யுகங்கள்!
_______________________________________________ருத்ரா
என்ன தான் உன்னிடம் பேசுவது?
எந்த சொல் எடுத்து
எய்வதற்கு
இந்த வில்லை வளைப்பது?
அவள் வரச்சொன்னாள்.
இவன்
வந்து விட்டான்.
தொல்காப்பியம் எழுதியவர்களே
இந்த தொல்லைக்காப்பியத்தின்
எழுத்தும் சொல்லும் பொருளும்
ஒன்றுக்கொன்று
ஒளிந்து நின்றுகொண்டு
பிம்பம் காட்டுகின்றதே!
என்ன செய்வது?
ஒரு ஆங்கிலப்படத்தை அல்லது நாவலை
ஒரு மையமாய் ஆக்கி
அதனிடமே இந்த கட்டப்பஞ்சாயத்தை
விட்டு விடலாமா?
இல்லை
அகநானூறு குறுந்தொகை என்று
அந்த பளிங்கு சொற்றொடர்களில்
பகடை உருட்டலாமா?
இல்லை
சமீபத்தில் வந்த
கானாப்பாட்டை
மானசீகமான ஒரு பறையோசைப்
பின்னணியில்
ஹம் செய்யலாமா?
இவனுக்கு வியர்த்ததில்
ஏழுகடல்களின் உப்பு கரித்தன.
சரி..
இப்போதெல்லாம்
இங்கிலீஷ் தான் இன்பத்தேன் தமிழ்.
ஒரு வழியாக ஆரம்பித்தான்.
"பை த பை.."
சொல்லி நிமிர்ந்தான்.
அதற்குள் அவள்
"பை"சொல்லிவிட்டுப் போய்
பல திரேதா யுகங்கள்
முடிந்து விட்டிருந்தன.
_____________________________________