புதன், 29 ஜூன், 2016

மோனவெளி





மோனவெளி
==================================ருத்ரா.இ.பரமசிவன்

மூளியாய் ஆடும்
மனத்தின்
திரைச் சீலையில்
என்னைப்பொடி செய்து
எண்ணக்குமிழ் பிசைந்து
வண்ணம் தோய்த்து
என்ன
நீ இங்குஎழுதினாய்?

அன்னை வயிற்றில்
ஆயிரம் கற்பனைகள்
தொப்பூள் கொடி இறக்கி
ஆனந்த தோப்பு ஒன்றை
பதியம் இட்டாயே!
அவள் மூச்சில்
திவலைகள் திரண்டு வந்து
என் மூச்சுக்கடல் ஆனதே!

வாசல் கோலமாய்
பிரசவம் ஆகி நின்ற‌
உயிர்விரிப்பில்
உயிருக்குள் உயிராய்
வரிக்குள் வரியாய்
படர்ந்து நிற்கின்றாய்.

நீ யார்?
ஸ்லோகங்களைக்கொண்டு
உடுத்தி உடுத்திப் பார்க்கிறோம்.
உன் அம்மணத்தில்
எதுவும் நிற்கவில்லை.
நான்கு வர்ணம் கோண்டு
பூசிய புருசுகள்
மானுடக்கருத்துடிப்பை
தொடவே இல்லை.
வெற்று வர்ணங்களின்
வெறியில் சுருட்டிய கூர்நகங்கள்
ரத்தம் சுரண்டி
புத்தகம் குவித்தன.
சட்டங்கள் அழுத்தின.
நசுங்கிய உரிமைக் கீற்றுகள்
ஒலிக்க வலுவின்றி
மௌனத்தில் புதைந்தன!

அந்த
மோனவெளி தீப்பிடித்து எரிவது
இங்கே தெரிகிறது.
குடல் கிழிவது
இரணியன் அல்ல!
யார் நீ?
இந்த கேள்வியின்
கூர் முனையே இங்கு
கழுமரம்.
வேதாந்த சித்தாந்த உடல்கள்
செதில் செதில்களாய்
மனவெளியின்
வாசற்சித்திரங்கள்.

================================================







2 கருத்துகள்:

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

அம்மாடியோவ்... அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக