மே தினம்
____________________________செங்கீரன்
அந்த கண்ணீரின் தடம் தெரிகிறது.
துப்பாக்கி எச்சில்கள்
ரத்தமாய் பெருகிய ஆற்றின்
ஆழமும் தெரிகிறது.
அந்த வரலாறு எப்படி
வெறும் பஞ்சப்படிக்கு எழும்
கோஷங்களாய் மட்டும்
மெலிந்து போனது?
சுரண்டல் அரக்கன் நவீனமாய்
கணினி வழியே
மொத்த மானிடத்தின்
மஞ்சா சோத்தையே
விழுங்கிக்கொண்டிருக்கிறதே.
சந்தைப்பொருளாதாரத்தில்
எப்படி அந்த
"தாஸ் கேபிடலின்"உயிர் நரம்பு
இற்று வீழ்ந்தது?
அன்று உலகைப் புரட்டிப்போட்டு
மக்கள் பொருளாதாரத்துக்கு
பாடம் எடுத்தவர்கள்
இனம் தெரியாத ஒரு ஆதிக்கப்பாய்சலுக்கு
சிலுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தந்த மண்ணின்
இன எழுச்சிகளின் ரத்தம் சிந்தி
எப்படி ஓடினால் என்ன?
நம் கையில்
அணு குண்டுகளும்
பெட்ரோல் பணங்களும்
குவிந்தால் போதும் என்ற
சித்தாந்ததை அல்லவா
முந்தி விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் ஜனநாயக்கக்
குரல்வளைகள் முறிக்கப்பட்டபோதும்
உலக வர்த்தகம் எனும்
சூத்திரக்கயிறு கொண்டு
பம்பரம் விளையாடிக்கொண்டிருக்கிறார்களே.
அதனால் கார்ப்பரேட்டுகளின்
பன்னிரெண்டு மணி நேர வெலை
எனும் மத்தாப்பு வெளிச்சங்கள்
அந்த செஞ்சூரியனை மறைக்கப்பார்க்கின்றன.
செயற்கை அறிவு
இயற்கை மனிதனின்
உழைப்பு வேர்வையின் உப்புக்கரித்த கடலை...
அந்த சமுதாய வெள்ளத்தை...
க்யூபிட்களாக
மாற்றி விடும் முன்
ஒரு மாற்றத்தின் சீற்றம் கொள் தோழா!
சீற்றம் கொள்!
________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக