திங்கள், 17 ஏப்ரல், 2017

(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)

"அந்த கனத்த சட்டப் புத்தகம்"
=====================================================ருத்ரா.
(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)


ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த
விசித்திர  வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!

மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.

துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்க வந்ததே சாதீயின் ஆதிக்கம்.
சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த‌
மாமேதை நம் அம்பேத்கார்.
மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
நம் அம்பேத்கார் தான்.

வெள்ளயனுக்கு
"சிப்பாய் கலகம்" என்று
சின்னத்தனமாய் தெரிந்த அந்த நெருப்பு
பாரதியார் கவிதையில்
அக்கினிக்குஞ்சு அல்லவா!

வெந்து தணிந்தது காடு.
வேகாமல்
மானிட தர்மத்தை இன்னும்
சாகடிக்கப்பார்ப்பதே
சாதி மதங்கள்.
நாலாம் கிளாஸ் மாணவன்
ஏதோ "இம்போசிஷன்"எழுதுவது போல்
வருஷம் தோறும் வந்து போவது அல்ல‌
"அம்பேத்கார்" எனும் பெயர்.

இதன் கனலும் கனவுமே
இன்னும் வாக்குப்பெட்டியின் உள்ளே
மண்டிக்கிடக்கும்
நூலாம்படைகளை "தூய்மை"ப்படுத்த முடியும்
என்பதே இன்றைய யதார்த்தம்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும்
தேர்தல் எனும் கும்பமேளாவுக்கு
"கரன்சியாபிஷேகம்"கொண்டு
கும்பாபிஷேகம் தடபுடல் படும்
நம் அரசியல் அவலங்களின் நோய் தீர்க்கும்
அருமருந்து ஆகுவது
"மானிட நேயப் பார்வை" மட்டுமே.
அம்பேத்கார் எனும் புதிய யுகம்
ஆளுயர மாலைகளுக்குள்
அமிழ்ந்து போவது அல்ல.
இந்த சமுதாயப்ரக்ஞையின்
ஞான சூரியன்
வாக்குப்பெட்டியில் உதயமாவதை
அதே வாக்குப்பெட்டியில்
அடைக்கப்பெட்டிருக்கும்
அஞ்ஞான மேகங்களே
மறைத்துக்கொண்டிருக்கின்றன.
சமநீதியின் பளிங்குத்தடாகத்தில்
முதல் கல்லெறிந்து
காயப்படுத்த முற்படும்
பால் தாக்கரே சிந்தனைகள்
நம் பாரதத்தை மீண்டும்
பாதாளத்தில் வீழ்த்த நினைக்கும்
பாதகங்கள் ஆகும்.
அம்பேத்காருக்கு ஆயிரம் அடியில் கூட‌
இவர்கள் சிலையெழுப்புவார்கள்.
ஆனால் அஸ்திவாரத்தில் இவர்கள் இடுவதோ
இட ஒதுக்கீட்டின்
கபாலங்களும் எலும்புக்கூடுகளும் தான்.
வாக்குப்பெட்டியை நிரப்ப‌
தாற்காலிகமாய் கைகோர்த்துக்கொள்வார்கள்
இந்த கருப்புஜனங்களுடன்.
ஆனால் சாதிமதங்களின் சாக்கடை கங்கைகளில்
வீசும் இவர்களின் அரசியல் நாற்றத்தை
கண்டு கொள்ளுங்கள்.
அதனால் அனல் மிகு சீற்றத்தோடு
உச்சரிக்கப்பட வேண்டிய பெயர்
"அம்பேத்கார்"
கங்கையைக் கொண்டு
கண்ணில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!
ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!

============================================ருத்ரா

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பெண்ணை மடல் மா

பெண்ணை மடல் மா
==============================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

=======================================


விளக்க உரை
=========================================

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!
(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)

=================================ருத்ரா இ.பரமசிவன்


Click here to Reply or Forward

வியாழன், 13 ஏப்ரல், 2017

"பிரிச்சு மேய்வோம்" கணிதத்தை.


A single branch of the complex logarithm. The hue of the color is used to show the arg (polar coordinate angle) of the complex logarithm. The saturation and value (intensity and brightness) of the color is used to show the modulus of the complex logarithm. The image file's page shows the encoding of colors as a function of their complex



values.https://en.wikipedia.org/wiki/Complex_logarithm







"பிரிச்சு மேய்வோம்" கணிதத்தை.
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஜெ.இ.லிட்டில் வுட் என்பவர்.கணிதத்தில் பெரிய மேதை.அவர் ஒரு முழுமை இயங்கியம் (என்டைர் ஃபங்ஷன்) பற்றிய ஒரு கணித விளக்கம் த‌ருகிறார். அது உண்மையில் மிக மிக சுவாரஸ்யமான ஒரு கணித விளக்கம்.வீஸ்ட்ராஸ் சிக்மா இயங்கியம்  என்பதை கணித மொழியில்  "பிரிச்சு மேய்ஞ்சு"விடும் ஒரு அற்புத அறிவு இயக்க ஓட்டமே அது என்கின்றனர் .அந்த சிந்தனை இயக்கம்  "ஏற‌ணம் அல்லது இற‌க்கணம்"  எனும் லாஜிக் விஞ்ஞானத்தை
அழகிய தேற்றங்களாக  பியூடிஃபுல் தியரம்ஸ்) நமக்குத் தருகின்றது .


ஒரு கணித மதிப்பிடலை முழுமைப்படுத்துவது என்பது எல்லாவற்றையும் "அடக்கிய விஸ்வரூபத்தை"காட்டுவது ஆகும்.கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு காட்டியது இன்று வரைக்கும் யாருக்கும் புரிந்ததாய் தெரியவில்லை.அது கடவுளை தேடும் வழி என்று சொன்னாலும் அதற்குள்
வில்லும் அம்பும் மனிதமந்தைகளும் ரத்தமும் சடலங்களும் உயிரும் கலந்த ஒரு சமன்பாட்டில் சமன்பாடற்ற வானங்களும் நட்சத்திரங்களும் இன்னும் என்னவெல்லாமோ கலப்படம் பெற்று ஒரு "கனவுக்குழம்பாக" இருப்பதை நாம் அறிகிறோம்.

இது தான் முழுமை பெற்றது என திட்டவட்டமாய் குறிப்பிட இயலாதபோது
அது ஒரு "பரவலான"(ரேண்டம்) தன்மையை கொண்டிருக்கிறது.இப்படி கணக்கீட்டை "தொட்டும் தொடாமலும் "(ஆசிம்ப்டோட்டிக் ) ஒரு முழுமையை அது சொல்கிறதாயிருந்தால் அது கணித உலகில் "சிக்மா"இயங்கியம் என அழைக்கப்படுகிறது.

பெயர்களைக்கண்டு பயந்து விடவேண்டாம்..
முழுமை இயங்கியங்கள் கீழ்க்கண்டவாறும் அழைக்கப்படுகின்றன.


(1) ஃப்ரெஸ்னல் தொகுவிய‌ங்கள் (இன்டெக்ரல்ஸ்)
(2) ஜேகோபி தீட்டா இயங்கியம்.
(3) தலைகீழான(ரெசிப்ரோகல்) காமா இயங்கியங்கள்
(4) மிட்டாக்   லெஃ ப்லர்  இயங்கியம்              

இவை சுவாரஸ்யமான காடுகள் தான்.கணித சிந்தனை எனும் "டார்ச்" ஏந்தினால் நாம் இங்கிருந்தே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
பிரபஞ்சத்தில் ஒரு ஜன்னல் செய்து அந்த பக்கத்து வீட்டு (அண்டைய பிரபஞ்சங்களையும் ) நோட்டம் விடலாம்.








செவ்வாய், 11 ஏப்ரல், 2017

எது அது?

எது அது?
==============================================ருத்ரா

யார் இந்த மானிடப்புழு?
நெளிந்து கொண்டிருந்தாலும்
நெளிந்த தடம் எல்லாம்
மின்னல் உமிழ்வுகள்.
ஆயிரம் கைகள்.
ஆயிரம் கண்கள்..தலைகள்.
ஆயிரம் ஓசை எழுப்பும்
ஆயிரம் நயாகராக்களை
கடைவாயில் ஒழுக விடும்
கடையனுக்கும் கடையவன்.
ஒளியாக‌
ஒலியாக‌
நரம்புகளைத் துளை போடும்
அதிர்வுகளை
இரைச்சல்களை வெளிச்சங்களை
சர்க்கரைப்பொங்கலாய்
தின்று கொண்டிருப்பவன்.
எங்கிருந்தோ
எதையோ
எப்படியோ
இழுத்துவந்து வெளியே போட்டு
அதன்
கருப்பொருள் தெரியாமல்
ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.
காரணமே கரு தரிக்காமல்
காரியமாய்
பெரிய
அசிங்கமான அழகான‌
ரெட்டை மயிர் மீசையை
ஒற்றி ஒற்றி
இந்த பில்லியன் ஆண்டுகளை
துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்
துரு துருப்பவன்..
கொடிய மரண வடிவத்தை
வைரஸ்ல் புதைத்து
தன் பிம்பம் காட்டுபவன்.
"செர்ன்"உலையில்
குவார்க் குளுவான் குழம்பை
தாளித்துக்கொண்டிருப்பவன்.
ஹிக்ஸ் போஸானயும்
நியூட்ரினோவையும்
கடுகு வெடிக்க வைத்து
கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.
சீசனுக்கு சீசன்
எந்த நாட்டிலாவது
ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.
உண்மை சதை பிய்ந்து
கிடக்கும் போது
உண்மையை மொய்த்துக்காட்டும்
ஈக்களாய் அங்கே
அலையடிப்பான்.
வெள்ளமாய் வந்து
தேர்தல் பிரகடன‌ங்களை
கொட்டு முழக்குவான்.
ஈசல்களின் சிறகுகளில்
ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி
தெறிக்க வைப்பான்.
காளையாய் வந்து
கொம்பை ஆட்டி ஆட்டி
ஒரு தேவரகசியத்தை
தெருவெல்லாம்
மூக்கணாங்கயிறு வழியே
மூசு மூசு என்று
மண் குத்தி
மண் கிளறி
தன் "பார் கோடு" தனை
தரையில் கிழித்துக்காட்டுபவன்.
வதை செய்பவர்கள்
வாலை முறுக்குபவர்கள் அல்ல.
பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்
ஒரு வட்டமேஜைக்குள்
வார்த்தைகளை
சவைத்துக்கொண்டிருப்பவர்கள்
கையில் தான் வெட்டரிவாள்
என்று
கொதித்துக்குதிப்பவன்.
படீரென்று
கீழே விழுந்து
சுக்கல் சுக்கலாக‌
நொறுங்கியது அது.
அது நிழலா?
நிழலின் இமேஜா?
உடுக்கையிலிருந்தும்
வெர்ச்சுவல் ரியாலிட்டியின்
தூரிகை மயிர்கள் துடித்தன.
கோணா மாணா சித்திரத்துள்ளே
கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்
காட்சியில் பிடி படாத நேர்கோடு
வளைந்து வளைந்து
வக்கிரம் காட்டியது.
யார் அவன்?
எது அது?
அது வேறு ஒன்றுமில்லை.
தன் "செல்ஃபியை"
கீழே எறிந்த‌
இறைவனே அது!

===============================================

சனி, 8 ஏப்ரல், 2017

செதில்கள்.

செதில்கள்.
==========================================ருத்ரா

காதலே!
உனக்கு ஒரு சிலை வடிக்க ஆசை.
கல் தேடினேன்.
வைரம் தான் கிடைத்தது.
உளி தேடினேன்
மனம் தான் கிடைத்தது.
சம்மட்டிக்கு..
தேவையில்லை.
இனியெல்லாம்
க‌னமான தருணங்களில் தானே
அதையும் விட கனமான கனவுகளை
சுமந்துகொண்டு காத்திருக்கப்போகிறேன்.
அது போதுமே.
உருவம்..
எதை உருவகம் செய்வது..
கைக்கு அகப்படாத கனவுப்பிழம்பா?
தலைகீழ் பிம்பங்களா?
கடலை ஆகாயத்திலும்
ஆகாயத்தை கடல் தளும்பல்களிலும்
"மார்ஃப்"செய்வதா?
ரத்த சதை உடலங்களா?
மாயத்தைப்பிசைந்த‌
வெர்ச்சுவல் ரீயலிடிகளா?
ஐ பேடுகளை
சுரண்டினேன்.
லைட் எமிட்டிங்க் டையோடு
லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே
பில்லியன் பில்ல்யன் பிக்செல்களிலும்
பிக்காஸோ
அவளின் புதிர் காட்டினான்.
இருப்பினும்
அந்த நுரைப்பட‌ல‌த்தில்
கண்ணீர்த்துளிகள்..
விம்மி விம்மி வரும்
அதிர்வுகள்..
திடுக்கிட வைத்தன.
அவளா அழுகிறாள்?
காதல் கண்ணீர்த்துளிகளிலா
இங்கே அவள்
செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்?
அன்று ஒரு நாள்
என்னையே உற்று உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
ரத்த சதையாய் நான் உன்மீது
துடித்துக்கொண்டிருக்க‌
இன்னும் ஏன் உன் கல் மனத்தை
இங்கு ஏன் சிற்பமாக்கி சித்ரவதை செய்கிறாய்
என்று கேட்பது போல் இருந்தது.
என் முகம் அங்கு திரும்பாமல்
நானும் என் கழுத்தைத் திருகி
இந்தப்பக்கமே வைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த மரணவலி
எனக்கு மட்டுமே தெரியும்.
எதற்கு அப்படி மிருகம் ஆனேன்.
விடையை
காதல் எனும் அந்த‌
மிருகத்திடம் தான் கேட்கவேண்டும்.
ஆனால்
அந்த விழிகளில்
இந்த "டெட் சீ" எனும் கருங்கடல்
என் பிணங்களை அல்லவா
மிதக்க விட்டுக்கொண்டிருக்கிறது.
போதும் சிற்பமும் சிதிலமும்....
என் கைகள் அங்கே
உளி இங்கே
துண்டு துண்டாய் சம்மட்டிகள்.
எதனுள்ளோ
நசுங்கிக்கிடக்கிறேன்.
யாராவது வாருங்களேன்...
மீன் குழம்பு வைக்க‌
சொறிக்கல்லில் தேய்க்கப்படும்
மீனாக..நான்...
வெள்ளை வெள்ளையாய்
வைரச் சிதிலங்களின்
செதில்களில் இறைந்து கிடக்கிறேன்..
ஆனாலும் துடித்துக்கொண்டு..


================================================










ஒற்றை சிவப்பு ரோஜா


ஒற்றை சிவப்பு ரோஜா
======================================ருத்ரா இ பரமசிவன்

"என்னில் நீ
உன்னில் நான்."

....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
தினமும்
ஒன்று எழுதி நீட்டுவேன்.
புரிந்து கொண்டாளா அவள்?
தெரியவில்லையே.
ம்
என்று வாங்கிக்கொள்வாள்.
கசக்கி முகத்தில் வீசவில்லையே
என்று எனக்கு ஆறுதல்.
இது தான் சாக்கு
என்று
எங்கே இவன்
"மாயா பஜாரின்"
இருட்டு மூலைக்கு
இழுத்துக்கொண்டு ஓடுவானோ
என்று
அவளுக்கு ஒரு பயம்.
அந்த மிரட்சி
மருண்டு உருண்ட
அவள் மான்விழிகளில்
தெரிந்தது.
இடையே ஏன் இந்த பனிமூட்டம்.

மச்சிகள் மன்றத்தில்
என் தலை உருண்டது.
"மச்சான்.
ரீம் ரீமா
முத்துக்குமார் லேகியங்களை
உருட்டிக்கொடுத்து புண்யமில்லடா.
தனியாப் பாத்து
சும்மா நச்சுன்னு கேட்டுடு."
மசோதாவும் சட்டமும்
ஏகமனதில் நிறைவேறியது.

பட்டாம்பூச்சிகளின்
அந்த சுடிதார் வனத்தில்
சூடு கிளப்பியது
அவள் "ம்"கள்.
"என்னடி
ம் னு சொன்னா
பெரிய "எம்"தியரின்னு நெனப்பா?
குவாண்டமும்
காதலும் ஒண்ணு தான்.
புரியாமலேயே பட்டம்
வாங்குற மாதிரிதான்.
உன் புன்சிரிப்புலெ
நூறுல ஒரு பங்காக்கியாவது
கோடு போட்டுறக் கூடாதா?
புள்ள ரொம்ப தவிக்குது."
அவள்
அதற்கும் ஒரு "ம்"தான்.

