"போதும் புல்லாங்குழலே..."
======================================================ருத்ரா
எங்கிருந்தோ
அந்த புல்லாங்குழல் ஒழுகுகிறது.
தேன் சுவாசம்.
மூச்சு முட்டுகிறது.
எல்லா உடற்கூடுகளும்
புழுக்கூடுகளும்
ராதாக்கள் தானா?
உள்ளே இருந்து
அக்கினியின் முந்தானை
வெளியே பட படக்கிறது.
எல்லாம் உருகுகிறது.
வானம் கூட
விழுதுகளாய்
செதில் செதில்களாய்
"நீல லாவா"வாய்
பிழம்பு பிசிறுகளாய்
கொதித்து கொப்பளித்து
இறங்குகிறது.
மயிற்பீலி சூட்டியவன்
எங்கிருந்து
இந்த மத்தாப்பை கொளுத்துகிறான்?
பசுக்கள் எல்லாம்
பொலி காளைகளாய்
க்ராஃபிக் மார்ஃபாலஜியில்
மாயம் புரிவதில்
முதுகுத்தண்டு முறுக்கலின்
உச்சகட்ட சஹஸ்ரார சக்கரம்
சுழல்கிறதோ?
இசையின் நயாகராவில்
பாறைகள் பளிங்குச்சிப்பங்களாய்
தகர்ந்து போகின்றன.
ரத்த சிவப்பு அணுக்கள் கூட
புன்னாக வராளியின் வழியாக
அந்த பாம்பை
ஆலிங்கனம் செய்து கொள்ள
ஆரோகண அவரோகண
ஜெண்டை வரிசையில்
ததும்பி தத்தளிக்கிறது.
அதோ அந்த "செர்ன்"
அணுவுலை சுருள்வெளியில்
ப்ரொட்டான்கள்
மூச்சிரைத்துக்கொண்டு
ஒன்றை ஒன்று விரட்டிப்பிடித்து
உபநிஷத்துகள் சொன்ன
அந்த "பிரபஞ்சோப சமம்" நோக்கி
முத்தம் இட துடிக்கின்றன.
இசை பிழிகிறது.
நூற்றாண்டு நூற்றாண்டுகளாய்
காலச்சக்கைகளே மிச்சம்.
போதும்.
புல்லாங்குழலே
சோமாக்கள்ளை
நிறுத்து.
====================================================