புதன், 26 பிப்ரவரி, 2014

பிப்ரவரி பதினாலு

பிப்ரவரி பதினாலு
==================================ருத்ரா

தூர‌ல்
தொடங்கியது.
சாரல்
வருடியது.

இது
மயில்களைத்தொலைத்துவிட்ட‌
மயிற்பீலிகளின் காடு.

உதடுகளில்
தேங்கிக்கிடக்கும்
கவிதைகள்
பொன்னில் அச்சிட்டு
பூவில் எழுத்திட்டு
இதயங்கள் பெயர்த்து வைத்து
ஊரெல்லாம்
நட்டுவைக்கும்.

அஞ்சல் அலுவலகங்கள்
வயிறு கொள்ளாமல்
நிறை மாத சூலிகளாய்
கடிதப்பை வீங்கியதில்
மாணிக்கக் கருவேந்தி
மூவர்ண அட்டைகளில்
கடல் ததும்பி நிற்கும்.

அவனை
மனதில் வரைந்து விட்டு
எறிந்து விட்ட‌ தூரிகையில்
மிச்சமான
பிக்காஸொக்களில்
புதிர் ஓவியங்கள்.

அவள் பூங்கையில்
வண்ணப்பூச்சில்
வரி வரியாய் அவன்
இதயத்து நாளங்கள்.

அம்பு தைத்த இதயம்
பச்சை குத்தியிருந்தாள்
அவளுக்கு மட்டுமே
தெரிந்தது
சிவப்பாய் ரத்தம்

கடிதம் கிடைத்ததா?
என்றான்.
கையெழுத்து இல்லையே!
என்றாள்.

படக்கென்று அவள்
கைப்பிடித்து
அவ்ன் நெஞ்சு தொட்டான்.
லப் டப் லப் டப்
என்றது கையெழுத்து.

அம்மா தந்த‌
குங்குமச்சிமிழுக்குள்
அவன் காட்டிய‌
அரும்பு மீசையே
சுருள் வண்டாய்
படுத்திருக்கும்.

நாட்காட்டியில்
பிப்ரவரி பதினான்கை
கிழித்தெடுத்து வைத்து
கிளு கிளுத்துக்கொண்டாள்.

வயதுகளின் லாவா இது
பதினாறே
உச்சிமுனை.

எரியாமலேயே
உமிழும் தீயினில்
இந்த‌
தேனீக்கள் கூடுகட்டும்.
ரீங்காரம் கேளுங்கள்
ஆயிரமாய் ஓங்காரம்
அதிர்வதும் கேட்டிடுவீர்.

========================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக