புதன், 29 ஜூன், 2016

இந்த உலகம் உன் கையில்..





இந்த உலகம் உன் கையில
==========================================ருத்ரா

இந்த நாள்
இனிய நாள்
பொன்னான‌
புதிய நாள்.
புதுமை பொங்கும்
மகிழ்ச்சி நாள்...
வழக்கமாய் வரும்
இந்த விடியலை
புளி போட்டு விளக்கி
பொலிவாக்கி
பளபளப்பாக்குகிறேன்.
விட்டால்
சூரியனுக்கும்
விம் போட்டு
துலக்கி வைப்பேன்.
சொல்லுக்கா
பஞ்சம்?
உள்ளம்
உளுத்துப்போன‌
வழிபாட்டு வசனங்களில்
இற்றுப்போனதை
உரமாக்கி
உரத்துச் சிந்திக்க‌
விழி உயர்த்துங்கள்.
பார்வையின்
குறுக்கு நெடுக்காய்
ஓடுகின்ற‌
சாதி சமயக்கோடுகளை
துடைத்தெறியுங்கள்.
ஒத்தடம் கொடுப்பது போல்
வந்த வார்த்தைகளில்
ஒட்டிக்கொண்டு
ஒட்டடையாகிப்போன‌
கந்தல் சிந்தனைகளை
தூசு தட்டுங்கள்.
அந்த நெருப்புக்கோளத்துக்கு
தினம் தினம் வர்ணம் பூசி
காலை வானத்துக்
கன்னக்கதுப்புகளுக்கு
ஒப்பனை செய்து கொள்ளுவோம்
அதோ
அந்த ஆயிரக்கணக்கான‌
பறவைக்கூட்டங்களின்
சிறகுகளைக்கொண்டு!
அந்த துடிப்புகளே
நம் பொழுதுகளை
உற்சாகத்தில்
பொலிவடையச்செய்யட்டும்!
நேற்றுகளின்
கசக்கிச் சுருட்டிபோட்ட‌
காகிதங்களை
பிரித்துக்கொண்டிருக்கவேண்டாம்.
வரும் கால விசிறிமடிப்புகள்
நம்பிக்கையின்
வெண்சாமரங்களாய்
வானத்து மேகங்களில்
அதோ
உனக்கு
வணக்கம் சொல்கின்றனவே!
புன்னகை காட்டு!
புதிதாய்
இந்த உலகம் உன் கையில்!

======================================================

"மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்"








"மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்"
==============================================ருத்ரா

அந்த
சிறுகூடல்பட்டிக்கவிஞனின்
மனம் நிறைய நம்பிக்கைகள்.
கண்ணதாசன் என்று
கண்ணனிடம் சொன்னால்
கண்ணன் சொல்வான்
கண்ணன் இவனுக்கு தாசன் என்று.
இவன் கவிதைகளில்
கடல்கள் புல்லாங்குழல்.
வரிகள் அத்தனையும்
மனம் வருடும் மயிற்பீலிகள்.
சொற்கள் தோறும்
கவலை துரத்திய‌
ராதைகளின் பிருந்தாவனங்கள்.
குடியிருந்தது "கோப்பை" என்றாலும்
அது இன் தமிழ்க்கோட்டை.
கடைசிவரை
தன் சட்டைப்பையிலிருந்து
அந்த‌
"கம்யூனிசத்தை" எடுக்கவே இல்லை.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்"
என்று
கருப்புப்பணத்தின்
சாக்கடைக்கருப்பை
பேனாவுக்குள் ஊற்றிகொடுத்தான்
கோடம்பாக்கத்துக்கு!
இவர்கள் இன்னும்
கிருஷ்ணனின் கருப்புக்கே
பஜனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவன் "கருப்பை" ஊறிய‌
கவிதைகள் எல்லாம்
மரணத்தை பால் குடித்தே வளர்ந்தன.
அதனால் தான்
அந்தக் கண்ணதாசனுக்கு
மரணமே இல்லை.
"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்"
அவனது
அர்த்தமுள்ள இந்து மதத்தில்
அகராதியே
இந்த மனிதன் தான்.
எல்லோரும் சொன்னார்கள்
அவன்
இறைவனை
தன் எழுத்துக்களில்
பச்சைகுத்திக்கொண்டான் என்று.
ஆம்
கடவுளே தன்
கன்னிக்குடம் உடைத்துக்கொண்டது..அவன்
க‌ன்னித்தமிழில் தான்.

=============================================================





மோனவெளி





மோனவெளி
==================================ருத்ரா.இ.பரமசிவன்

மூளியாய் ஆடும்
மனத்தின்
திரைச் சீலையில்
என்னைப்பொடி செய்து
எண்ணக்குமிழ் பிசைந்து
வண்ணம் தோய்த்து
என்ன
நீ இங்குஎழுதினாய்?

அன்னை வயிற்றில்
ஆயிரம் கற்பனைகள்
தொப்பூள் கொடி இறக்கி
ஆனந்த தோப்பு ஒன்றை
பதியம் இட்டாயே!
அவள் மூச்சில்
திவலைகள் திரண்டு வந்து
என் மூச்சுக்கடல் ஆனதே!

வாசல் கோலமாய்
பிரசவம் ஆகி நின்ற‌
உயிர்விரிப்பில்
உயிருக்குள் உயிராய்
வரிக்குள் வரியாய்
படர்ந்து நிற்கின்றாய்.

நீ யார்?
ஸ்லோகங்களைக்கொண்டு
உடுத்தி உடுத்திப் பார்க்கிறோம்.
உன் அம்மணத்தில்
எதுவும் நிற்கவில்லை.
நான்கு வர்ணம் கோண்டு
பூசிய புருசுகள்
மானுடக்கருத்துடிப்பை
தொடவே இல்லை.
வெற்று வர்ணங்களின்
வெறியில் சுருட்டிய கூர்நகங்கள்
ரத்தம் சுரண்டி
புத்தகம் குவித்தன.
சட்டங்கள் அழுத்தின.
நசுங்கிய உரிமைக் கீற்றுகள்
ஒலிக்க வலுவின்றி
மௌனத்தில் புதைந்தன!

அந்த
மோனவெளி தீப்பிடித்து எரிவது
இங்கே தெரிகிறது.
குடல் கிழிவது
இரணியன் அல்ல!
யார் நீ?
இந்த கேள்வியின்
கூர் முனையே இங்கு
கழுமரம்.
வேதாந்த சித்தாந்த உடல்கள்
செதில் செதில்களாய்
மனவெளியின்
வாசற்சித்திரங்கள்.

================================================







திங்கள், 27 ஜூன், 2016

அந்த பசிபிக் கடலோரம்...

















அந்த பசிபிக் கடலோரம்...
=============================ருத்ரா

என் மௌனத்தை
நக்கிப்பார்க்க‌
ஆயிரக்கணக்கான
சதுரமைல்களில்
அகன்றதொரு கடல் நாக்கு..
அதன் நீலத்தில்
மிடைந்த அலைகள்
வாரிச்சுருட்டியதில்
கனவு வர்ணங்கள்
தின்னப்பட்டன.
மணல் பிதுங்கிய
கரை மேனியில்
நிழல் பின்னலில்
நான் திறந்து வைத்தேன்
என் ஜன்னலை.
சூரிய வெள்ளி உருகி
வார்த்ததில்
அவள் கொத்து நடைக்கு
கொலுசு மணிகள் போதவில்லை.
எத்தனை
காலடிகள்..?
அந்த ஒலிப்பிஞ்சுகளில்
நைந்து நைந்து
உற்றுக்கேட்கிறேன்.
மணல் துளிக்குள்
அவள் சிரிப்பின்
சிலிகன் சித்திரங்கள்!
கோடிக்கணக்கான டாலர்களை
கொட்டிவைத்தாற்போன்ற
இந்த குவியலுக்குள்
உலகம்
விளையாடிக்கொள்ளட்டும்
மாயப்பொருளாதாரத்தை.
என் சிந்தனை விரல்கள்
அமைதியை அளைந்து அளைந்து
கிச்சு கிச்சு தாம்பாளம் ஆடுகின்றன.
என் விரல்நுனிகளில்
இதயத்தை மாட்டியிருக்கிறேன்.
அவள் சிரிப்பு
அதில் வருடும் வரை
இந்த மணல் கூட்டமே
என் மனக்கூட்டம்.

================================================









பொன்கதவுகள்






பொன்கதவுகள்
==========================================ருத்ரா

வாழும் கலைச் சொல்லிக்கொடுக்க‌
வாசலில் சுடச்சுட
வசூல் ரூபாய் ரெண்டாயிரம்.
அந்த "நிஷதம்" இந்த "நிஷதம்"
என்று
உள்ளேயும் போய்
ரூபாய் ரெண்டாயிரம்.
மூக்கைப்பொத்தி
வாயைப்பொத்தி
மூச்சுகீற்றை முடிச்சுப்போட்டு
அதில்
கீரை ஆய்ந்து
பூச்சி புழு பார்த்து
வர்ண சமுக்காளத்தில்
வர்ண வர்ணமாய்
சொப்பனம் கண்டு
மூடிய விழிக்குள்
ஆயிரம் பூரான் நெளிந்தவுடன்
மணியடித்தார்கள்
என் மண்டைக்குள்
குண்டலினி யோகம் புகுந்தது
என்று.
நான் மட்டுமா?
வெள்ளைக்காரன்களும்
அன்னியச்செலாவணியில்
ஆசனம் அமைத்து
படுத்து உருண்டு புரண்டு
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலத்தை
அக்கு அக்காய்
கிழித்துச் சுக்குநூறாக்கி
"யா..யா" என்று
எழுந்து நடந்தான்.
முட்டாள் தனத்துக்கு
மொழியில்லை.
தடையில்லை.
எப்படியெல்லாமோ
வாழ்ந்து பார்த்தாயிற்று!
பண்ணி உடலெடுத்து
குட்டிகள் போட்டு
குர் குர்ரென்று
ஒலிப்பித்து அதனுள்
ஒளிந்து விளையாட‌
ரெண்டு லட்சம் கட்டவேண்டுமாம்.
அப்போது தான்
வாழும் கலை
நுட்பம் தெரியுமாம்.
பிறவியைக்கலைத்து
பிறவியைக்கடைந்து
பிறவியைக்கரைத்து
"குடித்துத்தீர்த்தால்"
மோட்சம் உடனே!
மோட்சம் உடனே!
ஆசிரமத்துப்
பொன்கதவுகள் பூட்டிக்கொண்டன.

=================================================










"புல்லை நகையுறுத்தி..."




"புல்லை நகையுறுத்தி..."
=========================================ருத்ரா

என்னை நெருங்கியது அது!
இடைவெளி
சிறுத்துக்கொண்டே
புள்ளியிலும் புள்ளியாய்...
இன்னும் என்
ஏணி ஏற்றங்களும்
பாம்பு ஆட்டங்களும்
ஓயவில்லை.
அவநம்பிக்கையின் வாய்ப்பிடியில்
அதன் நாக்குச்சுருட்டலில்
தேன் தீவுகள்
நம்பிக்கை விழுதாய்..
என் கோரிக்கைப்பட்டியல்
நீண்டு அதன் படிக்கட்டில்
உட்கார்ந்து உட்கார்ந்து
வைகுண்டமும் கைலாசமும்
கனவின் கணிப்பொறியில்
கிராஃபிக்ஸ் வரைகின்றன.
பேரனுக்கு பேரனுக்கு..பேரனுக்கு
பேரன்களின்
பூணூல் கல்யாணங்களும்
சாந்தி முகூர்த்தங்களும்
பாக்கி இருக்கின்றனவே!
பூக்களும் பட்டாம்பூச்சிகளும்
புதிது புதிதாய்
புருஷ சூக்தங்களுக்கு
சுருதிகள் குதப்புகின்றனவே.
காற்று வடிகட்டிய வேதங்களில்
எப்படி இத்தனை
மனிதக்கழிவுகள்?
நற நறப்புகளும்
குடல் கிழிப்புகளும்
அவதாரங்கள் கோரைப்பற்காட்டில்
அல்காரிதம் தர‌
மண்டை வீங்கிய மனிதன்
அண்ட்ராய்டுகளில்
கருடபுராணக்கிருமிப்போஜனத்துக்கு
பந்தி விரித்து கிடக்கிறான்.
மனிதனைப் பார்த்து
மனிதன்
ஒரு முறுவல் போதும்.
இந்த சூலாயுதங்களும்
கபால எலும்புக்குவியல்களும்
பூங்காலைக்கு
புத்திதழ் திறக்குமே.
கேவலம்
பச்சைப்புல் கொடுக்கும்
முத்தங்களில்
சூரியன் எச்சில் பட்டு
எங்கும் அமுத பிழம்பு
எழுந்து சுடருமே!
எழுத்துக்களின்
நீண்ட வாக்கியங்களும் சொற்களும்
உயிர்ப்புக்காகத்தான்
காத்திருக்கின்றன‌.
நம் அச்சங்களும்
அதன் மிச்சங்களும் இனி
பொசுங்கிப்போகட்டும்.
தூக்கி எறி
அந்த முரட்டுப்போர்வைகளை!
மெல்லிய இமையோரம்
பாரதி பாடுகின்றான்..
"புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி..."

==============================================