வெள்ளி, 22 ஜூன், 2018

(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)


அந்த சூரியனை நனைக்க முடியாது
=================================================ருத்ரா
(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)


எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த "சிறுகதை மன்னன்"
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.

சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு "கயிற்றரவு"மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.

"யாருக்காக அழுதான்?"
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!

===============================================ருத்ரா
12.04.2015 ல் எழுதியது.

புதன், 20 ஜூன், 2018

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
===============================================ருத்ரா
28.04.2015




ஐங்குறு நாறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த "உன் உரு தின்னும்.." எனும் என் சங்கநடைச்செய்யுள்  கவிதை.


என் உரு தின்னும்...
=========================================ருத்ரா இ.பரமசிவன்.

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================




பொழிப்புரை
===========================================ருத்ரா இ பரமசிவன்


புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.




தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.


அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்



கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்


தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும்
விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"


கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!


"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.


=========================================================

வெள்ளி, 15 ஜூன், 2018

ஞானப்பழம்

ஞானப்பழம்
================================================ருத்ரா

அடே! ஞானப்பழம் இங்கே வாடா.

என்னண்ணே!

எதுனாச்சும் வெசயம் உண்டாடா?

ஆமாண்ணே! இந்த "போலி இந்துத்வா" படுத்துற பாடு சகிக்கல.

என்னடா சொல்ற.

ஆமாண்ணே.உ.பி யில புனித யோகியார் ஆளுறாருன்னு சொல்றாங்க.ஆனா அங்கே "சிவனையே" ரோடுல போட்டு ஜல்லிய‌ பரப்பி சமாதி பண்ணிட்டாங்க.

சற்று வெவரமா சொல்லப்பா.

லஞ்சம் ஊழல்லாம் கெடயாதுங்கறங்க.ஆனா அங்க ஆக்ராவில்
பொதுப்பணித்துறை ரோடு போடும் போது ரோட்ல ஒரு நாய் தூங்கிகிட்டு கிடந்தது போலிருக்கு.இவங்க அதெல்லாம்  பத்தி கவலப்படாம‌ அது மேலேயே ஜல்லிய பரப்பி ரோடு ரோலர வச்சு அமுக்கி ரோட்டை போட்டுட்டாங்கண்ணே! கோ மாதாவுக்கு அந்த படுத்து படுத்துனவங்க இந்த  "பைரவ" சாமிய இப்டி கூழாக்கி கொன்னுட்டாங்களே! இந்த பைரவர் சிவன் அம்சம் இல்லையா? நீங்களே சொல்லுங்கண்ணே!

அடங்கொப்புரானே! அடே ஞானப்பழம்! அர அர மகாதேவான்னு
கன்னத்துல போட்டுக்கிட்டு போய்ட்டே இரு!

============================================================
செய்தி: 14.06.2018 ..தினமலர் நாளிதழ் (பக்.13).. மதுரை பதிப்பு.


வியாழன், 14 ஜூன், 2018

பொங்கிட்டாரு !ரஜனி!

பொங்கிட்டாரு !ரஜனி!
===========================================ருத்ரா

பொங்கிட்டாரு !ரஜனி!
அன்னிக்கு
"காக்கி மேலே கைய வச்சா "ன்னு
பஞ்ச்  விட்டபோது
காவியெல்லாம் கிளுகிளுப்பாச்சுது.
ஆனா இப்போ
"காலா" வெள்ளம்
கரையுடைச்சுப் பெருகுது.
மாப்பு
வச்சான்யா ஆப்பு!
திராவிட ராவணன்
ஆரிய ராமனுக்கு
ஆப்பு!
மூன்றுவர்ணத்தில்
நான்கு வர்ணம் செருகும்
சாணக்கியங்கள் எல்லாம்
சந்தைக்கு வந்து நாறிப்போச்சு.
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருண்ணு
தன் குழந்தையைப்பார்த்து
உச்சி மோந்து உள்ளம் குளிர்கிறாள்
பாரதத்தாய்.
பரதன் என்பவன்
தமிழ்த்திணைகளின்
நெய்தல் தலைவன்.
அவ்னே அன்றைய
சிந்து வெளியிலிருந்து
கப்பல் ஓட்டி
உலகம் எல்லாம்
தன் உள்ளங்கைக்குள் திரட்டியவன்.
தமிழனே உருவாக்கிய‌
புதுத் தமிழ் எனும்
சமஸ்கிருதம்
பரத நாட்டை "பாரத நாடு" ஆக்கியது.
யார் சொன்னது
ரஜனி பரட்டை என்று?
பா.ரஞ்சித்தின்
"சிகை அலங்காரத்தின்"
சிகரத்தில் ஏறி
அவர் கரிகாலனாய்
மீண்டும் இமயத்தில் தமிழ்க்கொடி
ஏற்றியுள்ளார்.
சினிமாவின் பொம்மை விளையாட்டாய்
இது
உங்களுக்குத் தோன்றலாம்.
இதையும் நீங்கள் கற்பனையாய்
ரசிக்கலாம்.
ராஜாக்களும் தமிழிசைகளும்
குருமூர்த்திகளும்
"எக்ஸார்சிஸ்ட்" படத்தில் வரும்
குழந்தையைப்போல‌
உடம்பிலிருந்து
தலை கழன்று
சுற்றிக்கொண்டே
கலர் கலராய் வாந்தியெடுப்பதை!
அன்னிக்கு கொடுத்தேன் இனிமா!
இன்னிக்கு கொடுக்கிறேன் சினிமா!
ஹா..ஹா..ஹா
இது எப்டி இருக்கு..
காலா கலர்ப்படம்
"செம வெயிட்டு"

==============================================================




மொட்டை முனுசாமி.

மொட்டை முனுசாமி.
=======================================ருத்ரா
(ஒரு கற்பனை வாக்காளர்)


ஏண்ணே! தகுதி நீக்கம்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே!

அதாண்டா.நம்ம தொகுதி எம்.எல்.ஏ இருக்காரில்லையா...

அப்படியா..அது ஆருண்ணே?

அடப்பாவி ..இது கூட தெரியாதா? நீ தாண்டா அவருக்கு ஓட்டு போட்டே..
அந்த எம் எல் ஏ வை சபாநாயகர் சட்டசபையை விட்டே விலக்கிடுறது தான் தகுதி நீக்கம்னு சொல்றாங்க.

அது எப்படிண்ணே? நாந்தானே அவர் வேணும்னு ஓட்டு போட்டேன்னு நீங்க இப்போ சொன்னீங்க.அப்ப நாந்தானே அவர் வேண்டாம்னு மறுபடியும் ஓட்டு போடணும்?

அடே சாமி! மொட்டை நீ இல்லடா. நாங்க தாண்டா!

===========================================================


செல்லும் ஆனா செல்லாது.

செல்லும் ஆனா செல்லாது.
=========================================ருத்ரா

வடிவேலு வாய் வைக்காத
இடமில்லை.
தடமில்லை.
இதற்கு
கனம் கனமாய் அத்தனை
சட்டப்புத்தகங்களையா
கரைத்துக்குடிக்கவேண்டும்?
ஆறு மாசம் ஏழு மாசம் என்று
மாதங்களை
உருட்டி உருட்டி
உதைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
இப்படி
"என்னத்த கன்னையா"க்களை
வைத்துக்கொண்டே
நம் வடிவேலு
ஆயிரம் இமயங்கள் உயரத்துக்கும்
சென்று
தீர்ப்பு சொல்ல‌
மரசுத்தியல்களை
நச் நச் என்று தட்டுவாரே!
அதெல்லாம் சரிதான்
நம் ஜனநாயகத்துக்கு
உயிர் இருக்கிறதா?இல்லையா?
மூக்கில் கைவைத்து
"நெஞ்சில் கை வைத்து" சொல்ல‌
யார் வருவார்?
அதோ
டாக்டர் வடிவேலு தான்
ஸ்டதெஸ்கோப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டே
நடந்து வருகிறார்...
அந்த "பேஷண்ட்" பற்றி சொல்ல.
"பிழைச்சிடுச்சு ..ஆனா பிழைக்கலையே"



==================================================

புதன், 13 ஜூன், 2018

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
==========================================ருத்ரா


அண்ணே இப்போ நகைச்சுவை மன்னன்னு
யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்?

இதென்னடா புதுக்கேள்வி?

சும்மா சொல்லுங்கண்ணே.

என் எஸ் கே காலத்திலேருந்து ஆரம்பிச்சா காளி என் ரத்தினம்
புளிமூட்டை ராமசாமி  அப்புறம் சந்திரபாபு
டணால் தங்கவேலு தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன்
அப்புறம் நாம (செந்தில் கவுண்டமணி)  விவேக் அப்புறம்
நம்ம  க்ரேட் வடிவேலு ...
இப்டி போய்ட்டே இருக்குமடா..

அது அப்போ.. இப்போ சொல்லுங்கண்ணே
காமெடி சக்ரவர்த்தி யாருண்ணு?

தெரில்லேடா..

அதாங்க அது எஸ் வி சேகர் தாண்ணே..

என்னடா சொல்றே?

நாம சிரிக்க வச்சது சினிமாக்கொட்டாய்க்குள்ள தாண்ணே!
இவர் கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருக்கிறத பாத்தா
போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கோட்டை, ஜனநாயகம்  இன்னும்
அது இதுன்னு எல்லாமும் சிரிப்பா சிரிக்குதே அண்ணே.மோடிஜி கூட இத ரொம்ப..ரொம்ப ரசிச்சிக்கிட்டிருக்காரு போல...
இவரோட இப்போதைய "கள்ளன் போலீஸ்" விளையாட்டுக்கு
தனியாகவே "விதூஷக பத்மஸ்ரீ" கொடுத்திடலாம்ணே

அடே "ஞானப்பழம்" இப்போதாண்டா நீ ஒரிஜினல் "ஞானப்பழம்.

================================================================