வெள்ளி, 29 ஜூலை, 2016

"கபாலி படம் பார்த்தேன்"



"கபாலி படம் பார்த்தேன்"
===================================ருத்ரா

இந்த அடைமொழி
என்னோடு ஒட்டிக்கொள்ளாத வரை
நான் ஒரு வி.ஐ.பி இல்லை.
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
வி.ஐ.பி என்றால்
விஸில் அடிக்கும் இம்பார்டெண்ட் பெர்ஸன்
என்று இன்று ஆகிவிட்டதோ!

சமூக நீதிக்கு அநீதி இழைக்கும்
ஒரு வரிக்கருவில்
முன்னூறு நானூறு கோடி ரூபாய்கள்
பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்
குவிக்க முடியும் என்றால்
இந்நேரம்
கூவத்துக்கரையோரம் கூட‌
மானிட‌நேசம் எனும் மகத்தான‌
இறைவத்துக்கு
கும்பமேளாக்கள்
கொடி கட்டிப்பறந்திருக்குமே!

கார்பரேட்  கலாசாரத்தின்
அழுகிய வண்ணங்கள் கூட‌
அழகிய வண்ணங்களாய்
"டீஸர்" மற்றும்
கட் அவுட் பால்குட‌
தள்ளுமுள்ளுகளின் நமைச்சல்களாக‌
மட்டுமே
இங்கே இப்படி
முடை நாற்றம் வீசிக்கொண்டிருக்குமா?

சாதி சமயங்களால் கூர் தீட்டப்பட்ட‌
ஆணவக்கொலைகளோ
நம் ஆத்மீகம் காக்க வந்த‌
ஆவணங்கள் என்று
மனசாட்சியின் மௌனநரம்புகளை
அறுத்தெறிகின்றன.
சினிமா அசுரன்
அதையும்  வசூல் ஆக்கலாம்
என்று தான்
"ரூம் போட்டு யோசித்துக்"கொண்டிருக்கிறான்.

கிரானைட் தாதுமணல் என்று
குத்தகைக்கொள்ளைகள்
ஆயிரம் ஆயிரம் பக்கங்களில்
அறிக்கைகளாக கிடக்கும்போது
அதனடியில்
ஜனநாயக நரபலிகளின்
கபாலங்களைப்பற்றி
கவலைப்படாத‌
இந்த வெற்றுச்சூறாவளிகள் கூட‌
"சினிமா செட்டிங்" களுக்குத் தான்
காமிராக்களால் குறி பார்க்கப்படுகின்றன.

அரசியல் சூட்சுமங்கள்
மனித இதயங்களின்
வாக்குப்பெட்டிக் கணிப்பொறிக்குள்
வெறும் லஞ்சத்தின் சோளப்பொறிகளாய்
தூவிக்கிடக்கையில்
இந்த இளையயுகம் தன்  கல்லறையை
"செகுவாரா"வை அச்சடித்த‌ வெறும்
டி ஷர்ட்டுகளில்
போர்த்திக்கிடக்கட்டும் என்ற‌
போர்த்தந்திரத்தை போர்த்திவைத்திருக்கும்
ஒரு மூளிப்பொருளாதாரத்தின்
மூர்க்கமான படையெடுப்பு தானே
இந்த "ஜிகினா குருட்சேத்திரங்கள்!"

இளம்புயலே!
நம்மை வெறும் எலும்புக்குப்பைகள் ஆக்கிய‌
வெள்ளை அடிமைத்தனக்கொடுநோய்
எனும் லுக்கேமியா தான்
இந்த மண்ணில் பரவிக்கிடக்கிறது.
ஒவ்வொரு பன்ச் டைலாக்கும்
உங்கள் அரசியல் அறியாமைக்காடுகளின்
மராமரங்களைத் துளைத்து வந்து
அறிவின் உயிர் குடிக்கும்
புல்லட் என்று எப்போது
புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

விடியல் வேண்டுமென்றால்
சிந்தனையை அப்பிக்கிடக்கும்
இருட்டு அகல வேண்டும்.
அதற்கு
அட்டைக்கத்திகளும்
பொம்மைத்துப்பாக்கிகளும்
மலிந்து கிடக்கும்
பொய்மைக்கிட்டங்கிகளின்
சினிமாவை பார்க்க‌
விளக்கு அணைக்கும்
இந்த இருட்டுகளை
துடைத்து அழித்தாக வேண்டும்.

அதற்கு
ஆக்ரோஷமான
துடைப்பங்கள் தேவையில்லை.
ஒரு மானுட ஆவேசத்தின்
தூரிகை
இந்த சினிமாவின் மீது
பட்டாலே போதும்.

===============================






2 கருத்துகள்:

சேக்காளி சொன்னது…

அட்டை கத்தியின் வீச்சுக்கும்,பொம்மை துப்பாக்கியின் சத்தத்திற்குமே இத்தனை கூச்சலிடுபவர்கள் மானுட ஆவேசத்தினை எப்படி அனுமதிப்பார்கள்?

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

உங்கள் ஐயம் நியாயமானதே.விருது பெற்ற முந்தைய‌ வங்காள மலையாள கன்னட திரைப்படங்களின் கருத்தாக்கமும் கதைக்களங்களும் அப்படிப்பட்ட‌ அமைதியான தூரிகைகள் தான்.ஆனால் அவற்றின் ஒவ்வொரு கீறல்களும்நம் சமுதாய சிந்தனையின் புதிய வெளிச்சம் நோக்கியே இருந்தது.ஏன் சமீபத்தில் வெளியான மராத்திப்படமான "கோர்ட்" நம் மேம்போக்கான‌ மதிப்புகளின் ஆணிவேரையே அசைத்து விடவில்லையா?இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்கள் அந்த திசையில் நகர முயற்சித்தாலும் குறுக்கே
நிற்கும் "பாக்ஸ் ஆஃபீஸ்"களே பெரிய வில்லன்கள்.உங்கள் சிந்தனை யோட்டம் சிந்திக்கப்படத் தக்கது தான்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா


கருத்துரையிடுக