ஞாயிறு, 27 டிசம்பர், 2015

தடாகம்



தடாகம்
====================================ருத்ரா


நான் கடவுள்.
நீ மனிதன்.
உன்னைப்படைத்தவன் நான்.
உன் அறிவு
வெறும் தும்மல் எனக்கு.
கூகுள் என்பாய்.
ஞானங்களையெல்லாம்
சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.
அது
என் கைரேகைகளின்
கோடி...கோடி..கோடி...
(எத்தனை கோடிகக் என்று
உன் கம்ப்யூட்டர்களின் மூலம்
போட்டுக்கொள்ள முடியுமோ
போட்டுக்கொள்)
கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.
உன் விஞ்ஞானம்
என் மூக்குப்பொடி டப்பியில்
ஒரு சிட்டிகை கூட இல்லை
அதிலும் நேனோ நேனோ ..நேனோ
துளி தான்.
ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே
உனக்கு தலை சுற்றும்
அது போல் "மீண்டும்"
கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே
போகும் அளவுக்குள்ள‌
பிரபஞ்சங்களைப் பற்றி
நீ என்ன சொல்கிறாய்?
இப்போதாவது
என் விஸ்வரூபத்தை
உன்னால் பார்க்க முடியுமா
என்று யோசித்தாயா?
அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌
அந்த தடாகத்தில்
என்னைப்பார்த்து தான்
இவ்வளவும் பிதற்றினேன்....
.........
.............
நான் சவைத்த சூயிங்க் கம்
தடாகத்தில் விழுந்து
வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்
பிம்பங்கள் விரிந்தன?
அவ்வளவு பிரம்மாண்ட விடையை
இத்தனை சிறிய கேள்வியா
தெறிக்க விட்டது?
அந்த விஸ்வரூபம்
மனிதனா?
கடவுளா?

======================================================ருத்ரா

திங்கள், 21 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (3)





வெள்ளமோ வெள்ளம் (3)
=============================================ருத்ரா

குப்பைகள்
==========

முழங்கால் அளவு
வெள்ளம் நனைத்த
அடுக்கு மாடிக்கட்டிடங்கள்.
விழுங்கும் கடலின்
பெருங்குடல் அலைகள்
பசியெடுத்து வர‌
அருகருகே வானம் சுரண்டும்
கட்டிடங்கள்!
ஆகாய விமானக்காட்சியில்
நம் அவலட்சணமான பொருளாதாரம் கூட‌
"கொள்ளை"அழகு தான்.
ரியல் எஸ்டேட் என்றால்
அது பொய்யின் எஸ்டேட்டோ
என்று
வெள்ளம் சீறிக்காட்டிய போதும்
அங்கே கேட்கும்
குரல்களுக்கும் பஞ்சமில்லை.

"ஃப்ளாட்" என்ன விலை?"
"ரெண்டு கோடிக்கும் மேலேயாம்..!
"பரவாயில்லை"
"சீப்"தான்."

வெள்ளக்குப்பையை அள்ளிவிடலாம்.
லட்சக்கணக்கு மடங்குகளில் குவிந்து கிடக்கும்
இந்தக்குப்பையை என்ன செய்வது?
ஆம்..
இந்த கருப்புப்பணக் குப்பையைத்தான்
என்ன செய்வது?

====================================================

சனி, 19 டிசம்பர், 2015

வெள்ளமோ வெள்ளம் (2)



இது கிராஃபிக்ஸ் அல்ல.
==========================================ருத்ரா
(வெள்ளமோ வெள்ளம் (2)

தலைவிரித்த கூந்தல் போல்
இந்த வெள்ளம் க்ராஃபிக்ஸ் அல்ல.
இயற்கையின் மீது பழிபோடும்
செயற்கை பேரிடர் இது.
கொம்பு முளைத்து
கோரைப்பல்லில் ரத்தம் வழியும்
ஹாலிவுட் கணினிச்சித்திரம் அல்ல இது.
வெள்ளம்! வெள்ளம்! வெள்ளம்!
வைகுண்ட ஏகாதேசி சொர்க்க வாசல்
திறக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்
என்று
அந்த "செம்பரம்பாக்கம்" மதகுகளை
புறக்கணித்து
பள்ளி கொண்ட அலட்சியத்தின்
வெளிப்பாடா இது?
மொத்த சென்னையும்
மூழ்கிப்போகலாம் என எச்சரிக்கும்
கன மழையை
"ரமண" முனிவர் டிவியில்
சொல்லும்போது எல்லாம்
இவர்கள் ரிமோட் தட்டி
குத்தாட்டங்களிலும் சீரியல்களிலும்
குடி கொண்ட போது தான்
குடியைக்கெடுத்த
அந்த பிராளயம் நம்
மூக்கு நுனியில்
வந்து உட்கார்ந்து கொண்டது.
ரிமோட் அடுத்த பட்டன்
தட்டுவதற்குள்
வீட்டு உத்திரம் நம்
தலையை இடித்தது.
ஐயகோ!
தொலைக்காட்சிகளும்
தொலைந்தே போனது!

=================================================

வெள்ளமோ வெள்ளம்! (1)




வெள்ளமோ வெள்ளம்! (1)
=======================================ருத்ரா

அவன் தலையில் டிவி.
அவள் தலையில் க்ரைன்டர்.
குழந்தை அவன் கைப்பிடித்து வர‌
குழந்தையின் கழுத்து வரை
வெள்ளம்.
உயிரில்லா குழந்தை மிஞ்சினாலும்
நிவாரணமாய் நாலு லட்சம்!
விலையில்லா டிவியும் க்ரைண்டரும்
மீண்டும் கிடைக்க‌
தேர்தல் வெள்ளம் அல்லவா
வரவேண்டும்.
_______________________________________________

(வெள்ளத்தில் இது போன்ற ஒரு காட்சியை
பார்த்ததன் விளைவே இவ்வரிகள்)

சனி, 12 டிசம்பர், 2015

ஓ! பாரதி!




ஓ! பாரதி!
______________________________________________ருத்ரா இ.பரமசிவன்

கார்ட்டுன் தூரிகை
உன் மீசையை வரைந்த போது
தீப்பற்றிக்கொண்டது.

____________________________________

உன் முண்டாசு வடிவில்
உனக்கு
இவர்கள் ஒரு மண்டபம் கட்டலாம்.
உன் முகமோ வெளியில் அல்லவா
இருக்கிறது.
நூத்திமுப்பது கோடி இந்திய முகங்களில்!

____________________________________________

தாயின்   MONEYக்கொடியின்
தொப்பூள் கொடி
ஸ்விஸ் பாங்க் லாக்கர்களில்.

_______________________________________________


சுதந்திர தாகம் என்று
சொல்லிவிட்டுப்போனாய்.
எப்போது நொறுக்கப்படும் என்று
தெரியவில்லை...
இந்த பாட்டில்கள்.

_______________________________________________


எரிதழல் கொண்டுவா என்றானே
உன் பீமன்.
பங்கு மூலதன‌ச்சொக்கட்டானில்
இன்னும் இந்த
பாரத புத்திரர்கள்
பாத்திரம் ஏந்திக்கொண்டிருக்கலாமா?

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________


எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்களுக்கு
மலங்கழிக்கத்தான் ஒரு இடமில்லை.

__________________________________________________


ஒளி படைத்த கண்ணினாய்
வா வா... வா என்றார்கள்.
ஆனாலும் அதில் நீ
லாவா....வா என்று தான்
ஒலிக்கின்றாய்!

______________________________________________________






`

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌



ஆத்மாவும் ஆத்மாவும் பேசிக்கொண்டன‌
==================================================================
ருத்ரா


"உன்னை என் நிழல் என்றோ
என்னை உன் நிழல் என்றோ
கூற முடியாது.
மண்ணும் விண்ணும்
ஒரே சமன்பாட்டில் வந்திருக்கிறது.
கொசு இஸ் ஈகுவல் டு அந்துப்பூச்சி கரப்பான்பூச்சி ஸ்குவேர்
என்று
இ இஸ் ஈக்குவல் டு எம் சி ஸ்குவேர் போல‌
கூறிக்கொள்ளலாம்.
உயிரை 
இவர்கள் கடைந்து கடைந்து பார்த்தும்
அதிலிருந்து
இன்னும்
ஆத்மா வெண்ணையை எடுக்கமுடியவில்லை.
காற்றின் இடைவெளிக்கும்
பிளந்து பார்த்தும் 
ஆத்மா தெரியவில்லை."

