செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஒரு பேய் நிழ‌ல்






ஒரு பேய் நிழ‌ல்
=======================================ருத்ரா

அடர்மரத்தின்
அடம்பிடிக்கும் கிளைகளின்
கூரிய‌ ந‌க‌ங்க‌ள்
வான‌த்தை கிழிக்கும்.

நீல‌ ர‌த்த‌ம்
மௌன‌ம் பீச்சும்.
என்னை உமிழும்
நிமிட‌ங்க‌ளில் எல்லாம்
காறி காறி விழுந்தது
ஒரு பேய் நிழ‌ல்.

மரம் அல்ல இது.
ஒரு விதையின் நிழல் இது.
கோடி சூரியன்களை
கருவுற்ற‌
இருட்டின் திர‌ள்
இந்த‌ நிழ‌ல்.

காற்று தூவிய‌ அசைவுக‌ள்
தூர‌த்து வெளிச்ச‌த்தை
இப்ப‌டியா
க‌சாப்பு செய்யும்?

துண்டு துண்டுக‌ளாய்
க‌ன‌வுப் பிண்ட‌ங்க‌ள்
ம‌ர‌த்தில் தொங்கின‌..

இத‌ய‌ம் வ‌ருடும்
அழ‌கிய‌ அமைதியின்
நின‌வுப்பாள‌ங்க‌ளில்
எப்ப‌டி
இப்ப‌டி ஒரு
ம‌ன வெளிச்சித்திர‌ம்?

மற‌க்க முடியுமா
இந்த மரத்தை?
எங்கள் மாணிக்க தருணங்கள்
இங்கு தான்
இன்னும் உதிர்ந்து கிடக்கின்றன.

சுற்றிச் சுற்றி வந்தோம்.
கட்டித்தழுவிக்கொண்டோம்.
இடையில் மரம்.
உயிர்த்து நின்றது.
நாங்கள் "மரத்து"நின்றோம்


ஹோ  ஹ்ஹோ  வென்று
பேரிரைச்சல்.
தலை தெறிக்க ஓடினேன்

நில்..நில்..
நில்லுடா நில்லுடா..
அப்புறம்
கேவல் நைந்த ஒலியின்
தீற்றுகள்.

அவள் குரல் தான்.
இவள் இறந்து போனதன்
ஆவி அல்ல.
அவள் இறக்கவில்லை.
இது யாருடைய‌ ஆவி?

அன்று ஒரு அழைப்பிதழ் வந்தது
மஞ்சள் பூசிக்கொண்டு.
பிரிக்காமலேயே
தெரிந்து கொண்டார்க‌ள்
என் பெற்றோர்க‌ள்
என் பிண‌த்தை போர்த்த‌
வ‌ந்த‌து அது என்று.

அதில் காம‌கோடி அம்பாள்
அனுகிர‌ஹ‌த்துட‌ன்
ரெண்டு பெயர்களுக்கு
"மாங்க‌ல்ய‌ம் த‌ந்துநானே"
இருந்த‌தில்
என் பெய‌ர் இல்லை.

சோகம் பிழிய வேண்டாம்.
சளியில் ரத்தம் வேண்டாம்.
கன்னம் புடைக்க‌
நாளங்களுக்குள்
ஊமை நாயனம் வேண்டாம்.

நாங்க‌ள்
இற‌க்கவுமில்லை.
வாழவும் இல்லை
ஆனாலும்
நாங்க‌ள் ப‌ரிசுத்த‌ ஆவிக‌ள்.

நில்லுடா..நில்லுடா
இப்போது
நான் திரும்பி பார்த்தேன்.
ம‌ர‌ம் என்னை
நோக்கி ந‌ட‌ந்து வ‌ந்த‌து.

ஆம்.
நாங்க‌ள் இற‌க்க‌வுமில்லை
நாங்கள் வாழவும் இல்லை
நாங்க‌ள் ப‌ரிசுத்த‌ ஆவிக‌ள்


அந்த‌ ம‌ர‌த்தைப்பார்க்கிறேன்.
இந்த‌
இலையுதிர் கால‌த்தில்
எலும்பு ம‌ர‌த்தின் அடியில்
அட‌ர்ந்த‌ இலைகளில்
ஊடுருவும் இதயங்களின்
ப‌ட‌ர்ந்த‌ நிழ‌ல்.

========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக