செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

வாழ்க நீ எம்மான்.."

"வாழ்க நீ எம்மான்.."
===========================================ருத்ரா

கம்பும் கையுமாய்
உடைகூட‌
அரையும் குறையுமாய்
அந்த இங்கிலாந்து
அரசியல் சாணக்கியன் சர்ச்சில்
"அரை நிவாரண பக்கிரி"
என்று எள்ளுமாறு
எளிய தோற்றத்தில் இருந்து கொண்டே
இந்த நாட்டு
இமயங்களையெல்லாம்
தன் சுதந்திர மூச்சுக்கு முன்னே
தூள் தூள் தான்
என
ஓங்கி நின்ற உத்தமர்.

அரசியலையும்
மதத்தையும்
காக்டெயில் செய்தா
சுதந்திரம் பெற முடியும்
என்று
முற்போக்கு வாதிகள்
முகம் சுழித்தார்கள்.
முறுக்கு மீசை பாரதியும்
"வாழ்க நீ எம்மான்"
இருப்பினும்
தேசப்பிதாவே
உறுமும் குரலில்
திலகனும் வ.உ.சி யும்
தங்கள் இதயத்துள்
அவர்கள் நம் தேசப்படத்தையே
இரத்த நாளங்கள் கொண்டு
பின்னி வைத்திருக்கிறார்களே
அதுவும் உங்கள் மனதில்
மின்னல் அடிக்கட்டும்
என்று முழங்கினான்.

எல்லாவற்றையும்
உள் வாங்கிய சமுத்திரமாய்
அலைவிரித்த தந்தையே
இப்போது
இவர்களுக்கு
கொள்ளுத்தாத்தா
ஆகிப்போனாய்.

இவர்கள் குத்தாட்டங்களின்
புழுதி மண்டலத்தில்
உன் முகம் மறைந்த போதும்
பள்ளிகளின் கலை விழாக்களில்
பிஞ்சுகள் மேக் அப்பில்
அதே கூரிய விழியோடு
சோடா புட்டிக்கண்ணாடியிலும்
அன்பில் குழைந்த ஒரு
சோதிப் பிழம்பாய்
கம்பூன்றி...கால்களில்
பூகம்பங்களையும் இடறிவிட்டு
பூப்போல நடந்து காட்டும்
அந்த அரங்கேற்றத்தில்
போர்களால் புண்பட்டுப்போகும்
பூமியைக்காத்து தரும்
"பசுமையின் நம்பிக்கை"யே
சுடர் பூக்கிறது.

அது வரை இந்த‌
பசுத்தோல் போர்த்த புலிகளும்
புலிவேஷம் போடும் பூனைகளும்
ஆடிக்கொண்டிருக்கட்டும்.
குண்டுகள் துளைத்த‌
உன் மார்புப்பூமியில்
புல் முளைத்துப்போயிருக்கும்
என்று
புளகாங்கிதம் கொண்டவர்கள்
செல்லும் பாதை தவறி
செல்லரித்துப்போனார்கள்.
அப்போதும்
உனது அந்த
"புன்னைகையே"
தினம் தினம் வரும்
"புதிய சூரியன்"

==========================================ருத்ரா


துரை.ந.உ 

Feb 1

Re: [வல்லமை] வாழ்க நீ எம்மான்".........................ருத்ரா

Inline image 2
நன்றி.திரு.துரை.ந.உ அவர்களே

சில நொடிகளில் "உஷ்" காட்டி
மறைந்த அந்த அஹிம்சை மின்னலின்
வெளிச்சத்தில் தான்
நம் இருட்டின் தீவிரவாத 
வெறிகள் எல்லாம்
தலை காட்ட முடியாமல்
புதைந்து கிடக்கின்றன.
இப்படி
ஆண்டுக்கொரு முறை வந்து
மின்னல் அடித்தாலும் போதும்.
எங்கள் அழுக்கு மனங்கள்
சலவை ஆகி விடும்.
இதை 
திருப்பி திருப்பி 
போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் உள்ளங்களில் 
ஆழமாய் இறங்கிக்கொண்டிருக்கும்
மானிட நேயத்தின்
மகத்தான‌
மாணிக்க நங்கூரம்
இந்தப் படம்.
தேசப்பிதாவே!

"வாழ்க நீ எம்மான்
இந்த வையகத்துக்கு எல்லாமே!"



============================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக