புதன், 29 ஜூன், 2016

இந்த உலகம் உன் கையில்..





இந்த உலகம் உன் கையில
==========================================ருத்ரா

இந்த நாள்
இனிய நாள்
பொன்னான‌
புதிய நாள்.
புதுமை பொங்கும்
மகிழ்ச்சி நாள்...
வழக்கமாய் வரும்
இந்த விடியலை
புளி போட்டு விளக்கி
பொலிவாக்கி
பளபளப்பாக்குகிறேன்.
விட்டால்
சூரியனுக்கும்
விம் போட்டு
துலக்கி வைப்பேன்.
சொல்லுக்கா
பஞ்சம்?
உள்ளம்
உளுத்துப்போன‌
வழிபாட்டு வசனங்களில்
இற்றுப்போனதை
உரமாக்கி
உரத்துச் சிந்திக்க‌
விழி உயர்த்துங்கள்.
பார்வையின்
குறுக்கு நெடுக்காய்
ஓடுகின்ற‌
சாதி சமயக்கோடுகளை
துடைத்தெறியுங்கள்.
ஒத்தடம் கொடுப்பது போல்
வந்த வார்த்தைகளில்
ஒட்டிக்கொண்டு
ஒட்டடையாகிப்போன‌
கந்தல் சிந்தனைகளை
தூசு தட்டுங்கள்.
அந்த நெருப்புக்கோளத்துக்கு
தினம் தினம் வர்ணம் பூசி
காலை வானத்துக்
கன்னக்கதுப்புகளுக்கு
ஒப்பனை செய்து கொள்ளுவோம்
அதோ
அந்த ஆயிரக்கணக்கான‌
பறவைக்கூட்டங்களின்
சிறகுகளைக்கொண்டு!
அந்த துடிப்புகளே
நம் பொழுதுகளை
உற்சாகத்தில்
பொலிவடையச்செய்யட்டும்!
நேற்றுகளின்
கசக்கிச் சுருட்டிபோட்ட‌
காகிதங்களை
பிரித்துக்கொண்டிருக்கவேண்டாம்.
வரும் கால விசிறிமடிப்புகள்
நம்பிக்கையின்
வெண்சாமரங்களாய்
வானத்து மேகங்களில்
அதோ
உனக்கு
வணக்கம் சொல்கின்றனவே!
புன்னகை காட்டு!
புதிதாய்
இந்த உலகம் உன் கையில்!

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக