வெள்ளி, 22 ஜூலை, 2016

பூச்செண்டுகள்











பூச்செண்டுகள்
====================================================
ருத்ரா இ.பரமசிவன்


கண்ணீரும் கனவும் கொண்டு
துடைத்து வைத்த‌ பாதை.
விடியும்போது
இப்படி
வாசல் தெளித்துவைத்த பாதை.
நினவு நெளியல்களில்
நெய்த கோலங்கள்
இன்னும் விழ்வில்லை.
பறவைச்சிறகுகள்
நக்கிப்பார்த்து சொன்னது
"வானம் இனிக்கத்தான் செய்கிறது."
நம்பிக்கை
கசிவு வெளிச்சமாய்
விழுது இறக்குகிறது.
எதற்கு இந்த விடியல்?
அப்புறம்
எதற்கு மலையிடுக்கில்
அந்தி எனும்
ஒளி முடியல்?
புள்ளி வைத்து வைத்து
வாடிக்கையாக பால் ஊற்றும்
பால்காரி வைப்பாளே
அப்படி
இந்த வட்டச்சூரியன்களை
புள்ளி வைத்து வைத்து...
முடிக்கவே முடியாத ஒரு வாக்கியத்தை
முடக்க நினைக்கும்
நெஞ்சே!
அவன் வருவான்..
அவன் வருவான்..
போதும்!
ஒரு அடுகளம் நோக்கி
என்னை சங்கிலி கோர்த்து
இழுத்துக்கொண்டு
ஓடுவதெல்லாம் போதும்.
நீ சிரித்தாய்!
நானும் சிரித்தேன்!
அவ்வளவு தானே
அந்த இடைவெளிக்குள்
இத்தனை பிரபஞ்சங்களுமா
விழுங்கப்படவேண்டும்?
காலம் எனும்
நீள அகல ஆழங்கள்
போதும்..போதும்.
ஒரு கல்லறை கட்ட அல்லவா
ஓ காலமே
என் தோள்களில் வந்து
உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்.
உட்கார்ந்து கொள் கவலையில்லை!
கிழக்கு வயிறு
கிழிந்து கிழிந்து
போக்கு காட்டினாலும் கவலையில்லை!
எங்கள் சிரிப்புகள்
பிளந்து காட்டிய‌
அதோ அந்த பள்ளத்தாக்குகளில்
கிம்பர்லியின் வைரக்கிடங்குகள்
ஒரு நம்பிக்கையின்
கதிர்ப் பூச்செண்டுகளை
அசைத்துக்கொண்டே இருக்கின்றன.


====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக