணா வண்ணம் இம்
மண்ணைக்காத்துக் கொடுத்து சென்றது.
ஆமை கூட அடித்தூண் நிறுத்தி
அண்டம் காத்து ஆறுதல் தந்தது.
சிங்கம் வந்தது மனிதன் உடலில்
சீறிப்பாய்ந்து குடலும் கிழித்தது.
தீமை என்னும் அடையாளத்தை
நார் நாராக்கி நானிலம் காத்தது.
மனிதனும் வந்தான் உயர் பிறப்பெடுத்து.
ஒருவன் இங்கு வில்லேந்தி வந்தான்
பத்து தலையில் பாதகம் செய்யும்
பொல்லறத்தினை  பொடிப்பொடியாக்கினான்.
கோடரி கொண்டு கோபம் கொண்டவன்
கொடுமை அரசரை வெட்டியே வீழ்த்தினான்.
ஏரும் கலப்பையும் மறந்தவரிடையே
ஊரையும் காத்து உலகம் காத்திட‌
உத்தமன் ஒருவன் புன்னகை பூத்தான்.
தாழங்குடையில் வந்தவன் ஒருவன்
தானம் வாங்கி தர்மம் காக்க‌
மூன்றே அடியில் அண்டம் அனைத்தும்
சர்வே செய்தவன் சர்வேசுவரன் என்று
போற்றித்துதித்து புல்லரித்து விட்டோம்.
மாயக்கருப்பன் மாயம் செய்தான்.
பகடை உருட்டலில் பாரதம் காட்டினான்
பல்லுயிர் தின்னும் கொல்பகைப்போர் என‌
சொல்லொளி காட்டினான் சோதி ஆகினான்.
கல்லும் கனியும் யுகம் ஒன்றேந்தி
கடுகியே வருவான் ஒருவன் என்று
கண்கள் பூத்து காத்துக்கிடக்கின்றோம்.
சப்பளாக்கட்டைகள் தட்டி தட்டி
சரித்திரப் பாடல்கள் பாடுகின்றோம் நாம்.
வந்தது எல்லாம் வெந்தது அல்ல.
வேகாத அரைகுறை வேதமும் உண்டு.
நுண்மாண் நுழைபுலம் இன்மையாலே
உண்மையின் உண்மை தெரியவேஇல்லை.
உண்டு என்றும் அன்று என்றும்
உரைகள் உரைகள் ஆயிரம் உரைகள்.
உரைக்கும் உறைகல் அறிவியல் ஆகும்.
சூரியனைக் கூட‌ ஜூஸ்ஸாய் ஆக்கி
குடிப்பான் "சூரிய நரனே"இங்கு.
கோடி கோடி கோடி என்று
மைல்கள் நீட்டிய‌ அறிவின் "ஸ்ட்ரா"வில்
அண்டம் உறிஞ்சும் அதிசய மனிதன்
அவதாரம் எடுத்து வருவான் காண்பீர்.
சாதி சமய செப்பு விளையாட்டுகள்
ஆடும் வரை ஆடுவீர் சூழ்ச்சிகள் செய்து.
அன்றொரு நாளில் ஓர் ஆலிலை மிதக்கும்
அண்டத்தின் முட்டை அதில் மூடி இருக்கும்.
அழிவுகள் அழிவுகள் ஊழ் பல எடுக்கும்
அப்போதும் அங்கு காத்திடும் அறிவியல்.
குவார்க்குகள் குளுவான்கள் கிராவிடான்கள் என்று
விஞ்ஞானப்புராணம் விந்தைகள் புரியும்.
ஏதோ ஒரு அண்டம் ஏதோ ஒரு பூமி
அதிலும் இருப்பான் ஆற்றல் மனிதன்.
"ஏலியன்" என்று புதிர்ப்பெயர் சூட்டி
ஏடுகள் குவிக்கும் அற்புதம் ஆயிரம்.
அவனே நமது கல்கி என்றே..ஒரு
கற்பனை செய்வோம்!கற்பனை செய்வோம்.

=======================================================
28.01.2017

சாவிகள்

சாவிகள்

===============================ருத்ரா




ஆயுள்

பதினாலு வயதுடன் முடிந்து போனது.

அப்போது நான்

பட்டாம்பூச்சியின் வண்ணங்களுடன்

முடிந்து விட்டேன்.

நள்ளிரவில் சுவர்க்கோழிகளுடன்

சினிமாக்கள் பார்த்துவிட்டேன்.

தண்ணீர்த்திவலைகளின்

வைர மூச்சுகளில்

"முற்றும்"எழுதிவிட்டேன்.

வானவில் ஏழுகலரில்

பஞ்சு மிட்டாய் சுருட்டிக்கொடுத்த‌

இனிப்பில்

கரைந்து விட்டேன்.

ரோஜா இதழ்களை

மென்று தின்று இந்த‌

கனவுகளின் ருசி பார்த்து

வாழ்க்கை அகராதியின் அட்டையையும்

தாண்டிய சொல்லின் வேருக்குள்

சமாதி ஆகிவிட்டேன்.

அவன் விழியோடு மோதியதில்

தெறித்த தீப்பொறிகளில்

நான் சாம்பல் ஆகி விட்டேன்.

இதற்கு காதல் என்று

நெஞ்சில் பச்சை குத்தியபிறகு

கடந்து செல்லும் நாட்கள் எல்லாம்

கல்யாணம் கெட்டி மேளம்

கூடு குஞ்சு குளுவான்கள்

இரை தேடல்

இரை ஆதல் எல்லாம் கூட‌

அந்த அகராதி சொல்கிறது

மரணம் மரணம் மரணம் என்று தான்.

சங்கராச்சாரியார் பாடியதும்

இப்போது இனிக்கிறது.

ஜனனம் மதுரம்.

மரணம் மதுரம்.

சிதை அடுக்கி படுத்துக்கொண்டு

கொள்ளிக்குடம் உடைத்து

தீயில் கரைவது தான் மரணமா?

வாழ்க்கை அடுப்பு ஊதும் முன்

நம் திரைச்சீலையில்

பிக்காசோவைக்கொண்டு

அந்த ஓவியங்கள்

பதியம் ஆகிவிட்ட பிறகு

சாம்பல் பூக்களில்

மகரந்தங்கள் தேடுகிறோம்.

பதினாலு வயதுக்குப்பிறகு

இந்த வயதுகள் எல்லாம்

சாவியாகிப்போன நெல்மணிகள்.

இருப்பினும் சாவி தேடுகிறோம்

வீடும் இல்லாமல்

வாசலும் இல்லாமல்

பூட்டிக்கிடக்கும் கதவுக்கு.



=======================================
12.02,2017