ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஞானக்கூத்தன்



ஞானக்கூத்தன்
===============================ருத்ரா

சொற்களில்
மனதைக்கொண்டு
வெள்ளிமுலாம் பூசி
விடியலை
விளங்க வைத்தவர்.

வாக்கியங்களை
முறித்துப்போட்டு
வைப்பது அல்ல‌
கவிதை.

அந்த முறிவுகளில்
சமுதாயத்தின் நுண்வலி
அச்சு கோர்த்த‌
வார்த்தைகளின்
வழியாகத் துடிக்கவேண்டும்.

அத்தகைய‌
கவிதைத்துடிப்புகளை
நிறையவே
தந்துவிட்டுப்
போய் இருக்கிறார் அவர்.

"நாய்"பற்றிய
அவர் கவிதையில்
அவர் "ஒலிப்பதிவு" செய்த
குரைப்புகள்
இன்னும் அடங்கவே இல்லை.
யார் மீது யார் குரைக்கிறார்கள்?
அந்த "வர்ண" ஒலிக்கலவைகளில்
எந்த "அதிர்வு எண்ணை"
மறித்துக்கேட்பது?
"சவிதுர்வரேண்யத்தில்"
இருப்பது
குயிலா?
நாயா?
சூரியனைப்பார்த்துக் குரைப்பதா?
சூரியனைப் பற்றிக் குரைப்பதா?
ஒரு நூல் வெளியீட்டு விழாவில்
வேதங்கள் சொல்லும்
கிளிகள் பற்றியெல்லாம்
சொல்லியிருக்கிறார்.
ஒருவன் மொழி அடுத்தவன் காதில்
வெறும் குரைப்பொலி தானோ?
வள் வள் என்றாலும்
அதில் ரிக் வேதம் கேட்பவனே ஞானி
என்பதே
அவருக்கு எந்த வானத்திலிருந்தோ
ஒலித்த வேதம்!
கவிஞனின் பேனாவுக்குள்ளும்
கழுத்து நரம்பு புடைத்திருக்கிறது!

கேள்வி
எரிந்து கொண்டு தான் இருக்கிறது!
சிதையில் போய் படுத்துக்கொண்டவரை
பற்ற வைப்பதற்கும்
அவர் கவிதை தான் கிடைத்ததா?
வேண்டாம்.
பேனாவுக்கு கூட ஆத்மா உண்டு!
எதற்கு இந்த "ஆத்மஹத்தி"?

அவர் எழுத்துக்களின் ஒலி
வானிலும்  கேட்கிறது.
ஏனெனில்
"வானொலியே"
அவர் கையெழுத்து.
அவரது சிந்தனைகளின்
அடையாளம்
தெரிந்த இடம் அது.

புதுக்கவிதைகள்
பழசாகிப் போன‌
காலகட்டம் இது.
என்றும்
தன் கவிதைகளை
புதுக்கவிதைகளாகவே
விட்டுச்சென்றிருக்கும்
புதுமைக்கவிஞர் இவர்.

பேரப்பிள்ளைகள்
இவருக்கு
நெய்ப்பந்தங்கள் கொளுத்தலாம்.
இவர் கவிதைப்பிள்ளைகள்
மெய்யையே நெய்யாக்கி
மெய்யையே திரியாக்கி
மெய்யையே தீயாக்கி
ஒரு மெய் வெளிச்சம்
கொளுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக