ஞாயிறு, 7 மே, 2023

அகழ்நானூறு 41

  அகழ்நானூறு 41

________________________________________________சொற்கீரன்

(பொழிப்புரையுடன்)


பொருது இறங்கு வன்பெயல் 

கழுவிய வானின் வறள் மஞ்சின்

வாலா வெண்மழை புல்லென் நிரவிய‌

கள்ளி நனந்தலை கால் இடற‌

கடுங்கண் பரலிய வெட்சுரம் இறந்து

முள்படர் இலவம் செம்பூ மறைப்ப‌

மண்ணிய நிழலின் நனைதரு குளியல்

நீந்திய ஆற்றின் ஒரு சிறை ஆங்கே

பொறி மாவின் இரலை திரிமருப்பின்

கவின் மிகக்கிளறி அவள் நகை புண்செய‌

கலிமா எறிஉளைச் செலவின் கடுகி

புதல் ஒளிச்சிறந்த வைகறை போன்ம்

விரிதரு வெள்ளிய அகல்வான் காண்பின்

அதுவும் அவள் இள முறுவல் மின்னி வரிய‌

நோதல் காழ்த்து ஊழ் ஊழ் உறுத்த 

அஞ்சு வரு நீளிடை அருஞ்சுரம் பெயர்ந்தான்.


_________________________________________




பொழிப்புரை

---------------------------------------------------சொற்கீரன்  


விண்ணிலிருந்து பெய்யும் மழை நிலத்தில் மோதி ஒரு பெருமழையாய் மாறி மண்ணைக் கழுவிய பின் வானம் வெளிறிய நிலையில் மேகங்களும் தூய்மையற்று வெற்றுத்தூரலை பெய்யும்.அது புல்லிய அதாவது சிறு ஒலிகளாய்ப் பரவும்.அந்த பாழிடம் கள்ளிகளால் மண்டிக் கிடக்கும்முள் படர்ந்த இலவமரத்து செம்பூக்களின் மறைப்பு நிழல் குளிப்பாட்டிய குளியல் நனையலில் களித்து அந்த காட்டு வழியை கடக்கிறான்.அப்போது அங்கொரு பக்கம் ஒரு புள்ளிமான் திருகிய கொம்புகளுடன் காட்சி தரும் அதன் இணை சச் மானுடன் அழகிய கிளர்ச்சியூட்டும் ஒரு காட்சியைக் காண்கிறான்.அவள் காதலியின் (தலைவி) இனிய புன்சிரிப்பு தான் அது.ஆனால் அது பிரிவாற்றாமை எனும் நோயால் அவன் உள்ளத்தை புண்படுத்துகிறது.தான் செலுத்தும் குதிரையின் பிடறி சிலிர்க்க விரைந்துசெல்கிறான்.அவன் அவளை நெருங்கி செல்ல செல்ல ஒரு ஒளிமிகுந்த வைகறைக் காட்சியால் புல்லும் ஒளிபூத்து சிரிப்பது போல் காண்கிறான்.அதில் விரியும் அகன்ற வெளியாய் காட்சி தரும் வானமும் கூட அவள் இளமை பொங்கும் புன்முறுவல் வரிகாட்டும்.அது மீண்டும் மீண்டும் உரம் பெற்று அவன் உள்ளத்தில் உறுத்தல் செய்து துன்புறுத்தும்.அந்த உறுத்துதலின் உந்துதலில் அச்சம் தரும் அந்த நீண்ட காட்டுவழியையும் அவன் பெயர்த்து முன் சென்றான்.   


---------------------------------------------------------------------------------------------------------------------------

இடைக்காடனார் எனும் சிறந்த சங்கப்புலவர் அகநானூற்றின் 139 ஆம் பாடலை வெகு நுட்பத்துடனும் அழகுடனும் இயற்றியுள்ளார். அதில்  "வாலா வெண்மழை"எனும் சொற்றொடரை அவர்   ஆண்ட விதம் நோக்கி நோக்க மகிழத்  தக்கது.பொருள் தேடிச்   செல்லும் தலைவன் அந்த காட்டுவழியில் தலைவியின் பிரிவாற்றாமையால் நெஞ்சுருகியாதையே இங்கு பாடல் ஆக்கியுள்ளேன்.  சங்கப்பாடல்களில் இத்தகைய செறிவு மிக்க வரிகளை நான் அகழ்ந்த்டுத்து "அகழ்நானூறு " என்ற தலைப்பில் 40 பாடல்கள் வரை நான் சங்கநடைசெய்யுட் கவிதைகளாக மின் இதழ்களில் பதிவு இட்டுள்ளேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக