ஞாயிறு, 24 ஜூலை, 2016

தேடிக்கொண்டிருக்கிறேன்.



தேடிக்கொண்டிருக்கிறேன்.
==================================ருத்ரா இ.பரமசிவன்
அதைத்தான் இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கால்சட்டை போட்டுக்கொண்டு
கோலி விளையாடிய போது அவன்
மொழியை உடைத்து விடவேண்டுமே
என்ற வெறியைத்தேடினேன்.
தட்டாம்பூச்சி சிறகுகளை
காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு
கிர்ரென்று அது போடும்
ஓசைக்குள்
அர்த்தம் புரியாத‌
நியாய வைசேஷிகத்தையும்
பூர்வ உத்தர மீமாம்சங்களையும்
தேடினேன் என்று
சுருக்கம் விழுந்த வயதுகளில்
நினைவுகளை சவைத்துத் துப்பும்போது
தெரிந்து கொண்டேன்.
அவளிடம் என்ன இருந்தது என்று
தெரியாமலேயே
அவளிடம் இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேறு வேறு கூட்டில்
இருவருக்கும்
ஆறேழு குஞ்சுகள்
சிறகடித்துக்கிடந்த போதும்
காதல் என்ற பிசின் எங்கோ
ஒட்டிக்கொண்டிருக்கிறதே
இன்னமும் அதைத் தேடிகொண்டிருக்கிறேன்.
தேடல் ஒரு கவிதை.
தேடல் ஒரு காதல்.
தேடல் ஒரு காமம்
தேடல் ஒரு கடவுள்.
இன்னும் எதையெல்லாம்
தேடவேண்டும்
என்று
கன்ன நரம்புகள் புடைக்க‌
தேடுவதும்
ஒரு தேடல்.
தேடலே அறிவு.
இப்படி தேடுவது என்பது
டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களின்
அமுத ஊற்றுகளின் சங்கிலி.
கடவுள் என்பவனுக்கு
இந்த ஊற்றுகளை
சுவைக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து
பாக்கு புகையிலையோடு
நுண்ணிய கணிதத்தில் சுருட்டி
வாயில் போட்டு
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
மூளையோடு குதப்பிக்கொள்ள‌
அந்த கடவுளுக்குள்
ஒரு "எட்வர்டு விட்டன்"
இறங்கித் தூர் எடுக்கவேண்டுமே.
"குவாண்டம் நுரை"கோட்பாடு வரை
சூன்யத்துள் சூன்யத்தையே
பாதாளக்கரண்டி போட்டுத்
தேடுதல் விஞ்ஞானம்.
"ஹிக்ஸ் போஸான்" தான்
அந்த ரகசியம் என்று
ஆற்றல் பிழம்பை உடைத்து
அந்த கொட்டையை எடுக்க‌
செர்ன் எனும் அணுவுலைக்குள்
நோண்டி நொங்கு எடுக்க
எலக்ட்ரான் பரோட்டன்கள்
வேர்க்க விறுவிறுக்க ஓடிக்க்ண்டிருப்பதும்
தேடல் தான்.
இப்படி
தேடிக்கொண்டிருப்பதில்
மனிதன் தன் கற்பனை எனும்
புண்ணாக்கு மூட்டையாகிப்போன‌
கடவுளையும்
எப்படி கட்டி இழுத்துக்கொண்டு ஓடுவது?
கும்பாபிஷேக நெய்ப்பிசுக்கில்
அவன் நாக்கினால் சப்பிக்கொண்டிருக்கட்டும்.
நான் தேடுவதில்
பிரபஞ்ச நரம்புக்கூட்டங்கள்
தாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.
பேசாமல் அந்த தர்ப்பணங்களை
அவன் தின்று கொண்டிருக்கட்டும்.
துருப்பிடித்த ஸ்லோகங்களை
டிங்கரிங்க்கு அனுப்பி அல்லவா
நிமிர்த்திப்பார்க்க வேண்டும்.
கடவுளை கடவுளே
ஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து
பார்த்ததில்லை.
நானும் அதைத்தான் தேடுகிறேன்.
அவனுக்குப்பதில்
அவனுக்காக நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று
தெரியாமல்
இன்னமும் நான் அவனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.

===============================================22.07.16


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக