பொன்கதவுகள்
==========================================ருத்ரா
வாழும் கலைச் சொல்லிக்கொடுக்க
வாசலில் சுடச்சுட
வசூல் ரூபாய் ரெண்டாயிரம்.
அந்த "நிஷதம்" இந்த "நிஷதம்"
என்று
உள்ளேயும் போய்
ரூபாய் ரெண்டாயிரம்.
மூக்கைப்பொத்தி
வாயைப்பொத்தி
மூச்சுகீற்றை முடிச்சுப்போட்டு
அதில்
கீரை ஆய்ந்து
பூச்சி புழு பார்த்து
வர்ண சமுக்காளத்தில்
வர்ண வர்ணமாய்
சொப்பனம் கண்டு
மூடிய விழிக்குள்
ஆயிரம் பூரான் நெளிந்தவுடன்
மணியடித்தார்கள்
என் மண்டைக்குள்
குண்டலினி யோகம் புகுந்தது
என்று.
நான் மட்டுமா?
வெள்ளைக்காரன்களும்
அன்னியச்செலாவணியில்
ஆசனம் அமைத்து
படுத்து உருண்டு புரண்டு
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலத்தை
அக்கு அக்காய்
கிழித்துச் சுக்குநூறாக்கி
"யா..யா" என்று
எழுந்து நடந்தான்.
முட்டாள் தனத்துக்கு
மொழியில்லை.
தடையில்லை.
எப்படியெல்லாமோ
வாழ்ந்து பார்த்தாயிற்று!
பண்ணி உடலெடுத்து
குட்டிகள் போட்டு
குர் குர்ரென்று
ஒலிப்பித்து அதனுள்
ஒளிந்து விளையாட
ரெண்டு லட்சம் கட்டவேண்டுமாம்.
அப்போது தான்
வாழும் கலை
நுட்பம் தெரியுமாம்.
பிறவியைக்கலைத்து
பிறவியைக்கடைந்து
பிறவியைக்கரைத்து
"குடித்துத்தீர்த்தால்"
மோட்சம் உடனே!
மோட்சம் உடனே!
ஆசிரமத்துப்
பொன்கதவுகள் பூட்டிக்கொண்டன.
=================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக