செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

என்ன செய்வது இந்த வேதாளத்தை?

என்ன செய்வது இந்த வேதாளத்தை?
=========================================ருத்ரா

எத்தனை தடவை
கட்டி இழுத்து
வரவேண்டியிருக்கிறது
இந்த வேதாளத்தை
முருங்கை மரமா?
ஆப்பிள் மரமா?
உஜ்ஜயினிக்காடா?
ஈடன் தோட்டமா?
மரங்களுக்குள் தேடினால்
இலைகளில் எல்லாம்
அகன்ற கண்கள்.
இலை இடுக்குகளிலும்
கூரிய கண்கள்.
கிளைகளின்
நுனிக்கொழுந்துகள் கூட‌
சூரியச்சிவப்பை
நகப்பூச்சு செய்து கொண்டு
இன்பத்துள்ளலாய்
பிறாண்ட வருகின்றன.
வாளுக்கு
அஞ்சியதாய் தெரியவில்லை.
அவளா?
அதுவா?
ஒருசிரிப்பின்
கோடியில் ஒரு பங்கு
கட்டுகிறது
ஒரு மாயக்கோட்டத்தை.
விழியின்
கோணத்தின்
பில்லியனில் ஒரு பங்கு
இந்த பிரபஞ்சத்தையும்
விழுங்கிக்கொண்டதில்
விதிர் விதிர்ப்பு எகிறுகிறது.
பேய் என்று சொல்லி
பேயை பயம் காட்டவும்
முடியாது.
பிசாசு என்று
எவனோ ஒரு கவிஞன்
பேனா நிப்பைக்கொண்டு
சீண்டி பார்த்து வீட்டான்.
நூத்தியெட்டு வகை
டைனாஸார் பெயர்களையும்
விஷ்ணு சஹஸ்ரனாநாமமாய்
சொல்லிப்பார்த்து விட்டேன்.
ஸ்பீல்பெர்கை கூப்பிடு
படம் பிடித்து விளையாடலாம்
என்கிறது.
விழுதுகள்...
சமயங்களில்
மலைப்பாம்புகள்
அல்லது
மின்னல் குழம்பில்
முறுக்கிய ஊஞ்சல்கள்.
பூவரும்புகள்
பூவெறும்புகள்
பூம்பூச்சிகள்
காற்றுடன் கலந்து
மரமெல்லாம்
உயிர்த்து நிற்கின்றன.
எங்கிருந்து கொண்டோ
இதயம் துடிக்கிறது.
இந்த இதயப்பாய்ச்சல்களில் தான்
இலைகள்
"க்ளோரோபிலை"க்கொண்டு
முகம் பூசிக்கொள்கின்றனவோ?
எனக்குள்
மன்மதக்கோடாங்கி
உலுக்கிக்கொண்டே இருக்கிறான்.
பச்சைக்கவிகையாய்
ஆலிங்கனம் செய்ய‌
ஓடிவரும்
கூர்மை மோனத்தில்
எண்ணம்
ஒடுங்குகிறது.
தேனில் கூட‌
பாம்பு நெளியல்களா?
சட்டைகள் உரிந்த்து உரிந்து
சிக்மெண்ட் ஃப்ராய்டு
நிர்வாணம் ஒரு
"ஜவுளிக்கடல்" ஆகிறது.
கிளையை வெட்டவா?
வேரை பிடுங்கி எறியவா?
கனவு லாவா
இலை நரம்புகளிலும்
இதழ் தளும்பல்களிலும்
எரித்துப் பொசுக்குகிறது.
வானத்தையும்
சாம்பலாக்கி விடும்
வெறி..
தூக்கமாயும்
தூக்கமின்மையாயும்
தலயணைகள் கிழிய‌
பஞ்சுச்சிதறல்களில்
இனிமை குழைவிக்கும்
குழறல் மொழிகள்.
எப்படி
வீழ்த்துவது இந்த வேதாளத்தை?
விக்கிரமாதித்தர்கள்
கிருதாக்களை
திரிகிவிட்டுக்கொண்டு
திகைத்து விழிக்கிறார்கள்.

==============================================ருத்ரா

துரை.ந.உ 
Feb 5
Re: [பண்புடன்] Re: என்ன செய்வது இந்த வேதாளத்தை?
Inline image 1


உயிர் ததும்பும் இப்படம் நல்கிய திரு.துரை ந.உ அவர்களுக்கு நன்றி

அன்புடன் ருத்ரா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக