வியாழன், 6 ஏப்ரல், 2017

எங்களுக்கு...

எங்களுக்கு ....
==========================================ருத்ரா

எங்களுக்கு...
நிவாரண மானியமாக‌
சில ஆயிரங்கள்
வங்கி கணக்கில் ஏறினால் சரி.
காந்திக்கணக்காக‌
சில ஆயிரங்கள்
கைக்குள் விழுந்தாலும் சரி!
அந்த அரைஇருட்டில் முகம் தெரியாதவர்கள்
எப்படித் தந்தாலும் சரி!
ஜனநாயகத்தை நிச்சயமாக‌
பூதாகரமாய் பலூன் ஊதி பெரிதாய்
பறக்க விடுவோம்!
இந்த சமூகமே கந்தலாகிக்கிடக்கிறது.
சமுதாயப் பிரக்ஞை இல்லவே இல்லை.
மானிட வெளிச்சம்
இந்த இருட்டுக்குகையில்
பாயவே இல்லை.
வர்ண வர்ண வெளிச்சங்களை
நம் முகத்தில் அடித்து
கண் கூசச்செய்யும்
தொலைக்காட்சி ஊடகங்களில்
கூட‌
மக்களின் உயிர்ப்பான ஜனநாயகம்
தொலைந்தே போய்விட்டது.
ரோட்டில்
லாரியில் நசுங்கிக்கிடக்கும்
ஒருவனின் ரத்தச்சகதியை
வர்ணமயமாய் காட்டிவிட்டு
அமைதி கொள்வதைப்போல்
இந்த ஜனநாயகம்
ஒவ்வொரு தேர்தலிலும்
கசாப்பு செய்யப்படும்போதும்
அந்த கண்ணுக்குத் தெரியாத‌
வெட்டரிவாளைப்பற்றிய‌
வெலாவரியாய் வர்ணனைகளுடன்
டிவிக்களின்
வியாபாரக்கடமை  முடிந்து விடுகிறது.
இவை
மருத்துவமனையில்
அறுவைக்குமுன் போடப்படும்
மரப்பு ஊசியாய்
இவர்களை "பிண மனிதர்கள்" ஆக்கிவிடுகின்றன.
அந்த பொறியில் பட்டன் தட்டும்
பொறி மனிதர்களாய் இங்கே
வரிசைகள் மொய்க்கின்றன.
"தூக்கத்தில் நடக்கின்றவர்களைப்போல"
 வக்கிரமான
"சோம்னாம்புலிச வோட்டிங்"எனும்
அந்த காட்சிகளின்
லேசர் ஒளிப்புகையைக் காட்டி
ஊடகங்கள்
தன் டி ஆர் பி ரேட்டை உயர்த்திக்கொள்வதோடு
சரி.!
நாளைக்கு எவனாவது ஒரு
இடி அமீன் வந்தால் கூட
அவனை வைத்துக்கொண்டு
பட்டி மன்றம் நடத்தினாலும் நடத்துவார்கள்!

அதோ டாக் ஷோ ஆரம்பித்து விட்டார்கள்.
யாருக்கு என்ன அக்கறை?
அந்த கூச்சல்கள் சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கட்டும்.
மௌனமாக ஜனநாயகத்தின்
சமாதிக்கு
எங்கோ எப்படியோ
குழியும் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

==================================================

ஓக் மர இலைகளுக்குள்..........



ஓக் மர இலைகளுக்குள்..........
=======================================ருத்ரா இ பரமசிவன்.
சூரியனோடு
ஒரு "ஹைட் அண்ட் ஸீக்".
அது அந்த‌
ஓக் மர இலைகளின்
இதயங்களுக்குள்
ஒளிந்து கொண்டுவிட்டது.
இன்னும்
அது வெளியே வரவில்லை.
அவை
என்ன ரகசியம் பேசிக்கொண்டன?
இயற்கை தனக்குள்
புதைத்துவைத்திருக்கும்
கணினிக்குள் நுழைய‌
கடவுச்சொல்
அந்த ஓக் இலையும்
அதன் நரம்புகளும் தான்.
ஆம்
"பசுமை"யே
இங்கு
ஆயுதமும் கேடயமும்.
==============================================================
photo taken in my cell while I walked in Los Angeles Oak Park in USA

ஆர் .கே நகர்

ஆர் .கே  நகர்
=========================================ருத்ரா


ஜனநாயகத்தின்
அவமானச்சின்னமா?
அல்லது
அழிவின் சின்னமா?
இந்த ரெண்டெழுத்து நகர்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று முழங்கியவர்களின்
மூச்சில்
இந்த மூன்றெழுத்து தான் இருந்ததா?

பணம்...பணம்...பணம்..

இது இன்று அர்த்தப்படுத்தப்படுவதெல்லாம்
ஜனநாயகத்தின்
பிணம்...பிணம்...பிணம்.

தமிழ்நாட்டைப்பார்த்து
மற்றவர்கள் எல்லாம் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஊழல் பிரச்னைகூட ஒன்றும் இல்லையாம்.
அதில் இந்தியா பூராவுமே நாறினாலும்
இந்த "இனாம்" நாற்றம் சகிக்கவே இல்லை!

எரிமலை போல் சீறிப்பாய்ந்து
நம் சமுதாய இலட்சியங்களை
வார்த்தெடுக்க வேண்டியவர்கள்
ஏன் இன்று இப்படி
பிச்சை எடுப்பவர்கள் போல்
கை பிசைந்து நிற்கிறார்கள்?

"எப்படியாவது வெல்வோம்"
என்று
கொள்ளிவாய்ப்பிசாசுகள்
வாக்குகளுக்கு
கோரமாய் வாய் பிளந்து நிற்பது
தெரிகிறது!
லஞ்சப்பணமாய்
லட்சங்களின்  கோடிகள்
சிதைகளை அடுக்குகின்றன.
ஒரு சில கோடிகளே போதும்
தேர்தல் நியாயங்களை
தீயிட்டுப்பொசுக்க!
வாக்கு நேர்மையும்
ஆட்சி நேர்மையும்
சாம்பலாய் போக!

ஊழித்தீ எனும் நெருப்பை
வாக்குகளாய் கையில் வைத்திருப்பவர்களே
கேவலம் பீடி நெருப்புக்கா
இப்படி பிச்சை எடுப்பது?

அன்று மெரீனாவில்
கருவுற்ற மக்களின் "லாவா"
இந்தப் பேய்களின் எச்சில்களிலா
நீர்த்துப்போவது ?

சிந்திக்க வேண்டும் தமிழா
நீ சிந்திக்க வேண்டும்.
குத்தாட்டம் போடும் சினிமாக்களைத்
தின்று நீ
வெறும் நிழல்களின்
கந்தல் உருவங்களாய்
கரைந்து போகலாமா? தமிழா!
சிந்திக்க வேண்டும் நீ.
யாரோ ஒரு ராமனுக்கு
குரங்காட்டம் போடவா நீ பிறந்தாய்!
உன் வரலாறு திருடப்படும்
திருவிழா இரைச்சல்களை விட்டு நீ
மீண்டு நீ வரவேண்டும்..தமிழா
மீண்டு நீ வரவேண்டும்!

=================================================












புதன், 5 ஏப்ரல், 2017

ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்
==================================ருத்ரா

நான் ஒரு முட்டாளுங்க‌
சந்திரபாபு இப்படி பாடியே
ஒரு மேதை ஆனாருங்க.
நான் ஒரு எம்.ஏ.பி.ஹெச் டி முட்டாளுங்க‌
அறிவு ஜீவி என்று ஜோல்னாபை
தொங்குதுங்க‌
தூக்கணாங்குருவிக் கூடு கணக்கா.
அப்பாவி அந்து பூச்சியாகிவிட்டேங்க.

தாலுக்கா ஆபீஸின் மேஜை முன்னே
கை கட்டி வாய் பொத்தி பவ்யமாத்தான்
கேட்டேங்க.
வெறும் ஜீனி மட்டும் வாங்கும் கார்டில்
என்ட்ரி விட்டுப்போச்சுன்னு
பட்டியல்ல இருந்து எடுத்துட்டாங்க.
மறுபடியும் சேக்கணுங்கன்னு
பி.ஹெ.டி த்தனமா
தலையை சோறிஞ்சுக்கிட்டுத்தான்
கேட்டேங்க.
வி.ஏ.ஒ வை  பாருங்கன்னு
சொல்லிட்டாங்க.
பாக்கறதுன்னா என்னன்னு
பக்கத்துல நின்னவரிடம் கேட்டேங்க.
அவரு
பக பகன்னு சிரிச்சாருங்க.
இதுக்கு என்னங்க அர்த்தம்?
அர்த்தம் தெரியற வரைக்கும்
நான் ஒரு முட்டாளுங்க.
நல்லாவே படிச்சிருந்த
அந்த நாலு பேருங்க சொன்னாங்க‌
நான் ஒரு முட்டாளுன்னு!

==============================================


நடு கற்கள்

நடு கற்கள்
====================================ருத்ரா


அது எந்த வருடம்?
ரெண்டாயிரத்து சொச்சம்
இருபத்தஞ்சா?
முப்பத்தஞ்சா?
ஏதோ ஒன்று விடுங்கள்.
மதுரையிலிருந்து
ராமேஸ்வரம் செல்லும் பாதை
அல்ல அல்ல..
ஃபோர் வே ரோடு...
மைல் கற்களில்
இந்தி மட்டுமே..
வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி
இயற்கைக் கடன்..
மீண்டும் காரில் ஏரும் போது
அந்த மைல் கல்லை
இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.
கீ...ழ..டி..
என்ன தமிழனின் தொன்மை
அடையாளம் அல்லவா?
காரை நிறுத்திவிட்டு
அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.
அங்கே இருந்த
தகவல் பலகைகள்.
இந்தியில்
என்னென்னவோ எழுத்துக்களை
வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.
வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.
அதன் கீழ் ஆங்கிலத்தில்.
"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"
ஐயகோ!
தமிழின் தொன்மை
வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?
காரில் பயணம் தொடர்ந்தேன்.
ராம..ராம..ராம....ராம....
ராமேஸ்வரம் வரைக்கும்
அந்த மைல்கற்களில் எல்லாம்
ரத்தம் வழிந்தது.
தமிழன் தமிழை மறந்ததால்
அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்
இங்கே
அவன் அழிவை  அடையாளப்படுத்தும்
நடுகற்களாகவே தோன்றின!

திடுக்கிட்டேன்.
................
.....................
சட்டென்று விழித்துக்கொண்டேன்.
தூக்கத்திலிருந்து தான்!
இந்த‌ வரலாற்று திருத்தங்களிலிருந்து
நாம்
எப்போது விழித்தெழுவது?

==================================================









திங்கள், 3 ஏப்ரல், 2017

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.
==========================================ருத்ரா இ பரமசிவன்.

குறிவைத்து தான் அடித்திருக்கிறார்
விஜயசேதுபதி.
அதுவும் "மாணிக்கக்  கல் கொண்டு".
இது விஜய்சேதுபதியின் ராஜவேட்டை.

இந்த யுகம் ஊடகங்களுக்கானது !
இருப்பினும் அத்தனை குறுகியதா?
டிவிக்களின் டி ஆர் பி  ரேட்டிங்க்
அத்தனை ரத்தக்களரிகளிலா
நிச்சயம் செய்யப்படுகிறது?
அந்த அகல ஆந்தைக்கண் காமிராவுக்குள்ளும்
அத்தனை அரசியலா? வில்லத்தனமா?
அந்த அடி தடிகளின் கொட்டங்கச்சிக்குள்ளும்
ஏழு கடலையே நீச்சல் குளம் ஆக்கி
"ஜலக்கிரீடை" நன்றாகவே செய்கிறார்
விஜய சேதுபதி.

இவர் அந்த பாத்திரமாகவே மாறி விட்டார்.
அந்த பாத்திரத்திற்காகவே
பிறப்பெடுத்து வந்திருக்கிறார்.
கதைக்காகவே அளவெடுத்து தைத்தது  போல்
பாந்தமாய் பொருந்துகிறார்.

இப்படியெல்லாம் தான்
"யதார்த்த மான பாத்திரத்தை"
புளி போட்டு விளக்குவார்கள்
பேனா மன்னர்கள்.

நடிப்பின் எழுத்துக்களில்
இவருக்கு தெரிந்தது எல்லாம்
உயிரெழுத்து உயிரெழுத்து உயிரெழுத்து தான்.
நடிப்பில்
உயிர்ப்பை வரவழைக்க அரிதாரத்தால் முடியாது
என்று
தன்னை செதில் செதிலாக உரித்துக்காட்டுபவர்.

சினிமா என்பதே "ஜிகினாக்காடுகள்" தான்.
இவரால்  மட்டுமே தன்  மீது
மண்வாசனையை பூசிக்கொள்ள முடிகிறது.
மனித வாசனையை அணிந்து கொள்ள முடிகிறது.

இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள்
நம் தமிழ்ப்பட எல்லா "ஜாம்பவான்களையும்"
ஒரே கிண்ணத்தில்
ஜூஸாக்கி தரும் திறமை மிக்கவர் என்றால்
அது மிகையே இல்லை.
கவண் (கல்)  உண்மையிலேயே
இந்த இருவர்க்கும் சிறப்பான திருப்புமுனையை
தரும் ஒரு மைல்கல்.

=========================================================



ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

புதிய இமயம்.




புதிய இமயம்.
====================================================ருத்ரா

மக்களே
உங்களுக்கு என்ன வேண்டும்?
அவர்களுக்கு
உங்கள் வாக்கு வேண்டும்?

உங்கள் கோரிக்கைகளை
அவர்களே
குவிக்கத்தொடங்கி விட்டார்கள்.

உங்கள் தேவைகளும் ஒலிக்கின்றன.
ஆனால்
உங்கள்தமிழின்
ஊற்றுக்கண்ணிலிருந்து வழியும்
கண்ணீரின் ஒலிப்புகள்
உங்களுக்கு கேட்பதே இல்லை.
உங்கள் குழந்தைகள்
"ஷா ஜா ட்ரிக்ஷயா " என்றெல்லாம்
அழைக்கப்படுவதில் தான்
உங்களுக்கு இன்பம்  எனும்
ஒரு விநோத "டாஸ்மாக்" காடுகளில்
ஆழ்ந்து கிடக்கிறீர்கள்.

உங்களுக்கு தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆதிக்கத்தை
பொடி  பொடியாக்கும் வலிமை
தமிழின் கூர்மைக்கு இருக்கிறது!
அதை இந்த இலவசங்களிலா
நீங்கள் மழுங்கடித்துக் கொள்வது?

ஓட்டு வலிமை
உங்கள் தமிழில் தான் இருக்கிறது.
ஆனால் நீங்களோ
ஏதோ ஒரு அர்ச்சனை மொழிகளில்
புதைந்து கிடக்கிறீர்கள்.
உங்கள்  தூக்கம் கலையாத வரை
இந்த ஓட்டு விளையாட்டில்
விடியல் என்பது பூட்டிதான்  கிடக்கிறது
என்பது மட்டும் அல்ல
உங்கள் வானமும் கூட
முழுதுமாய் தொலைந்து  போய்விடலாம்!

திராவிடம் என்பது
விளம்பரம் அல்ல.
ஊழல் அல்ல.
பண மூட்டைகளை அண்டை கொடுத்து
நிறுத்தப்பட்ட
உயரமான ஒரு நாற்காலியும் அல்ல.
நம் தொல் தமிழின் மூச்சுக்காற்று.
மேற்கத்திய கணவாய்களின்
வழியே வந்த பொய்மைகளின்
ஊளைச் சத்தங்களை அடக்கும்
நெருப்புக்குரலின்
தமிழ் அலைகள் !

முகம் தெரியாத
ஒரு தமிழின் குரல்
ஒரு சமுதாய எழுச்சியின் குரல்
ஒரு இளைய தலைமுறையின் குரல்
இந்த ஆர்.கே நகரில்
வெல்லும் ஆனால்
அப்போது தான் தமிழும்
நம்  குமரி விளிம்பில்
ஒரு புதிய இமயமாய் நிமிர்ந்து நிற்கும்!

============================================