இரண்டும்
தன் காதுகளில் மொய்த்த ஈக்களை
விரட்ட‌
கொம்பை கொம்பை ஆட்டின.
வயதுகளின் மூப்பில்
இரண்டும்
எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டன!
வீட்டுக்காரன் 
எப்போதோ சொல்லிஅனுப்பி விட்டான்
இன்னும் அவர்கள் வரவில்லை

"அது சரி!
அத்வைதம் கூட‌
ஒரு யுனிஃபிகேஷன் தியரி தான் என்று
என்று
இங்கே வந்த ஒரு பெரியவர் பேசினாரே.
அவர் ரிட்டயர்டு  ஃஃபிஸிக்ஸ் ப்ரொஃபெசராமே!
அப்போ
மாட்டின் (பசு) பிறப்பு உறுப்பு 
லெட்சுமி என்று 
கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.
மனிதர்களில் பெண்களின் 
பிறப்பு மூலமான கர்ப்பகிருகங்கள் மட்டும்
எப்படி நரக வாசல்கள் ஆயிற்று?
தோ...பாரு ரொம்பப் பேசாதே"
..............

...........

அவர்கள் வந்து விட்டனர்.
கொம்புகளை சிலுப்பினாலும் விடவில்லை.
லாரிகளில்
அவை எங்கோ சென்றன.
அவற்றின் இறைச்சியில்
அத்வைதம் இல்லை.
சிவனை கறிசோறு ஆக்கி விட்டு
லெட்சுமியை மட்டும் காப்பாற்ற‌
இவர்கள் 
கசாப்பு கத்தியை உயர்த்தினார்கள்.
மனித இறைச்சி கிடைத்தது.
அந்த கத்தியும்
இறைச்சியும் 
கிசு கிசுத்துக்கொண்டன‌
"அத்வைதத்தை"

======================================================



வியாழன், 8 அக்டோபர், 2015

அது





அது
======================================================================
ருத்ரா இ.பரமசிவன் 

அதை இன்னமும் தேடுகிறேன்.
அது என்ன என்று
இன்னும் எல்லோரும் தேடுகிறார்கள்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் எல்லாம்
திரும்ப திரும்ப‌
கொட்டிக்கவிழ்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எங்கே இருக்கிறது?
என் வயிற்றிலா?
அல்லது சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
அந்த 22 அடி நீள‌ குடல்களிலா?
அந்த பஞ்சு நுரைப்பூங்காவனமாகிய‌
நுரையீரலிலா?
அல்லது
துடித்து துடித்து நுரை கக்கி ஓடி
வயதுகள் எனும்
மைல்கற்களை நொறுக்கிக்கொண்டு ஓடும்
கையளவு குதிரையான‌
இதயத்திலா?
அந்த டி என் ஏ , ஆர் என் ஏ சங்கிலிகளிலா?
மூளையின் 
அந்த மடிப்புகளிலா?
நீயூரான்ககளிலும் சைனாப்டிக் ஜங்க்ஷன்களிலும்
அதனுள் நுணுக்கமாய் 
ஜமா பந்தி நடத்திக்கொண்டிருக்கும்
அந்த "பர்கிஞ்சே" செல்களிலும்
என்று
இண்டு இடுக்குகளில் எல்லாம்
அது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறதே!
அது என்ன?
உடலின் நவத்துவாரங்கள் வழியே 
வந்து போகும் 
காற்றையும் கூட‌
பதஞ்சலி சூத்திரத்தின் படி
பக்குவப்படுத்திப் பார்த்து விட்டோமே
கையில் கிடைக்கவில்லை அது. 
கருத்தில் அகப்படவில்லை அது.
ஆம்
நான் தேடுவது அதோ அந்த...
ஒரு ஒளியாண்டு
அதாவது பத்து ட்ரில்லியன் கி.மீ
கனமுள்ள ஈயக்கட்டியைக்கூட‌
வெகு சுலபமாய் புகுந்து துளைத்து
அந்தப்பக்கம் போய்
இன்னும் பல பில்லியன் மைல்களை
கடந்து போய்க்கொண்டிருக்குமாமே
அந்த‌
"நியூட்ரினோ"வைத்தான்
"ஆத்மா"வை அல்ல!

=======================================================