தனியா "நச்"சுண்ணு கேக்கும்
அந்த தருணமும் வந்தது.

ஒற்றை சிவப்பு ரோஜாவும்
அதன் மேல் ஒரு வெறும் பேப்பரும்
(கவிதை எழுத வில்லை
அது அவனிடம்
முரண்டு பிடித்துக்கொண்டது.
அட போப்பா.நீ மட்டும் என்று.
பேனா கூட "ட்ரா"வுக்குள்
தூங்கபோய் விட்டது)

அவள் முன் நீட்டினான்.
அவள்
அந்த வெள்ளைப்பேப்பரை
ஆவலுடன் எடுத்துக்கொண்டாள்.
"எனக்குப் பிடித்த கவிதை."
"க்ளுக்"கென்று
சிரித்துவிட்டுப்போய்விட்டாள்.
அந்த‌
வெள்ளைச்சிரிப்புக்கும்
வெள்ளைப்பேப்பருக்கும்
என்ன அர்த்தம் என்று
அவனுக்கு விளங்கவில்லை.
அந்த ஒற்றைச்சிவப்பு ரோஜா மட்டும்
அவன் கையில்.

==================================================ருத்ரா
23.11.2013 ல் எழுதியது

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

முக்குளி

Inline image 1
ஓவியம்  by  ருத்ரா


முக்குளி
===================================ருத்ரா


தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நீர்ச்சுருள்கள்
பந்து விளையாடுகின்றன.
உன் கண்களே
என் முதுகில் சுமக்கும்
ஆக்சிஜன் கூடுகள்.
அதைத்தேடியே
ஆயிரம் தீவுகள் செல்லுவேன்.
தூக்கம் தின்ற சுறாக்கள்
என்னைத் துண்டு துண்டு ஆக்குகின்றன.
உன் ஒரு சிமிட்டலில்
வானவில்கள் எத்தனை?
மின்னல் விழுதுகள் எத்தனை?
வானங்கள் உருகி கடல்கள் ஆகின.
அன்று 
கல்லூரி வகுப்பில்
முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
வட்டக்கடிகார
வினாடி முள் கூட‌
செக்கு மாடு போல்
சுழன்று கொண்டு தானே இருந்தது.
இருப்பினும்
என்னிடம் "டைம்" கேட்டாயே!
அந்த இனிப்பு
அறை முழுத்தும் நீரூறி
நினைவெல்லாம்
கனவின் சுவை படர்ந்ததே.
ஒரு சின்ன இழையை சிரிப்பாக்கி
நெளியவிட்டு
நெய்து விட்டு
கணப்பொழுதில் ஓடிவிட்டாய்.
என் நெஞ்சம் 
தறி ஆகி தட்டிக்கொண்டே இருக்கின்றது.
அப்போது
இந்த சமுத்திரத்துள் பாய்ந்தவன் தான்.
பவளத்திட்டுகள் காயப்பட்டு போயின.
என் அவசரமும் ஆசையும் எனக்குத்தானே.
கடற்பாசிகள் ஊஞ்சல் கட்டின.
வண்ண வண்ண வரிமீன்கள் வால் மீன்கள்
குடை விரித்து நூல் பிரியும்
கூழுடலின் ஜெல்லி மீன்கள்
எல்லாம் என்னுடன் கை கோர்த்து ஆடவந்தன.
முகவரி கேட்டேன்.
சாயல் கேட்டேன்.
அஞ்சிறை முளைத்தாற்போல்
அவள் பளிங்குக்கால் உளைந்து நீந்திய‌
அழகிய சுவடு உரசி
கடலடியில்
அற்புத பிருந்தாவனம்
ஏதேனும் பதியம் ஆனதா
என்றும் கேட்டேன்.
தடயம் இல்லை.
முடியவில்லை.மூச்சு முட்டுகிறது.
கரை எங்கு இருக்கிறது.
ஆழம் ஆயிரம் ஆயிரம் அடிகள் இருக்குமே!
காலால் உதைத்து எம்ப முடியவில்லையே.
எப்படி?
எப்..எப்..எப்ப்"

"அடேய் அண்ணா!
க்ராஃபிக்ஸோடு குறட்டையா?"

சடக்கென்று
தட்டி விட்டுப்போனாள் தங்கை.

=====================================================ருத்ரா